என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு த.வெ.க. சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • தயவுசெய்து வேறு எதுவும் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    மாமல்லபுரம்:

    த.வெ.க. தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.

    2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 2 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலிடத்தை பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கப்பட்டது.

    தொகுதிவாரியாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். நிகழ்ச்சியில், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு த.வெ.க. சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதையடுத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய விஜய், 2026-ம் ஆண்டு பற்றியோ, இளைய காமராசர் என்றெல்லாம் பேசாதீர்கள். நீங்கள் படித்த பள்ளிக்கூடம், ஆசிரியர்கள் குறித்து பேசுங்கள். தயவுசெய்து வேறு எதுவும் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். 



    • விபத்தில் ரசாயனம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.
    • லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    செங்கல்பட்டில் வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் ரசாயனம் (ஆசிட்) ஏற்றி வந்த லாரி சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி சாலையில் கவிழ்ந்தது. மேலும் லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாரியில் இருந்து வெளியேறி வரும் ரசாயனத்தை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

    • மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
    • பரிசை பெற்றுக்கொண்ட மாணவர்களும் விஜய்க்கு நன்றி தெரிவித்து பேசினர்.

    சென்னை:

    தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து, இன்று 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கிய நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.

    இன்று 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையையும் த.வெ.க. தலைவர் விஜய் வழங்க உள்ளார். முன்னதாக, நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்த விஜய்க்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து, மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் பரிசை விஜய் வழங்கி வருகிறார். மேலும் மாணவர்களின் குடும்பத்தாருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பரிசை பெற்றுக்கொண்ட மாணவர்களும் விஜய்க்கு நன்றி தெரிவித்து பேசினர். 

    • முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.
    • விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.

    இந்த நிலையில், த.வெ.க. சார்பில் நாளை 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இவ்விழா நடைபெற உள்ளது.

    இதில் 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையையும் த.வெ.க. தலைவர் விஜய் வழங்க உள்ளார். மேலும் மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

    • அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் வகையில் த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
    • சுமார் 2000 பேர் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் வகையில் த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா 3-வது ஆண்டாக இன்று நடைபெறுகிறது.

    விழாவிற்கு மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என சுமார் 2000 பேர் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தனி அடையாள அட்டைகள் மூலம் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று காலை 9.20 மணியளவில் விழா நடைபெறும் ஓட்டலுக்கு வருகை தந்தார். இதனை தொடர்ந்து நிர்வாகிகள் விஜயை வரவேற்றனர். 

    • விழாவில் சுமார் 2000 பேர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
    • விழா அரங்கிற்குள் செல்போன், பேப்பர், பேனா மற்றும் இதர பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாணவ, மாணவிகளின் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.

    விஜய்யின் இந்த திட்டம் மாணவ, மாணவிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டி வருகிறது. விஜய் கையினால் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவ, மாணவிகள் பலர் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் 2025-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா இன்று காலை முதல் மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் நடக்கிறது. பரிசளிப்பு விழாவில் சென்னை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை பெரம்பலூர், வேலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் 600 பேர் பங்கேற்கின்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளும், மாநில அளவில் முதலிடத்தை பெற்ற மாணவ, மாணவிகளும் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளிகள், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மாணவ, மாணவிகளும் தங்களது பெற்றோருடன் பங்கேற்க இருக்கின்றனர். விழாவில் சுமார் 2000 பேர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    விழாவுக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. விழா அரங்கிற்குள் செல்போன், பேப்பர், பேனா மற்றும் இதர பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், மூன்று கட்டமாக நடைபெற உள்ள இந்த கல்வி விருது வழங்கும் விழாவில் இன்று முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதனால் இந்த விழாவில் பங்கேற்க அதிகாலை முதலே விழா நடைபெறும் ஓட்டல் முன்பாக மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.

    இதனிடையே, விழா தொடங்குவதற்கு முன்பாக ஓட்டல் முன்பு உள்ள விநாயகர் சிலைக்கு பூஜை நடத்தி தேங்காய் உடைத்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து விழாவுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். 

    • விழாவுக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
    • நாளை காலை சரியாக 9 மணிக்கு விழா தொடங்க இருக்கிறது.

    மாமல்லபுரம்:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாணவ, மாணவிகளின் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.

    விஜய்யின் இந்த திட்டம் மாணவ, மாணவிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டி வருகிறது. விஜய் கையினால் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவ, மாணவிகள் பலர் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் 2025-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா நாளை காலை 9 மணி முதல் மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சி தலைவர் விஜய் உத்தரவுப்படி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.

    பரிசளிப்பு விழாவில் சென்னை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை பெரம்ப லூர், வேலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் 600 பேர் பங்கேற்கின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளும், மாநில அளவில் முதலிடத்தை பெற்ற மாணவ, மாணவிகளும் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளிகள், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மாணவ, மாணவிகளும் தங்களது பெற்றோருடன் பங்கேற்க இருக்கின்றனர். விழாவில் சுமார் 2000 பேர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    விழாவுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் குளித்து விட்டு தயாராகி வருவதற்கு மாமல்லபுரத்தில் முகுந்தன் மகால் என்ற திருமண மண்டபம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் பொறுப்பாளர்களாக ராஜேஷ், சபரி என்ற நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    தென் மாவட்டத்தில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    விழாவுக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. விழா அரங்கிற்குள் செல்போன், பேப்பர், பேனா மற்றும் இதர பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    நாளை காலை சரியாக 9 மணிக்கு விழா தொடங்க இருக்கிறது. தமிழ்தாய் வாழ்த்துடன் விழா தொடங்குகிறது.

    தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கல்வி ஆர்வத்தை ஊக்கப்படுத்தி த.வெ.க. தலைவர் விஜய் சிறப்புரையாற்றுகிறார்.

    இதைத் தொடர்ந்து மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வைரக் கம்மல் அல்லது வைர மோதிரம் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் விஜய் பரிசு வழங்கி கவுரவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    அடுத்ததாக தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயம், கல்வி ஊக்க தொகை, விருதுகளை வழங்கி மாணவ, மாணவிகளுடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

    பரிசு பெற இருக்கும் 600 மாணவ, மாணவிகளுக்கும் விஜய் நேரில் பரிசு வழங்கி உற்சாகப்படுத்த இருக்கிறார். விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மதியம் 21 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருக்கிறது.

    பரிசளிப்பு விழாவை தொடர்ந்து மாமல்லபுரம் நகரம் இப்போதே விழாக்கோலம் பூண்டு உள்ளது. விழா நடைபெறும் இடத்தின் நுழைவு வாயில் வாழை மற்றும் பல்வேறு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    விழாவில் பங்கேற்க வரும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு மேளதாளங்கள், நாட்டுப்புற கலைஞர்கள், செண்டை மேளத்துடன் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட இருக்கிறது.

    2-ம் கட்ட பரிசளிப்பு விழா அடுத்த வாரமும், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா அதற்கடுத்த வாரமும் நடக்கிறது.

    • கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

    வண்டலூர்:

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் கிளாம்பாக்கத்திற்குசென்று வருவதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த சிரமத்தை போக்கும் வகையில் வண்டலூர்- ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிதாக ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த புதிய ரெயில் நிலையப்பணிக்கு தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கி உள்ளது. கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ரெயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் கவுண்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மற்றும் பாதுகாப்பு வசதிகள் திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    தற்போது கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்தில் நடைமேடைகள், தண்டவாளங்களில் கற்கள் கொட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மின்கம்பங்களும் நட்டு மின்வயர்கள் இணைப்புக்கு தயாராக உள்ளது. ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

    எனவே புதிய ரெயில் நிலைய பணிகள் முழுவதும் வருகிற ஜூன் மாதத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை ஜூலை மாதத்தில் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். மேலும் மாநகர பஸ்சில் பயணம் செய்வதை விட மின்சார ரெயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு இந்த வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும். இதனால் பயணிகளின் போக்குவரத்து பிரச்சனை முழுமையாக தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து புதிதாக கட்டப்படும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதில் சென்று வரும் வகையில் ஜி.எஸ்.டி.சாலையை கடந்து உயர் மட்ட நடைமேம்பாலம் ரூ. 74.50 கோடி செலவில் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது.

    தற்போது இது தீர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த பணியும் விரைந்து முடிந்து பயன்பாட்டுக்கு வரும் போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்திற்கு பயணிகள் எந்த சிரமமும் இன்றி சென்று வரமுடியும். 

    • மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது.
    • தற்போது பராமரிப்பு காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை இந்த கடல்சார் அருங்காட்சியம் மூடப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சுற்றலாபயணிகள் இங்கு உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டு செல்கிறார்கள். மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்தின் அருகே கடல்சார் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அங்குள்ள பழங்காலத்து நங்கூரம், மிதவை விளக்கு, கப்பல் மாலுமி தளம், பைனாகுலர், உள்ளிட்ட கடல்சார் அறிவியல் கருவிகள் விபரங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணம் செலுத்தி ஆவலுடன் பார்த்து வந்தனர்.

    இது அறிவியல் ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது பராமரிப்பு காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை இந்த கடல்சார் அருங்காட்சியம் மூடப்பட்டு உள்ளது. தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளநிலையில் மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஏராளமானோர் கடல்சார் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என்று நினைத்து செல்லும் போது அதன் கதவுகள் மூடப்பட்டு கிடப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். எனவே கடல்சார் அருங்காட்சியத்தில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எம்எல்ஏ என்றும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன்.
    • நிறைய பேர் இங்கு உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்கு தெரியும்.

    பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று மாலை தொடங்கியுள்ளது.

    இதில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராம்தாஸ் பேசியதாவது, "(வன்னியர்களுக்கு) 10.5% இடஒதுக்கீடு வழங்காததால், போராட்டத்தை அறிவிக்கிறோம். இதுவரை நடந்திராத வகையில் அந்தப் போராட்டம் இருக்கும். போராட்டத்திற்காக எவ்வளவு தியாகத்தை செய்யவும் தயாராக இருக்கிறோம். 45 வருடமாக உங்களுக்காகவும், அனைத்து சமூதாய மக்களுக்காகவும் போராடியும், போராடி சில வெற்றியும் பெற்றவன் இந்த ராமதாஸ்.

    ஒரு தொகுதியில் 2000 இளைஞர்கள், இளம்பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகுதியில் 100 வாக்குகளை கொண்டுவந்தால், அந்தத் தொகுதியில் நம்மால் வெல்ல முடியும். 50 தொகுதிகளில் நாம்மால் எளிதாக வெல்ல முடியும். ஆனால், நிறைய பேர் இங்கு உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்கு தெரியும்.

    இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. எம்எல்ஏ என்றும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன்.

    சிலர் எங்கே கூட்டணி, யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள். கூட்டணி பற்றி முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன், அதை நான் முடிவு செய்வேன். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உனக்கு சீட்டு கிடைக்க வேண்டும், எம்எல்ஏ ஆக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும்.

    வெளிப்பேச்சு, வெளிக்கூட்டணி, கட்சிக்குள்ளே கூட்டணி என இது எதுவும் நடக்காது. எனவே உன்னை நீ திருத்திக்கொள். இல்லை என்றால் உன்னால் இந்தக் கட்சியில் பொறுப்பிலேயே இருக்க முடியாது.

    உன் பதவிக்கு இளம் சிங்கங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீயோ காலை வாறிக்கொண்டிருக்கிறாய். இனி அது நடக்காது. இந்தக் கட்சி தனிப்பட்டவரின் சொத்து அல்ல" என்று தெரிவித்தார்.  

    • 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டது.
    • மாநாட்டுக் கொடியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார்.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று மாலை தொடங்கியது.

    இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடைக்கு வந்த நிலையில் பாராகிளைடரில் வன்னியர் சங்கக் கொடி பறக்கவிடப்பட்டது. கொடி பறந்ததை கண்டு, ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

    மேலும், மாநாட்டுக் கொடியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார்.

    பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடிட்டில் ட்ரோன் ஷோ நிகழ்த்தப்பட்டது. பிறகு, பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:-

    1. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும்!

    இந்தியாவில் 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும், தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கும், மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தரவுகள் போதுமானவையாக இருக்காது என்பதே உண்மை.

    தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 13.07.2010ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சாதிவாரி மக்கள்தொகை, சமூகங்களின் பின்தங்கிய நிலை உள்ளிட்ட தரவுகளை ஓராண்டுக்குள் திரட்டி, அவற்றின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. அதேபோல், வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் சமூக, கல்வி பின்தங்கிய நிலை குறித்த பொருத்தமான, நிகழ்கால தரவுகளைத் திரட்டி அதன் அடிப்படையில் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. தேசிய அளவில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் இவ்விவரங்களைத் திரட்ட முடியாது.

    இந்தியாவில் வரலாற்று ரீதியாகப் பார்த்தால் மக்களின் சமூகப் பின்தங்கிய நிலை குறித்த தரவுகள் காகா கலேல்கர் ஆணையம், மண்டல் ஆணையம், தமிழ்நாட்டில் சட்டநாதன் ஆணையம், அம்பாசங்கர் ஆணையம் போன்ற பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களின் வாயிலாகவே திரட்டிப்பட்டிருக்கின்றன. மக்களின் சமூகப் பின்தங்கிய நிலையை அறிய பல்வேறு வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைபெற வேண்டும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்களின் சாதி குறித்த தகவல் மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். மீதமுள்ள தரவுகளை தனியாக கணக்கெடுப்பதன் வாயிலாக மட்டுமே திரட்ட முடியும் என்பதே எதார்த்தம்.

    அதனால்தான், பீகார், தெலுங்கானா, கர்நாடகம், ஒதிசா போன்ற மாநிலங்கள் 2008ஆம் ஆண்டின் புள்ளியியல் சட்டத்தைப் பயன்படுத்தி சாதிவாரியாக சமூக, பொருளாதார பின்தங்கிய நிலை குறித்த தரவுகளைத் திரட்டியுள்ளன. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக புதிதாக தொடரப்பட்டுள்ள வழக்கு எந்தநேரமும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரக்கூடும் என்பதால், அதைப் பாதுகாக்கவும் தனியான கணக்கெடுப்பு மிகவும் தேவையாகும்.

    எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையான சமூகநீதியை வென்றெடுக்கவும், 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், 2008ஆம் ஆண்டு புள்ளியியல் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் சமூக, பொருளாதார சாதிவாரி சர்வேயை தமிழக அரசு நடத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

    2. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: போராடி சாதித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றியும், பாராட்டுகளும்!

    இந்தியாவில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா விடுதலையடைந்த பின் முதன் முறையாக, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிட்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், போராட்டங்களும் எண்ணில் அடங்காதவை. 20.07.1980ஆம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போது, அதில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்துச் சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அதன்பின் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான 3 வாய்ப்புகளை மருத்துவர் அய்யா அவர்கள் ஏற்படுத்தினார். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் அந்த வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன.

    அதேபோல், தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக ராஜீவ் காந்தி, வி.பி.சிங், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகிய 5 பிரதமர்களிடம் மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தார். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசாணை பிறப்பிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், குஜராத் நிலநடுக்கம் காரணமாக அந்த வாய்ப்பு சாத்தியமாகவில்லை. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், பின்னாளில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பதிலாக, சமூகப் பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதால் மக்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

    அதன்பின், 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மருத்துவர் அய்யா அவர்கள் ஒருமுறை நேரில் சந்தித்தும், 3 முறை கடிதங்களை எழுதியும் வலியுறுத்தினார். அதன் காரணமாகவே இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கண்கெடுப்பு என்ற மருத்துவர் அய்யாவின் 45 ஆண்டுகால கனவு நனவாகியிருக்கிறது.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம் இந்தியாவில் இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படும். சில பத்தாண்டுகளுக்கு முன் இவையெல்லாம் சாத்தியமே இல்லை என்று கருதப்பட்ட நிலையில், தொடர் போராட்டங்கள், அரசியல் அழுத்தங்கள் ஆகியற்றின் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை சாத்தியம் ஆக்கிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு இந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு அதன் உளமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

    3. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உடனடியாக உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும்!

    வன்னியர்களின் சமூக பின்தங்கிய நிலை குறித்த தரவுகளைத் திரட்டி, அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 1,136 நாட்கள் ஆகும் நிலையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக அரசுக்கு வன்னிய இளைஞர் பெருவிழா கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மருத்துவர் அய்யா அவர்கள் ஒருமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியதுடன், 10க்கும் மேற்பட்ட முறை கடிதங்களை எழுதினார். சிலமுறை தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை விடுத்தார். அதேபோல், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையிலான குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 3 முறை சந்தித்து வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இவர்கள் தவிர, பா.ம.க. நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் 50க்கும் மேற்பட்ட முறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால், தொடக்கத்தில் வன்னியர்களுக்கு கண்டிப்பாக உள்இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பின்னாளில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டுமே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். தமிழக அரசு நேரடியாகவோ அல்லது தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் வாயிலாகவோ சாதிவாரி சர்வே நடத்த முடியும் என்றாலும் கூட, அதைச் செய்து அதைச் செய்ய தமிழக அரசு மறுப்பது, வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் இன்றைய அரசுக்கு விருப்பமோ, அக்கறையோ இல்லை என்பதையே காட்டுகிறது.

    வன்னியர்களின் சமூகப் பிந்தங்கிய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பணி மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 12.01.2023ஆம் நாள் வழங்கப்பட்டது. ஆணையம் நினைத்திருந்தால் 3 மாதங்களில் இந்தப் பணியை நிறைவு செய்திருக்க முடியும். ஆனால், இரண்டரை ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இது குறித்த எந்தப் பணியையும் செய்யாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது. இது பெரும் துரோகம்.

    வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லாத நிலையில், சமூகநீதி சார்ந்த தனது கடமையை தமிழக அரசு இனியும் தட்டிக் கழிக்கக் கூடாது. உரிய தரவுகளை உடனடியாகத் திரட்டி, வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வலியுறுத்துகிறது.

    4. அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!

    முழுமையான சமூகநீதி என்பது அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான். 1980&ஆம் ஆண்டில் வன்னியர் சங்கத்தைத் தொடங்கிய காலத்திலிருந்து இதைத் தான் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தி வருகிறார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக இழைக்கப்பட்டு வந்த சமூக அநீதிக்கு பரிகாரம் தேட இது தான் சிறந்த வழியாகும். கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், அடுத்த சில தலைமுறைகளில் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து அனைவரும் சமம் என்ற நிலை உருவாகும். அத்தகையதொரு சூழல் உருவாக வேண்டும் என்பது தான் சமூகநீதியாளர்களின் கனவாகும்.

    தமிழ்நாட்டில் அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்க பெரும் தடையாக இருந்தது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாதது தான். தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதன் மூலம் இதற்கான முதல் தடை விலகியுள்ளது. மாநில அளவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் பிற முட்டுக்கட்டைகளும் அகற்றப்பட்டு விடும். எனவே, தமிழகத்தில் உடனே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவாக மேற்கொண்டு அனைத்து சமூகங்களுக்கும், அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்திரை முழுநிலவு மாநாடு வலியுறுத்துகிறது.

    5. பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை, அவர்களின் மக்கள்தொகைக்கு மேலும் 2% உயர்த்த வேண்டும்!

    வன்னியர் சங்கம் 1980&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட போது, அதற்கான நிகழ்வில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது தீர்மானம் பட்டிலின, பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக அதிகரிக்க வேண்டும் என்பது தான். ஆனாலும், இட ஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது சாத்தியம் ஆகவில்லை. சமூகநிலை மற்றும் கல்வியில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் பட்டியலினச் சகோதரர்கள். அவர்களின் மக்கள்தொகை மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இட ஒதுக்கீட்டை மட்டும் அதிகரிக்காமல் அதே நிலையில் வைத்திருப்பது நியாயம் அல்ல. அது பட்டியலின மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.

    பட்டியலின மக்கள் முன்னேறாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேற முடியாது. அதைக் கருத்தில் கொண்டு பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் அளவை இப்போதிருக்கும் 18% என்ற அளவிலிருந்து, 2011&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 20 விழுக்காடாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்த மாநாடு கோருகிறது.

    6. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

    தேசிய அளவிலும், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களிலும் கல்வி & வேலைவாய்ப்பில் சாதி அடிப்படையில் 49.5% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்குக் காரணம் 1962ஆம் ஆண்டு பாலாஜி வழக்கிலும், 1992ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிலும் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்று ஆணையிட்டதுதான். இடஒதுக்கீட்டிற்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. ஆனாலும், உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கு வரம்பு நிர்ணயித்ததற்குக் காரணம் இடஒதுக்கீடு பெறும் சமூகங்களின் உண்மையான மக்கள்தொகை கணக்கெடுக்கப்படாததுதான். இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மக்கள்தொகை 52 விழுக்காட்டுக்கும் அதிகம் என்றாலும்கூட, உரிய தரவுகள் இல்லாததாலும், உச்சநீதிமன்றத்தால் வரம்பு நிர்ணயிக்கப்பட்டதாலும் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது பெரும் சமூக அநீதி.

    இந்தியா விடுதலை அடைவதற்கு முன் தமிழ்நாட்டில் மாநில அளவிலான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி, மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்புகளிலும் 100% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாறு இருக்கிறது. இந்தியாவில் 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு அதற்கு இணையாக இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா கோருகிறது.

    7. மத்திய அரசின் ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும்!

    மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படும் போதிலும், அதை அந்தச் சமூகங்களால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் கிரிமிலேயர் முறைதான். ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிரிமிலேயர் எனப்படும் பொருளாதார அடிப்படையில் முன்னேறியவர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. கிரிமிலேயர்களுக்கு மறுக்கப்படும் இடங்கள் கிரிமிலேயர் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பப்படவில்லை என்பதும், சில ஆண்டுகளுக்குப் பின் அந்தப் பணியிடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, உயர் சாதியினரைக் கொண்டு நிரப்பப்படுகிறது என்பதும் தான் சமூக அநீதியாகும். இதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் கிரிமிலேயர் என்ற கோட்பாடே இல்லை. 1992ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தால் தான் கிரிமிலேயர் முறை புகுத்தப்பட்டது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதியை பறிப்பதற்கான கருவியாக கிரிமிலேயர் முறை பயன்படுத்தப்படுவதால், அதை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் என்று மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வலியுறுத்துகிறது.

    8. தனியார்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்!

    அரசுத் துறை வேலைவாய்ப்புகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவரும் நிலையில், பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களின் சமூக முன்னேற்றத்தை உறுதி செய்ய தனியார் துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தவிர்க்க முடியாததாகிறது. மத்திய அரசுத் துறைகளில் ஆள்குறைப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் போன்ற காரணங்களால் அரசுத் துறை வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 2001ஆம் ஆண்டில் மத்திய அரசுத் துறைகளில் உள்ள 36.06 லட்சம் பணியிடங்களில் 1.84 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் காலியிடங்களில் எண்ணிக்கை 9.5 லட்சமாக உயர்ந்துவிட்டது. ஒருபுறம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கையும், அவறின் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பாமகவால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    தனியார்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை ஆட்சியாளர்களும், தனியார் நிறுவனங்களும் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டிருக்கும் போதிலும், அதைச் சட்டமாக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இனியும் அதேநிலை தொடர்வது பெரும் சமூக அநீதி என்பதால், அதைத் தவிர்க்கும் வகையில் தனியார்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்படி இம்மாநாடு கோருகிறது.

    9. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும்!

    இந்தியாவில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் நிலையில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் மட்டும் இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத சமூக அநீதியாகும்.

    உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கான காரணம் கொலீஜியம் முறைதான். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் போட்டித் தேர்வுகள் மூலம் நியமிக்கப்பட்டால், அதில் இடஒதுக்கீடு கண்டிப்பாக கடைபிடிக்கப்படும். அதே முறையை கொலீஜியம் முறையில் பின்பற்றுவதில் எந்தச் சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை. உயர்நீதித் துறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால், மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களால் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உயர முடிவதில்லை. இந்தநிலை மாற்றப்பட வேண்டும்.

    மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் 454 நீதிபதிகள், அதாவது 75 விழுக்காட்டினர் உயர்சாதியினர் ஆகும். 12 விழுக்காட்டினர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர். பட்டியலினத்தவருக்கு 3 விழுக்காடும், பழங்குடியினருக்கு ஒன்றரை விழுக்காடு மட்டுமே பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. இதேபோல், எந்த காலக்கட்டத்தை எடுத்துக் கொண்டாலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 90 விழுக்காட்டினர் உயர் சாதியினராகவே உள்ளனர். இந்த நிலையை மாற்றி அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் வகையில், உயர்நீதித்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இம்மாநாடு கோருகிறது.

    10. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்!

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை, கிராம ஊராட்சிகளில் 12.16%, ஊராட்சி ஒன்றியங்களில் 15.42%, மாவட்ட ஊராட்சிகளில் 17.25% பிரதிநிதித்துவம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைத்திருக்கிறது. கிராமப் பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தாலும், அங்குள்ள பொதுப் பிரிவு சமூகங்களைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் தான் செல்வாக்கு பெற்றவர்களாக உள்ளனர். அதனால், அவர்கள் மிகவும் எளிதாக தேர்வு செய்யப்படுகின்றனர். இது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் இடஒதுக்கீட்டை மறைமுகமாக பறிக்கும் செயலாகும். இந்த சமூக அநீதி அகற்றப்படவேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ, குறைந்தபட்சம் அதே அளவு விழுக்காடு இடஒதுக்கீட்டை உள்ளாட்சி அமைப்புகளிலும் வழங்க வேண்டும்; அதன் மூலம் தான் உள்ளாட்சி அமைப்புகளை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க முடியும். இதற்காக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு கேட்டுக்கொள்கிறது.

    11. தமிழ்நாட்டில் அனைத்துச் சமூக மக்களின் வளர்ச்சிக்காக நிதி அதிகாரத்துடன் கூடிய தனித்தனி கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட வேண்டும்!

    ஆந்திர மாநிலத்தைப் பின்பற்றி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமுதாயங்களில், 30 ஆயிரத்திற்கும் கூடுதலாக மக்கள் தொகை கொண்ட அனைத்துச் சாதிகளுக்கும், தனித்தனியாக கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார். அவ்வாறு கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு கார்ப்பரேஷனுக்கும் தலைவர்களாக அந்தந்தச் சாதிகளைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவார்கள்; ஒவ்வொரு சாதிக்குமான நலத்திட்ட உதவிகள், முதியோர் ஓய்வூதியம், கல்விக்கட்டணம், தொழில் தொடங்கக் கடனுதவி, மருத்துவ உதவிகள் ஆகியவை இந்த கார்ப்பரேஷன்கள் மூலமாக மட்டுமே வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பயன்கள் கிடைக்கும்.

    சமூகங்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் சிறந்த யோசனை என்பதால், அதை ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டில் 30 ஆயிரத்திற்கும் அதிக மக்கள்தொகை கொண்ட அனைத்துச் சமூகங்களுக்கும் தனித்தனி கார்ப்பரேஷன்களை அமைக்க வேண்டும்; 30 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சாதிகளை ஒருங்கிணைத்து கார்ப்பரேஷன்கள் உருவாக்கப்படவேண்டும் என்று சித்திரை முழுநிலவு மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    12. தமிழ்நாட்டில் கல்வி, தனிநபர் வருமானம், மனிதவள குறியீட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!

    தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்று ஆட்சியாளர்கள் பெருமைப்பட்டுக் கொண்டாலும்கூட, தமிழகத்தின் பல மாவட்டங்கள் உத்தரப்பிரதேசத்தையும், பீகாரையும்விட பின்தங்கிய நிலையில் தான் உள்ளன. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், கடைசி 15 இடங்களைப் பிடிக்கும் மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டில் தான் உள்ளன. தனிநபர் வருமானம், மனிதவளக் குறியீடு ஆகியவற்றிலும் வடமாவட்டங்கள் தான் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழகத்தின் வடமாவட்டங்களுக்கு மட்டும் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 371&கே என்ற புதிய பிரிவை சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு கோருகிறது.

    13. முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், போதைப் பொருட்களை ஒழிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

    தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை போன்ற கொடுங்குற்றங்களுக்கும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களுக்கும் முதன்மைக் காரணமாக இருப்பது மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் தான். தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டியதன் கட்டாயம் குறித்தும் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும்போதிலும் அதன்மீது எந்த நடவடிக்கையும் தமிழக அரசால் எடுக்கப்படவில்லை.

    தமிழகத்தின் பல பகுதிகளில் சமூகப் பதற்றங்கள் ஏற்படுவதற்கும், மதுப்பழக்கமும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடும் தான் காரணமாக உள்ளன. இதேநிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை உருவாகிவிடும். இதை உணர்ந்து, தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும். அதேபோல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் முற்றிலுமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்னியர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வலியுறுத்துகிறது.

    14. ஜம்மு &காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு வீர வணக்கம்: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்காலத்திலும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு!

    ஜம்மு &காஷ்மீர் மாநிலத்தில் பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22&ஆம் நாள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 22 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அமைதியையும், இயல்புநிலையையும் ஏற்படுத்துவதற்கு உகந்தவையாக இல்லை; மாறாக, எல்லைப் பகுதியில் பதட்டத்தையும், பயங்கரவாதத்தையும் தூண்டுவதாகவே இருந்தன.

    பகல்காம் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பொதுமக்கள் 12 பேரும், இந்தியப் படை வீரர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்கள் எல்லை மீறிக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவைப் பாதுகாப்பதற்காக மே 6&ஆம் தேதி பாகிஸ்தானில் 9 இடங்களில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து கொடுத்த பதிலடி மற்றும் அதன்பின் நாட்டைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நிம்மதியளிக்கிறது.

    அதேநேரத்தில், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து தொடரும், இனிவரும் காலங்களிலும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு தொடரும் என்று மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் நிலைப்பாட்டை இந்த மாநாடு வரவேற்கிறது. நாட்டைக் காப்பதற்காக கடந்த 3 வாரங்களில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கும் சித்திரை முழுநிலவு மாநாடு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு நிறைவேற்றப்பட்டது.

    • பாமக சார்பில் இன்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்று வருகிறது.
    • மாநாட்டில், 1.80 லட்சம் இருக்கைகளுடன் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று மாலை தொடங்கியுள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டது.

    தமிழ்நாடு முழுவதும் இருந்து பா.ம.க. தொண்டர்கள் மாநாட்டில் திரளாக பங்கேற்றுள்ளனர். இதற்காக 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே அனைத்து பகுதிகளிலும் நிகழ்ச்சியை காண 3 இடங்களில் ராட்சத எல்.இ.டி. திரை வைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, 40-க்கு 20 உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

    மாநாட்டு திடலில் வன்னியர் சங்கம் உருவானது முதல் தற்போது வரையிலான வரலாற்று தொகுப்பு புகைப்பட காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

    இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கிய நிலையில், புஷ்பவனம் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.

    அதைத்தொடர்ந்து, வன்னிய வள்ளல்கள் தியாகிகள் என்ற குறும்படமும் ஒளிபரப்பப்பட்டது.

    இதற்கிடையே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடைக்கு வந்த நிலையில், பாராகிளைடரில் வன்னியர் சங்கக் கொடி பறக்கவிடப்பட்டது. கொடி பறந்ததை கண்டு, ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். மேலும், மாநாட்டுக் கொடியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். 

    ×