என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என்று கூறினேனா? - பிரேமலதா விளக்கம்
- எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
- கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை பற்றி அறிவிப்பேன்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற காஞ்சிபுரம் தே.மு.தி.க. கழக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் இல்ல மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை வாழ்த்தினார்.
இதன்பின் செய்தியாளளை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், "உள்ளம் தேடி இல்ல நாடி" என்ற முதல் சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவும் மக்களுடைய ஆதரவோடும் மிக சிறப்பாக நடைபெற்றது. மீண்டும் 2-ம் கட்ட பயணம் நாளை (இன்று) தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
நான் பலமுறை எங்கள் கட்சி கூட்டணி குறித்து கூறிவிட்டேன். கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை பற்றி அறிவிப்பேன். நான் சொல்லாதது செய்தியாக வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டார் என நான் சொல்லாததை அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வந்துள்ளன. நான் அப்படி பேசவே இல்லை. இவை அனைத்தும் முற்றிலும் தவறான செய்தி. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது.
எங்கள் கட்சி நிர்வாகிக்குள் பேசுவதை, நீங்கள் நான் பேசியதாக போடுவது மிகவும் கண்டனத்துக்குரியது. தே.மு.தி.க. சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் சொல்லாததை சொல்வதாக நீங்கள் செய்தி வெளியிட்டால் இனி பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டேன் என்றார்.
முன்னதாக, தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக கூறி எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என்று பிரேமலதா கூறியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.






