என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் கடலுக்கடியில் பழங்கால கோவில்கள்?- தொல்லியல்துறை ஆய்வு
    X

    மாமல்லபுரம் கடலுக்கடியில் பழங்கால கோவில்கள்?- தொல்லியல்துறை ஆய்வு

    • உலகலாவிய புராதான சின்னமாக நிற்கும் மாமல்லபுரம் கடற்கரைகோவில் ஆகும்
    • கிழக்கு பகுதி கடலில் ஆய்வு செய்து பாறைகள் இருப்பதை கண்டறிந்தனர்.

    மாமல்லபுரம்:

    ஏழாம் நுாற்றாண்டு காலகட்டத்தில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த பல்லவர்களின் துறைமுக பட்டினமாக மாமல்லபுரம் விளங்கியது. மாமல்லபுரத்தில் உள்ள பாறை குன்றுகளில் அவர்கள் பலவகையான சிற்பங்களை செதுக்கினர்.

    அத்துடன் அவர்கள் கோவில் கட்டுமானமாக உருவாக்கியது உலகலாவிய புராதான சின்னமாக நிற்கும் மாமல்லபுரம் கடற்கரைகோவில் ஆகும். இந்த கோவில் சிவன், விஷ்ணு சன்னிதிகளுடன் உருவாக்கபட்டுள்ளது. அதன் கிழக்கில் மேலும் சிலகோவில்கள் அமைந்து, அவைகள் கடல் சூழ்ந்து மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மத்திய தொல்லியல் துறையின் நீருக்கு அடியில் சென்று ஆய்வு செய்யும் சிறப்பு பிரிவினர் 2001-ல் கோவிலின் கிழக்கு பகுதி கடலில் ஆய்வு செய்து பாறைகள் இருப்பதை கண்டறிந்தனர். 2004-ல் ஏற்பட்ட சுனாமி தாக்குதலின்போது, கடலில் உள்ள பாறைகள் வெளிப்பட்டன, அந்த பாறைகளில் பழங்கால கட்டுமானங்கள் உள்ளதா? என, 2005ல் ஆய்வு செய்து, பாறை கல்லிலான சுவர் போன்ற அமைப்பு சேதமடைந்து கிடப்பதாகவும், அவைகள் கலைநயமான வேலைப்பாடுகளுடன் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

    அதன் தன்மையும், துல்லியமும் குறித்து அறிய முடியாத நிலை இருந்தது. தற்போது அதை கூடுதலாக ஆய்வு செய்வதற்காக, ஆர்.ஓ.வி எனக் கூறப்படும் [ரிமோர்ட்லி ஆப்ரேட் வெகிள்] மீன் வடிவிலான ரோபோட்டிக் கேமரா மூலமாக கடலில் மூழ்கிய கட்டுமான சிதைவுகளை துல்லியமாக படம் பிடித்து, அவைகளை ஆவணப்படுத்த தொல்லியல்துறை முடிவு செய்தது.

    அதன்படி அத்துறையின் கூடுதல் இயக்குனர் அலோக் திரிபாதி, பிரிவின் தலைவர் அப்ரஜிதா சர்மா உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக மாமல்லபுரம் கடலில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து கூடுதல் இயக்குனர் அலோக் திரிபாதி கூறியதாவது:-

    கடற்கரை கோவிலுக்கு கிழக்கில், ஒரு கி.மீ., தூரத்தில் 6 மீட்டர் ஆழத்தில், நீருக்கு அடியில் பழங்காலத்து கோவில் வெட்டுக்கல் சுவர்கள் இருப்பதை ஆர்.ஒ.வி., கருவி மூலம் துல்லியமாக ஆய்வு நடத்தி கண்டு பிடித்துள்ளோம். தொடர்ந்து இதுகுறித்தும், கடலுக்குள் மூழ்கிய கோவில்கள் குறித்தும் இன்னும் கூடுதலாக நவீன தொழில்நுட்ப உதவியுடன், கடல் மற்றும் செயற்கைகோல் வழியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

    Next Story
    ×