என் மலர்
அரியலூர்
ஜெயங்கொண்டம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையடுத்து முக்கிய இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் மகிமைபுரம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆனந்தவேல் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சரக்கு லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது.
சந்தேகமடைந்த அதிகாரி கள் அந்த லாரியை தடுத்தி நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சுமார் 90 பெட்டிகளில் இருந்தது. ரூ. 50 லட்சம் மதிப்பிலான அந்த போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் லாரியை பறிமுதல் செய்ததோடு, அதனை ஓட்டிவந்த திருப்பூர் மாவட்டம் சூரியப்பன் பள்ளத்தை சேர்ந்த நேரு (வயது 38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த போதை பொருட்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #LoksabhaEelctions2019
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கொலையனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேசமூர்த்தி(வயது 24). செல்வம்(27), ஜெயராஜ்(25). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் உள்ள பஸ் நிலையம் முன்பு மது குடித்துவிட்டு ஒருவரை ஒருவர் தகாதவார்த்தைகளால் திட்டி கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து கொண்டிருந்தனர் இதை அறிந்து அங்கு சென்ற விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள பண்டாரவிளை கிராமத்தை சேர்ந்தவர் சவுர்ஜான் (வயது 38). மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவர் மற்றும் மலேசியாவில் அவருடன் வசித்து வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் விடுமுறையில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக பண்டாரவிளைக்கு வந்திருந்தார்.
இன்று காலை சவுர்ஜான் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு டெம்போ வேனில் புறப்பட்டார். மொத்தம் 16 பேர் சென்றனர். அரியலூர் மாவட்டம் அணைக்கரை அருகே உள்ள மெய்க்காவல்புத்தூர் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே ஒரு கார் தாறுமாறாக வந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வேன் டிரைவர் ஆசிக் அலிப் (39) உடனே காரை சாலையோரமாக நிறுத்தினார். இருப்பினும் தாறுமாறாக ஓடி வந்த கார், வேனின் முன்பகுதியில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வேன் மற்றும் காரின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
காரில் வந்த 3 பேர் உடல் நசுங்கி காருக்குள்ளேயே பிணமானார்கள். வேனில் இருந்த சவுர்ஜான், ரியாஸ்கான் (18), அரிபின் (16), முகமது சபிக் (47), அஸ்மான்ஜான், ஜிமிதாபேகம் உள்பட 16 பேர் காயமடைந்தனர். இதில் முகமது சபிக் மலேசியாவை பூர்வீகமாக கொண்டவர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி மற்றும் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 16 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் பெயர் விவரம் குறித்து விசாரணை நடத்திய போது, அவர்கள் மயிலாடுதுறை அருகே உள்ள மூவளூர் பகுதியை சேர்ந்த குமார் மகன் நித்தியானந்தம் (22), மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியை சேர்ந்த ரகுபதி மகன் பிரபா, அதே பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் சஞ்சய் என்பது தெரியவந்தது. இதில் நித்தியானந்தம் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்தார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு ஊர் திரும்பிய போது விபத்தில் சிக்கி 3 பேரும் பலியானது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தூக்க கலக்கத்தில் காரை ஓட்டி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த பொன்பரப்பியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் உண்டாகி கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்புபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் அண்மையில் எச்சரிக்கை செய்து இருந்தனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ஆனந்த்(வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்- அப்பில் ஒரு தரப்பு சமூகத்தினரை பற்றி மிரட்டும் வகையில் அவதூறாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த உதயநத்தம் கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக்கேயன், இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரவி. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோசி (வயது 42). இவர்களது மகள் பிரனீதா (17). பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
தாய் மகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலையிலும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரோசி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். இதை பார்த்ததும் அவரது மகளும் தாயை கட்டிப்பிடித்தார்.
இருவரும் பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். ஆனால் ரோசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சிவன் கோவில் தெரு மற்றும் பள்ளிக்கூட தெருக்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக சிவன் கோவில் தெரு அருகே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அதன் அருகில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து குடிநீர் இன்றி அப்பகுதி மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து சென்று ஊரின் மேற்குபுறம் உள்ள தெருக்களில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரிசெய்ய கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் தேர்தல் நேரமாக இருந்ததால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினருடன் ஒன்று சேர்ந்து கோவிலூரில் உள்ள சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், நாராயணன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதி மக்கள் இந்த தண்ணீர் பிரச்சினை மட்டுமின்றி மயானத்திற்கு செல்லும் பாதையில் மின்விளக்கு அமைத்துத்தர வேண்டும் என்றும், ஒரு தனிப்பட்ட நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தண்ணீர் இணைப்பு வைத்து உபயோகப்படுத்தி வருகின்றனர் அதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகளை கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இன்றுக்குள் (அதாவது நேற்று) இந்த ஆழ்குழாய் கிணற்று மின் மோட்டாரை சரி செய்து தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்கிறோம் என்றும், மின்விளக்கு மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் இணைப்பு செயல்பட்டு வருவதை நாளைக்குள் (அதாவது இன்று) சரி செய்து தருகிறோம் என்றும் உறுதியளித்தனர்.
இதையடுத்து ஆழ்குழாயில் பொருத்தப்பட்டு இருந்த மின்மோட்டார் உடனடியாக வெளியே எடுக்கப்பட்டு சரிசெய்ய கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர்:
தமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம. கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்டதலை நகரிலும் வரும் 24-ந் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து அரியலூரில் அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும். அதேபோல் 18 தொகுதிகளில் நடத்தப்பட்ட இடைதேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணிராமதாஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதே வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. தர்மபுரி உட்பட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்ற திட்டமிட்டனர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராம வாக்கு சாவடியில் வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
மேலும் பா.ம.க.வினர் பானை சின்னத்தை போட்டு உடைத்தனர். ஆதிதிராவிடர் பகுதிக்குள் நுழைந்து பானை சின்னம் போடப்பட்ட வீடுகளை உடைத்து சேதப்படுத்திருந்தனர். இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளன.
பத்திரிகையாளர்கள் யார்? என்று தெரியாமல் தாக்கியுள்ளனர். அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளரை பார்த்து ஆறுதல் கூறி வந்துள்ளேன்.
தமிழகம் முழுவதும் பா.ம. க.வினர் வன்முறையை தூண்டி வருகிறார்கள். தேர்தல் தோல்வி பயத்தால் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அரசும், காவல் துறையும் மெத்தனம் காட்டி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் வருகின்ற 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது தலைமையிலும், அரியலூரில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., அனைத்து தோழமைக் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு திருமாளவளவன் கூறினார்.
பேட்டியின்போது தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் கிட்டு, மேலிட பொறுப்பாளர் கோவேந்தன், துணை பொது செயலாளர் கனி அமுதன், மாவட்ட செயலாளர் செல்வநம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பா நந்தம், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் லூயிகதிரவன் உட்பட ஏராளமானோர் இருந்தனர். #thirumavalavan #Ponparappi #pmk
தமிழகத்தில் நேற்று பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடும் வன்முறை வெடித்தது. திருமாவளவனின் தேர்தல் சின்னமான பானையை சிலர் போட்டு உடைத்தனர். இதை சிலர் தட்டிக்கேட்டதால் மோதல் ஏற்பட்டது. மோதலின்போது சுமார் 20 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், பொன்பரப்பி மோதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே மரங்களை வெட்டிப் போட்டு சாலைகளில் தடைகளை ஏற்படுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டி, புழுதிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. #LokSabhaElections2019 #VCKProtest






