என் மலர்tooltip icon

    அரியலூர்

    குன்னம் அருகே நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் ஆகிய 2 கிராமங்களில் சாலை அமைக்கும் பணி தாமதத்தால் பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
    குன்னம்:

    ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்ட எல்லைப்பகுதியிலும், அரியலூர் மாவட்ட பகுதியின் அருகிலும் அமைந்துள்ளது நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் கிராமங்கள். இந்த 2 கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அரியலூர் மற்றும் பெரம்பலூருக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். விவசாயிகள் அதிகாலையில் அரியலூர் மார்க்கெட்டிற்கு தினசரி டவுன் பஸ்சில் காய்கறி கொண்டு செல்வது வழக்கம். அன்றாடம் 50-க்கும் மேற்பட்டோர் வெளியூருக்கு வேலைக்காக சென்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாக அலுவலகம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மருத்துவமனைக்கும் செல்வதற்கு 2 கிராம மக்களும் அப்பகுதியில் வரும் டவுன் பஸ்சை நம்பியே உள்ளனர். டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ்கள் தினமும் 2 கிராமங்களுக்கு சுமார் 20 நடை வந்து சென்றன.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் உசேன் நகரம் கிராமத்தில் தொடங்கி புஜங்கராயநல்லூர் கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் நொச்சிகுளம் கிராமத்தில் தெற்குதெருவில் உள்ள வளைவில் புதிதாக தரை பாலம் அமைக்கப்பட்டது. இதன் பணி முடிவுற்று மூன்று மாதங்கள் ஆகின்றது. மேலும் இந்த புதிய தார்ச்சாலையில் 2 சறுக்கு பாலமும் அமைக்க வேண்டி உள்ளது. சாலையின் இருபுறமும் மண் கொட்டப்பட்ட நிலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் நிலுவையில் உள்ளது

    கடந்த 5 மாதங்களாக நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் கிராமத்தின் ஊருக்குள் டவுன் பஸ்கள் வராமல் அரியலூர், பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் கேட்டில் இருந்து வரும் பஸ்கள் ஜமீன் பேரையூர் கிராமத்திற்கு எரிகரை முன்பாகவே இரண்டு கிராம மக்களையும் இறக்கி விட்டு விட்டு உசேன் நகரம் வழியாக அரியலூருக்கும், கூத்தூர் வழியாக ஆலத்தூர் கேட், பெரம்பலூருக்கும் சென்று விடுகின்றன. இதனால் 2 கிராம மக்களும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தான் பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இரவு நேரத்தில் இருட்டில் நடந்து செல்வது அப்பகுதி மக்களுக்கு சிரமமாகவும் உள்ளது. இதில் சிலர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்களிடம் பயத்துடன் ‘லிப்ட்’ கேட்டு வந்து செல்கின்றனர். விவசாய பொருட்களை தலைச்சுமையாக தூக்கி செல்கின்றனர்.

    2 கிராம மக்களின் சிரமத்தை போக்க புதிதாக அமைக்கப்படும் தார்ச்சாலை பணியை விரைந்து முடித்தும், நொச்சிக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட பாலத்தின் விடுபட்ட பணிகளை விரைந்து முடித்தும், அந்த கிராம மக்களின் சிரமத்தை போக்கிடுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி விரைவில் திறக்கப்பட உள்ளதால் மாணவர்களின் சிரமத்தையும் கவனத்தில் கொண்டு போக்கிடுமாறும், அவ்வாறு விரைந்து சாலைப் பணியை முடிக்காமல் காலதாமதம் ஏற்படுத்தினால் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் நடத்த உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 
    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் காரைப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் பவனி நடைபெற்றது.
    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் காரைப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் கடந்த 15-ந்தேதி திருமானூர் பங்குதந்தை பெல்லார்மின் தலைமையில் நடைபெற்றது.

    18-ந்தேதி இரவு 7மணிக்கு புனித வனத்து சின்னப்பர் கல்லறை புனிதப்படுத்தி அன்னதானம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருமானூர் அருளானந்த திருக்கோவில் பங்குதந்தை பெல்லார்மின், இயேசு சபை குழுமம் தலைவர் ஜோசப் ராஜ், கோக்குடி பங்குதந்தை சந்தியாகு, கோக்குடி உதவி பங்கு தந்தை வசந்த், புனவாசல் பங்கு தந்தை மைக்கேல்ராஜ், ஆகியோரின் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    இதையடுத்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் பவனி நடைபெற்றது. காரைப் பாக்கம் கிராமம் மற்றும் மஞ்ச மேடு கிராமங்களில் பவனி நடைபெற்றது. அனைத்து மதத்தினரும் தேர் பவனியில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் கிராம தலை வர்கள், இளைஞர்கள், பங்குதந்தை பெல்லார்மின் ஆகியோர் செய்திருந்தனர். நேற்று கொடி இறக்கம் நடைபெற்றது.
    ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானதில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பலியானான்.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 40). இவரது மகன்கள் விஜயராஜ்(14), தர்மேந்திரன்(11). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில் சிலம்பூர் பூக்குழி சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் கொண்டு செல்லப்பட்ட போது விஜயராஜ் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மீன்சுருட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சுண்டிபள்ளம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில், அப்பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த மின்மாற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதையடுத்து வேறு இடத்தில் உள்ள ஒரு மின் மாற்றியில் இருந்து சுண்டிபள்ளம் கிராமத்திற்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் ஏற்றும் மின்மோட்டார் மின்னழுத்தம் குறைவு காரணமாக வேலை செய்யவில்லை.

    இதனால் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப் படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் நேற்று காலை 7 மணியளவில் சுண்டிபள்ளம் கிராமத்தில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ் சாலையில் கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மலையரசன், செல்வக்குமார், வசந்த், திவாகர் மற்றும் மீன்சுருட்டி மின்சார உதவி பொறியாளர் பாரதிதாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அதிகாரிகள் கூறுகையில், உடனடியாக பழுதடைந்த மின்மாற்றியை மாற்றி மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    செந்துறை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2-வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்திய பெண்கள் போலீசார் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் கடந்த பல ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து அந்த கடையை மூடிய டாஸ்மாக் நிர்வாகம் பொன்குடிக்காடு கிராமத்தில் உள்ள விவசாய நிலப்பகுதியில் புதிய கடை திறக்க முயற்சி செய்தது. அதனை அப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தி மூடினார்கள். அந்த போராட்டத்தை தொடர்ந்து அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் அப்போது மக்களின் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் திடீரென டாஸ்மாக் கடை முன்பு திரண்டு அப்பகுதி பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், செந்துறை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து நேற்று உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவில் 3 மாதத்தில் டாஸ்மாக் கடை மூடப்படும் என்று கோட்டாட்சியர் கூறினார். ஆனால் போராட்டக்காரர்கள் 10 நாட்களுக்குள் மூட வேண்டும் என்று கூறி வெளியேறினர். பின்னர் அங்கிருந்து டாஸ்மாக் கடைக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சில பெண்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் காலில் விழுந்து இந்த கடையை உடனடியாக மூடுங்கள் என்றனர். இதையடுத்து விரைவில் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
    கள்ளக்காதல் பிரச்சனையில் மகள் தற்கொலைக்கு காரணமான அரசு பஸ் டிரைவரை ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொன்றார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல், அரசு பஸ் டிரைவர். விருத்தாசலம் அருகே புதுக்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர்.

    மனைவி இறந்த பின்னர் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஏழுமலையின் மகள் ஆனந்தவள்ளிக்கும், குமரவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

    இதையடுத்து இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த 18.9.18 அன்று குமரவேலும் ஆனந்த வள்ளியும் இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்றனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் ஆனந்தவள்ளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மகள் தற்கொலைக்கு காரணமான குமரவேல் மீது ஏழுமலைக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்றிரவு விருத்தாசலத்தில் குமரவேலுவை சந்தித்த ஏழுமலை, அவருடன் நைசாக பேச்சு கொடுத்து மது அருந்த அழைத்து சென்றார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் அங்கு இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

    குமரவேலுக்கு போதை தலைக்கேறியதும், ஆத்திரமடைந்த ஏழுமலை, தான் கொண்டு வந்த கத்தியால் குமரவேல் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    பின்னர் உடலை ஆட்டோவில் ஏற்றி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சிக்கு சென்றார். அங்கு தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுரங்கத்திற்கு எதிரே உடலை போட்டு விட்டு ஊர் திரும்பினார். விருத்தாசலத்தில் போலீசார் மறித்து வாகன சோதனை செய்த போது ஆட்டோவில் உள்ள ரத்தக்கறையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஏழுமலையிடம் விசாரித்த போது அவர் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் செந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கொலை தொடர்பாக ஏழுமலையிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க, லாரி டிரைவர்கள் சாலை விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், லாரி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார். இதில் மண்டல போக்குவரத்து அலுவலர் கலந்து கொண்டார். போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க, லாரி டிரைவர்கள் சாலை விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். டிரைவர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டும். ஆர்.சி. புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எடைக்கு குறைவாகவே லாரியில் பொருட்களை ஏற்றிச் செல்ல வேண்டும். டிரைவர்கள் சாலைக்குரிய வேகத்தை கடைபிடித்து வாகனத்தை இயக்க வேண்டும்.

    சிமெண்டு ஆலை லாரிகள் கட்டாயமாக எந்த வாகனத்தையும் முந்தி செல்லக்கூடாது. அனைத்து சிமெண்டு ஆலை லாரிகளிலும் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வெண்டும். பள்ளி, கல்லூரிகள் உள்ள இடத்தில் கவனமாகவும், குறைவான வேகத்திலும் செல்ல வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமலும் வாகனத்தை இயக்கக்கூடாது. மது அருந்தி விட்டு, செல்போன் பேசிக்கொண்டு கட்டாயமாக வாகனத்தை இயக்கக்கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர வேறு எங்கும் லாரியை நிறுத்தக்கூடாது, என்றார். முடிவில் லாரி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் சாலை விபத்தில்லா மாவட்டமாக அரியலூரை உருவாக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். 
    மீன்சுருட்டி பகுதியில் பலத்த காற்று வீசியதில் 3,500 வாழை மரங்கள் சாய்ந்தன. இதில் வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய பருவத்தில் இருந்தன.
    மீன்சுருட்டி:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியதில் இருந்து வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து, வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது.

    பலத்த காற்றின் காரணமாக, மீன்சுருட்டி அருகே மாதாபுரம் கிராமத்தில் 3 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட 3,500 வாழை மரங்கள் சாய்ந்தன. இதில் வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய பருவத்தில் இருந்தன.

    இது குறித்து வாழை விவசாயி குழந்தைசாமி கூறுகையில், இந்த பகுதியில் அவ்வவ்போது ஏற்படும் மின் தடையை பொருட்படுத்தாமல் ஜெனரேட்டர் வைத்து வாழைக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தேன். இதுவரை வாழை சாகுபடிக்கு ரூ.9 லட்சம் செலவு செய்துள்ளேன். ஆனால் பலத்த காற்றில் வாழைகள் எல்லாம் சாய்ந்தன. வாழை சாகுபடி செய்வதற்காக நகையை அடகு வைத்துள்ளேன். தற்போது வாழைகள் சாய்ந்ததால், நிர்க்கதியாக நிற்கிறேன். எனவே வேளாண் அதிகாரிகள் வாழை சாய்ந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இழப்பீட்டு தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
    கத்திரி வெயில் வழக்கமான வெப்பநிலையைவிட கூடுதலாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென கலெக்டர் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி வரையிலான கத்திரி வெயில் காலத்தில் வழக்கமான வெப்பநிலையைவிட கூடுதலாக வெப்பநிலை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை கூடுமானவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்படும் சூழ்நிலையில் வெளியில் செல்லும்போது, உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் எனவும் தாகம் இல்லாவிடினும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும்.

    மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடுமையான பணிகளை செய்யாமல் இருக்கவும், மது, தேநீர் மற்றும் காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும் வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள லேசான, வெளிரிய, தளர்வான முழுக்கை உடைகள் மற்றும் பருத்தி நூல் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். குடை மற்றும் தொப்பி முதலியவற்றை பயன்படுத்த வேண்டும். தண்ணீர், நீர்மோர், இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, எலுமிச்சை சாறு, கரும்பு சாறு, பழச்சாறு மற்றும் ஓ.ஆர்.எஸ், உப்பு சர்க்கரை கரைசல் போன்றவற்றினை உட்கொள்ள வேண்டும். கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான பகுதியில் கட்டிவைத்து, அதற்கு போதிய அளவு குடிநீர் மற்றும் தீவனம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மங்களமேடு:

    மங்களமேட்டையை அடுத்துள்ள சின்னாறு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 32). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இவரும், இவரது குடும்பத்தினரும் நேற்று முன்தினம் மதியம் துறையூரில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்கநிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை கோவிந்தராஜ் வீட்டின் அருகே உள்ளவர்கள் கோவிந்தராஜின் வீட்டை பார்த்தபோது அதன் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    மேலும் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டனர். இதுகுறித்து அவர்கள், கோவிந்தராஜிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்த நிலையில், பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் இதுகுறித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்த திருமணமான புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 30). இவருக்கும், இவரது உறவினரான பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராமசாமியின் மகள் ரேகா(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 

    இந்த நிலையில் உறவினர்களின் எதிர்ப்பை மீறி பிலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் பன்னீர்செல்வமும், ரேகாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். அப்போது பன்னீர்செல்வம் வெளியே சென்றிருந்த நேரத்தில், தனது கணவரிடம் இருந்து தன்னை பிரித்து விடுவார்கள் என்று மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் ரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 15 நாட்கள் ஆனதால் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆண்டிமடம் அருகே காதலன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மருந்தில்லா ஊசி செலுத்திய பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் பிரபு என்ற தெய்வசிகாமணி (வயது 19). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த உடையார்பாளையம் அருகே உள்ள முனையதிரையன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் கயல்விழி (23) என்ற பெண்ணுடன் தெய்வசிகாமணிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    தெய்வசிகாமணியும், கயல்விழியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் கயல்விழியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனிடையே கயல்விழியை சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உறவினர் விஜய் என்பவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த சில வாரம் சென்னையில் அவர்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர்.

    அதன்பின் கணவன் மனைவி இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் கயல்விழி தனது கல்லூரி காதலரான தெய்வசிகாமணியிடம் அடிக்கடி செல்போனில் பேசி தன்னை அழைத்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து தெய்வசிகாமணி கயல்விழியை தன்னுடன் அழைத்து வந்தார். ஆனால் இந்த விவரம் தெரியாத கயல்விழியின் கணவர் விஜய் தனது மனைவியை காணவில்லை என்று, கயல்விழியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்த கயல்விழியின் பெற்றோர் சென்னைக்கு சென்று கயல்விழியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்திலுள்ள பாலத்தின் அருகில் நேற்று தெய்வசிகாமணியும், கயல்விழி பேசிக்கொண்டிருந்ததை அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த வாலிபர்கள் பார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது இருவரும் மருந்தில்லா ஊசியை ஒருவருக்கொருவர் மாறி உடலில் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் கயல்விழி மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட கிரிக்கெட் விளையாடிய வாலிபர்கள் ஓடி வந்தனர். இதற்கிடையில் கயல்விழி இறந்து விட்டதாக நினைத்த தெய்வசிகாமணி, உடனடியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்று, அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கிரிக்கெட் விளையாடிய வாலிபர்கள் உடனடியாக ஆண்டிமடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அப்போது மருந்தில்லா ஊசி செலுத்தியதில் மயங்கிய நிலையில் கிடந்த கயல்விழியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தெய்வசிகாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக கயல்விழி தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி வந்து பார்வையிட்டார். அப்போது அங்கு ரத்தத்துடன் கிடந்த மருந்தில்லா ஊசியையும், தெய்வசிகாமணி, கயல்விழியின் காலணிகளையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம்தொடர்பாக ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசராணை நடத்தி வருகிறார்கள். 
    ×