என் மலர்tooltip icon

    அரியலூர்

    சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 16 பேர் காயம் அடைந்தனர். இதில் தப்பியோடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுந்தோண்டி கிராமத்தில் இருந்து தேவமங்கலம் கிராமம் துரைராஜ் என்பவரது இல்லத்திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வாடகை வேன்பேசி கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள உறவினர்கள் நேற்று காலை தேவமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது தேவமங்கலம் சுடுகாடு அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் மனைவி தேவி(48), வெங்கடேசன் மனைவி கஸ்தூரி(62), ஜோதி மனைவி சித்ரா(25), பாண்டியன் மனைவி இளவரசி(32), கண்ணன் மனைவி செல்வகுமாரி(45), சின்னப்பன் மனைவி சரோஜா(50), செல்வராஜ் மனைவி ஜெயம்(55), செல்லப்பன் மனைவி மலர்க்கொடி(40), ராமசாமி மனைவி வளர்மதி(50), கண்ணன் மனைவி செல்வராணி(40), சின்னையன் மனைவி சரோஜா(50), கோவிந்தன் மனைவி சின்னம்மாள்(62), சந்திரசேகரன் மகன் சஞ்சய்(16), நடராஜன் மகன் ராமச்சந்திரன்(18), இளையநாதன் மகன் அஸ்வின்(5) கொண்டான்குடி சுந்தரபாண்டியன் மனைவி வசந்தா(19) உள்பட 16 பேரும் காயம் அடைந்தனர்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 வயது சிறுவன் அஸ்வின் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய வேன் டிரைவரான வாரியங்காவலை சேர்ந்த குமாரை(30) வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம் அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் பல்லத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே  உள்ள தே.மங்களம் கிராமத்தில் துரைராஜ் என்பவரது வீட்டு திருமணத்திற்காக இன்று காலை கழுவன் தோண்டி கிராமத்தில் இருந்து 15 பேர் ஒரு வேனில் புறப்பட்டனர். 

    வேன் கிலால் கிராமத்தை தாண்டி செல்லும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவதற்காக டிரைவர் வேனை ஒருபுறமாக திருப்பினார். இதனால் தாறுமாறாக ஓடிய வேன்  சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  

    இதில் வேனில் இருந்த 10 பேர் காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து த.பழுர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம் அருகே தனியார் பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இருகையூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன் மகன் ஜெயச்சந்திரன்(வயது 18). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் காரைக்குறிச்சி நூலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த ஜெயச்சந்திரன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தா.பழுர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, தனியார் பஸ் டிரைவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ராஜாராமன்(40) என்பவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    அரியலூர் அருகே நகை, பணம் கேட்டு போலீஸ்காரர் மிரட்டியதால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள காட்டுப்பெரும்பியம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சுமதி (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. 5 வயதில் ஹரிஹரன் என்ற மகன் உள்ளான்.

    வேல்முருகன் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வார். இதனால் சுமதி, தனது மகனுடன் கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த சுமதி திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று சுமதி இறந்தார்.

    இது குறித்து சுமதியின் தாயார் இடையத்தான்குடியைச் சேர்ந்த தேன்மொழி கயர்லாபாத் போலீசில் புகார் செய்தார். புகாரில் அரியலூர் பேளூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் காமராஜ் என்பவர் டார்ச்சர் செய்ததால்தான் தனது மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர், போலீஸ்காரர் காமராஜ் டார்ச்சரால் சுமதி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சுமதி சாவுக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. சுமதிக்கும், அரியலூர் மாவட்டம் பேளூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் காமராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தின் மூலம் காமராஜ், சுமதியிடம் செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். சுமதியும் காமராஜ் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுமதி, காமராஜூடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

    கடந்த 3-ந்தேதி சுமதி வீட்டிற்கு சென்ற காமராஜ், அங்கிருந்த சுமதியிடம் செலவுக்கு பணம்-நகை, தாலிச் செயின் மற்றும் அவர் பயன்படுத்தி வந்த செல்போன் சிம்கார்டை கேட்டு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சுமதி எதையும் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காமராஜ், சுமதியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    காமராஜ் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த சுமதி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர் காமராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    அரியலூர் அருகே மருத்துவ செலவுக்கு பணம் கேட்ட தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பளூவூர் அருகே உள்ள மரவனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 70). இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இவரது ஒரே மகன் செந்தில்குமார் (40) மனைவி பாப்பாத்தியுடன் பக்கத்து தெருவில் வசித்து வருகிறார். விவசாய வேலை பார்த்து வந்த செல்லமுத்து சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரால் வேலைக்கு சரியாக செல்ல முடியவில்லை. எனவே மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் ஏற்கனவே மகன் செந்தில்குமாருக்கு செல்லமுத்து 5 பவுன் நகை செய்து கொடுத்திருந்தார். எனவே அதை தற்போது கொடுத்தால் வைத்திய செல வுக்கு உதவும் என நினைத்தார். இதனால் மகன் செந்தில்குமார் வீட்டிற்கு சென்று பணம் அல்லது நகையை கொடுத்து உதவும்படி செல்ல முத்து கேட்டுள்ளார். ஆனால் செந்தில்குமார் தன்னிடம் பணமும் இல்லை, நகையும் இல்லை என கூறி விட்டார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்தது.

    நேற்று செல்லமுத்துவின் சித்தி செல்லம்மாள் என்பவர் இறந்து விட்டார். இதை துக்கம் விசாரிப்பதற்காக செல்லமுத்து சென்றார். அப்போது அந்த வழியாக ஏற்கனவே துக்க வீட்டிற்கு சென்று விட்டு அவரது மகன் செந்தில்குமார் மனைவி பாப்பாத்தியுடன் வந்து கொண்டிருந்தார்.

    அவர்களுடன் உறவினர்கள் பழனியாண்டி, வள்ளி ஆகியோரும் வந்து கொண்டிருந்தனர். வழியில் மாணிக்கம் என்பவரது வீட்டின் அருகில் வந்தபோது செல்லமுத்து மகன் செந்தில்குமாரிடம் மீண்டும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது செந்தில்குமாரும் அவருடன் வந்த உறவினர்களும் செல்லமுத்துவை தாக்கி தள்ளி விட்டுள்ளனர். இதில் செல்லமுத்து எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் ஆகியோர் கொலை வழக்குபதிவு செய்து செல்லமுத்துவின் மகன் செந்தில்குமார் உறவினர் பழனியாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

    செந்தில் குமாரின் மனைவி பாப்பாத்தி, பழனியாண்டியின் மனைவி வள்ளி ஆகியோரை தேடி வருகிறார்கள். செல்லமுத்துவின் உடலை பிரோத பரிசோத னைக்காக அ ரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ செலவுக்கு பணம் கேட்ட தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.
    அரியலூரில் கடன் தொகைக்காக வங்கி அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழ வண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 50). விவசாயியான இவர், அரியலூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் ரூ.9 லட்சம் கடன் பெற்று டிராக்டர் வாங்கி விவசாயம் செய்து வந்தார்.

    டிராக்டர் வாங்கியதற்காக மாதந்தோறும் வங்கியில் கடன் தவணையை செலுத்தி வந்த அவர், கடந்த 2 மாதமாக தவணை தொகையை செலுத்தவில்லை.

    2 மாத கால தவணை தொகையை வருகிற 6-ந் தேதிக்குள் வங்கியில் செலுத்த வேண்டும் எனவும், செலுத்த தவறினால் டிராக்டர் பறிமுதல் செய்யப்படும் என வங்கி நிர்வாகம் கடந்த 30-ந்தேதி தேவேந்திரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

    இந்த நிலையில் நேற்று தேவேந்திரன், அவரது வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த வங்கி அதிகாரிகள், திடீரென டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். இதனால் விரக்தியடைந்த தேவேந்திரன், பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து விட்டார்.

    உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வங்கி அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் ஒன்றியம் கடுகூர் கிராமத்தில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூர் ஒன்றியம் கடுகூர் கிராமத்தில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் கடுகூர் ஊராட்சிசெயலா ளர் பஞ்சநாதன் வரவேற்று பேசினார்.

    மாவட்ட துணை செயலாளர் எழிலரசன், தெய்வசிகாமணி, திருமானூர் ஒன்றிய செயலாளர் ராஜ் குமார், ஜெகதீசன், தாபழுர் ஒன்றிய செயலாளர்அறிவ ழகன், அரியலூர் ஒன்றிய செயலாளர் சசிகுமார், ஒன்றிய தலைவர்செந்தில் குமார், மாவட்ட தொழிற் சங்கம் பழக்கடை பாண்டியன், வேல்முருகன், உடையார் பாளையம் செயலாளர் முனியசாமி, கடுகூர் கிளை செயலாளர் பிரகாஷ்,ஒன்றிய துணைசெயலாளர் ராஜீவ் காந்தி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

     கூட்டத்தில் மாநில விவசாயஅணி துணைசெயலாளர் சாமிநாதன், அரியலூர் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    அரியலூர் அருகே மூதாட்டியிடம் தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றது தொர்பாக போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருன்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், காவனூர் அம்பாபூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மனைவி காந்தி(வயது 60). இவர் நேற்று முன்தினம் நாச்சியார்பேட்டை தைலமர காட்டில் ஆடு, மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், காந்தியின் கழுத்தில் கிடந்த தாலி, தோடு உள்ளிட்ட 1 பவுன் நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் காந்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மலரழகன் வழக்குப்பதிவு செய்து நகைகளை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைக்கும் வகையில் வெளிநாடு சென்றுள்ளது மிகப்பெரிய தவறு என்று வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூரில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சில்லறை வணிகர்களை பாதிக்கும் வகையில் ஆன்லைன் வணிகத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். ஆட்சியில் யார் இருந்தாலும் வெளிநாட்டுக்காரர்களுக்கு துணையாக இருக்கிறார்கள். இதை எதிர்த்து அக்டோபர் 2-ல் போராட்டம் நடைபெறும்.

    அந்நியர்களை விரட்டி அடிக்காமல் அந்நியர்களுக்கு உதவுகின்ற அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த போராட்டம் அமையும்.

    வெளிநாட்டு வங்கிகளால் உள்நாட்டு வங்கிகள் திவால் ஆகி வருகிறது. திவாலான வங்கிகளுக்கு மறு முதலீடு கொடுப்பதாக மத்திய அரசு கூறுவது தவறான செயலாகும். உள்நாட்டு தொழில்களை முடக்கி விட்டு வெளி நாட்டுக்காரர்கள் கொள்ளையடிப்பதற்கு நமது தலைவர்கள் துணை போகிறார்கள். இதை எதிர்த்து போராட மக்கள் அனைவரும் தயாராக வேண்டும்.

    தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைக்கும் வகையில் வெளிநாடு சென்றுள்ளது மிகப்பெரிய தவறு. நமது நாட்டு தொழில் முனைவோரை முதல்வர் முதலில் ஊக்கப்படுத்த வேண்டும்.

    அரசாங்கத்தின் எந்த அசைவாக இருந்தாலும் உள்நாட்டு சில்லறை வணிகத்தை ஒழிப்பதற்கான செயலாகத்தான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க கோரி கோடாலிகருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலிகருப்பூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் தமிழ், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களை நடத்த போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லை.

    இதனால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் பாடங்களை படிப்பதில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் நேற்று காலை தங்களது வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவ-மாணவிகளின் பெற்றோர் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பள்ளியில் போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் வந்து பள்ளியில் ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு தங்களது வகுப்புகளுக்கு சென்றனர். ஆசிரியர்பணியிடங்களை நிரப்பவில்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
    போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த யூனியன் மேலாளரை பணி நீக்கம் செய்ய கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

    அரியலூர்:

    கடந்த 30 ஆண்டுகளாக ஊராட்சி பணியாளர்களை எம்.பி., எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன், ஊராட்சி தலைவர்கள் ஆகியோரே பார்த்து தகுதியின் அடிப்படையில் பணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்தது.

    அதன்படி 8-ம் வகுப்பு படித்திருந்தால் ஊராட்சி எழுத்தராகவும், 10-ம் வகுப்பு படித்திருந்தால் ஊரக வளர்ச்சி துறையில் டிரைவராகவோ, இளநிலை உதவியாளராகவோ சேர்த்துக் கொள்ளலாம். தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி. மூலமாக ஊராட்சியில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், மருதூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 58) என்பவரின் தந்தை மருதூர் ஊராட்சி எழுத்தராக பணி புரிந்து வந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அன்பழகன், மருதூர் ஊராட்சி எழுத்தராக பணியில் சேர்ந்தார்.

    10-ம் வகுப்பு படித்திருந்தால் யூனியனில் இளநிலை உதவியாளராக பணியில் சேரலாம் என்பதால், அன்பழகன் 10-ம் வகுப்பு படித்ததாக போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்து கடந்த 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஆண்டிமடம், செந்துறை யூனியனில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த அவர், பதவி உயர்வு பெற்று அரியலூர் யூனியன் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    அடுத்த மாதம் (செப்டம்பர்) பணி ஓய்வு பெற வேண்டிய நிலையில் அவரது சான்றிதழை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, போலிசான்றிதழ் கொடுத்து அன்பழகன் வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட கலெக்டர் வினய் அன்பழகனை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    அன்பழகன் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் காவல் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி அமைப்பில் பணிபுரிபவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்க கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது அரசுத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
    செந்துறை:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து அரியலூர் மாவட்டம் செந்துறை போலீஸ் நிலையம் அருகே தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வீரவளவன் ஆகியோர் தலைமையில் நேற்று திடீரென ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று கோஷம் எழுப்பினர். 

    தகவல் அறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேரை கைது செய்து, அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல் அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து அரியலூர் மாவட்டம் தா.பழூர் பஸ் நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். 

    தகவல் அறிந்த தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.
    ×