என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூரில் கொள்ளை வழக்கில் கைதான விசாரணை கைதி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. கடந்த 16.8.2019 அன்று ஆண்டிமடத்தில் உள்ள கோவிலில் உண்டியல் பணம் மற்றும் மணி திருடப்பட்டது. 23.8.2019 அன்று செல்வராணி என்பவரின் வீட்டில் நகை-பணம் கொள்ளை போனது.

    இப்படி தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது.

    இதையடுத்து கொள்ளையில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து அரியலூர் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆண்டிமடம் அருகே உள்ள கஞ்சமலைப்பட்டி பகுதியை சேர்ந்த மணி என்கிற குண்டு மணி (வயது 50) என்பவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக தனிப்படை போலீசார், கஞ்சமலைப்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க தப்பி சென்றார். தொடர்ந்து அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்று போலீசார் விசாரணை நடத்தியபோது, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    அங்கு சென்ற தனிப்படை போலீசார் மணியை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை அரியலூர் போக்குவரத்து காவல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதுடன், நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவரை போலீசார் அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மணியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் கைதி திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூர் எஸ்.பி. சீனிவாசன், டி.எஸ்.பி.க்கள் அரியலூர் இளஞ்செழியன், ஜெயங்கொண்டம் மோகன்தாஸ் ஆகியோர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மணியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதனிடையே போலீசார் தாக்கியதால்தான் மணி இறந்துள்ளார் என்று அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் மணியின் சாவில் மர்மம் நீடிக்கிறது. இது தொடர்பாக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீசார் தாக்கியதால் மணி இறந்தாரா? அல்லது நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் மணிசாவுக்கான காரணம் குறித்த உண்மை விவரம் தெரிய வரும்.

    மணி இறந்த சம்பவத்தால் அவரது சொந்த ஊரான ஆண்டிமடம் கஞ்சமலைப்பட்டி பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தனக்கு எந்த பதவி ஆசையும் கிடையாது என்றும் தான் நினைத்து இருந்தால் எப்போதோ கவர்னர் ஆகி இருப்பேன் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
    செந்துறை:

    மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவுக்கு பா.ம.க. மற்றும் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் குருவின் சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மணிமண்டபத்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்து பேசியதாவது:-

    கடந்த 13.12.18 அன்று காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் நான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினேன். தற்போது ரூ.2½ கோடி செலவில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. குருவை நான் மூத்த பிள்ளையாகத்தான் பார்க்கிறேன். குரு இறந்தது எனக்கு கொடுத்த முதல் தண்டனை. மணிமண்டப திறப்பு விழாவில் நான் கலந்துகொண்டதை இரண்டாவது தண்டனையாகத் தான் பார்க்கிறேன்.

    முந்தைய தி.மு.க. ஆட்சியில் குருவை கொல்ல சதி செய்தனர். இதனை நான் தடுத்துவிட்டேன். அவர்களின் சூழ்ச்சிகளில் இளைஞர்கள் விழாமல் இருக்க வேண்டும். பா.ம.க.வை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்தன. அதற்கு நம் சமுதாயத்தினர் விலை போய்விட்டனர். அன்புமணிக்கு பெருகும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி பொய்யான விமர்சனங்களை செய்கிறார்கள்.

    எனக்கு எந்த பதவி ஆசையும் கிடையாது. நான் நினைத்து இருந்தால் எப்போதோ கவர்னர் ஆகி இருப்பேன். எனக்கு பதவி ஆசை இல்லை. அதனால் யாரைப் பற்றியும் பேச எனக்கு அச்சமில்லை. நாம் ஆளக்கூடாது என சில கங்காணிகள் சதித்திட்டம் தீட்டி கொண்டு இருக்கிறார்கள். சதிகாரர்கள் வலையில் இளைஞர்கள் விழாமல் அன்புமணி பின்னால் அணி திரளுங்கள்.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் விளம்பர பேனர் கலாச்சாரம் கிடையாது. ஆனால் தமிழகத்தில் தான் விளம்பர பேனர் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆகவே பா.ம.க.வினர் பேனர்கள், தட்டிகள் வைக்கக்கூடாது. சுவர் விளம்பரமும் செய்யக் கூடாது. நாம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கவேண்டும்.

    பூம்புகாரில் நடத்தப்படும் வன்னியர் சங்க மகளிர் மாநாட்டுக்கு திரளான இளம்பெண்களை அழைத்து வர வேண்டும். நாம் மீண்டும் பூம்புகாரில் சந்திக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அன்புமணி ராமதாஸ்

    விழாவில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    இது ஒரு வருத்தமான நிகழ்ச்சி. மாவீரன் இருந்திருந்தால் தமிழகம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருப்பார். இந்த மணி மண்டபம் உலக வன்னியர்களை ஒருங்கிணைப்பு செய்யும் சின்னம்.

    அவர் இருந்த காலத்தில் ஐயாவிடம் இருந்து பிரிக்க சூழ்ச்சி செய்தனர். என்னையும் ஐயாவையும் மரணம் மட்டுமே பிரிக்கும். நம்மிடையே ஒற்றுமை இல்லை. காலம் காலமாக எதிரிகள் நம்மை பிரித்து ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். இதில் முதன்மையானது தி.மு.க.தான்.

    அதிக குடிசைகள் உள்ள மாவட்டம் விழுப்புரம். வன்னியர்கள் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். தமிழ்நாடு முன்னேற பல திட்டங்கள் எங்களிடம் உள்ளது.

    ஐயாவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவு போடுபவர்கள் துரோகிகள். குரு இருந்திருந்தால் வேறு மாதிரி கையாண்டு இருப்பார். எனக்கு முதல்வர் ஆகும் ஆசை இல்லை. நாம் அனைவரும் ஓன்று சேர வேண்டும். காடுவெட்டி குரு கடைசியாக சொன்னது. தமிழகத்தை நாம் ஆள வேண்டும். அவரது கனவை நினைவாக்க வேண்டும் என்றார்.
    திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது தங்க நகைகள், பித்தளை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், இரும்புலிக்குறிச்சி, குவாகம், செந்துறை ஆகிய பகுதிகளில் அடிக்கடி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுக்கொண்டே இருந்தது. இது சம்பந்தமாக ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த திருட்டு வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் ஆலோசனைபடி, ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், நடேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, ஏட்டுகள் செந்தில்குமார், மணிவண்ணன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.


    இந்த நிலையில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நத்தக்குழி கிராமத்தை சேர்ந்த ரவி(வயது 49), கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்த வடிவேல்(50), கார்த்திக்(27), பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சங்கர்(30), அலாரம்குடிகாடு கிராமத்தை சேர்ந்த ஆனந்த்(35) ஆகிய 5 பேரை பிடித்து ஆண்டிமடம் சந்தைதோப்பு மற்றும் ஆண்டிமடம் பஸ் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 8 பவுன் தங்க நகைகள், 42 கிலோ பித்தளை பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் பொருட்களை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  
    ஜெயங்கொண்டம் அருகே மனநிலை குன்றிய மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்-மாரியம்மாள் தம்பதியின் இரண்டாவது மகள் பிரியா (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக பிறந்தவர். மேலும் சிறிது மன வளர்ச்சி குன்றியவர். சிறுமிக்கு சிறுவயது முதலே அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டுவது வழக்கம்.

    இந்நிலையில் சிறுமி கடந்த 14-ந்தேதி, தனக்கு வயிற்று வலி உள்ளதாக தனது தாயார் மாரியம்மாளிடம் கூறியுள்ளார். இதையடுத்து மாரியம்மாள் சிறுமியை சோதித்தபோது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    மகள் கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தனது மகளிடம் விசாரித்தபோது, கடந்த போகிப் பண்டிகை அன்று தனது மாமனார் இறந்த ஈமச் சடங்கு நடந்த அன்று இரவு சிறுமி தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அதே கிராமம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முனுசாமி மகன் கார்த்தி என்பவர் பின் தொடர்ந்து வந்து, சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மாரியம்மாள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்குப்பதிவு செய்து, விசாரித்து கார்த்தியை (27) கைது செய்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி பிரியா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    கோவிலுக்கு சென்றபோது கார் மீது லாரி மோதிய விபத்தில் சகோதரர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    மீன்சுருட்டி:

    கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் மாலூர் அருகே உள்ள மாஸ்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் நாராயணசாமி மகன்கள் ஆனந்த்குமார் (வயது 30), அனில்குமார் (26), முனிராஜ் மகன் ஸ்ரீகாந்த் (20), சுப்பிரமணியன் மகன் நந்தகுமார் (24), ரவிக்குமார் மகன் ஜோசாந்த்(18), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரிக்கை கிராமத்தை சேர்ந்தவர் மற்றொரு ஸ்ரீகாந்த் (26) மற்றும் நாகேந்திரன் (28).

    இவர்கள் 7 பேரும் பெங்களூரில் இருந்து திருநள்ளாறில் உள்ள ஒரு கோவிலுக்கு பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு காரில் புறப்பட்டனர். காரை ஆனந்த்குமார் ஓட்டிச் சென்றார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே தழுதாழை மேடு கிராமம் அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற ஆனந்த்குமார், அவரது தம்பி அனில்குமார் மற்றும் நாகேந்திரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 4 பேரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள நங்குடி கிராமத்தை சேர்ந்த காந்தி (28) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டம வெங்கனூர் விளாகத்தில் மழையால் வீடு இடிந்ததில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வெங்கனூர் விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 41), விவசாயி. இவரது மனைவி கோமதி (39). இவர்களுக்கு ஜெயபிரகாஷ் (17) என்ற மகனும், ஜெயமாலினி (15) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் பழமையான கான்கிரீட் வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் அப்பகுதியில் பெய்த மழை காரணமாக அவரது வீட்டில் மழைநீர் ஒழுகியது. இதனால் வீடு இடியும் நிலையில் இருந்தது. இதனால் ஜெயசீலனிடம் அவரது உறவினர்கள், இரவு வீட்டில் தங்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து கோமதி, ஜெயபிரகாஷ், ஜெயமாலினி ஆகியோர் நேற்றிரவு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தூங்கினர். ஜெயசீலன் மட்டும் அங்கு செல்லாமல் அவரது வீட்டில் தூங்கினார்.

    இந்தநிலையில் இரவு திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் எழுந்து சென்று பார்த்தனர். அப்போது இடிபாடுகளுக்கிடையே சிக்கிய ஜெயசீலன் மூச்சுத் திணறி இறந்து கிடந்தார்.

    இது குறித்து வெங்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயசீலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயசீலனின் உடலை பார்த்து அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் கதறி அழுதது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    ஜெயங்கொண்டம் அருகே கார்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜெயங்கொண்டம்:

    கர்நாடக மாநிலம் ஜோலார் மாவட்டம் மாஸ்தி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 30). இவரது நண்பர் அனில்குமார் (26). இவர்கள் இருவரும் அதே பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர்.

    இவர்கள் காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய நினைத்திருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் கர்நாடகாவில் இருந்து காரில் புறப்பட்டனர்.

    அவர்களுடன் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வரும் ஸ்ரீகாந்த் (20), நந்தகுமார் (24), சேஷாந்த் (18), உறவினர் நாகேந்திரன் (28), கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த் (28) ஆகியோரும் வந்தனர்.

    நேற்று காலை திருநள்ளாறு கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு பகலில் ஓய்வெடுத்தனர். பின்னர் மீண்டும் ஊருக்கு காரில் புறப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தழுதாழை மேடு பகுதியில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தனர்.

    அணைக்கரையை தாண்டியபோது சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே மணல் லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. அந்த பகுதியில் லேசான மழையும் பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

    இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்த காரை ஓட்டி வந்த ஆனந்தகுமார், அனில் குமார், நாகேந்திரன் ஆகிய 3 பேரும் காருக்குள்ளேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள். மற்ற 4 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த பொதுமக்கள் கொட்டும் மழையிலும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் மீன்சுருட்டி போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்சு வேன் மூலம் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் 4 பேரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தது பற்றி அவர்களின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்றபோது படகு கவிழ்ந்தது. இதில், பயணம் செய்த 35 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே மேலராமநல்லூர், கீழராமநல்லூர் கிராமங்களை சுற்றி கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. இந்த கிராமங்களின் வட பகுதியில் மேம்பாலம் இருந்த போதிலும், அனைத்து தேவைகளுக்கும் அரியலூர் மாவட்டத்திற்கு செல்லாமல், அதனருகே தென்பகுதியில் உள்ள தஞ்சை மாவட்டத்திற்குத்தான் கிராம மக்கள் சென்று வருவார்களாம்.

    மேலும் அந்த கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் தஞ்சை, கும்பகோணத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். தொழிலாளர்களும் அங்கு தான் வேலைக்கு சென்று வருகின்றனர். விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களை தஞ்சைக்கு கொண்டு சென்று தான் விற்பனை செய்கின்றனர். தஞ்சாவூருக்கு செல்வதற்கு மேம்பால வசதி இல்லாததால் கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கொள்ளிடம் ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.

    தற்போது மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு ஓடுகிறது. இதனால், கிராம மக்கள் படகு மூலமாக தஞ்சைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மேலராமநல்லூர் கிராமத்தை சேர்ந்த 35 பேர் நேற்று மாலை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செல்வதற்காக ஒரு படகில் ஏறி பயணம் செய்தனர்.

    மேலராமநல்லூரை தாண்டி சிறிது தூரம் சென்றபோது, படகு நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 35 பேரும் ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடினர். அவர்களில் 20 பேர் நீச்சல் அடித்து ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டிற்கு வந்து சேர்ந்தனர். ஆனால், மீதமுள்ள 10 பேரை காணாததால், மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது தூரத்தில் அவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு அவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் 35 பேரும் அங்குள்ள மணல் திட்டில் ஏறி நின்று தங்களது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதனால், கிராம மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட கலெக்டர் வினய், கபிஸ்தலம் தீயணைப்பு நிலையத்தினர், தூத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 35 பேரையும் படகுகள் மூலம் மீட்டனர். 35 பேரையும் உயிருடன் பார்த்தபிறகே கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்றபோது படகு கவிழ்ந்ததில், 35 பேர் தண்ணீரில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்ததில் 30 பேரில் 10 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் அக்கரையிலிருந்து மேலராமநல்லூர் கிராமத்திற்கு படகில் 30 பேர் சென்றுள்ளனர்.  அப்போது எதிர்பாரத விதமாக கொள்ளிடம் ஆற்றின் நடுவே செல்லும் போது படகு  கவிழ்ந்தது. 30 பேரில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் 10 பேர் தஞ்சம் அடைந்தனர்.

    படகில் சென்று நீரில் மூழ்கிய மீதமுள்ள 10 பேரின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் கிராம மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் 3 நாட்களாக அதிக அளவில் நீர் செல்வதால் படகு நீரில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

    மேலராமநல்லூர், கீழராமநல்லூர் இடையே படகு போக்குவரத்தை நம்பியே அந்தபகுதி மக்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 
    அரியலூர் அருகே விபத்தில் சகோதரர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுர் பகுதியை சேர்ந்தவர் மொய்புல்லா மகன்கள் பயாஸ் (வயது 24), ஜமீம் (19). இவர்கள் இருவரும் இன்று காலை பெரம்பலூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    கீழப்பழுர்-சாத்தமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே பெரம்பலூரில் இருந்து தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை நோக்கி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள் வேனின் டீசல் டேங்க் மீது மோதியதால் டேங்க் வெடித்து வேன் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதையடுத்து வேன் டிரைவர் மற்றும் அதில் இருந்தவர்கள் சுதாரித்து செயல் பட்டு வேனில் இருந்து கீழே இறங்கி தப்பித்தனர். இதற்கிடையே வேன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த பயாஸ், ஜமீம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    வேன் மீது பற்றிய தீயானது பயாஸ் உடலில் பற்றியதால் அவர் உடல் கருகி பலியானார். தீப்பிடித்த வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. வேனில் பயணித்த சோமசுந்தரம், ஜோதி மணி ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

    விபத்து குறித்த தகவல் அறிந்ததும் கீழப்பழுர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    அணைக்கரை கீழணையில் இருந்து பாசனத்திற்காக ஆறுகள், வாய்க்கால்களில் இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு மதகின் ‌ஷட்டரை திறந்து வைத்தார்.
    ஜெயங்கொண்டம்:

    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் திருச்சி முக்கொம்பு கதவணையை அடைந்து, அங்கிருந்து தஞ்சை கல்லணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    தற்போது மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முக்கொம்பு மற்றும் கல்லணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.

    இந்த தண்ணீர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணைக்கரை கீழணையை சென்றடைந்துள்ளது. அணைக்கரை கீழணையின் மதகுகள் ஏற்கனவே பழுதடைந்துள்ளதால் அங்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாசனத்திற்காக அணைக்கரை அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை அணைக்கரை கீழணையில் இருந்து பாசனத்திற்காக ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு மதகின் ‌ஷட்டரை திறந்து வைத்தார்.

    கொள்ளிடம் ஆற்றில் இருந்து அணைக்கரை அணைக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதில் வடவாறு வாய்க்காலில் 1,800 கனஅடி தண்ணீரும், வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கனஅடியும், தெற்கு ராஜன் வாய்க்காலில் 400 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    வடவார் வாய்க்கால் தண்ணீர் மூலம் கடலூர் மாவட்டத்தில் 47,997 ஏக்கர் நிலமும், தெற்கு ராஜன், குமுக்கி மன்னியார், மேல ராமன், வினாயகன் வாய்க்கால்கள் தண்ணீர் மூலம் நாகை, தஞ்சை மாவட்டங்களில் 39,050 ஏக்கர் நிலமும் என மொத்தம் 87,047 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

    அவ்வப்போது பாசன தேவைக்கேற்ப தண்ணீர் அளவு மாற்றியமைக்கப்பட்டு வாய்க்கால்களில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்து பயனடைய வேண்டுமென பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


    ரூ.50 கோடி கடன் பெற்று தருவதாக அரியலூர் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.67 லட்சம் மோசடி 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் முருகன். இவர் அங்கு ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவர் ஜவுளி கொள்முதலுக்காக அடிக்கடி சென்னை சென்ற போது சென்னையை சேர்ந்த வியாபாரி பாஸ்கர் என்பவர் அறிமுகம் ஆனார்.

    அப்போது பாஸ்கர் முருகனிடம் உங்களது கடையை விரிவு படுத்த தனக்கு தெரிந்த வங்கிகள் மூலம் ரூ.50 கோடி கடன் குறைந்த வட்டியில் பெற்று தருவதாக கூறினார். இதற்கு முருகனும் சம்மதித்தார்.

    இதன் பின்னர் பாஸ்கர் சேலத்தை சேர்ந்த அவரது நண்பர்கள் ரவிக்குமார், சக்திவேலுடன் ஜெயங்கொண்டத்தில் உள்ள முருகனின் ஜவுளி கடைக்கு சென்றார். அப்போது கடன் தொகை பெற அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று கூறி ரூ. 1 லட்சம் வாங்கி சென்றார்.

    இதைத் தொடர்ந்து சில மாதங்கள் கழித்து பாஸ்கர், ரவிக்குமார், சக்திவேல் மற்றும் சென்னையை சேர்ந்த பரமசிவம் சுப்பிரமணியம், விஜயகுமார் ஆகிய 5 பேர் முருகன் ஜவுளி கடைக்கு சென்று ரூ.50 கோடி கடன் பெற கடைக்குரிய ஆவணங்களையும், மேலும் அட்வான்ஸ் கொடுக்க ரூ.32 லட்சம், ரூ.24 லட்சம் என மொத்தம் ரூ.67 லட்சத்தை வாங்கி சென்றனர். கடையை போட்டோவும் எடுத்து சென்றனர். அதன் பின்னர் அவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. முருகன் அவர்களது செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகன் அரியலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. இளங்கோவன், குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் வாணி ஆகியோர் வழக்குபதிவு செய்து ரூ.67 லட்சம் பணமோசடி செய்த 5 பேரை தேடி வருகின்றனர்.

    ×