search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காடுவெட்டி குருவின் மணிமண்டபத்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திறந்துவைத்தபோது எடுத்தபடம்.
    X
    காடுவெட்டி குருவின் மணிமண்டபத்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திறந்துவைத்தபோது எடுத்தபடம்.

    நான் நினைத்திருந்தால் கவர்னர் ஆகியிருப்பேன்- ராமதாஸ்

    தனக்கு எந்த பதவி ஆசையும் கிடையாது என்றும் தான் நினைத்து இருந்தால் எப்போதோ கவர்னர் ஆகி இருப்பேன் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
    செந்துறை:

    மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவுக்கு பா.ம.க. மற்றும் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் குருவின் சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மணிமண்டபத்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்து பேசியதாவது:-

    கடந்த 13.12.18 அன்று காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் நான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினேன். தற்போது ரூ.2½ கோடி செலவில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. குருவை நான் மூத்த பிள்ளையாகத்தான் பார்க்கிறேன். குரு இறந்தது எனக்கு கொடுத்த முதல் தண்டனை. மணிமண்டப திறப்பு விழாவில் நான் கலந்துகொண்டதை இரண்டாவது தண்டனையாகத் தான் பார்க்கிறேன்.

    முந்தைய தி.மு.க. ஆட்சியில் குருவை கொல்ல சதி செய்தனர். இதனை நான் தடுத்துவிட்டேன். அவர்களின் சூழ்ச்சிகளில் இளைஞர்கள் விழாமல் இருக்க வேண்டும். பா.ம.க.வை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்தன. அதற்கு நம் சமுதாயத்தினர் விலை போய்விட்டனர். அன்புமணிக்கு பெருகும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி பொய்யான விமர்சனங்களை செய்கிறார்கள்.

    எனக்கு எந்த பதவி ஆசையும் கிடையாது. நான் நினைத்து இருந்தால் எப்போதோ கவர்னர் ஆகி இருப்பேன். எனக்கு பதவி ஆசை இல்லை. அதனால் யாரைப் பற்றியும் பேச எனக்கு அச்சமில்லை. நாம் ஆளக்கூடாது என சில கங்காணிகள் சதித்திட்டம் தீட்டி கொண்டு இருக்கிறார்கள். சதிகாரர்கள் வலையில் இளைஞர்கள் விழாமல் அன்புமணி பின்னால் அணி திரளுங்கள்.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் விளம்பர பேனர் கலாச்சாரம் கிடையாது. ஆனால் தமிழகத்தில் தான் விளம்பர பேனர் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆகவே பா.ம.க.வினர் பேனர்கள், தட்டிகள் வைக்கக்கூடாது. சுவர் விளம்பரமும் செய்யக் கூடாது. நாம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கவேண்டும்.

    பூம்புகாரில் நடத்தப்படும் வன்னியர் சங்க மகளிர் மாநாட்டுக்கு திரளான இளம்பெண்களை அழைத்து வர வேண்டும். நாம் மீண்டும் பூம்புகாரில் சந்திக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அன்புமணி ராமதாஸ்

    விழாவில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    இது ஒரு வருத்தமான நிகழ்ச்சி. மாவீரன் இருந்திருந்தால் தமிழகம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருப்பார். இந்த மணி மண்டபம் உலக வன்னியர்களை ஒருங்கிணைப்பு செய்யும் சின்னம்.

    அவர் இருந்த காலத்தில் ஐயாவிடம் இருந்து பிரிக்க சூழ்ச்சி செய்தனர். என்னையும் ஐயாவையும் மரணம் மட்டுமே பிரிக்கும். நம்மிடையே ஒற்றுமை இல்லை. காலம் காலமாக எதிரிகள் நம்மை பிரித்து ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். இதில் முதன்மையானது தி.மு.க.தான்.

    அதிக குடிசைகள் உள்ள மாவட்டம் விழுப்புரம். வன்னியர்கள் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். தமிழ்நாடு முன்னேற பல திட்டங்கள் எங்களிடம் உள்ளது.

    ஐயாவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவு போடுபவர்கள் துரோகிகள். குரு இருந்திருந்தால் வேறு மாதிரி கையாண்டு இருப்பார். எனக்கு முதல்வர் ஆகும் ஆசை இல்லை. நாம் அனைவரும் ஓன்று சேர வேண்டும். காடுவெட்டி குரு கடைசியாக சொன்னது. தமிழகத்தை நாம் ஆள வேண்டும். அவரது கனவை நினைவாக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×