search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய கார் மற்றும் லாரியை படத்தில் காணலாம்.
    X
    விபத்தில் சிக்கிய கார் மற்றும் லாரியை படத்தில் காணலாம்.

    ஜெயங்கொண்டம் அருகே கார்-லாரி மோதி விபத்து: 3 பேர் பலி

    ஜெயங்கொண்டம் அருகே கார்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜெயங்கொண்டம்:

    கர்நாடக மாநிலம் ஜோலார் மாவட்டம் மாஸ்தி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 30). இவரது நண்பர் அனில்குமார் (26). இவர்கள் இருவரும் அதே பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர்.

    இவர்கள் காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய நினைத்திருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் கர்நாடகாவில் இருந்து காரில் புறப்பட்டனர்.

    அவர்களுடன் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வரும் ஸ்ரீகாந்த் (20), நந்தகுமார் (24), சேஷாந்த் (18), உறவினர் நாகேந்திரன் (28), கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த் (28) ஆகியோரும் வந்தனர்.

    நேற்று காலை திருநள்ளாறு கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு பகலில் ஓய்வெடுத்தனர். பின்னர் மீண்டும் ஊருக்கு காரில் புறப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தழுதாழை மேடு பகுதியில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தனர்.

    அணைக்கரையை தாண்டியபோது சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே மணல் லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. அந்த பகுதியில் லேசான மழையும் பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

    இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்த காரை ஓட்டி வந்த ஆனந்தகுமார், அனில் குமார், நாகேந்திரன் ஆகிய 3 பேரும் காருக்குள்ளேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள். மற்ற 4 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த பொதுமக்கள் கொட்டும் மழையிலும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் மீன்சுருட்டி போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்சு வேன் மூலம் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் 4 பேரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தது பற்றி அவர்களின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×