என் மலர்
அரியலூர்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சிவசங்கரி (வயது 23). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சரண்ராஜ்(6) என்ற மகன் உள்ளார். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். சிவசங்கரி, தனது மகனுடன் அகரம் கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளான அவர் மனநிலை பாதிப்புக்கு உள்ளானார். இதற்காக டாக்டர்களிடம் சிகிச்சையும் பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிவசங்கரியின் உறவினரான ஆண்டிமடம் அ.தி.மு.க. ஒன்றிய பொருளாளர் செல்வராஜ் (65) என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பு அப்பகுதியில் உள்ளது. அங்கு முந்திரி கொட்டைகளை பறிக்கும் பணிக்கு சிவசங்கரி சென்று வந்தார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவர் முந்திரி தோப்பில் கொட்டைகளை பறித்து கொண்டிருந்த போது அங்கு வந்த செல்வராஜ், சிவசங்கரியிடம் நைசாக பேச்சுகொடுத்ததுடன் அவரை அங்குள்ள மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிவசங்கரி, நடந்த சம்பவம் பற்றி பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிவசங்கரி கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாக காணப்பட்டதுடன், அடிக்கடி மயக்கமும் அடைந்து வந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் சிகிச்சைக்காக ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது, சிவசங்கரி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்ததுடன், இது பற்றி கேட்ட போது சிவசங்கரி நடந்த விவரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிவசங்கரியின் தாய் பவானி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், செல்வராஜ் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் செல்வராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை அ.தி.மு.க. நிர்வாகி கற்பழித்து கர்ப்பிணியாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள செய்ய பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in-லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளத் துறை துணை-இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பதாரர் மீன்வளத்துறை இணைய தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அரியலூர் மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், அறை எண் 234, 2-வது மேல்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அரியலூர்- 621704. என்கிற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் சாந்தா (பெரம்பலூர்), டி.ஜி.வினய் (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
மேட்டூரில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்படும்போது வெள்ள பாதிப்பை தடுக்க திருச்சி முக்கொம்பு அணை மற்றும் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். அந்த தண்ணீர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அணைக்கரை கீழணையை அடைந்ததும், வீணாக கடலுக்கு திறந்து விடப்படும்.
இந்த ஆண்டு கர்நாடகாவில் பருவமழை கொட்டி தீர்த்ததால் கடந்த 10-ந்தேதி கீழணைக்கு முதற்கட்டமாக நீர் வர தொடங்கியது. அதில் கீழணை 8 அடிகள் எட்டிய நிலையில் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2120 கன அடி தண்ணீரும் , மீதமிருந்த உபரி நீரை கொள்ளிடம் வழியாக கடலுக்கு 30 ஆயிரம் கன அடி வரை தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.
பின்னர் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடிக்கு கீழ் குறைந்ததால் கடந்த 15-ந்தேதி கீழணையில் இருந்து கடலுக்கு திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டது. தற்போது கர்நாடக நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை அதிகரித்ததால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது. இதனால் காவிரியில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
திருச்சி முக்கொம்பு அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால், பாதுகாப்பு கருதி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் நேற்று பகலில் அணைக்கரை கீழணையை சென்றடைந்தது.
வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் நிலையில் 7744 கன அடி தண்ணீர் வட வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. 2169 கன அடி தண்ணீர் வடக்கு ராஜன் பாசன வாய்க்காலிலும், 608 கன அடி தண்ணீர் தெற்கு ராஜன் வாய்க்காலிலும், 576 கன அடி தண்ணீர் குமிக்கி மண்ணாற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் இரண்டாவது கட்டமாக மீண்டும் கடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடையே மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து சமய நிறுவனங்களில், குடியிருப்போர், சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை சட்டப் பிரிவு 34-ன் படி பல தலைமுறைகளாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கோவில் சொத்துகளில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும், சிறு வணிகம் செய்வோருக்கும் அந்த இடங்களுக்கான நியாயமான விலையை தீர்மானித்து பயனாளிகளிடம் இருந்து கிரைய தொகையை தவணை முறையில் பெற்றுக்கொண்டு இடங்களை சொந்தமாக்கித் தர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்பவருக்கும் வாடகையை பல மடங்கு உயர்த்தியுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒன்றிய அமைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் இளவரசன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் அம்பிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதனை தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் இருந்த துணை தாசில்தார் பாஸ்கரிடம் மனு அளித்தனர்.
இந்த போராட்டத்தின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஜெயங்கொண்டம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1க்கான ஆசிரியர் தகுதித்தேர்வின் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனைத்து மாவட்டங்களிலும் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மற்றும் 28, 29-ந் தேதிகள் என 3 நாட்கள் முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வு நிலை-1க்கான இணையவழி ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், மனை அறிவியல், இந்திய காலாசாரம், இயற்பியல், வேதியியல், கணிதவியல், வணிகவியல், புவியியல், தாவரவியல், உயிரியல், விலங்கியல், அரசியல் அமைப்பு, வரலாறு, பொருளியல் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 போன்ற பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் நடை பெறும்.
அரியலூர் மாவட்டத்தில் இத்தேர்விற்கு 400 தேர்வாளர்கள் பதிவுசெய்துள்ளனர். இத்தேர்வு தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுகளை கண்காணிக்க கண்காணிப்பாளர்கள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டு, பஸ் வசதிகள், மின்சார வசதிகள், கணினி வசதிகள், இணையதள வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண் 04329-220909 மற்றும் செல்போன் எண் 8248597781 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைபிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37). பெயிண்டரான இவர் இடப்பிரச்சனை காரணமாக அரியலூர் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கில் ஆஜராவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அரியலூருக்கு சென்றார்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே செல்லும் போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அசோக்குமாரை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அசோக்குமார், நேற்று முன்தினம் இரவு மது அருந்தியதாகவும், தற்போது மது அருந்தவில்லை எனக்கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அரியலூர் கோர்ட்டுக்கு சென்ற அவர், கோர்ட்டு வளாகத்தில் திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மற்றும் வக்கீல்கள், அசோக்குமார் தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மது அருந்தாத தன்னை மது அருந்தியதாக கூறி போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எனவே போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அரியலூர் கோர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் வேளாண்மைத்துறையின் மூலம் வாலாஜாநகரம், அஸ்தினாபுரம், ஒட்டக்கோவில் மற்றும் ராயபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் படைப்புழுக்கள் தாக்கம் உள்ளதா? என அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் டி.ஜி.வினயுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அரசு கொறடா கூறியதாவது:- அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் சராசரியாக 16 ஆயிரம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மக்காச்சோளத்தில் ராணுவப் படைப்புழு பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் தடுக்க படைப்புழுக்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 653 எக்டர் பரப்பளவிற்கு மக்காச் சோளத்தில் ராணுவ படைப்புழுவின் தாக்குதலினால் பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக 16 ஆயிரத்து 472 விவசாயிகளுக்கு நிவாரணமாக இதுவரை ரூ.8 கோடியே 54 லட்சம் தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது. இப்புழுவின் தாக்குதல் நடப்பாண்டிலும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. படைப்புழுவை கட்டுப்படுத்த விவசாயிகள் வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மை அறிவியல் மையம் மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது இணை இயக்குனர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் (வேளாண்மை) பழனிசாமி மற்றும் உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவி அலுவலர்கள் உள்பட விவசாயிகள் பலார் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வாலாஜாநகரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார். அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி வரவேற்றார். கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சரால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பாக இ-பொது சேவை மையங்களின் செயல்பாடு பற்றிய புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும் அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் அரசு தலைமை கொறடா, கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சியினை 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். பார்வையிட்டவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சரவணன் (செய்தி), எழிலரசன் (விளம்பரம்), அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






