என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு மற்றும் கோவிந்தபுரம் ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதை கலெக்டர் ரத்னா நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மேலும் ஏ.டி.எஸ். கொசு நல்ல நீரில் உற்பத்தியாவதால் அனைத்து கிராம மற்றும் நகர்புற இடங்களில் அதை தடுக்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அரசுத்துறை அதிகாரிகள் கள ஆய்வின் போது தனியார் பகுதிகளில் கொசு உற்பத்தி மூலங்கள் கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும். ஊராட்சி பணியாளர்கள் கிராமப்புறங்களில் பார்வையிட்டு, தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். தூய்மை பணிகளை மேற்கொள்ளாத கிராம ஊராட்சி செயலாளர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தால் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் வந்தால் டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் தாமாக மருந்துகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம் என்றார்.
ஆய்வின்போது திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஹேமசந்த் காந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, நகராட்சி ஆணையர் திருநாவுகரசு, தாசில்தார் கதிரவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலையரசன், அருளப்பன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). இவரது மகன் பிரேம்குமார் (20). அருகில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் பெற்றோரிடம் கூறிவிட்டு சிவக்குமார் கல்லூரிக்கு சென்றார். ஆனால் மாலையில் குறித்த நேரத்தில் அவர் வீடு திரும்பவில்லை.
வெகுநேரம் ஆகியும் கல்லூரி முடிந்தும் மகன் வீட்டிற்கு வராததால் தந்தை சிவக்குமார் மகனின் நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். நண்பர்களும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து கல்லூரிக்கு சென்று விசாரித்துள்ளார். கல்லூரி ஆசிரியர்கள் வருகை பதிவேட்டை பார்த்து பிரேம் குமார் கல்லூரிக்கு வரவில்லை என்று சொன்னதும் சிவக்குமார் அதிர்ச்சியடைந்தார்.
இதற்கிடையே மகனின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே அருகில் உள்ள ஜெயங்கொண்டம் போலீசில் மகனை காணவில்லை என்று புகார் அளித்ததார். மறுநாள் காலையில் தந்தை சிவக்குமாருக்கு பிரேம் குமார் செல்போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. மகன்தான் பேசுகிறான் என்று ஆவலுடன் பேசினார்.
ஆனால் போனில் வேறு ஒரு நபர் பேசியுள்ளார். உன் மகனை நான் தான் கடத்தி வைத்திருக்கிறேன் உடனடியாக ரூ.1 லட்சம் பணம் தரவேண்டும். இல்லையென்றால் உன் மகனை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசில் சிவக்குமார் கூறினார். அதைத்தொடர்ந்து டி.எஸ்.பி. மோகன்தாஸ் தலைமையில் குழு அமைத்து கல்லூரி மாணவரை கடத்திய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் மகள் நிஷா (வயது 20). அரியலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மூன்றாமாண்டு பி.ஏ. படித்து வந்தார்.
இவர் தனது அக்காள் கணவரின் தம்பியான துளார் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் பிரகாஷ் (32) என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதற்கு இருவரின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படிக்கும் வயதில் உனக்கு காதல் தேவையா? நீ நினைத்தது நடக்காது என்றும் எச்சரித்தனர்.
ஆனாலும் எதிர்ப்பை மீறி கடந்த 11.10.19-ந்தேதி பிரகாசை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் தனது கிராமத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த நிஷாவின் தாய் அமுதா, ஏன் இப்படி செய்தாய்? இதற்கு தான் நாங்கள் உன்னை வளர்த்து படிக்க வைத்தோமா? என்று திட்டினார்.
உறவினர்கள் பலரது முன்னிலையில் தாய் திட்டியதால் மனம் உடைந்த நிஷா வேகமாக வீட்டிற்குள் சென்று தனி அறையின் கதவை தாழிட்டார். பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்ட உறவினர்கள் நிஷாவை உடனடியாக மீட்டு மனக்குடையான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நிஷாவுக்கு திருமணமாகி 4 நாட்களே ஆனதால் இது குறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது.இங்கு 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியின் நிர்வாகி இறந்து விட்டதால், அவர்களின் வாரிசுகள் பள்ளியை நிர்வகித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.
தற்போது தலைமையாசிரியையாக ராஜேஸ்வரியும், செங்குட்டுவன் என்ற ஆசிரியரும், மற்றொரு பெண் ஆசிரியரும் பணியில் உள்ளனர். இவர்களில் ஒருவரை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.
இந்தநிலையில் பள்ளியின் நிர்வாகி இறந்த பின்னர் அவருடைய வாரிசுகள் சரிவர பள்ளியை நிர்வகிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் செங்குட்டுவன், இந்த பள்ளியை அரசு பள்ளியாக மாற்றுவதற்கான முயற்ச்சி மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் தலைமையாசிரியை ராஜேஸ்வரி, தளவாய் போலீசில் புகார் தெரிவித்தார்.
அதில் பள்ளி கழிப்பிடத்திற்கு சென்ற போது அங்கு நின்றிருந்த ஆசிரியர் செங்குட்டுவன், தனது கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இதையெடுத்த தளவாய் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.அப்போது திடீரென தலைமையாசிரியை ராஜேஸ்வரி தனது புகாரை வாபஸ் பெறுவதாக கூறி விட்டு காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் செங்குட்டுவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் செந்துறை மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக ஊறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு வேதியியல் ஆசிரியராக பணிபுரியும் ஆரோக்கிய நாதன் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது பொது எந்திரவியல் படிக்கும் மாண வர்களில் சிலர் , வெளியில் உள்ள சிமெண்ட் கட்டையில் அமர்ந்து வகுப்பறையில் உள்ள மாணவிகளை கிண்டல் செய்துள்ளனர். அந்த மாணவர்களை ஆரோக்கிய நாதன் கண்டித்து ள்ளார்.
இந்நிலையில் நேற்று ஆசிரியர் ஆரோக்கியநாதன் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது வகுப்பறைக்குள் புகுந்த பொது எந்திரவியல் துறை மாணவன் அஜித் குமார் உள்ளிட்ட சிலர் ஆசிரியர் ஆரோக்கியநாதனை தரக் குறைவாக பேசியதுடன், ஆசிரியர் என்றும் பாராமல் வகுப்பறைக்குள் வைத்து தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் ஆசிரியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு எதிரே உள்ள திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு மறியலை கைவிட்ட மாணவர்கள் தொடர்ந்து பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு சென்ற உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஹரி செல்வராஜ், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் அஜித்குமார், அபிமன்யு, பூபாலன், சக்திவேல், சூரியமூர்த்தி, ஜீவா ஆகிய 6 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 14ந்தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஆலோசனை செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமம் கம்பர் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி பட்டம்மாள் (வயது 95). இவர்களுக்கு சண்முகம் (62), சதாசிவம் (59) என்ற மகன்களும், சரோஜா (65), சகுந்தலா (60) என்ற மகள்களும் உள்ளனர். மாணிக்கம் கடந்த 5 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதால் பட்டம்மாள் தனது மூத்த மகன் சண்முகம் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் தாயை கவனிப்பதில் சண்முகத்திற்கும், சதாசிவத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், பட்டம்மாளை வரதராஜன்பேட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். அங்கு சில மாதங்கள் இருந்த பட்டம்மாள், மகன்கள் மீதான பாசத்தால் அவர்களை பார்ப்பதற்காக, தள்ளாத வயதிலும் தனியாக செங்குந்தபுரத்தில் உள்ள மகன்கள் வீட்டிற்கு சென்றார்.
ஆனால் அவரை வீட்டிற்குள் சேர்க்க மறுத்த 2 மகன்களும் உடல் நிலை பாதிக்கப்பட்ட 95 வயதான தாய் என்றும் பாராமல், பட்டம்மாளை வீடுகளின் திண்ணையில் மாற்றி மாற்றி போட்டு அலைக்கழித்தனர். கடைசியில் வீட்டு முன்பு உள்ள சாலையில் வீசினர்.
நடுரோட்டில் கொசு கடி, குளிரை தாங்க முடியாமல் தவித்த அவரை, அந்த வழியாக வந்த ஒருவர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அதன் பிறகும் 2 பேரும் தனது தாயை ஏற்க மறுத்து விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதையறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி., மோகன்தாஸ், பட்டம்மாளின் மகன்கள் சண்முகம், சதாசிவம் ஆகிய 2 பேரையும் அழைத்து பேசினார். தாயை பராமரிக்காமல் தெருவில் தவிக்க விடுவது தவறு என அறிவுறுத்திய அவர், ஒரு மாதத்திற்கு தலா 15 நாட்கள் ஒருவர் வீதம் பட்டம்மாளை பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் தாயை பராமரிக்க ஒருவரை நியமித்து அவருக்கு இருவரும் சம்பளம் வழங்க வேண்டும் என்றார்.
அவரது அறிவுரையை ஏற்று மனம் திருந்திய 2 மகன்களும் பட்டம்மாளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். மேலும் அரியலூர் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் அறிவுறுத் தலின்படி போர்வை, சேலை, துண்டு, பாய், தலையணை, சோப்பு, சீப்பு, கண்ணாடி என ரூ.3 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பட்டம்மாளின் மகன்களிடம் போலீசார் வழங்கினர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி பட்டம்மாள் (வயது 95). இவர்களுக்கு ஆகிய 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணமாகி அதே கிராமத்தில் அருகருகே வசித்து வருகின்றனர். மகள்களும் குடும்பத்தினருடன் மற்றொரு கிராமத்தில் வசித்து வருகின்றனர். ஒரு மகன் இனிப்பு கடை நடத்தி வருகிறார். மற்றொரு மகன் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கம் இறந்து விட்டதால் பட்டம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். முதுமையின் காரணமாக பட்டம்மாளுக்கு உடல்நலம் குன்றியது. இதனால், தான் பெற்ற பிள்ளைகளின் உதவியை நாடினார்.
ஆனால், மகன்கள் இருவரும் அவரை வீட்டில் சேர்க்காததால் 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர் ஒருவர் வரதராஜன்பேட்டையில் உள்ள விடுதி ஒன்றில் பட்டம்மாளை சேர்த்தார். அங்கிருந்த பட்டம்மாளை, சின்ன மருமகன் வடலூரில் உள்ள சபை விடுதி ஒன்றில் சேர்த்தார். தனது மகன்களை பார்க்க வேண்டும் என்று ஆவலில் மீண்டும் சொந்த கிராமத்துக்கு பட்டம்மாள் வந்தார்.
அப்போதும் 2 மகன்களும் அவரை ஏற்காததால், ஒரு மகள் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது மருமகன், பட்டம்மாளை தனது தாய்போல கவனித்து வந்துள்ளார். ஆனால், நாட்கள் செல்ல, செல்ல உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவி, மாமியார் இருவரையும் ஒருசேர கவனிக்க முடியவில்லை.
இதனால் அவர், மாமியார் பட்டம்மாளை மகன்களிடம் விட்டு, விட்டு வந்து விடலாம் என்று எண்ணி நேற்று முன்தினம் இரவு கிராமத்துக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், பெற்ற தாயை மகன்கள் இருவரும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால், பட்டம்மாளை அங்கேயே விட்டு விட்டு அவரது மருமகன் சொந்த ஊருக்கு திரும்பி போய் விட்டார்.
இந்நிலையில், மகன்கள் இருவரும் பெற்ற தாய் என்றும் பாராமல் பட்டம்மாளை தூக்கி வந்து தெருவில் போட்டனர். இதனால், பட்டம்மாள் கொசுக்கடியிலும், பனியிலும் கிடந்தார். இதனால், அவரது உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது.
இதனைக்கண்ட அக்கிராம மக்கள் ஒன்று கூடி, மகன்கள் இருவரையும் அழைத்து ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பெற்ற தாயை வீட்டில் வைத்து கவனிக்குமாறு கூறினர். ஆனாலும் அவர்கள் தாயை தங்களது வீட்டில் சேர்க்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், 108 ஆம்புலன்சை வரவழைத்து அதில் பட்டம்மாளை ஏற்றி சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை சக நோயாளிகளின் உறவினர்கள் கவனித்து வருகிறார்கள். இதுகுறித்து கிராம மக்கள் கொடுத்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






