search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grand mother"

    • பூரணத்திற்கு 103 வயது எட்டியதை தொடர்ந்து அவரிடம் குடும்பத்தினர் அனைவரும் ஆசிபெறும் நிகழ்ச்சி தன்னார்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • நான் சுற்றிப்பார்க்க நினைத்த அனைத்து ஆன்மீக தலங்களுக்கும் எனது பிள்ளைகள் என்னை அழைத்துச்சென்று வந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லை சேர்ந்த சுப்பையா மனைவி பூரணம்(103). இவருக்கு 3 மகன், 3 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகள், மகன்களை படிக்க வைத்து அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இவர்கள் மூலம் பேரன், கொள்ளுபேரன், எள்ளுபேரன் என இவர்கள் குடும்பத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    பூரணத்திற்கு 103 வயது எட்டியதை தொடர்ந்து அவரிடம் குடும்பத்தினர் அனைவரும் ஆசிபெறும் நிகழ்ச்சி தன்னார்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுபேரன்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அனைவரையும் ஒரே நேரத்தில் சந்தித்த பூரணம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

    நான் 1921-ம் ஆண்டு பிறந்தேன். மாதம், தேதி எதுவும் தெரியாது. எனக்கு தற்போது 103 வயது ஆகிறது. தற்போது எனது 5-வது தலைமுறையை பார்ப்பதில் மகிழ்ச்சி. நீண்ட ஆயுளை கொடுத்த கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போதும் நான் ஆரோக்கியமாகத்தான் உள்ளேன். அதற்கு காரணம் சிறுவயது முதலே உடற்பயிற்சிகள் போல பல்வேறு வேலைகளை செய்துள்ளேன். சத்தான உணவுகளை சாப்பிட்டு வந்தேன். அந்த காலத்தில் திண்டுக்கல் நகரில் தண்ணீர் பிடிப்பதற்கு பல மைல் தூரம் கடந்து செல்ல வேண்டும்.

    அப்போது நானும் குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு பல மைல் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்துள்ளேன். இதுபோன்ற சம்பவம் தினந்தோறும் நடக்கும். 20 ஆண்டுகளுக்கு மேலாக பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வந்துள்ளேன். நான் சுற்றிப்பார்க்க நினைத்த அனைத்து ஆன்மீக தலங்களுக்கும் எனது பிள்ளைகள் என்னை அழைத்துச்சென்று வந்துள்ளனர்.

    தற்போது எனது வாரிசுகளுடன் நிம்மதியாக வாழ்கிறேன். எனது குடும்பத்தினர் அனைவரும் என்னிடம் ஆசிபெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தற்போதுள்ள குழந்தைகள் சாப்பிடும் துரித உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டு அன்றாட வீட்டு வேலைகளை நாமே செய்தால் அனைவரும் என்னைப்போல 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழலாம் என்றார்.

    சென்னை பூந்தமல்லியில் 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 1½ வயது பேத்தியை, பாட்டி உள்ளே குதித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சென்னை:

    சென்னை பூந்தமல்லி கலைமகள் நகர், 1-வது தெருவில் வசித்து வருபவர் கிருபாவதி(வயது 45). இவருடைய மகள் அரிபிரியா. இவருக்கு திருமணமாகி 1½ வயதில் பிரக்யா என்ற பெண் குழந்தை உள்ளது. அரிபிரியா, வேலைக்கு செல்வதால் பேத்தி பிரக்யாவை, கிருபாவதி கவனித்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பிரக்யா, திடீரென வீட்டின் முன்புறம் உள்ள கிணற்றில் எட்டிப்பார்த்தபோது, கால் தவறி கிணற்றின் உள்ளே விழுந்து விட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிருபாவதி, அலறி அடித்தபடி ஓடிச்சென்று சற்றும் யோசிக்காமல் கிணற்றுக்குள் குதித்தார். பின்னர் தண்ணீரில் மூழ்காமல் பேத்தியை பத்திரமாக மீட்டார்.

    கிணற்றுக்குள் தவித்த அவர், கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றுக்குள் இறங்கி, குழந்தையை மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஆனால் கிருபாவதியை கிணற்றுக்குள் இருந்து மேலே கொண்டு வரமுடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி கிருபாவதியை பத்திரமாக மீட்டனர்.

    அந்த கிணறு சுமார் 40 அடி ஆழமும், 3 அடி அகலமும் கொண்டதாகும். கிணற்றில் 4 அடி தண்ணீர் இருந்தது. கிணற் றுக்குள் குழாய்கள், மோட்டார் இருந்தது. கிணற்றுக்குள் விழும்போது குழந்தை இதில் எதன் மீதும் மோதாமல் தண்ணீரில் விழுந்துள்ளது.

    மேலும் கிணற்றுக்குள் குழந்தை விழுந்த உடன் கிருபாவதியும் உள்ளே குதித்து தனது பேத்தியை காப்பாற்றி விட்டதால் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. கிணற்றுக்குள் குதித்ததில் கிருபாவதிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கிணற்றில் விழுந்த பேத்தியை அதன் பாட்டி சற்றும் யோசிக்காமல் உள்ளே குதித்து காப்பாற்றிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×