search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 தலைமுறை கண்ட 103 வயது மூதாட்டி

    • பூரணத்திற்கு 103 வயது எட்டியதை தொடர்ந்து அவரிடம் குடும்பத்தினர் அனைவரும் ஆசிபெறும் நிகழ்ச்சி தன்னார்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • நான் சுற்றிப்பார்க்க நினைத்த அனைத்து ஆன்மீக தலங்களுக்கும் எனது பிள்ளைகள் என்னை அழைத்துச்சென்று வந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லை சேர்ந்த சுப்பையா மனைவி பூரணம்(103). இவருக்கு 3 மகன், 3 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகள், மகன்களை படிக்க வைத்து அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இவர்கள் மூலம் பேரன், கொள்ளுபேரன், எள்ளுபேரன் என இவர்கள் குடும்பத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    பூரணத்திற்கு 103 வயது எட்டியதை தொடர்ந்து அவரிடம் குடும்பத்தினர் அனைவரும் ஆசிபெறும் நிகழ்ச்சி தன்னார்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுபேரன்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அனைவரையும் ஒரே நேரத்தில் சந்தித்த பூரணம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

    நான் 1921-ம் ஆண்டு பிறந்தேன். மாதம், தேதி எதுவும் தெரியாது. எனக்கு தற்போது 103 வயது ஆகிறது. தற்போது எனது 5-வது தலைமுறையை பார்ப்பதில் மகிழ்ச்சி. நீண்ட ஆயுளை கொடுத்த கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போதும் நான் ஆரோக்கியமாகத்தான் உள்ளேன். அதற்கு காரணம் சிறுவயது முதலே உடற்பயிற்சிகள் போல பல்வேறு வேலைகளை செய்துள்ளேன். சத்தான உணவுகளை சாப்பிட்டு வந்தேன். அந்த காலத்தில் திண்டுக்கல் நகரில் தண்ணீர் பிடிப்பதற்கு பல மைல் தூரம் கடந்து செல்ல வேண்டும்.

    அப்போது நானும் குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு பல மைல் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்துள்ளேன். இதுபோன்ற சம்பவம் தினந்தோறும் நடக்கும். 20 ஆண்டுகளுக்கு மேலாக பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வந்துள்ளேன். நான் சுற்றிப்பார்க்க நினைத்த அனைத்து ஆன்மீக தலங்களுக்கும் எனது பிள்ளைகள் என்னை அழைத்துச்சென்று வந்துள்ளனர்.

    தற்போது எனது வாரிசுகளுடன் நிம்மதியாக வாழ்கிறேன். எனது குடும்பத்தினர் அனைவரும் என்னிடம் ஆசிபெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தற்போதுள்ள குழந்தைகள் சாப்பிடும் துரித உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டு அன்றாட வீட்டு வேலைகளை நாமே செய்தால் அனைவரும் என்னைப்போல 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழலாம் என்றார்.

    Next Story
    ×