search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல்நிலை பாதிக்கப்பட்ட பட்டம்மாளை, அவரது மகன்களிடம் போலீசார் ஒப்படைத்தபோது எடுத்தபடம்
    X
    உடல்நிலை பாதிக்கப்பட்ட பட்டம்மாளை, அவரது மகன்களிடம் போலீசார் ஒப்படைத்தபோது எடுத்தபடம்

    அரியலூர் அருகே நடுரோட்டில் வீசப்பட்ட தாயை வீட்டுக்கு அழைத்து சென்ற மகன்கள்

    அரியலூர் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு நடுரோட்டில் வீசப்பட்ட தாயை, போலீசாரின் அறிவுரையை ஏற்று வீட்டுக்கு அழைத்து சென்ற மகன்கள்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமம் கம்பர் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி பட்டம்மாள் (வயது 95). இவர்களுக்கு சண்முகம் (62), சதாசிவம் (59) என்ற மகன்களும், சரோஜா (65), சகுந்தலா (60) என்ற மகள்களும் உள்ளனர். மாணிக்கம் கடந்த 5 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதால் பட்டம்மாள் தனது மூத்த மகன் சண்முகம் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் தாயை கவனிப்பதில் சண்முகத்திற்கும், சதாசிவத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், பட்டம்மாளை வரதராஜன்பேட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். அங்கு சில மாதங்கள் இருந்த பட்டம்மாள், மகன்கள் மீதான பாசத்தால் அவர்களை பார்ப்பதற்காக, தள்ளாத வயதிலும் தனியாக செங்குந்தபுரத்தில் உள்ள மகன்கள் வீட்டிற்கு சென்றார்.

    ஆனால் அவரை வீட்டிற்குள் சேர்க்க மறுத்த 2 மகன்களும் உடல் நிலை பாதிக்கப்பட்ட 95 வயதான தாய் என்றும் பாராமல், பட்டம்மாளை வீடுகளின் திண்ணையில் மாற்றி மாற்றி போட்டு அலைக்கழித்தனர். கடைசியில் வீட்டு முன்பு உள்ள சாலையில் வீசினர்.

    நடுரோட்டில் கொசு கடி, குளிரை தாங்க முடியாமல் தவித்த அவரை, அந்த வழியாக வந்த ஒருவர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அதன் பிறகும் 2 பேரும் தனது தாயை ஏற்க மறுத்து விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இதையறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி., மோகன்தாஸ், பட்டம்மாளின் மகன்கள் சண்முகம், சதாசிவம் ஆகிய 2 பேரையும் அழைத்து பேசினார். தாயை பராமரிக்காமல் தெருவில் தவிக்க விடுவது தவறு என அறிவுறுத்திய அவர், ஒரு மாதத்திற்கு தலா 15 நாட்கள் ஒருவர் வீதம் பட்டம்மாளை பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் தாயை பராமரிக்க ஒருவரை நியமித்து அவருக்கு இருவரும் சம்பளம் வழங்க வேண்டும் என்றார்.

    அவரது அறிவுரையை ஏற்று மனம் திருந்திய 2 மகன்களும் பட்டம்மாளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். மேலும் அரியலூர் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் அறிவுறுத் தலின்படி போர்வை, சேலை, துண்டு, பாய், தலையணை, சோப்பு, சீப்பு, கண்ணாடி என ரூ.3 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பட்டம்மாளின் மகன்களிடம் போலீசார் வழங்கினர்.

    Next Story
    ×