என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி, காய்கறி வியாபாரி பலியானார். மேலும் அவரது மனைவி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 55). காய்கறி வியாபாரியான இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, இவரது மனைவி சரஸ்வதியுடன் காட்டுமன்னார்குடியில் இருந்து இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். ஜெயங்கொண்டம்- செந்துறை சாலையில் புதுக்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள், சின்னதம்பி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சின்னத்தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதில் சரஸ்வதி படுகாயம் அடைந்தார். மேலும் எதிரே மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த மகேஷ் (40) என்பவரும் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சரஸ்வதியையும், மகேஷையும் அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மகேஷை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்னதம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
    உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நிகழ்ச்சி வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்க உள்ளது
    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கங்கை நதி வரை போர் நடத்தி வெற்றி பெற்றதன் சின்னமாக கட்டப்பட்டது.

    உலக பிரசித்தி பெற்ற இக்கோவில் புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. இங்குள்ள சிவலிங்கம் ஒரே கல்லில் 13½ அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 100 மூட்டை பச்சரிசியை நீராவி அடுப்புகளில் சாதம் வடித்து நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூலம் கூடை, கூடையாக சாதத்தை சுமந்து சென்று சிவலிங்கத்திற்கு சாத்தப்பட உள்ளது.

    காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை சிவலிங்கத்திற்கு சாதம் சாத்தப்படும். சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் சிவலிங்கத்தின் தன்மை பெறுகிறது. இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பின்னர் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறும்.

    இந்த கோவிலில் படைக்கப்படும் அன்னாபிஷேகம் பக்தர்களுக்கு பிரசாதமாக இரவு 9 மணிக்கு வழங்கப் படும். மீதம் உள்ள சாதம் அருகில் உள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் தலைமையில் அன்னாபிஷேக கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதி, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில் அதிகாலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    செந்துறை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    தொடர் மழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. பெரும்பாலான சாலைகள் தூர்ந்து போய் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் விவசாயிகள் உற்சாகத்துடன் சாகுபடி பணிகளை தொடங்கினர்.

    குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வந்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் அரியலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்றும் அறிவித்திருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் மழையின் தாக்கம் குறைந்து அதிகளவில் குளிர் நிலவி வருகிறது. இன்று காலை அரியலூர், ஜெயங்கொண்டம், திருமானூர், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    சாலையில் எதிரே நடந்து செல்பவர்கள் கூட தெரியாத அளவுக்கு அதிகாலையில் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    பலத்த மழை பெய்யும், விவசாயம் செழிக்கும் என்றிருந்த விவசாயிகளுக்கு இன்று காணப்பட்ட பனிப்பொழிவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
    ஜெயங்கொண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகள், ரூ.7 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 54). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் இளைய மகள் ரம்யாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தலை தீபாவளிக்காக தனது தந்தை வீட்டிற்கு வந்த ரம்யாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காலை ரவிச்சந்திரனும், அவரது மனைவி கவிதாவும்(46) ரம்யாவை அழைத்துக்கொண்டு ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது மருத்துவம் பார்க்க தாமதம் ஆனதால் ரவிச்சந்திரன் தனது மனைவி மற்றும் மகளை மருத்துவமனையில் விட்டுவிட்டு தான் மட்டும் வீட்டிற்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்றுள்ளார்.

    அப்போஅவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 17 பவுன் தங்க நகைகள் மற்றும் பூஜை அறையில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    அரியலூரில் கடந்த ஒரு ஆண்டாக விரிவாக்கம் செய்யப்பட்ட அரசு சிமெண்ட் ஆலையை நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
    அரியலூர்:

    அரியலூர் கல்லாலங்குடி சாலையில் அரசு சிமெண்ட் ஆலை 40 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் விரிவாக்கம் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அரசு ரூ.809 கோடி மதிப்பில் 3ஆயிரம் டன் சிமெண்ட உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கும் செய்யும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்றது. தற்போது பணிகள் முடிவுற்ற நிலையில் அதனை பயன்பாட்டிற்காக நாளை 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

    அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அரசு தலைமைகொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி உற்பத்தியை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரத்னா, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் சிமெண்ட் ஆலை ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.
    தனியார் இடங்களில் கொசு உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றை மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து நகராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்களுடன் வீடு, வீடாகச் சென்று வீடுகளில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஏடிஎஸ் கொசு நல்ல நீரில் உற்பத்தியாவதால் அனைத்து கிராம மற்றும் நகர்புற இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க டெங்கு காய்ச்சல் உற்பத்தியாகும் மூலங்களான தெளிந்த நீர்த்தேக்க தொட்டிகள், பயன் பாடற்ற பானைகள், உரல்கள், பழைய டயர், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    அரசுத்துறை அலுவலர்கள் தலைமையில் ஒவ்வொரு வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தனியார் இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் அந்த ஊராட்சி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தை சுத்தமாகவும், மழைநீர் தேங்கா வண்ணமும் வைத்திருக்க வேண்டும்.

    அரசு பணியாளர்களும் தங்கள் மேற்பார்வையில் உள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணித்து ஏடிஎஸ் கொசுக்கள் வராத வண்ணம் கண்காணிக்க வேண்டும். இன்று (அதாவது நேற்று) அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட அழகப்பா நகர், முதல் தெருவில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதை, வீடுவீடாகவும், திறந்தவெளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபத்திக்கொள்ள விருப்பமுள்ள தன்னார்வ இளைஞர்கள், இளைஞர் அமைப்புகள், இளைஞர் நற்பணி மன்றங்கள், நேரு யுவ கேந்திரா போன்ற அமைப்புகள் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளருடன் தொடர்பு கொண்டு சேவை செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, அரியலூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) பூங்கோதை, நகராட்சி ஆணையர் திருநாவுகரசு, வட்டாட்சியர் கதிரவன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் திருச்சி, அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
    அரியலூர்:

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. இடையே பலத்த மழையும் பெய்தது. இதனால் மத்திய பஸ் நிலையம், கண்டோன்மெண்ட் சாலை, வெஸ்ட்ரி பள்ளி சாலை, திருவானைக்காவல் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    ஏர்போர்ட் நுழைவு வாயிலில் தெப்பக்குளம் போல் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தெருக்களில் மழை நீரால் சேறும் சகதியுமாக மாறி பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் , அலுவலகம் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நேற்று காலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஜெமீன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 65), கணேசன் (27), சின்னப்பன் (32), மீனா (55), பொன்னம்மாள் (68) ஆகியோர் ஆடு மேய்க்க சென்றனர். ஜெமீன் ஆத்தூர் அருகே உள்ள குண்டாறு ஓடை பகுதியில் 40க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. இதில் ஆடுகள் சிக்கி அடித்து செல்லப்பட்டன. ஓடை கரையின் ஒரு பகுதியில் சிக்கியவர்கள் செல்போன் மூலம் ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து தங்களை மீட்கும்படி கேட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் புகழேந்தி தலைமையிலான வீரர்கள் ஜெமீன் ஆத்தூர் குண்டாறு ஓடை பகுதிக்கு சென்று கயிறு கட்டி ஓடையின் மறு கரையில் சிக்கி தவித்த 5 பேரையும் மீட்டனர். ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கரூர், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-அரியலூர் -70, செந்துறை-52, திருமானூர்-45, ஜெயங்கொண்டம்-36.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    பாடாலூர் -27, அகரம் சிகூர்-35, லெப்பை குடிக்காடு- 40, புது வேட்டக்குடி-41, பெரம்பலூர்-58, எறையூர்- 38, கிருஷ்ணாபுரம்- 59, தழுதாழை-53, வி.களத்தூர்-45, வேப்பந்தட்டை-45.

    கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கரூர்-10.4, அரவக்குறிச்சி-25, அணைப்பாளையம்-7, க.பரமத்தி-5, குளித்தலை -10, தோகைமலை -6, கிருஷ்ணராயபுரம்-7.8, மாயனூர்-7, பஞ்சப்பட்டி-30, கடவூர்-42, பாலவிடுதி-42.1, வையம்பட்டி-25.
    அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வரவேற்றார். 

    சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் பத்மநாதன், புவியியல் நிபுணர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். திருமானூர் பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தை அடைந்தது. 

    இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் கலந்து கொண்டு, தலைக்கவசம் (ஹெல்மெட்) உயிர்க்கவசம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை இருசக்கர வாகனங்களில் கட்டிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சுகாதார பணிகளை மேற்கொள்ளுமாறு ஊராட்சி செயலாளர்களை மாவட்ட கலெக்டர் ரத்னா கண்டித்தார்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கவட்டாங்குறிச்சி, முடிகொண்டான் ஆகிய இரு கிராமங்களிலும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முடிகொண்டான் கிராமத்தில் உள்ள தெருக்களில் ஆய்வு மேற்கொள்ளும்போது அங்குள்ள வீடுகளுக்கு முன்பு குப்பைகள் குவிக்கப்பட்டு அதன்மீது குளோரின் பவுடர்கள் போடப்பட்டிருந்தன.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கலெக்டர் ரத்னா, ஊராட்சி செயலாளரையும், சுகாதார ஆய்வாளரையும் அழைத்து குப்பைகளை சுத்தம் செய்யாமல் குளோரின் பவுடர் போடுவதனால் என்ன பயன் என கேள்வி எழுப்பினார். ஆய்வுக்கு வருகிறோம் என தெரிந்தும் இந்த நிலையில் கிராமத்தை வைத்திருந்தால் சாதாரண நாட்களில் எப்படி வேலை செய்வீர்கள் என கடுமையாக கண்டித்தார். இனிவரும் காலங்களில் வாரம் இருமுறை குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் தெருக்களில் இதுபோன்ற குப்பைகளை சேர விடக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார். பின்னர் உடனே ஊராட்சி பணியாளர்களை வரவழைத்து அனைத்து குப்பைகளையும் சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அப்போது அந்த கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    அதில் குறிப்பாக அந்த கிராமத்தில் உள்ள முக்கியமான கழிவுநீர் வடிகால் வாய்க்காலை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனால் மழை காலங்களில் தெருக்கள் தோறும் கழிவுநீர் தேங்கி பெரும் சுகாதாரக் கேடாக இருந்து வருகிறது. அதனை பார்வையிட வாருங்கள் என கையோடு அழைத்துச் சென்றனர். அனைத்தையும் பார்வையிட்ட அவர் நில அளவையரை உடனடியாக வரவழையுங்கள் இன்னும் ஓரிரு தினங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து கழிவுநீர் வடிகாலையும் அகற்றி கழிவுநீர் தேங்காத வண்ணம் செய்து தாருங்கள். மேலும் தெருக்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருக்கிறது. அதனையும், சரி செய்து புதிய சாலை அமைத்து தாருங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின் அங்கிருந்த கிராம இளைஞர்களிடம் பேசிய அவர், நீங்கள் ஒரு குழுவாக அமைத்துக் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் மற்றும் வீடுகள் தோறும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தர செய்யுங்கள். இன்னும் 15 நாட்களுக்கு பின் இந்த கிராமத்திற்கு மீண்டும் ஆய்வுக்கு வருவேன். அப்போது உங்கள் கிராமம் நவீன மயமாக்கப்பட்ட கிராமம் போல் காட்சியளிக்க வேண்டும் என அறிவுரைகளை கூறினார்.

    பின்னர் காரில் ஏறச் சென்ற கலெக்டரிடம் பள்ளி மாணவி ஒருவர் திடீரென ஓடி வந்து, எங்கள் கிராமத்திற்கு வரும் பஸ்கள் எதுவும், பஸ் நிலையத்தில் நிற்பதில்லை. நிற்கும் பஸ்களிலும் பள்ளி மாணவர்களை ஏற்ற மறுக்கின்றனர். இதனால் நான் (மாணவி) பள்ளிக்கு தினமும் காலதாமதமாக சென்று வருகிறேன் என முறையிட்டார்.

    இதைக் கேட்டவுடன் உடனடியாக அதிகாரிகளை அழைத்த கலெக்டர் அதிவிரைவு பஸ்களை தவிர சாதாரண பஸ்கள் அனைத்தும் இனி இந்த முடிகொண்டான் பஸ் நிலையத்தில் நின்று தான் செல்ல வேண்டும். இதனை உடனடியாக அவர்களிடம் தெரியப்படுத்துங்கள் என கூறினார். தைரியமாக முன்வந்து கோரிக்கையை வைத்த அந்த மாணவிக்கு கலெக்டர் கைகொடுத்து பாராட்டி அனுப்பி வைத்தார். ஆய்வின் போது தாசில்தார் கதிரவன், சுகாதாரத் துறை துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், நாராயணன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைதொடர்ந்து அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    அரியலூர்:

    சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    அரியலூரில், அரசு தலைமை கொறடாவும், அரியலூர் மாவட்ட செயலாளருமான தாமரை ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் ஜெயங்கொண்டம் தொகுதி ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாணவரணி செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல, ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    திருமானூரில் போலீஸ் நிலையம் எதிரே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூரில் போலீஸ் நிலையம் எதிரே இந்தியன் வங்கியும், அதன் அருகே ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏ.டி.எம். எந்திரம் இருக்கும் அறைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து சேதப்படுத்தி அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.

    அப்போது பணம் இருக்கும் பெட்டகத்தை அவரால் திறக்க முடியாததால் எந்திரத்திற்குள் இருந்த ரசீது சீட்டுகளை கிழித்தெறிந்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை வங்கி அதிகாரிகள் வந்து பார்த்தபோது ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டு இருப்பது தெரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதனை சோதித்து பார்த்ததில் பணம் ஏதும் திருட்டு போகவில்லை. கொள்ளை முயற்சி மட்டும் நடந்திருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து வங்கியின் மேலாளர் திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரம் இருந்த அறைக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழகுளத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் (வயது 44) என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் அடுத்த 4 மணி நேரத்திற்குள் முருகானந்தத்தை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    செந்துறை அருகே ஆயிமுத்தாயி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலங்கைச்சேரி கிராமத்தில் ஆயிமுத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் காலை மாலை பூஜை நடைபெறுவது வழக்கம். நேற்று வழக்கம் போல் பூஜை முடிந்து பூசாரி முருகேசன்  (வயது45)  கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். 

    மறுநாள் கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவிலின் பூட்டு உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த தாம்பூலம், பித்தளையில்லான மணி, விளக்கு, கோவில் கேட்டில் உள்ள பூட்டு உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது.

    இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிலுக்குள் புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    ×