search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் ரத்னாவிடம் மாணவி ஒருவர் புகார் தெரிவித்த போது எடுத்த படம்.
    X
    கலெக்டர் ரத்னாவிடம் மாணவி ஒருவர் புகார் தெரிவித்த போது எடுத்த படம்.

    சுகாதார பணிகளை மேற்கொள்ளுமாறு ஊராட்சி செயலாளர்களை கண்டித்த கலெக்டர்

    சுகாதார பணிகளை மேற்கொள்ளுமாறு ஊராட்சி செயலாளர்களை மாவட்ட கலெக்டர் ரத்னா கண்டித்தார்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கவட்டாங்குறிச்சி, முடிகொண்டான் ஆகிய இரு கிராமங்களிலும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முடிகொண்டான் கிராமத்தில் உள்ள தெருக்களில் ஆய்வு மேற்கொள்ளும்போது அங்குள்ள வீடுகளுக்கு முன்பு குப்பைகள் குவிக்கப்பட்டு அதன்மீது குளோரின் பவுடர்கள் போடப்பட்டிருந்தன.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கலெக்டர் ரத்னா, ஊராட்சி செயலாளரையும், சுகாதார ஆய்வாளரையும் அழைத்து குப்பைகளை சுத்தம் செய்யாமல் குளோரின் பவுடர் போடுவதனால் என்ன பயன் என கேள்வி எழுப்பினார். ஆய்வுக்கு வருகிறோம் என தெரிந்தும் இந்த நிலையில் கிராமத்தை வைத்திருந்தால் சாதாரண நாட்களில் எப்படி வேலை செய்வீர்கள் என கடுமையாக கண்டித்தார். இனிவரும் காலங்களில் வாரம் இருமுறை குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் தெருக்களில் இதுபோன்ற குப்பைகளை சேர விடக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார். பின்னர் உடனே ஊராட்சி பணியாளர்களை வரவழைத்து அனைத்து குப்பைகளையும் சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அப்போது அந்த கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    அதில் குறிப்பாக அந்த கிராமத்தில் உள்ள முக்கியமான கழிவுநீர் வடிகால் வாய்க்காலை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனால் மழை காலங்களில் தெருக்கள் தோறும் கழிவுநீர் தேங்கி பெரும் சுகாதாரக் கேடாக இருந்து வருகிறது. அதனை பார்வையிட வாருங்கள் என கையோடு அழைத்துச் சென்றனர். அனைத்தையும் பார்வையிட்ட அவர் நில அளவையரை உடனடியாக வரவழையுங்கள் இன்னும் ஓரிரு தினங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து கழிவுநீர் வடிகாலையும் அகற்றி கழிவுநீர் தேங்காத வண்ணம் செய்து தாருங்கள். மேலும் தெருக்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருக்கிறது. அதனையும், சரி செய்து புதிய சாலை அமைத்து தாருங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின் அங்கிருந்த கிராம இளைஞர்களிடம் பேசிய அவர், நீங்கள் ஒரு குழுவாக அமைத்துக் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் மற்றும் வீடுகள் தோறும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தர செய்யுங்கள். இன்னும் 15 நாட்களுக்கு பின் இந்த கிராமத்திற்கு மீண்டும் ஆய்வுக்கு வருவேன். அப்போது உங்கள் கிராமம் நவீன மயமாக்கப்பட்ட கிராமம் போல் காட்சியளிக்க வேண்டும் என அறிவுரைகளை கூறினார்.

    பின்னர் காரில் ஏறச் சென்ற கலெக்டரிடம் பள்ளி மாணவி ஒருவர் திடீரென ஓடி வந்து, எங்கள் கிராமத்திற்கு வரும் பஸ்கள் எதுவும், பஸ் நிலையத்தில் நிற்பதில்லை. நிற்கும் பஸ்களிலும் பள்ளி மாணவர்களை ஏற்ற மறுக்கின்றனர். இதனால் நான் (மாணவி) பள்ளிக்கு தினமும் காலதாமதமாக சென்று வருகிறேன் என முறையிட்டார்.

    இதைக் கேட்டவுடன் உடனடியாக அதிகாரிகளை அழைத்த கலெக்டர் அதிவிரைவு பஸ்களை தவிர சாதாரண பஸ்கள் அனைத்தும் இனி இந்த முடிகொண்டான் பஸ் நிலையத்தில் நின்று தான் செல்ல வேண்டும். இதனை உடனடியாக அவர்களிடம் தெரியப்படுத்துங்கள் என கூறினார். தைரியமாக முன்வந்து கோரிக்கையை வைத்த அந்த மாணவிக்கு கலெக்டர் கைகொடுத்து பாராட்டி அனுப்பி வைத்தார். ஆய்வின் போது தாசில்தார் கதிரவன், சுகாதாரத் துறை துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், நாராயணன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×