என் மலர்
அரியலூர்
அரியலூர் மேலத்தெருவில் பழமையான பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலை சுற்றி 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த கோவிலின் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பூஜைகள் முடிந்ததும் சரவணன் கோவில் கதவை பூட்டி சென்றார். மீண்டும் இன்று காலை கோவில் கதவை திறக்க வந்தார்.
அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அம்மனின் கழுத்து மற்றும் காதில் கிடந்த நகைகள் மற்றும் பெட்டியில் இருந்த நகைகள் என மொத்தம் சுமார் 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இது குறித்து சரவணன் அரியலூர் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில் கோவில் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கோவில் கருவறை பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மனின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஊரின் மையப்பகுதியில் கோவில் உள்ளதால் உண்டியலை உடைத்தால் சத்தம் கேட்டு மக்கள் வந்து விடுவார்கள் என நினைத்து கோவில் உண்டியலை உடைக்காமல் நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர். இதனால் உண்டியலில் இருந்து பல லட்சம் ரூபாய் தப்பியுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வராஜ் வரவேற்று பேசினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் சிவ சுப்பிரமணியம், மாவட்ட ஆவின் பால்வள துணைத் தலைவர் தங்கபிச்சமுத்து, மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட இணை செயலாளர் கண்ணகி குப்புசாமி, மாவட்ட துணை செயலாளர் வாசுகி ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சந்திரசேகர், மாணவரணி சங்கர், இளைஞரணி சிவசங்கர், மகளிரணி ஜீவா, வக்கீல் பிரிவு வெங்கடாஜலபதி, சிறுபான்மை பிரிவு அக்பர் ஷெரிப், விவசாய பிரிவு சாமிநாதன், இளைஞர் பாசறை ரீடு செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு சாமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் செல்வராஜ், திருமானூர் குமரவேல், ஆண்டிமடம் மருதமுத்து,
தா.பழுர் வரதராஜன், ஜெயங்கொண்டம் கல்யாண சுந்தரம், நகர செயலாளர் அரியலூர் கண்ணன், ஜெயங்கொண்டம் செல்வராஜ், பேரூராட்சி செயலாளர் உடையார் பாளையம் பெருமாள், வரத ராஜன்பேட்டை லாரன்ஸ், தாமரை கணேசன், மாநில ஒப்பந்தக்காரர் பிரேம்குமார், பால் சொசைட்டி துணைத் தலைவர் பாஸ்கர், வக்கீல் கோபாலகிருஷ்ணன், பாரிவள்ளல், அரசு வக்கீல் சண்முகம், ராமகோவிந்த ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு தலைமை கொறடாவும், மாவட்ட செயலாளருமான தாமரை. எஸ்.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். தமிழக அரசு தலைமை கொறடா தாமரை. எஸ்.ராஜேந்திரன் பேசியதாவது:-
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடை பெறவுள்ளது. நாம் எப்படி தேர்தல் பணியாற்றுவது குறித்து தான் இந்த ஆலோசனை கூட்டம். கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றோம்.
பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். ஆனால் அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியில் சட்டமன்ற தேர்தலை விட நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றிருந்தோம். முதல்வரே என்னை அழைத்து பாராட்டினார்.
விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். முக.ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் எடுபடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்றால் நாம் இப்போதிலிருந்தே முழுமூச்சாக பாடுபட வேண்டும். தி.மு.க.வினரின் பொய் பிரச்சாரம், தவறான வாக்குறுதிகள், நமது அரசு செய்த சாதனைகள், திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்து கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.
நாம் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி. அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்க வேண்டும். அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் வருகிற 15,16 ஆகிய இரு தினங்களிலும் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான வளர்மதி, அரசு கொறடாவும், மாவட்ட செயலாளருமான தாமரை.எஸ்.ராஜேந்திரன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சதன்பிரபாகர் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நகர்மன்ற தலைவருக்கு ரூ.10ஆயிரம், நகர்மன்ற வார்டு உறுப்பினருக்கு ரூ.2500, பேரூராட்சி தலைவருக்கு ரூ.5000, பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.1500, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கு ரூ.5000, ஒன்றியகுழு உறுப்பினருக்கு ரூ.3000 செலுத்தி விருப்ப மனுக்கள் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கின்றதோ? அவரது வெற்றிக்கு நாம் அயராது பாடுபட வேண்டும் என்றார். முடிவில் நகரதலைவர் வேலுசாமி நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திருகளப்பூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ராகுல் (வயது 2). இவன் இன்று காலை வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக மாணவர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி வேன் வந்தது. இந்தநிலையில் எதிர்பாராவிதமாக வேன் ராகுல் மீது மோதியது. இதில் சக்கரத்தில் சிக்கிய ராகுல் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்த தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் ராகுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து விசாரணை வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய பெரிய கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பள்ளி வேன் டிரைவர் ராஜதுரையை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.
நேற்று நமங்குணம் கிராமத்தை சேர்ந்த அருண் ஸ்டாலின்-திவ்யா ஆகியோருக்கு அந்த கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவர்களது உறவினர்கள் செய்திருந்தனர். நேற்று காலை மணமகன்-மணமகளுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரின் உறவினர்களும் கோவிலுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சென்று பார்த்த போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது. யாரும் கதவை திறக்க முடியாத வகையில் இரும்பு சங்கிலியால் 11 பூட்டுக்களை போட்டு பிணைத்து வைத்திருந்தனர். இதைப்பார்த்த மணமகன்-மணமகள் வீட்டார் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பூட்டு போட்டது யாரென்று விசாரிக்கையில், அந்த பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் என தெரியவந்தது. முகூர்த்த நேரம் முடிவதற்குள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த இரு வீட்டாரது உறவினர்களும் உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் செந்துறை தாசில்தார் தேன்மொழி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருமணம் நடத்த இருந்த தரப்பை சேர்ந்தவர்கள், நாங்கள் சீனிவாச பெருமாள் கோவிலில் திருமணம் நடத்துவதற்கு ஒரு மாதத்திற்கே முன்பே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி விட்டோம். எனவே நாங்கள் திருமணம் நடத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றனர்.
கோவிலுக்கு பூட்டு போட்ட தரப்பை சேர்ந்தவர்கள், சீனிவாச பெருமாள் கோவில் எங்களது தெருவில் உள்ளது. எங்களது முன்னோர்கள் எங்களுக்காக கட்டியுள்ளனர் என்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இரு தரப்பினரிடமும் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கோவிலை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடமிருந்து போலீசார் சாவிகளை வாங்கி திறந்தனர். 11 பூட்டுக்களை போட்டதில் அதில் 2 பூட்டுகளுக்கான சாவி இல்லை. அந்த பூட்டுக்களை போலீசார் உடைத்து கதவை திறந்தனர்.
அதன்பிறகு அங்கு அருண் ஸ்டாலின்- திவ்யா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவியதால் போலீசார் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜ.க., அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகர தலைவர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயற்குழு உறுப்பினர் மணிரத்தினம், பெரம்பலூர் மாவட்ட தலைவர் தமிழ்ச் செல்வன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் சிவக்குமார், மாவட்ட துணைத் தலைவர் பழனிசாமி, பொதுச்செயலாளர் ரவிச்சந்திரபோஸ்,
வட்டார தலைவர் கர்ணன், திருநாவுக்கரசு, தியாகராஜன், கொளஞ்சி நாதன், நகர துணை தலைவர் செந்தில், நகர பொருளாளர் செந்தில், ஊடக பிரிவு அறிவுடைநம்பி, ஜெயங்கொண்டம் சங்கர், திருமானூர் தேவா, வர்த்தக பிரிவு ஆண்டனி, மகிளா பிரிவு மாரியம்மாள், சின்ன பொண்ணு, சகுந்தலா, சேவாதளம் சிவா, பூண்டி சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத், காங்கிரஸ் செயல்தலைவர் விஷ்ணு பிரசாத் எம்.பி., பொதுச்செயலாளர் கீழனூர் ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்ட முடிவில் செய்தி தொடர்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியா மிகப்பெரிய நாடு. அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் மக்களை ஒன்று படுத்தி பார்க்க வேண்டும். பிளவுப்படுத்தி பார்க்கக் கூடாது. பா.ஜ.க. எனக்கு காவி சாயம் பூச நினைக்கிறது. எனக்கு மட்டுமல்ல, திருவள்ளுவருக்கே காவி சாயம் பூச நினைக்கின்றது என ரஜினி அறிவித்திருக்கிறார். அவர் அறிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.
இஸ்லாமியருக்கு குரான் நூல் உள்ளது. கிறிஸ்தவர்களுக்கு பைபிள் நூல் உள்ளது. இந்துக்களுக்கு பகவத் கீதை உள்ளது. சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட நூல் திருக்குறள். அதனால் தான் உலகப்பொதுமறை என போற்றப்படுகிறது. அதை எழுதிய திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது என்ன நியாயம். இந்த நாட்டை காக்க ஒரு இயக்கத்தில் காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றால் அது காங்கிரஸ் கட்சி இயக்கம்தான்.
ஒரு நாட்டின் பிரதமருக்கு விவசாயம், பொருளாதாரம் தெரிய வேண்டியது இல்லை. ஆனால் தெரிந்தவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை. காமராஜர் படிக்காதவர், பள்ளிக்கூடம் செல்லாதவர். நாடு முழுவதும் 12 ஆயிரம் கல்வி கூடங்கள் திறந்தவர். ஆசிரியர் பயிற்சி இல்லாத காலத்தில் 10-ம் வகுப்பு படித்த 10 ஆயிரம் பேர்களை ஆசிரியர்களாக நியமித்தார். பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை தந்தவர். இதுபோல் நல்ல திட்டங்களை பா.ஜ.க. அரசு செய்தது உண்டா?.
1000, 500 ரூபாய் செல்லாது என மோடி அரசு அறிவித்தது. இதனால் நாட்டிற்கு என்ன நன்மை, மக்களுக்கு என்ன பயன். குடிசையில் இருப்பவர்களை குளத்திற்கு அழைத்து சென்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்த்து தினசரி ஊதியம் வழங்கப்பட்டது. இது ஒரு வறுமை ஒழிப்பு திட்டம். இதுபோல் ஒரு நல்ல திட்டத்தை பா.ஜ.க. அரசு செய்தது உண்டா?
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என கருதி குறைந்தது 5 சதவீதம், அதிகமாக 18 சதவீதம் என அறிவித்தது. ஆனால் மோடி அரசோ ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்தது. இந்திய தேசத்தை பிளவுப்படுத்த நினைக்கிறது பா.ஜ.க. அது ஒருபோதும் நடக்காது.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. வங்கிகளில் வாராக்கடன் ரூ.8 லட்சம் கோடியை தாண்டி விட்டது. இதனால் நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பொருளாதார மந்த நிலைக்கு காரணமான மோடி அரசு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி ஒரு தவறான கூட்டணியாகும். நாங்கள் பலம் வாய்ந்த கூட்டணி. அதனால் தான் 31 எம்.பி.க்களை பெற்றிருக்கிறோம். எங்கள் கூட்டணி தொடரும். உழைத்தால்தான் உணவு கிடைக்கும். தேர்தல் நேரத்தில் தேர்தல் பணியை சிறப்பாக செய்தால் தான் வெற்றி கிடைக்கும்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை அமர செய்ய வேண்டும். அதற்காக முழு மூச்சுடன் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரியலூர்:
மத்திய அரசின் தவறான கொள்கையை கண்டித்து அரியலூரில் இன்று பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொள்கிறார்.
அரியலூர் மாவட்ட தலைவர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான வல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் விஸ்ணு பிரசாத் எம்.பி., தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கீழானூர் ராஜேந்திரன் ஆகியோர் பேசுகின்றனர்.
அரியலூர் நகரதலைவர் சந்திரசேகர், தொகுதி தலைவர் திருநாவுக்ககரசு, வட்டத்தலைவர் கர்ணன், தியாகராஜன், பழனிச்சாமி, மனோகர், செந்தில் உள்பட அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர் வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 380 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார். இதில் எருத்துக்காரன்பட்டி திருவள்ளுவர் தெரு மக்கள் அளித்த மனுவில், எருத்துக்காரன்பட்டி ஊராட்சி திருவள்ளுவர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் அடிப்படை வசதிகளான சாக்கடை அமைப்புகள் இல்லாததால் அங்கு தேங்கி நிற்கும் நீரில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. தேங்கிக் கிடக்கும் குப்பைகள், கழிவுநீர்கள் அகற்றப்படாததால் சில நாட்களுக்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றனர். எனவே மாவட்ட கலெக்டர், உடனடியாக மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகள், சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முறையாக கழிவுநீர் செல்லும் வகையில் வசதி செய்து தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பூவந்தி கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி. கூலி தொழிலாளியான இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி மாடியிலிருந்து கீழே விழுந்த இவரது மகன் ரூபனை கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு ரூபனுக்கு எலும்பு முறிவுக்கான சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் சிறுவனுக்கு கால்வலி அதிகமாகவே அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போது அங்கு அவருக்கு எலும்பு புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே சிறுவனின் சிகிச்சைக்காக பல லட்ச ரூபாய் செலவு செய்த நிலையில், கையில் பணம் இல்லாமல் பெற்றோர்கள் தவித்தனர். பின்னர் சிகிச்சைகாக சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனின் வலது கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் ரூபனின் பெற்றோர் மிகுந்த மன வேதனையுடன் மாவட்ட கலெக்டரை சந்தித்து தனது மகனின் மருத்துவ செலவுக்கு உதவி செய்யுமாறு மனு அளித்தனர். தனது மகனுக்கு முறையாக சிகிச்சை வழங்காத கும்பகோணம் தனியார் மருத்துவமனை மீது விரைவில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தனர்.
திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் கொடுத்த மனுவில், குருவாடி கிராமத்தில் ஏலாக்குறிச்சியில் இருந்து தூத்தூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு குடிசையில், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அந்த குடிசையின் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு கால்நடை மருத்துவமனை, ஊராட்சி அலுவலகம், கோவில்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி உள்ளிட்டவை இயங்கி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு அருகே உள்ள பள்ளி வளாகங்களில் சென்று மது அருந்திவிட்டு அங்கேயே பாட்டில்களை உடைத்தும், குப்பைகளை வீசி சென்றும் வருகின்றனர். எனவே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்து முன்னணியினர் வேப்பிலைகளை மாலையாக அணிந்து கொண்டு வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில், கோவில் பராமரிப்பு மற்றும் சுவாமிகளுக்கு பூஜை உள்ளிட்ட செலவுகளுக்காக முன்னோர்கள் சுவாமி பெயரில் நிலத்தை கொடுத்தார்கள். இந்த நிலத்தின் மூலம் கிடைக்கூடிய வருவாய்களை கொண்டு மேற்கண்டவற்றிற்கு செலவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா வழங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசின் இந்த முடிவு பக்தர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே தமிழக அரசு இந்த அரசாணையை உடனடியாக ரத்துசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அளித்த மனுக்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதிலை வழங்குமாறு கலெக்டர் ரத்னா அறிவுறுத்தினார். மேலும் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்று அந்த மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலருக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






