என் மலர்tooltip icon

    அரியலூர்

    இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கருத்தரங்கில் வழக்கறிஞர்கள் செந்தில்குமார், மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கல்வி அதிகாரி பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

    பள்ளியில் தொடங்கிய ஊர்வலம், அண்ணா சிலை, கடைவீதி, நான்கு ரோடு, தா.பழூர் ரோடு, பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தின்போது, அரசியலமைப்பு தினம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தி கோ‌‌ஷமிட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் வேல்முருகன், உடற்கல்வி ஆசிரியர் சேகர் ஆகியோர் செய்திருந்தனர். ஊர்வலத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவித் தலைமையாசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார்.
    ஆண்டிமடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதா(32). இவர் புதிதாக வீடுகட்டி வருகிறார். இதனால் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் பின்புறம் தகர சீட்டுகளை கொண்டு வீடு அமைத்து அதில், தற்காலிகமாக தங்கியிருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டை பூட்டிவிட்டு புதிய கட்டிடத்தில் தனது குடும்பத்தினருடன் படுத்து தூங்கினார். பின்னர் நேற்று அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதா உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.1½ லட்சம் மற்றும் 4 பவுன் தங்க நகைகள் திருடுபோய் இருப்பது தெரிந்தது.

    பின்னர் அவர் இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
    மத்திய அரசின் மலிவு விலை மருந்துகள் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். மருந்து வணிகர் சங்க செயலாளர் சங்கர் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மண்டல மருந்தக கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் ரவிக்குமார் கலந்து கொண்டு, தமிழக அரசு சுகாதாரத்துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அறிவுறுத்தலின் பேரில், டெங்கு பற்றிய விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை அனைத்து மருந்து கடைகளிலும் ஒட்ட வேண்டும் என வலியுறுத்தினார். மாநில சங்க தலைவர் மனோகரன், மாநில செயலாளர் செல்வன், தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சங்க வளர்ச்சி பற்றியும், சங்கத்தின் செயல்பாடு குறித்தும் விளக்கம் அளித்து பேசினர்.

    கூட்டத்தில் மத்திய அரசின் மலிவு விலை மருந்துகள் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மருந்து கடைகளுக்கும் டெங்கு பற்றிய விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி அதனை கடையில் பொதுமக்கள் பார்வையில் படும்படி ஒட்டப்பட வேண்டும்.

    மேலும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், மீன்சுருட்டி, உடையார்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், மருந்து வணிகர்கள், மருந்துகள் கட்டுப்பாட்டு துறை மருந்தக ஆய்வாளர் ஸ்ரீதேவி, மருந்துகள் மொத்த வணிகர் சங்க தலைவர் முருகன், ஒருங்கிணைப்பாளர் அக்பர்அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கார்த்திக்கேயன் நன்றி கூறினார்.
    அரியலூரில் 2000, 500 ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 23). இவர் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் சாலையோரம் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவரது கடைக்கு தினமும் 2 பேர் வந்து சாப்பிட்டுவிட்டு ரூ.2000, ரூ.500 கொடுத்து மாற்றியுள்ளனர். ராஜா அதனை வாங்கியதுடன், சாப்பிட்டதற்கான ரூபாயை எடுத்துக்கொண்டு மீதி தொகையை கொடுத்து வந்துள்ளார்.

    பல நாட்களாக அவர்கள் இதுபோல் வந்து சாப்பிட்டுவிட்டு ரூ.500, ரூ.2000 நோட்டுக்களை கொடுத்து மீதி தொகையை வாங்கி சென்றுள்ளனர். சில நேரங்களில் சில்லரை இல்லாதபோது அருகில் உள்ள கடையில் மாற்றியும் கொடுத்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்றிரவு 2 பேரும் ராஜாவின் கடைக்கு வந்து சாப்பிட்டு விட்டு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளனர். தினமும் ரூ.2 ஆயிரம், ரூ.500-ஐ கொடுத்து மாற்றியதால் அவர்கள் மீது ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து 500 ரூபாய் நோட்டை ஆய்வு செய்தபோது அது கள்ளநோட்டுக்கள் என தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, உடனடியாக அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் மேலூர் கீழவளைவு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ் (வயது 27), கடலூர் மாவட்டம் முருகன் குடி வெண்கரும்பூர் பகு தியை சேர்ந்த ராஜாங்கம் (41) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்களுக்கு கள்ளநோட்டுக்கள் எப்படி கிடைத்தது? வேறு எங்காவது இதுபோல் புழக்கத்தில் விட்டுள்ளனரா? இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் அவர்கள் இதுவரை புழக்கத்தில் விட்ட கள்ள ரூபாய் நோட்டின் மதிப்பு எவ்வளவு எனவும் கணக்கிட்டு அதனை கைப்பற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஜெயங்கொண்டம் அருகே நள்ளிரவில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர்  மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமத் தைச்சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 48). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணி மனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு அவர் பணிக்கு சென்றார். அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அருகில் உள்ள கூரை வீட்டில் தூங்க சென்றனர்.

    இன்று காலை 6.30 மணியளவில் இரவு பணியை முடித்துவிட்டு  வீட்டுக்கு ராமானுஜம் வந்தார். அப்போது பூட்டியிருந்த வீட்டின் கதவுகள்  கடப்பாரையால் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்ததை பார்த்து ராமானுஜம் அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டில் ஆட்கள் இல்லாத ததை நோட்டமிட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

    இதுகுறித்து ராமானுஜம் கொடுத்த புகாரின்பேரில் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    அரியலூர் அருகே நள்ளிரவில் அடகுக்கடையின் பூட்டை உடைத்து 100 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். வக்கீலான இவர் அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி, கோவிலூர், புள்ளம்பாடி, திருமழப்பாடி ஆகிய 4 இடங்களில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார்.

    திருமழப்பாடியில் மெயின் ரோட்டில் சிவக்குமாரின் அடகுக்கடை செயல்பட்டு வந்தது. அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் இங்கு நகைகளை அடகு வைத்து கடன் பெற்று வந்தனர். சிவக்குமார் அவ்வப்போது மட்டும் கடைக்கு சென்று வருவார். மற்றப் பணிகளை ஊழியர்கள் கவனித்து வந்தனர்.

    நேற்றிரவு பணி முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். இன்று அதிகாலை கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து சிவக்குமார் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர்கள் கடைக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கடையில் பொருட்கள் சிதறி கிடந்ததுடன், லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளை போயிருந்தது.

    இதுகுறித்து சிவக்குமார் திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், தன்னுடைய திருமழப்பாடி நகை அடகுக்கடையில் இருந்து 100 பவுன் நகைகள் கொள்ளை போயுள்ளதாகவும், அதனை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

     மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாசன், டி.எஸ்.பி. திருமேனி மற்றும் திருமானூர் போலீசார் சென்று பார்வையிட்டனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் கடையில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்றதும், இன்று அதிகாலை 2 மணியளவில் அங்கு புகுந்த மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    அடகுக்கடை ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்ட ஒரு சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது. மேலும் சி.சி.டி.வி. கேமரா, அலாரம் உள்ளிட்ட கருவிகள் எதுவும் பொருத்தப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்மநபர்கள் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படாததால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடை உரிமையாளர் சிவக்குமார், 100 பவுன் நகை கொள்ளை போனதாக புகாரில் தெரிவித்துள்ளார். அது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டம் அருகே கார் மீது லாரி ஏறியதில், முதியவர் உள்பட 2 பேர் பலியாயினர். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள வீரையா நகரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 80). இவரும், தற்போது கும்பகோணத்தில் வசித்து வரும் பெரம்பலூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் ராஜராஜன்(35) என்பவரும் நேற்று மாலை விருத்தாசலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ராஜராஜன் ஓட்டிச்சென்றார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற டிப்பர் லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

    இதில் கார் மீது லாரி ஏறியதில், கார் நசுங்கியது. அதில் இருந்த ராஜராஜனும், சுந்தரமும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயங்கொண்டம் தமிழரசி, மீன்சுருட்டி மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த சுந்தரம் மற்றும் ராஜராஜனின் உடல்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியாததால் இதுகுறித்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரின் கதவுகளை உடைத்து 2 பேரின் உடல்களையும் வெளியே எடுத்தனர்.

    பின்னர் அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக ஜெயங்கொண்டத்தில் 34 மி.மீ. மழை பெய்துள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக ஜெயங்கொண்டத்தில் 34 மி.மீ. மழை பெய்துள்ளது. அரியலூரில் 12.5மி.மீ., செந்துறையில் 6மி.மீ., திருமானூரில் 5 மி.மீ., மழை பெய்துள்ளது.

    இந்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இரவு முழுவதும் பெய்த மழையால் அரியலூர் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டி நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பங்கேற்றார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டி பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் நேற்று நடைபெற்றது. தா.பழூர் கடைவீதியில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாரத்தானில் தானும் கலந்து கொண்டு ஓடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறுகையில், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உடல்நலம் மற்றும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

    இதில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, சமூக ஆர்வலர் தனஞ்ஜெயன், ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை கமலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தா.பழூர் போலீசார் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்வழங்கப்பட்டது.
    அரியலூர் அருகே லாரியும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தே.மு.தி.க. நிர்வாகி பலியானார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணிக்குறிச்சியை சேர்ந்தவர் கவியரசன் (வயது 35). அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளராக இருந்து வந்தார். நேற்று மாலை அரியலூர் சென்ற அவர், அங்கு வேலைகளை முடித்து விட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். தேளூர் போலீஸ் நிலையம் அருகே அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.  

    போலீஸ் நிலையம் முன்பு சாலையில் வைக்கப் பட்டிருந்த பேரிகார்டு பகுதியை கடந்து தேளூர் பிரிவு சாலைக்கு செல்ல முயன்றார். அப்போது எதிரே ஜெயங்கொண்டத்தில் இருந்து பெரம்பலூருக்கு ஜல்லிக் கற்கள் ஏற்றுவதற்காக டிப்பர் லாரி வேகமாக வந்தது. எதிர்பாராதவிதமாக லாரியும்-மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின. இதில் கவியரசன் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். 

    இதையடுத்து போலீசார் கவியரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு விசாரணை நடத்தி, லாரி டிரைவர் தத்தனூரை சேர்ந்த கொளஞ்சியப்பன் (40) என்பவரை கைது செய்தார். விபத்தில் பலியான கவியரசனுக்கு கவிதா என்ற மனைவியும் ஒரு வயதில் மகனும்உள்ளனர். கவியரசன் பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் தே.மு.தி.க.  கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    செந்துறை அருகே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்த ராதா மகன் பிரபாகரன்(வயது 27). இவர் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி அய்யனார் குலத்துபட்டியை சேர்ந்த ஊமதுரை மகள் கார்த்திகாவிற்கும்(23) கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகா பொன்பரப்பியில் உள்ள தனது உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அன்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் நேற்று காலை பிரபாகரன், கார்த்திகாவின் உறவினர்களிடம் கார்த்திகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கார்த்திகாவின் உறவினர்களும், செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசாரும் விரைந்து வந்தனர். அப்போது கார்த்திகாவின் உறவினர்கள் சிலர் பிரபாகரன் தான் கார்த்திகாவை அடித்துக் கொலை செய்து விட்டதாக கூறி ஆத்திரத்தில் அவரது வீட்டை அடித்து உடைத்தனர். இதனைக் கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் கார்த்திகாவின் உடலை பொன்பரப்பிக்கு எடுத்து செல்வதாக கூறி வீட்டில் இருந்த அவரது உடலை உறவினர்கள் தூக்கிக்கொண்டு சரக்கு வேனில் ஏற்றினர். இதனை கண்ட போலீசார் உடலை எடுத்து செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், உறவினர்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து போலீசார் சரக்கு வேனில் இருந்து உடலை இறக்கி மீண்டும் வீட்டிலேயே வைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கார்த்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்களிடையே ஏற்பட்ட இந்த மோதலை தொடர்ந்து அப்பகுதியில் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    தலைமை அறிவித்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் என்று திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
    அரியலூர்:

    நீட் தேர்வால் அரியலூர் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது நினைவாக குழுமூரில் அனிதா படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அனிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நூலகத்தை சுற்றிப்பார்த்த அவர், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் தி.மு.க. இளைஞரணி சார்பில் புத்தகங்களை வழங்கி உறுப்பினராக இணைந்தார். முன்னதாக அனிதா நூலக வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார்.

    இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நீட் எதிர்ப்பு போராளி அனிதா நினைவு நூலகத்திற்கு தி.மு.க.வினர் தேவையானவற்றை செய்து கொடுத்துள்ளனர். அனிதா சகோதரர் மணிரத்னம் கேட்டுக்கொண்டதன் காரணமாக நூலகத்தில் தேவையான புத்தகங்களை வழங்கி உறுப்பினராக இணைந்துள்ளேன் என்றார்.

    திமுக

    அப்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. தலைமை அறிவித்தால் போட்டியிட தயாராக உள்ளேன் என்றார்.
    ×