search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை சம்பவம் நடந்த நகை அடகுக்கடையை படத்தில் காணலாம்.
    X
    கொள்ளை சம்பவம் நடந்த நகை அடகுக்கடையை படத்தில் காணலாம்.

    அரியலூர் அருகே அடகு கடையில் 100 பவுன் நகைகள் கொள்ளை

    அரியலூர் அருகே நள்ளிரவில் அடகுக்கடையின் பூட்டை உடைத்து 100 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். வக்கீலான இவர் அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி, கோவிலூர், புள்ளம்பாடி, திருமழப்பாடி ஆகிய 4 இடங்களில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார்.

    திருமழப்பாடியில் மெயின் ரோட்டில் சிவக்குமாரின் அடகுக்கடை செயல்பட்டு வந்தது. அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் இங்கு நகைகளை அடகு வைத்து கடன் பெற்று வந்தனர். சிவக்குமார் அவ்வப்போது மட்டும் கடைக்கு சென்று வருவார். மற்றப் பணிகளை ஊழியர்கள் கவனித்து வந்தனர்.

    நேற்றிரவு பணி முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். இன்று அதிகாலை கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து சிவக்குமார் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர்கள் கடைக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கடையில் பொருட்கள் சிதறி கிடந்ததுடன், லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளை போயிருந்தது.

    இதுகுறித்து சிவக்குமார் திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், தன்னுடைய திருமழப்பாடி நகை அடகுக்கடையில் இருந்து 100 பவுன் நகைகள் கொள்ளை போயுள்ளதாகவும், அதனை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

     மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாசன், டி.எஸ்.பி. திருமேனி மற்றும் திருமானூர் போலீசார் சென்று பார்வையிட்டனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் கடையில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்றதும், இன்று அதிகாலை 2 மணியளவில் அங்கு புகுந்த மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    அடகுக்கடை ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்ட ஒரு சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது. மேலும் சி.சி.டி.வி. கேமரா, அலாரம் உள்ளிட்ட கருவிகள் எதுவும் பொருத்தப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்மநபர்கள் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படாததால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடை உரிமையாளர் சிவக்குமார், 100 பவுன் நகை கொள்ளை போனதாக புகாரில் தெரிவித்துள்ளார். அது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×