search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.
    X
    கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.

    வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகள், பணம் கொள்ளை

    ஜெயங்கொண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகள், ரூ.7 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 54). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் இளைய மகள் ரம்யாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தலை தீபாவளிக்காக தனது தந்தை வீட்டிற்கு வந்த ரம்யாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காலை ரவிச்சந்திரனும், அவரது மனைவி கவிதாவும்(46) ரம்யாவை அழைத்துக்கொண்டு ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது மருத்துவம் பார்க்க தாமதம் ஆனதால் ரவிச்சந்திரன் தனது மனைவி மற்றும் மகளை மருத்துவமனையில் விட்டுவிட்டு தான் மட்டும் வீட்டிற்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்றுள்ளார்.

    அப்போஅவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 17 பவுன் தங்க நகைகள் மற்றும் பூஜை அறையில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Next Story
    ×