search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    அரியலூரில் கொள்ளை வழக்கில் கைதான விசாரணை கைதி மர்ம மரணம்

    அரியலூரில் கொள்ளை வழக்கில் கைதான விசாரணை கைதி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. கடந்த 16.8.2019 அன்று ஆண்டிமடத்தில் உள்ள கோவிலில் உண்டியல் பணம் மற்றும் மணி திருடப்பட்டது. 23.8.2019 அன்று செல்வராணி என்பவரின் வீட்டில் நகை-பணம் கொள்ளை போனது.

    இப்படி தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது.

    இதையடுத்து கொள்ளையில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து அரியலூர் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆண்டிமடம் அருகே உள்ள கஞ்சமலைப்பட்டி பகுதியை சேர்ந்த மணி என்கிற குண்டு மணி (வயது 50) என்பவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக தனிப்படை போலீசார், கஞ்சமலைப்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க தப்பி சென்றார். தொடர்ந்து அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்று போலீசார் விசாரணை நடத்தியபோது, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    அங்கு சென்ற தனிப்படை போலீசார் மணியை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை அரியலூர் போக்குவரத்து காவல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதுடன், நெஞ்சு வலிப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவரை போலீசார் அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மணியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் கைதி திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூர் எஸ்.பி. சீனிவாசன், டி.எஸ்.பி.க்கள் அரியலூர் இளஞ்செழியன், ஜெயங்கொண்டம் மோகன்தாஸ் ஆகியோர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மணியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதனிடையே போலீசார் தாக்கியதால்தான் மணி இறந்துள்ளார் என்று அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் மணியின் சாவில் மர்மம் நீடிக்கிறது. இது தொடர்பாக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீசார் தாக்கியதால் மணி இறந்தாரா? அல்லது நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் மணிசாவுக்கான காரணம் குறித்த உண்மை விவரம் தெரிய வரும்.

    மணி இறந்த சம்பவத்தால் அவரது சொந்த ஊரான ஆண்டிமடம் கஞ்சமலைப்பட்டி பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×