search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணி நீக்கம்
    X
    பணி நீக்கம்

    போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த யூனியன் மேலாளர் பணி நீக்கம் - கலெக்டர் உத்தரவு

    போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த யூனியன் மேலாளரை பணி நீக்கம் செய்ய கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

    அரியலூர்:

    கடந்த 30 ஆண்டுகளாக ஊராட்சி பணியாளர்களை எம்.பி., எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன், ஊராட்சி தலைவர்கள் ஆகியோரே பார்த்து தகுதியின் அடிப்படையில் பணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்தது.

    அதன்படி 8-ம் வகுப்பு படித்திருந்தால் ஊராட்சி எழுத்தராகவும், 10-ம் வகுப்பு படித்திருந்தால் ஊரக வளர்ச்சி துறையில் டிரைவராகவோ, இளநிலை உதவியாளராகவோ சேர்த்துக் கொள்ளலாம். தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி. மூலமாக ஊராட்சியில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், மருதூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 58) என்பவரின் தந்தை மருதூர் ஊராட்சி எழுத்தராக பணி புரிந்து வந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அன்பழகன், மருதூர் ஊராட்சி எழுத்தராக பணியில் சேர்ந்தார்.

    10-ம் வகுப்பு படித்திருந்தால் யூனியனில் இளநிலை உதவியாளராக பணியில் சேரலாம் என்பதால், அன்பழகன் 10-ம் வகுப்பு படித்ததாக போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்து கடந்த 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஆண்டிமடம், செந்துறை யூனியனில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த அவர், பதவி உயர்வு பெற்று அரியலூர் யூனியன் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    அடுத்த மாதம் (செப்டம்பர்) பணி ஓய்வு பெற வேண்டிய நிலையில் அவரது சான்றிதழை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, போலிசான்றிதழ் கொடுத்து அன்பழகன் வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட கலெக்டர் வினய் அன்பழகனை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    அன்பழகன் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் காவல் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி அமைப்பில் பணிபுரிபவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்க கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது அரசுத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×