என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • டெஸ்ட் ட்ரைவ் செய்யவேண்டும் என்று கூறி ஷோருமில் இருந்து பைக்கை இளைஞர் ஒருவர் திருடியுள்ளார்.
    • பைக் திருடுபோனதை அடுத்து ஷோரூம் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் இருந்து டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறி பைக்கை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சாஹல் என்ற இளைஞர் நவம்பர் 3-ம் தேதி ரூ.1 லட்சம் விலையுள்ள செகண்ட் ஹேண்ட் ரேஸிங் பைக்கை வாங்குவதற்காக பைக் ஷோரூமிற்கு வந்துள்ளார். அப்போது தனது அப்பா என்றுகூறி ஒரு முதியவரை அவர் கூட்டி வந்துள்ளார்.

    பைக்கை வாங்குவதற்கு முன்பு டெஸ்ட் ட்ரைவ் செய்யவேண்டும் என்று கூறி தனது அப்பாவை ஷோரூம் ஊழியர்களிடம் விட்டுவிட்டு பைக்கை எடுத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சாஹல் வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் முதியவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த முதியவர் நான் சாஹலின் தந்தை இல்லை என்றும் டீ விற்பவர் என்று கூறியுள்ளார்.

    சாஹல் அடிக்கடி தனது கடைக்கு டீ குடிக்க வருவார், ஒரு முக்கிய வேலையாக தன்னுடன் வரும்படி அவர் கூறியதாக ஊழியர்களிடம் அந்த முதியவர் தெரிவித்தார்.

    பின்னர் பைக் திருடுபோனதை அடுத்து ஷோரூம் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சாஹலை தீவிரமாக தேடிவந்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடு போன பைக்கையும் போலீசார் கைப்பற்றினர்.

    சாஹலிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், "தனக்கு மோட்டார் சைக்கிள்கள் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. தனது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைமைகளால் பைக் வாங்க முடியவில்லை. ஆதலால் அதிவேக மோட்டார் சைக்கிளை திருடினேன்" என்று அவர் தெரிவித்தார்.

    • ஷாஹித் கான் என்ற இளைஞர் கனடாவில் உள்ள ஒரு பெண்ணை இன்ஸ்டாகிராமில் பேசி பழகி காதலித்துள்ளார்.
    • அக்டோபர் 31 அன்று இரவு பஞ்சாப் நேஷனல் வங்கிக்குள் நுழைந்து அவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

    கனடாவில் உள்ள தனது காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வங்கி அனுப்புவதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் உள்ள பாரபங்கியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அப்துல் சமத் கான் என்கிற ஷாஹித் கான் என்ற இளைஞர் கனடா நாட்டில் உள்ள ஒரு பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி காதலித்துள்ளார். தனது காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி அனுப்ப வேண்டும் என்பதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    அக்டோபர் 31 அன்று இரவு பஞ்சாப் நேஷனல் வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் பணம் உள்ள லாக்கரை அவரால் உடைக்கமுடியவில்லை. பின்னர் நவம்பர் 4-ம் தேதி வங்கி மீண்டும் திறக்கப்பட்டபோது வங்கி கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அதிகாரிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வங்கி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 70க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளின் மூலம் குற்றவாளி ஷாஹித் கானை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இளைஞர் உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவில் உள்ள மேலும் 2 பெண்களுடன் இன்ஸ்டகிராமில் நட்பாக பேசி வந்துள்ளார். அவர்களுக்கும் விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்து ஈர்க்க விரும்பியுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • சிறுவனின் தொண்டையில் சாக்லேட் சிக்கியதை அறிந்த அவரது தாய், பதட்டமடைந்துள்ளார்.
    • தீபாவளியை முன்னிட்டு மருத்துவர்கள் விடுப்பில் சென்றதால் சிறுவனுக்கு போதிய சிகிச்சை கிடைக்கவில்லை.

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தொண்டையில் சாக்லேட் சிக்கியதால் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நவம்பர் 3 அன்று ப்ரூடோலா என்ற சாக்லேட்டை 4 வயது சிறுவன் சாப்பிட்டு கொண்டிருந்தான். கொஞ்சம் பெரிதாக உள்ள சாக்லேட் சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளது.

    சிறுவனின் தொண்டையில் சாக்லேட் சிக்கியதை அறிந்த அவரது தாய், பதட்டத்தில் சிறுவனுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்துள்ளார். தண்ணீர் குடித்த பின்பு சிறுவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த சிறுவனை குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த மருத்துவர்களால் சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த சாக்லேட்டை அகற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து அவர்கள் அந்த சிறுவனை மேலும் பல மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். தீபாவளியை முன்னிட்டு மருத்துவர்கள் விடுப்பில் சென்றதால் சிறுவனுக்கு போதிய சிகிச்சை கிடைக்கவில்லை.

    இறுதியில் தொண்டையில் சாக்லேட் சிக்கி 3 மணி நேரமாக மூச்சுத் திணறித் துடிதுடித்து சிறுவன் உயிரிழந்தான்.

    சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்த கடைக்காரர் கடையை மூடிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. கடைக்காரரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்த வழக்கை விசாரித்து, அந்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சிறுவனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பயிற்சிக்காக போர் விமானம் ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​இந்த விபத்து நடந்துள்ளது.
    • மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடிப்பது இது முதல் முறையல்ல.

    மிக்-29 போர் விமானம், உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது எனவும் விபத்தின் போது விமானி பாதுகாப்பாக வெளியேறினார் என்றும் இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பயிற்சிக்காக போர் விமானம் ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது.

    இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உத்தரவிட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடிப்பது இது முதல் முறையல்ல. செப்டம்பர் 2ஆம் தேதி ராஜஸ்தானின் பார்மரில் மிக்-29 போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது. விபத்திற்கு முன் விமானி பாதுகாப்பாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரில் பிரசித்தி பெற்ற பங்கே பீஹாரி கோவில் அமைந்துள்ளது.
    • தண்ணீர் வெளியேறும் குழாய் அந்த யானை துதிக்கை கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டி குழாயில் இருந்து வந்த தண்ணீரை தீர்த்தம் என்று நினைத்து பக்தர்கள் வரிசை கட்டி நின்று பிடித்துக் குடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரில் பிரசித்தி பெற்ற பங்கே பீஹாரி கோவில் அமைந்துள்ளது.

    கோவில் சுவரில் யானை துதிக்கை வடிவில் அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்பிலிருந்து தண்ணீர் ஒழுகிக்கொண்டிருந்தது. இந்த நீரானது கிருஷ்ணரின் காலில் இருந்து வரும் தீர்த்தம் என்றும் அதை குடிப்பதால் பிரச்சனைகள் தீரும் என்று நம்பிய அங்கு வந்த பக்தர்கள் வரிசையில் நின்று அதைப் பிடித்துக் குடித்துள்ளனர்.

    உண்மையில் உள்ளே அமைக்கப்பட்டிருந்த ஏசி மெஷினில் இருந்து தண்ணீர் வெளியேறும் குழாய் அந்த யானை துதிக்கை கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது. எனவே ஏசி மெஷின் கழிவு நீரையே தீர்த்தம் என்று பக்தர்கள் குடித்துள்ளது பின்னர் தெரிய வந்துள்ளது. ஏசி கழிவு நீரை மக்கள் வரிசையில் நின்று பிடிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • 250 கிராம் உருளைக் கிழங்கை யாரோ திருடிவிட்டதாக போலீசாரிடம் விஜய் வர்மா புகாரளித்தார்.
    • விஜய் வர்மா பேசியதை போலீசார் வீடியோ எடுத்துள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் மன்னபுர்வாவில் வசிக்கும் விஜய் வர்மா என்பவர், மது அருந்திவிட்டு சமைத்து சாப்பிடுவதற்காக வைத்திருந்த 250 கிராம் உருளைக் கிழங்கை யாரோ திருடிவிட்டதாக போலீசாருக்கு செல்போன் மூலம் புகாரளித்தார்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் நடந்ததை அவர் கூறியுள்ளார். இதனை போலீசார் வீடியோ எடுத்துள்ளனர்.

    உருளைக்கிழங்கு காணவில்லை என்று போலீசாரிடம் விஜய் வர்மா சீரியசாக பேச, சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், "என்ன மது அருந்தினீர்கள்?" என போலீசார் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

    • 50க்கும் மேற்பட்ட காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
    • 2 மாத சிகிச்சைக்கு பிறகு அக்குழந்தை முழுவதுமாக குணமாகியுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோர் பாலத்தில் இருந்து கீழே வீசியுள்ளனர். பாலத்தின் கீழே இருந்த மரத்தில் சிக்கி தவித்த குழந்தையை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    50க்கும் மேற்பட்ட காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

    2 மாத சிகிச்சைக்கு பிறகு அக்குழந்தை முழுவதுமாக குணமாகியுள்ளது. ஜென்மாஷ்டமி அன்று இக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதால் அக்குழந்தைக்கு கிருஷ்ணா என்று மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர்.

    முழுவதுமாக குணமடைந்த பிறகு இக்குழந்தையை குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்களிடம் அக்டோபர் 24 அன்று மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக பேசிய டாக்டர் கலா, "அந்த பெற்றோருக்கு இக்குழந்தை தேவையில்லையெனில் மருத்துவமனையிலோ அல்லது, கோவில், மசூதியிலோ குழந்தையை விட்டு சென்றிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் குழந்தைக்கு அடிபடாமல் இருந்திருக்கும். குழந்தையை விட்டு பிரியும்போது மருத்துவமனையில் உள்ள அனைத்து ஊழியர்களும் தங்களது குழந்தையை பிரிவது போல நினைத்து கண்ணீர் விட்டு அழுதார்கள்" என்று தெரிவித்தார்.

    • தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள்.
    • அரசு சார்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தீபோத்ஸவ் எனப்படும் தீபத்திருவிழாவை கொண்டாடி வருகிறது.

    இதையொட்டி அயோத்தி சரயு நதிக்கரையில் 2017-ம் ஆண்டு 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதன் பிறகு 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.

    கடந்த 2022-ம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 22.3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்கு அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் 25 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 25,12,585 லட்சம் விளக்குகளை அதிக அளவில் காட்சிப்படுத்தியதன் மூலம் சுற்றுலாத்துறை, உத்தரபிரதேச அரசு, மாவட்ட நிர்வாகம், அயோத்தியில் சாதனை படைத்துள்ளது. 

    இதேபோல், ஒரே நேரத்தில் அதிக மக்கள் விளக்குகளை ஆரத்தி எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம், இம்முறை இரண்டு கின்னஸ் சாதனைகளை உ.பி தீபத்திருவிழா படைத்துள்ளது.

    இந்த தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது.

    மேலும், லேசர் ஒளி மூலம் ராம் - லீலா நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அரசு சார்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    மேலும் தீபத்திருவிழாவையொட்டி அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் வளாகமும் அலங்காரத்தால் ஜொலிக்கிறது.

    மேலும், தீபத்திருவிழாவின் பிரம்மாண்டம் நீடித்த உணர்வை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்காக கோவிலின் பவன் தரிசனத்திற்காக கடந்த 29-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி நள்ளிரவு வரை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் கடந்த ஆண்டு போலீசில் புகார் செய்தனர்.
    • மாணவியின் பெற்றோர் அலகாபாத் ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர்.

    கான்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பசல்கஞ்ச் பகுதியில் ஜிம் ஒன்று உள்ளது.

    இந்த ஜிம்முக்கு அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டு சென்றுள்ளார். அந்த மாணவியிடம் ஜிம் பயிற்சியாளரான அர்ஜுன் சிங் என்பவர் நெருங்கி பழகி உள்ளார்.

    அப்போது மாணவியிடம் தவறான நோக்கத்தில் பழகிய அர்ஜுன் சிங் மாணவியின் செல்போன் நம்பரை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

    அப்போது மாணவி செல்போன் நம்பரை கொடுக்க மறுத்துள்ளார். ஆனாலும் ஜிம் உரிமையாளர் மூலம் மாணவியின் செல்போன் நம்பரை வாங்கிய பயிற்சியாளர் அர்ஜுன் சிங் மாணவிக்கு அடிக்கடி செல்போனில் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஒரு கட்டத்தில் அர்ஜுன் சிங் ஜிம்மில் வைத்து மாணவிக்கு போதை மருந்தை கொடுத்து அவரை போதைக்கு அடிமையாக்கி உள்ளார். பின்னர் அடிக்கடி போதை ஊசி செலுத்தி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்ததோடு அதனை வீடியோ எடுத்துள்ளார்.

    மேலும் வீடியோவை காட்டி மிரட்டி மாணவியை தனது வீட்டுக்கு வரவழைத்து அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் கடந்த ஆண்டு போலீசில் புகார் செய்தனர். ஆனாலும் பயிற்சியாளர் அர்ஜுன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் அலகாபாத் ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 ஆண்டுகளுக்கு பிறகு பயிற்சியாளரை கைது செய்துள்ளனர்.

    • தர்மேந்திர சிங் என்ற இளைஞர் குடிக்க தண்ணீர் கேட்டபோது, போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்துள்ளனர்.
    • இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட தர்மேந்திர சிங் என்ற இளைஞர் குடிக்க தண்ணீர் கேட்டபோது, போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்ததால் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தர்மேந்திர சிங்கின் சகோதரர், "அக்டோபர் 14 அன்று 2 தரப்பினர் சண்டையிட்டு கொண்டிருந்தனர். அந்த சண்டையை தர்மேந்திர சிங் தடுக்க சென்றார். ஆனால் போலீசார் தர்மேந்திர சிங்கை கைது செய்தனர். போலீஸ் லாக்-அப்பில் தர்மேந்திரா தண்ணீர் கேட்டபோது, போதையில் இருந்த போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்துள்ளனர். இதனால் எனது சகோதரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆசிட் குடிக்க வைப்பதற்கு முன்பு தர்மேந்திர சிங்கை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

    லக்னோவில் போலீஸ் காவலில் மோகித் பாண்டே என்ற நபர் உயிரிழந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் தாக்கியதில் பல வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர்.
    • போலீசார் தாக்கியதற்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கூடியிருந்த வழக்கறிஞர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களை போலீசார் தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    வழக்கறிஞர்களை எதற்காக போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர் என்பதற்கான முழு விவரங்கள் தெரியவில்லை.

    முதற்கட்ட தகவலின்படி ஜாமின் மனு தொடர்பாக நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்றத்திற்குள் கூடியுள்ளனர். இதனால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீதிபதி போலீசாரை அழைத்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர் என்று சொல்லப்படுகிறது.

    போலீசார் தாக்கியதில் பல வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர். போலீசார் தாக்கியதற்கு எதிராக வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • வளர்ச்சியை பிடிக்காமல் சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
    • அபினவ் அரோரா பக்தியை தவிர வேறு எதுவும் செய்ய வில்லை.

    மதுரா:

    உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் அபினவ் அரோரா (வயது10). ஆன்மீக சொற்பொழிவில் மிகவும் பிரபலமானவர். 3 வயதில் இருந்தே ஆன்மீக சொற்பொழிவில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    சமூக வலைதளங்களில் அபினவ் அரோராவின் ஆன்மீக சொற்பொழிவு பிரபலமாக பரவி வருகிறது.


    இந்த நிலையில் அவருக்கு செல்போனில் கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மிரட்டல் குறித்து அவரது தாயார் ஜோதி அரோரா கூறியிருப்பதாவது:-

    லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து அபினவ் அரோராவுக்கு மிரட்டல் வந்துள்ளது. அபினவ் அரோரா பக்தியை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

    சமூக வலைதளங்களில் அவரது ஆன்மீக சொற்பொழிவு பிரபலமாகி வருகிறது. அவரது வளர்ச்சியை பிடிக்காமல் சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    பிரபல ஆன்மீக தலைவர் சுவாமி ராம பத்ராச்சார்யாவுடன் அபினவ் அரோரா பக்தி பாடல்களை பாடுவது மற்றும் நடனம் ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது

    இந்த நிலையில் அவருக்கு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×