என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இந்த முறை தனியார் பேருந்துகளில் வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது.
மதுரை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நாளை (12-ந் தேதி) தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது. காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறவுள்ள இந்த தேர்வில் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். இதையொட்டி தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றன. இந்த முறை வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.
முன்னதாக அதிகாரிகள் தனியார் பஸ்சின் கதவுகளுக்கு சீல் வைத்த சம்பவம் விநோதமாக இருந்தது. வழக்கமாக அரசு தேர்வின்போது வினாத்தாள்கள் கண்டெய்னர் போன்ற மூடப்பட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்படும். ஆனால் இந்த முறை தனியார் பேருந்துகளில் வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வின்போது வாகனங்களில் பணியில் இருந்த காவல்துறையினர் மூலமாக வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனியார் பஸ்களின் கதவு மற்றும் அவசர வழி கதவுகளுக்கு ஏ4 பேப்பர் சீட் ஒட்டி சீல்வைத்து பாதுகாப்பு என கூறி வினாத்தாள்கள் அனுப்பி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- கனிம வளம் நமது நாட்டின் சொத்து அதை ஒருபோதும் திருடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
- சட்ட விரோத குவாரி முன்பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக குவாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை. ஆனால் பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் மற்றும் கிராவல் மணல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் அள்ளப்பட்டு வருகிறது.
இதனால் இந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் அரசின் முறையான அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவதால் அரசிற்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான சட்டவிரோதமாக கனிமவள குவாரிகளை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக திடீர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சட்ட விரோத மணல் குவாரிகளை மூடி சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்து வழக்கை கடந்த வாரம் விசாரணை செய்த நீதிபதிகள் சட்டவிரோத குவாரிகளை உடனடியாக மூடி 'சீல்' வைக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், குவாரி நடத்தியவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், கனிம வளம் நமது நாட்டின் சொத்து அதை ஒருபோதும் திருடுவதற்கு அனுமதிக்கக்கூடாது, அதிகாரிகள் அதற்கு துணை போகக் கூடாது என கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பந்தப் பட்ட குவாரிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும், சட்டவிரோத குவாரிகள் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்ட விரோத குவாரி முன்பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக குவாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது என்பதற்கான புகைப்படங்களை நீதிபதியிடம் தாக்கல் செய்தார். அப்போது கோபமடைந்த நீதிபதிகள், இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா அல்லது வேறுவிதமாக நடக்கின்றனவா? என கேள்வி எழுப்பினார்கள்.
அதிகாரிகளின் இவ்வாறான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்பதால், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி, உண்மைகளை விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனவே வரும் 16.07.2025 அன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
- சிறுவனால் மேலே வரமுடியாமல் உள்ளே மூழ்கினான்.
- வீட்டு வேலைகளை முடித்து விட்டு தனது குழந்தையை காணவில்லை என காயத்ரி தேடினார்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அய்யனார் நகர் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 28). இவரது மனைவி காயத்ரி (25). இவர்கள் 2 பேரும் பாத்திர வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சாரா ஸ்ரீ (8) என்ற மகளும், துரைப்பாண்டி (2) என்ற மகனும் உள்ளனர்.
இன்று முனியப்பன் வியாபாரத்திற்காக வெளியில் சென்று விட்டார். வீட்டில் காயத்திரி தனது குழந்தைகளுடன் இருந்து வந்தார். அப்பொழுது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் துரைப்பாண்டி அங்கிருந்த தண்ணீர் நிரப்பி இருந்த அண்டாவிற்குள் தவறி தலைகீழாக விழுந்தான். இதனால் சிறுவனால் மேலே வரமுடியாமல் உள்ளே மூழ்கினான்.
வீட்டு வேலைகளை முடித்து விட்டு தனது குழந்தையை காணவில்லை என காயத்ரி தேடினார். அருகில் உள்ள உறவினர்கள் வீடு உள்பட அனைத்து இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் எதேச்சையாக அண்டாவில் பார்த்த பொழுது கால் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் சிறுவன் இருந்துள்ளான். உடனடியாக அவனை மீட்ட உறவினர்கள் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு சிறுவனின் தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
- கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 135 கஞ்சா வழக்குகளில் 337 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- 337 கிலோ கஞ்சாவை கோவை மதுக்கரை செட்டிப்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் எந்திரத்தில் தீயிட்டு அழித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 135 கஞ்சா வழக்குகளில் 337 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1கோடியாகும்.
சென்னை ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி, கோவை இன்றியமையா பண்டக விதிக்கு உட்பட்ட தனிச்சிறப்பு கோர்ட்டு நீதிபதி உத்தரவுப்படி திருப்பூர் மாநகர கஞ்சா அழிப்பு குழுவினர் நேற்று 337 கிலோ கஞ்சாவை கோவை மதுக்கரை செட்டிப்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் எந்திரத்தில் தீயிட்டு அழித்தனர்.
திருப்பூர் கஞ்சா அழிப்பு குழுவின் தலைவரும், மாநகரபோலீஸ் கமிஷனருமான ராஜேந்திரன் மேற்பார்வையில் மாஜிஸ்திரேட்டுகள் செந்தில்ராஜா, லோகநாதன், கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் கஞ்சா அழிக்கப்பட்டது.
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 198 வாகனங்களின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பள்ளிக்கல்வித் துறை சார்பில் “உலகப் பொதுமறை திருக்குறள்” என்னும் நூலினை வெளியிட்டார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 கோவில்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான திருப்பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 17 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 198 வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், பள்ளிக்கல்வித் துறை சார்பில் "உலகப் பொதுமறை திருக்குறள்" என்னும் நூலினை வெளியிட்டார். இந்நூலினை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ், சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையுடன் சேர்ந்து கூட்டு வெளியீடாக வெளியிடுகிறது.
தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற 2 கோடியே 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் முனைவர் ம. இராசேந்திரனிடம் வழங்கினார்.
- ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
- கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் விருத்தாசலம் பொன்னேரி பைபாஸ் சாலையில் உள்ள மகாலில் நடைபெற்றது.
விருத்தாசலம்:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் கும்பகோணத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று விருத்தாசலம் பொன்னேரி பைபாஸ் சாலையில் உள்ள திருமண மகாலில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்,
என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர்.
அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அது லண்டனில் இருந்து வந்தது என்று அவர் குற்றம்சாட்டினார்.
- மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும்.
- வைகோ கோபப்படுவதால் அவர் இழந்தது தான் அதிகம். கோபப்பட்டாலும் அவர் நல்ல மனிதர்.
கே.கே.நகர்:
ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி யாக ம.தி.மு.க. விளங்குகிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் செப்டம்பரில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது தவறானது என்பதை வைகோ வெளிப்படையாக கூறி உள்ளார். அதற்காக அ.தி.மு.க. தீண்டகூடாத கட்சி அல்ல. எம்.ஜி.ஆரையோ ஜெயலலிதாவையோ அவர் இழிவுபடுத்தி எதுவும் கருத்து கூறவில்லை.
மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும்.
ம.தி.மு.க. வின் தொண்டர்களையோ நிர்வாகிகளையோ தி.மு.க.வில் சேர்க்கவில்லை.
ம.தி.மு.க.வில் இன்னும் சிலர் ஒதுங்கி இருக்கிறார்கள். தலைமைக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறு சில இயக்கங்களில் இணையலாம். அது அவர்களின் உரிமை.
கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைவர் தான் முடிவு எடுப்பார்.
ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் காலி நாற்காலிகளை படம் எடுத்த பத்திரிக்கையாளர்களை அடிக்க வேண்டும் என வைகோ கூறவில்லை.
வைகோ கோபப்படுவதால் அவர் இழந்தது தான் அதிகம். கோபப்பட்டாலும் அவர் நல்ல மனிதர்.
பொடா சட்டம் வந்த பொழுது வைகோ அதை ஏற்றுக்கொள்ள கூடாது என பாராளுமன்றத்தில் பேசினார். பொடாவில் பத்திரிக்கை துறையினரையும் கைது செய்யலாம் என இருந்தது அதை மட்டுமாவது நீக்க வேண்டும் என பேசியவர் வைகோ.
கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என ம.தி.மு.க. எங்கும் கேட்கவில்லை, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி தலைமையுடன் பேசி தேர்தல் நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஒவ்வொரு துறை வாரியாக தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
- ஒவ்வொரு துறைகளிலும் இதுவரை முடிக்கப்பட்டுள்ள பணிகள் எவ்வளவு? எத்தனை பணிகள் செயல்பாட்டில் உள்ளன?
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அவ்வப்போது அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், ஆய்வு மேற்கொள்கிறார்.
அது தவிர சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எத்தனை செயலாக்கத்திற்கு வந்திருக்கிறது. அதில் எத்தனை திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்பது போன்றும் ஒவ்வொரு துறை வாரியாக தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று சட்டத்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை நிதித்துறை உள்ளிட்ட 6 அரசு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஒவ்வொரு துறைகளிலும் இதுவரை முடிக்கப்பட்டுள்ள பணிகள் எவ்வளவு? எத்தனை பணிகள் செயல்பாட்டில் உள்ளன? நிலுவையில் உள்ள பணிகள் எவ்வளவு? கைவிடப்பட்ட பணிகள் ஏதும் உள்ளதா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
- தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் 13-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை முதல் 14-ந்தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று, தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர், சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர்!
சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், பிரதமர் இந்திரா காந்தியை பாராட்டிய 'குன்றக்குடிக் கிராமத் திட்டம்' கொண்டு வந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர்.
பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனித நேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்.
இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த தமிழுணர்வாளர், முத்தமிழறிஞர் கலைஞரின் விருப்பத்தின் வழியே தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, மேலவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகப் பேசிய பெருந்தகையாளர்.
தமிழ்ச்சமூகத்தின் சமூகவியல் உள்ளடக்கிய இறையியல் அடையாளமாக விளங்கும் திருக்கைலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 45-வது மகாசந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வ சிகாமணி அருணாசல தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் எனும் குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க!
அவரது வழியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்திய விடுதலைப் போரில் வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பங்களிப்பும், தியாகமும் ஈடு இணையற்றது.
- மாவீரன் அழகு முத்துக்கோனின் வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்திய விடுதலைக்காக அவர் நடத்திய போர்களையும், அவர் செய்த தியாகங்களையும் நினைவுகூர்கிறேன். வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.
இந்திய விடுதலைப் போரில் வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பங்களிப்பும், தியாகமும் ஈடு இணையற்றது ஆகும். ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் தோல்வியடைந்து விட்ட சூழலில், மன்னிப்புக் கேட்டு வரி செலுத்த ஒப்புக்கொண்டால், உயிரையும், நிலத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்து, பீரங்கியின் வாயில் வைத்து சுடப்படும் தண்டனையை மகிழ்வுடன் ஏற்ற மாவீரன் அவர். அவரின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் போற்றுவோம். அவரது வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார்.
- 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில், என்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்'. இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். அவருடன் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்துள்ளார்.
வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார்.
அதில், வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில், என்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த படத்தில் இருந்து 'ராத்திரி சிவராத்திரி' என்ற பாடலை நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.






