என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நகைக்காக அஸ்வினியை கொலை செய்த விதமும் மிகக் கொடூரமானது.
- ஆதாயக் கொலைகளைப் போலவே மதுபோதையால் நிகழக் கூடிய கொலைகளும் ஆபத்தானது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம், வலசையூர் அருகே அரூரில் வசிக்கும் பூமாலை-சின்னபாப்பா தம்பதியை கொடூரமாக தாக்கி, அவர்களை கட்டிப்போட்டு விட்டு நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கணவர் பூமாலையும், மனைவி சின்னப்பாப்பாவும், இணைந்து விவசாயம் பார்ப்பதோடு, செங்கல் சூளையிலும் வேலை பார்த்து சொந்த உழைப்பில்; பொருளீட்டி வாழ்கிற அருமையான உழைப்பாளிகள்.
ஒரு மகனை பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க அனுப்பி வைத்திருக்கிறார்கள், இன்னொரு மகன் தமிழ்நாட்டின் திருச்செங்கோட்டில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார். உழைப்பின் உன்னதத்தை பறைசாற்றக்கூடிய உதாரண தம்பதியராய் வாழும் அவர்களின் சேமிப்பு நகையையும், பணத்தையும்தான் கொள்ளையடித்து போயிருக்கிறது கொள்ளைக் கூட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரத்திலும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. எட்டுபவுன் நகைக்காக இளம்பெண் அஸ்வினியை ஜூலை 24-ந் தேதி (வியாழக்கிழமை) கொடூரமாக தாக்கிவிட்டு நகையை கொள்ளையடித்துப் போயிருக்கிறார்கள்.
26-ந்தேதி வரை மருத்துவ சிகிச்சையில் இருந்த அஸ்வினி, 27-ந்தேதி இறந்து போயிருக்கிறார். நகைக்காக அஸ்வினியை கொலை செய்த விதமும் மிகக் கொடூரமானது என்பதை உறவினர்கள் விவரித்திருக்கிறார்கள்.
ஆதாயக் கொலையும், ஆதாயக் கொள்ளையுமாக அடுத்தடுத்த நாள்களில் இருந்தது போலவே மதுபோதை மோதலிலும் அடுத்தடுத்த நாள்களில் தமிழ்நாட்டில் கொலைகள் நடந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு. சென்னை குரோம்பேட்டையில் டாஸ்மாக் மதுக்கூடத்திலேயே மதுபோதையில் தகராறு ஏற்பட்டு பரந்தாமன் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்திருக்கிறது. சென்னை ஐ.சி.எப். பகுதியில் நண்பர்களோடு மது அருந்திய விஜயகுமார் என்பவர் அதே நண்பர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
ஆதாயத்துக்காக ஒரு கொலை, ஒரு கொலை முயற்சியும்; மதுபோதையில் இரண்டு கொலைகளுமாக அடுத்தடுத்த நாள்களில் நடந்திருக்கும் இப்படியான சமூக சீர்கேட்டை சாதாரணமாக கடந்துபோக நினைப்பது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல. ஆதாயக் கொலைகளைப் போலவே மதுபோதையால் நிகழக் கூடிய கொலைகளும் ஆபத்தானது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
- வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்களாக வெளியில் எங்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்லவில்லை.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தலைமைச் செயலகம் வருகிறார். பல்வேறு திட்டப் பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 21-ந்தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். லேசான தலைசுற்றல் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனித்தார். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். மாவட்ட கலெக்டர்களிடமும் கேட்டறிந்தார்.
அரசுப் பணிகளை மேற்கொண்ட அவர் கட்சி பணிகளையும் கவனித்தார். தி.மு.க. மண்டல பொறுப்பாளர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்களாக வெளியில் எங்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தலைமைச் செயலகம் வருகிறார். முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை காணொலியில் திறந்து வைக்கிறார்.
கடந்த 10 நாட்களுக்கு பின்பு அவர் தலைமைச் செயலகம் வந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.
- நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன்.
- எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது !
பாளையங்கோட்டையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவ கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கவினின் காதலியின் சகோதரனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கைதான சுர்ஜித்தின் பெற்றோரும், சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி கவினின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கவினும், அந்த பெண்ணும் இருக்கும் புகைப்படத்தை அவரது உறவினர்கள் வெளியிட்டு, இதை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கௌசல்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவினின் காதலிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தோழி சுபாஷிணிக்கு,
வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன். முதலில் எனது வேண்டுகோள்: என்ன ஆனாலும் நீங்கள் கவின் பக்கம்தான் நிற்க வேண்டும்!
இங்கு கொலையுண்டு கிடப்பது நீங்கள் நேசித்த, கரம் பிடித்த, கை கோர்த்து நடந்த காதலன்! நீங்கள் அழைத்ததற்காகத்தான் கவின் உங்கள் தம்பியிடம் பேச சென்றிருப்பான்! கவினுக்கான நீதியின் பக்கம் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும்! அப்படிச் செய்தால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை என்னால் புரிந்து கொள்ள இயலும்.
நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன். ஒவ்வொரு பெரியாரிய அம்பேத்கரியத், மார்க்சிய தோழர்களும் அவர்களின் பிள்ளையைப் போல் என்னை அரவணைத்துக் கொண்டனர். இன்று வரை (10ஆண்டு ஆகப் போகிறது) சாதியைத் தூக்கிப் பிடித்த குடும்பத்துடன் எந்த உறவும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறது. அதற்குத் தோழர்கள் என்னை தங்கள் மகளாக பார்த்து கொண்டு என் சுயமரியாதையுடன் சொந்த காலில் நிற்க இன்று வரை உடன் இருக்கின்றனர்!
எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது ! காரணம் சங்கரின் வழக்கில் எந்த இடத்திலும் நான் பொய் சொல்லவில்லை! சமரசம் இப்போது வரை செய்து கொள்ளவில்லை ! இனியும் செய்து கொள்ள மாட்டேன். நான் தொடக்கத்தில் சந்தித்த நெருக்கடிகள் பெரிது. என்னைப் போல் உன்னையும் சாதி வெறியர்கள் பற்றிக் கொள்வார்கள்! எவராக இருந்தாலும் என்ன அழுத்தம் தரப்பட்டாலும் உன் கவினுக்காகத் துணிவோடு நில்! உன் பக்கம் நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்! நடந்ததை அப்படியே சட்டத்தின் முன் சொல்ல வேண்டும்! நீ கவினின் காதலுக்கு நேர்மையாக இருப்பாய் என்பதை உணர்வேன். கவினின் உயிருக்கு விடை எடுத்தாக வேண்டும். கவினுக்காக மட்டுமல்ல கவின்களுக்காகவும் உன்னிடம் இறைஞ்சுகிறேன். தோழி! எல்லாவற்றையும் தாண்டி நான் இருக்கிறேன். கவினின் நீதிக்கு நானும் உன்னோடு இணைந்து கொள்கிறேன். வா ! எதற்கும் அஞ்சாதே! உன்னைத் தாங்கிக் கொள்ள நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்!
அன்புடன்,
கெளசல்யா
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்க தடை விதித்து பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சேலம்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 4-முறை நிரம்பியது. இதையடுத்து அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் கடந்த 27-ந் தேதி மாலை அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் அது நேற்று முன்தினம் மாலை முதல் 1.10 லட்சம் கனஅடியாக அதிகரித்து காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்க தடை விதித்து பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கடந்த 27-ந் தேதி முதல் இன்று காலை 9 மணி வரை 1 லட்சம் கனஅடியை தாண்டி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் காலை 9 மணி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக குறைந்தது. பின்னர் மதியம் 1 மணியளவில் நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. ஆனாலும் தண்ணீர் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி சீறிப்பாய்ந்து செல்கிறது.
- குற்றவாளியிடம் 18 மணி நேரத்திற்கு மேலாக கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
- கைதான வாலிபர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச்சேர்ந்த 8 வயது பள்ளி சிறுமி, கடநத 12-ஆம் தேதி வடமாநில வாலிபர் ஒருவரால் பாலியியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து 20-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். அந்த வடமாநில வாலிபர் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி மற்றும் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டு தேடிவந்தனர். அந்த நபர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அசாம் மாநிலத்தை சேர்ந்த கமல் பகதூர் பிஸ்வாகர்மா என்கிற ராஜீ பிஸ்வாகர்மா (வயது35) என்ற வாலிபரை கடந்த 25-ந்தேதி ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்று 14 நாட்களுக்கு பிறகு பிடிபட்ட குற்றவாளியிடம் 18 மணி நேரத்திற்கு மேலாக கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 26-ந்தேதி- திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் போலீசார் ராஜீ பிஸ்வாகர்மாவை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, 15-நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர் ராஜீ பிஸ்வாகர்மாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஆரம்பாக்கம் போலீசார் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி உமாமகேஸ்வரியிடம் மனு தாக்கல் செய்த நிலையில், ஆகஸ்ட் 2-ந்தேதி வரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இந்நிலையில் போலீஸ் காவலில் உள்ள ராஜீ பிஸ்வாகர்மாவை சம்பவ இடமான மாந்தோப்பிற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
- காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
- அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்:
கர்நாடக மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் 2 அணைகளின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த 27-ந்தேதி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டதால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 88 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகள், சினிபால்ஸ் உள்பட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல், சத்திரம், ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார் கொட்டாய் மற்றும் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இன்று 4-வது நாளாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடலூர் புதுநகர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பில்லுக்கடை சந்து தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை குப்பை வாகனத்தை தூய்மை பணியாளர்கள் எடுத்துச்செல்ல முயன்றனர்.
அப்போது குப்பை எடுக்கும் வாகனத்தில் கட்டு கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் அதிக அளவில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தேர்தல் வாக்கு பதிவின் போது வைக்கப்படும் மை, சீல் ஆகியவையும் கிடந்தது.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் தாசில்தார் மகேஷ் குப்பை அள்ளும் வாகனத்தில் இருந்த வாக்காளர் அடையாள அட்டைகளை சோதனை செய்த போது அனைத்து வாக்காளர் அடையாள அட்டைகளும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் தாசில்தார் இதனை கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் குப்பை வாகனத்தில் இருந்த வயர்களும் அறுக்கப்பட்டு இருந்தன. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.
வார தொடக்கத்தில் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையான நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,150-க்கும், ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.9,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 127 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200
28-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280
27-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280
26-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280
25-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-07-2025- ஒரு கிராம் ரூ.126
28-07-2025- ஒரு கிராம் ரூ.126
27-07-2025- ஒரு கிராம் ரூ.126
26-07-2025- ஒரு கிராம் ரூ.126
25-07-2025- ஒரு கிராம் ரூ.128
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (31.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
வேளச்சேரி: வேளச்சேரி மெயின் ரோடு, மேட்டூ தெரு, ஓரண்டி அம்மன் கோவில் தெரு, ஜெகன்நாதபுரம், ராம்ஸ் மற்றும் சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்புகள்.
அடையாறு: பெசன்ட் நகர், ருக்மணி ரோடு, கடற்கரை ரோடு, அருண்டேல் கடற்கரை சாலை, 7வது அவென்யூ, 30வது குறுக்கு சாலை, எம்ஜிஆர் சாலை, டைகர் வரதாச்சாரி சாலை, காந்தி நகர், கிரசென்ட் அவென்யூ சாலை, கிரசென்ட் பார்க் 1வது மற்றும் 2வது சாலை, காந்தி நகர் 3வது குறுக்குத் தெரு மற்றும் 4வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் மாளவியா அவென்யூ, சுப்பு தெரு, எம்ஜி ரோடு, மருதீஸ்வரர் நகர், எல்பி ரோடு, கேனல் பேங்க் ரோடு, கேபி நகர் 1 முதல் 3-வது மெயின் சாலைகள், கேபி நகர் 2 மற்றும் 3-வது குறுக்கு தெரு, பிவி நகர் 1 மற்றும் 2-வது தெரு, அண்ணா அவென்யூ பகுதி, கோவிந்தராஜபுரம், சர்தார்பட்டேஸ் ரோடு, பக்தவத்சலம் 1-வது தெரு.
பல்லாவரம்: திருசூலம் பெரியார் நகர், அம்மன் நகர், அருள்மலை சாவடி, அன்னை அஞ்சுகம், சக்தி நகர் மற்றும் பல்லாவரம் கிழக்கு பகுதி மற்றும் திருசூலம், வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாசியம் நகர், மாணிக்கம் நகர், பிபிஆர் நகர்.
வியாசர்பாடி: எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், காந்தி நகர், புதுநகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்கெட், சென்ட்ரல் குறுக்கு தெரு, ஏபிசி கல்யாணபுரம், சத்யம்மூர்-25வது தெரு கார்டன், பள்ளத் தெரு 1-3வது தெரு, உதய சூர்யன் நகர், எஸ்.ஏ காலனி மற்றும் சர்மா நகர்.
ஆவடி : பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், தந்துறை, கண்ணப்பாளையம், கோபாலபுரம், விஜிவி நகர் மற்றும் விஜிஎன் நகரம்
தாம்பரம்: ஏஎல்எஸ் நகர், ரமணா நகர், ஆதம்பாக்கம் மெயின் ரோடு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட வீதிகள், மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர், அகரம் மெயின் ரோடு, வேதாச்சலம் நகர், எஸ்ஆர் காலனி, ஐஏஎப் சாலை, ரிக்கி கார்டன், ஹரிணி அபார்ட்மென்ட், சுமேரு சிட்டி, ரங்கா நகர், சாரங்காசி நகர், திருவண்ணாமலை நகர், திரு. காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, பஞ்சாயத்து போர்டு ரோடு, சக்ரா அவென்யூ.
- ஜெயலலிதா இருக்கும் வரை ஒன்றிய அரசின் ‘உதய் மின் திட்டத்தில்’ அவர் கையெழுத்து போடவில்லை.
- திரைக்கதை எழுதி நாடகம் போட்டவர்களே உங்கள் தரம் தாழ்ந்த எண்ணங்களை உலகிற்கு பறைசாற்றாதீர்கள் !
சென்னை :
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு சில நாட்களுக்கு முன்பு "முதலமைச்சர் அவர்கள் பூரண நலம் பெற வேண்டும்" என "சுந்தரா டிராவல்ஸ்" யாத்திரையில் சொன்ன அதே எதிர்கட்சி தலைவரின் நாக்குதான் இப்போது 'ஆஸ்பத்திரியில் டேபிள் மீட்டிங்' என நர்த்தனம் ஆடுகிறது. அது சரி பொதுவாக எல்லோரும் டேபிள் முன்பு அமர்ந்துதான் மீட்டிங் போடுவார்கள் என்பது தெரியாமல்தானே பழனிசாமி பாவம் டேபிளுக்கு அடியில் மீட்டிங் போட்டார் !
அரசு அலுவல்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறுகிறதா என அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது, "உங்களுடன் ஸ்டாலின்" எனும் மகத்தான திட்டத்திற்கான முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா என தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்பது, காணொளிக் காட்சி வாயிலாக கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவது. பொதுமக்களுடன் வீடியோ காலில் பேசி முகாமின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி மக்களுக்கு சென்றடைகின்றனவா என்று நேரடியாக பயனாளிகளிடம் கேட்டறிதல், மாண்புமிகு பிரதமர் மோடியின் தமிழ்நாட்டுப் பயணத்தின் போது மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாம் பெற வேண்டிய திட்டங்களுக்காக கடிதம் தயார் செய்து அனுப்பி வைத்தது என மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோதும் தொடர்ந்து தடையின்றி தனது மக்கள் பணியை செய்தார் திராவிட நாயகன் நமது முதலமைச்சர் அவர்கள் !
ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது துள்ளத் துடிக்கத் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைப் பலி வாங்கிவிட்டு, "டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்" எனச் சொன்னவர் தான் இந்த எதிர்க்கட்சித் தலைவர்.
எந்த காலத்திலும் உருப்படியாக முதலமைச்சர் பணிகளையே செய்யாத எதிர்க்கட்சித் தலைவருக்கு இவையெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். "அம்மா இட்லி சாப்பிட்டார்; செவிலியர்களுடன் பந்து விளையாடினார்; விரைவில் வீடு திரும்புவார்; டிவி பார்த்தார்; கிச்சடி சாப்பிட்டார்; நர்ஸ்களுக்குப் பரிசு கொடுத்தார்; டாக்டர்களுக்கே அறிவுரை கூறினார்" என்றெல்லாம் திரைக்கதை எழுதி நாடகம் போட்டவர்களே உங்கள் தரம் தாழ்ந்த எண்ணங்களை உலகிற்கு பறைசாற்றாதீர்கள் !
அம்மையார் ஜெயலலிதா இருக்கும் வரை ஒன்றிய அரசின் 'உதய் மின் திட்டத்தில்' அவர் கையெழுத்து போடவில்லை. அவர் மறைந்த பிறகு ஓடோடிப்போய் கையெழுத்து போட்டு தமிழ்நாட்டை வஞ்சித்தது சந்துகளில் இருந்து குரல் கொடுக்கும் ஷாக்க்ஷாத் பழனிசாமிதான் என்பது ஊருக்கே தெரிந்தபோதும் இன்று அவரே "மின்கட்டணம் உயர்ந்துவிட்டது" என நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார்.
இப்படி, தானே ஏற்றிய மின்கட்டண உயர்வைக் குறித்து தானே பேசிவரும் பழனிசாமி, ஒன்றிய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்? 2014ம் ஆண்டு ரூ.414-ஆக இருந்த சமையல் காஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.868.50-ஆக உயர்ந்து வளர்ந்து நிற்பது எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியாதா? அல்லது எப்போதும் போல நடிக்கிறாரா ?
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- வாழ்த்தியோர் அனைவருமே, பா.ம.க. நிறுவனர் - தலைவர் என்றே குறிப்பிட்டு வாழ்த்தியிருந்ததை காணும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தோம்.
- ராமதாஸ்தான் இயக்கத்தின் நிறுவனர் - தலைவர் என்பதை விலகி நிற்கும் ஓரிருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
பா.ம.க.வில், டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இதை சுட்டிக்காட்டியும், டாக்டர் ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பா.ம.க. நிறுவனர் - தலைவர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் - சுகாதாரத்துறை மந்திரி ஜெ.பி. நட்டா, நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்தியோர் அனைவருமே, பா.ம.க. நிறுவனர் - தலைவர் என்றே 'டாக்டர் ராமதாசை' குறிப்பிட்டு வாழ்த்தியிருந்ததை காணும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தோம்.
டாக்டர் ராமதாஸ்தான் இயக்கத்தின் நிறுவனர் - தலைவர் என்பதை விலகி நிற்கும் ஓரிருவரும் புரிந்து கொள்ள இந்த பிறந்தநாள் வாழ்த்தளிப்பு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்று காலை 8 மணி முதல் நாளை மறுநாள் இரவு 10 மணி வரை 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.
- பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை:
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் இன்று காலை 8 மணி முதல் நாளை மறுநாள் இரவு 10 மணி வரை 3 நாட்கள் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.






