என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவு.
    • வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    இந்நிலையில், வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 23.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், கள்ளக்குறிச்சியில் 29.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    காஞ்சிபுரத்தில் 24.89 சதவீதம், திருச்சியில் 22.77 சதவீதம், விழுப்புரத்தில் 24.53 சதவீதம், மதுரையில் 22.35 சதவீதம், கடலூரில் 24.72 சதவீதமும், சேலத்தில் 28.57 சதவீதமும், திண்டுக்கல்லில் 25.85 சதவீதமும், நீலகிரியில் 21.69 சதவீதமும், தென்காசியில் 25.45 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    விருதுநகரில் 23.11 சதவீதம், தேனியில் 25.75 சதவீதம், மயிலாடுதுறையில் 23.01 சதவீதம், வேலூரில் 23.46 சதவீதம், ஈரோடில் 28.29 சதவீதம், ராமநாதபுரத்தில் 25.92 சதவீதமும், தஞ்சையில் 25.19 சதவீதமும், கிருஷ்ணகிரியில் 23.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • அங்குரார்ப்பணம் சேனை முதன்மையாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் வருகிற 23-ந்தேதி முதல் மே மாதம் 2-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

    10 நாட்கள் இவ்விழாவை நடத்த கோவில் அறங்காவலர் குழு ஏற்பாடு செய்து உள்ளது. 22-ந்தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை துலா லக்னம் அங்குரார்ப்பணம் சேனை முதன்மையாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 23-ந்தேதி காலை 8 மணி முதல் 8.45 மணிக்குள் சுவாமிக்கு ரிஷப லக்னத்தில் துவஜா ரோகனம் நடக்கிறது.

    அதிகாலை 5.30 மணிக்கு தர்மாதி பீடம் இரவு 7.45 மணிக்கு புன்னைமர வாகன ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந் தேதி காலை 6.15 மணிக்கு சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம் இரவு 7.45 மணிக்கு சிம்ம வாகன ஊர்வலம் நடக்கிறது.

    25-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு சாமி கருட சேவை-கோபுர வாசல் தரிசனமும் பகல் 12 மணிக்கு ஏகாந்த சேவையும் இரவு 7.45 மணிக்கு அம்ச வாகன ஊர்வலம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை 6.15 மணிக்கு சூரிய பிரவை வாகனம், இரவு 8 மணிக்கு சந்திர பிரவை வாகனம்.

    27-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு ஊர்வலம், இரவு 8.15 மணிக்கு அனுமந்த வாகனம் 28-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம், காலை 6.15 மணிக்கு ஆனந்த விமானம் இரவு 8 மணிக்கு யானை வாகன ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது.

    29-ந் தேதி அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணிக்கு கும்ப லக்னத்தில் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் இரவு 9 மணிக்கு தோட்டத்திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    30-ந் தேதி காலை 6.15 மணிக்கு பல்லக்கு வெண்ணெய் தாழி, கண்ணன் திருக்கோலம், இரவு 8.15 மணிக்கு குதிரை வாகன ஊர்வலம் நடக்கிறது.

    மே 1-ந் தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு- தீர்த்தவாரி, இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு 10-ம் நாள் மே 2-ம் தேதி சப்தவர்ணம்- சிறிய திருத்தேர் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    3-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது. இது தவிர தினமும் மாலை 5.30 மணிக்கு பக்தி உலாத்தல் நடக்கிறது. மே 1-ந்தேதி சாமி புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளின் அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்தசாரதி கோவிலின் துணை ஆணையர் நித்யா செய்து வருகிறார்.

    • டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் தலை தாழ்த்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
    • பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

    அவரது 11-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.


    டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் தலை தாழ்த்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன், சம்யுக்தா ஆதித்தன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, மாலைமலர், தந்தி டிவி., டி.டி. நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.


    தெலுங்கானா, புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னரும், தென்சென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான டாக்டர் தமிழிசை, அவரது கணவர் சவுந்தரராஜனுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-


    தி.மு.க. வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாவட்ட துணை அமைப்பாளர் கோ.சு.கருணாநிதி, நிர்வாகிகள் வேம்பங்குடி நடராஜன், ஆனந்தராஜ், ஏ.எஸ்.மகேந்திரன், சரவணன், தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர்.அருள்காந்த்.

    அ.தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை செயலாளர்கள் இ.சி.சேகர், கே.எஸ்.மலர்மன்னன் மற்றும் சுரேஷ், வர்த்தகர் அணி துணை செயலாளர் பெருங்குடி வேல்ஆதித்தன், வடசென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஆர்.சி.பால்கனகராஜ், பா. ஜனதா மாநில செயலாளர் சதீஷ்குமார், செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், தமிழக காங்கிரஸ் கே.கே.நகர் பகுதி தலைவர் சரவணன் பால்ராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில நிர்வாகிகள் ஆர்.எஸ்.முத்து, சென்னை நந்து, முனவர் பாஷா, தி.நகர் கோதண்டன், சைதை நாகராஜ், மாவட்ட தலைவர் சைதை மனோகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிட பொறுப்பா ளர்கள் செல்லத்துரை, இரா.செல்வம், முனியன், ராஜேந்திரன் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., துணை பொதுச் செயலாளர் காமராஜ், மாநில செயலாளர் ஊரப்பாக்கம் குட்டி, துணை செயலாளர் ஏகாம்பரம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், உயர்மட்டக்குழு உறுப்பினர் டி.உதயகுமார், சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் எம்.வைகுண்டராஜா, தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.செந்தில்குமார், தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ஆர்.பாலமுருகன், பொருளாளர் டி.ராஜ் நாடார், தென்சென்னை வடக்கு மாவட்டத் தலைவர் ராஜசுதாகர், செயலாளர் ஈகை டி.விஜயன், பொருளாளர் நடராஜன், மாவட்ட அமைப்பாளர் முருகன், வழக்கறிஞர் அருணா செல்லக்கனி, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் புரசை சி.நாகராஜ், தி.நகர் தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ. பாலமுருகன், விருகம்பாக்கம் தொகுதி தலைவர் கே.மணிராஜ், அண்ணா நகர் தொகுதி தலைவர் செல்வராஜ், தென்சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சுயம்புலிங்கம், தென் சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் உத்திர குமார், எம்.பாலகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


    இதே போன்று சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மாநில பொருளாளர் கண்ணன், வடசென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வார்டு பாஸ்கர், நாடார் பேரவை வட சென்னை மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் சாமுவேல், சமத்துவ மக்கள் கழக ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் கவுதம், ஆர்.கே.நகர் பகுதி இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், 50-வது வட்ட செயலாளர் சர்புதீன், நாடார் பேரவை ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் பாக்யராஜ், அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக பொதுச் செயலாளர் முத்து ராமன் சிங்கபெருமாள், அகில இந்திய காந்தி காமராஜர் காங்கிரஸ் மாநில தலைவர் மணியரசன், மாங்காடு பெருந்தலைவர் காமராஜ் நலச்சங்க தலைவர் ராமபாண்டி நாடார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்த்ராஜ், நிர்வாகிகள் ராம்ஜி, ஜெயக்குமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மின்னல் ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேஷ் நாடார், பொதுச்செயலாளர் வீரக்குமார், பொருளாளர் ஆடிட்டர் சிவராஜ், நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் டி.ராஜ்குமார், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம், போரூர் நாடார் சங்க செயலாளர் ஜெயக்குமார், இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன், பொருளாளர் சிவக்குமார், கவுரவ ஆலோசகர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் செல்வக்குமார், ரவிராஜன், எட்வர்ட்ராஜா, திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க சென்னை சேர்மன் வி.செல்வராஜ், இயக்குனர் அன்புசெழியன், சென்னை வாழ் சூலப்புரம் நாடார் சங்க செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் பரமசிவம், ராம கிருஷ்ணன், கேசவன், செல்லபாண்டியன், கெருகம்பாக்கம் நாடார் சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் பாலமுருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    நாடார் மகாஜன சங்க இணை செயலாளர் ஏ.வி.எஸ்.மாரிமுத்து, மண்டல தலைவர் பிரபாகரன், மாவட்ட தலைவர் தங்கம் நாடார், செயலாளர் சந்திர மோகன், பொருளாளர் தமிழ்செல்வன், அயன்புரம் நாடார் உறவின்முறை சங்க தலைவர் பிரபாகரன், பொதுச் செயலாளர் எஸ்.எம்.பாஸ்கர், தமிழ்நாடு நாடார் சங்க இளைஞரணி தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் சிவஜோதிராஜ், பொருளாளர் ராமமூர்த்தி, தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் என்ஜினீயர் விஜய குமார், பொருளாளர் மெல்வின், இணை செயலாளர் மார்க்கெட் ராஜா, துணை தலைவர் செந்தில், இ.சி.ஆர்.நாடார் சங்க தலைவர் கொட்டிவாக்கம் முருகன், நாடார் மறுமலர்ச்சி இயக்க தலைவர் பால முருகன், சென்னை வாழ் பசுவந்தனை நாடார் உறவின் சங்க தலைவர் எத்திராஜ், செயலாளர் செல்லகுமார், திருவான்மியூர் நாடார் பேரவை மத்திய மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் சுபாஷ், கே.கே.நகர் நாடார் சங்க தலைவர் நாகராஜன், ஷாம், பூந்தமல்லி ஐக்கிய நாடார் சங்க தலைவர் ஆர்.சுரேஷ், நசரத்பேட்டை நாடார் சங்க தலைவர் முருகன், பூவை ராம்ராஜ் நாடார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழ்நாடு சத்திரிய நாடார் சங்க நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால், பொதுச் செயலாளர் மாரித் தங்கம், நிர்வாகிகள் காமராஜ், மாரிமுத்து, நாகராஜன், நடராஜன், ஜெகநாதன், பெரம்பூர் வட்டார நாடார் சங்க தலைவர் த.பத்மநாபன், துணைத் தலைவர் கே.மனோகரன், செயலாளர் செல்வம், பொருளாளர் தர்மேந்திரன், பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க தலைவர் டி.பி.செல்வராஜ், செயலாளர் அருணாசல மூர்த்தி, பொருளாளர் ஜெயராஜ், ஆலோசகர்கள் வெள்ளைசாமி, ஆசீர்வாதம் தெட்சணமாற ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    சென்னை வாழ் போடுபட்டி நாடார் உறவின்முறை தலைவர் ஏ.எம்.சின்னா நாடார், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பால்ராஜ், பொன்னுசாமி, சென்னை வாழ் துறையூர் நாடார் உறவின் முறை தலைவர் கே.ஏ.குருசாமி நாடார், செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் செல்லத்துரை, தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் கே.செந்தூர்செல்வம் நாடார், ஒன்றிய இளைஞரணி தலைவர் பட்டுகணேசன், ஜெபஸ்டின் கண்ணன், அகில இந்திய நாடார் கூட்டமைப்பு மாநில தலைவர் காண்டீபன்.


     சினிமா ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்குவார் தங்கம், நடிகர்கள் ராஜேந்திரநாத், இமான் அண்ணாச்சி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீஷ் சவுந்தர்முருகன், துணை செயலாளர் பால முனியப்பன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பத்திரப் பதிவு துறை முன்னாள் டி.ஐ.ஜி. ஏ.ஆறுமுக நயினார், காயல் ஆர்.எஸ்.இளவரசு, ஏ.கணேசா, அயன்புரம் நற்பணி மன்ற தலைவர் ஜெகதீஷ், செயலாளர் சந்திரசேகர், நிர்வாகிகள் சச்சிதானந்தம், பாலமுருகன், பார்வதி, ஜெகதீஸ்வரராஜ், செங்குட்டுவன், அருண்பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    நெல்லை மாவட்ட நற்பணி மன்ற துணை செயலாளர் செல்லத்துரை, திருவொற்றியூர் மன்றம் டி.முல்லைராஜா, பிரைட்டன், திருச்சி மாவட்டம் அணியாப்பூர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம், சந்தைப்பேட்டை மன்ற செயலாளர் காமராஜ், முன்னாள் துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், தேவி செல்வம், தினேஷ், திவாகர், மும்பை டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற பொதுச் செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் பொன்னு நாடார், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பெனியல் நாடார், செல்வன் நாடார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் மயிலை எம்.மாரித்தங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, செய்தித் தொடர்பாளர் பாண்டியராஜ், துணைச் செயலாளர் வி.பி.மணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


    சிம்ம பேரவை நிறுவன தலைவர் ராவணன் ராம சாமி நாடார், தென்சென்னை மாவட்ட தலைவர் ராமர் நாடார், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்து நாடார், நிர்வாகிகள் விஜயகுமார், பிரதீப்குமார், நேதாஜி இளைஞர் முன்னேற்றப்படை ராஜேஷ், கலாம் காமராஜர் கக்கன் அறக்கட்டளை வேல்முருகன், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராமராஜன், வக்கீல் பாக்யராஜ், முருகன் தியேட்டர் பாலு, காயல்பட்டினம் சதக் அப்துல்லா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் இந்திய கைப்பந்து சம்மேளன செயலாளர் முருகன், தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக செயலாளர்கள் மார்ட்டின், சுதாகர், துணைத் தலைவர் ஆதித்தன், பீச் வாலிபால் கன்வீனர் பிரபாகரன், சர்வதேச கைப்பந்து விளையாட்டு வீரர்கள் பாலாஜி, பிரதீப்ஜான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    இதே போன்று தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி, சென்னை மண்டல தலைவர் அருணாச்சல மூர்த்தி, கே.குழந்தைவேல், எம்.பி.ரமேஷ், சுவைராஜா, ஜெயக்குமார், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், நிர்வாகிகள் துரை, பிரகாஷ், பழக்கடை சுரேஷ், சுப்பிரமணியன், ஜோசப், ஆண்டனி பீட்டர், தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவை தலைவர் ஜோதிகுமார், மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சந்திரமோகன், தலைமை ஆசிரியை ஜெகஜோதி ஆகியோர் தலைமையில் பள்ளியின் சாலை பாதுகாப்பு படை மாணவிகள், இசை வாத்திய குழுவினருடன் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    பள்ளி நிர்வாகிகள் தங்கம், காளியப்பன், பாண்டியன், செல்வராஜ், சோழன், தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் சித்ரா ஜெயசீலி, ஸ்ரீஜா, பிரமிளா, சுஜாதா, சேதுராமன் ஆகி யோர் அஞ்சலி செலுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்ததால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் உள்ள கே.சென்னம்பட்டி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக்கழிவுகளை சுத்திகரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உர தொழிற்சாலையால் கே.சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்று வட்டார பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    மேலும் இந்த ஆலையால் 5 கிராமங்களில் மண்வளம், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகவும், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த பகுதி வறண்ட பூமியாக மாறிவிடும் என்று கூறி சம்பந்தப்பட்ட உர ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே கிராமத்தினர் மனு அளித்திருந்தனர்.

    இந்தநிலையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் செந்தாமரை, ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் தொடர்ந்து ஆலையை மூட நடவடிக்கை எடுக்காததால் நேற்று தாசில்தார் செந்தாமரையிடம் உரத் தொழிற்சாலையை மூடநடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஐந்து கிராம மக்கள் மனு அளித்திருந்தனர். இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி 5 கிராம மக்களும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் 5 கிராமங்களில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனை அறிந்த திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, தாசில்தார் செந்தாமரை, திருமங்கலம் டி.எஸ்.பி. அருள் தலைமையில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்ததால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • கோடை வெயில் காரணமாக பெரும்பாலான வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர்.
    • வாக்குச்சாவடியின் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்து சேமித்து வைக்கப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதி மற்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    இத்தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன், அ.தி.மு.க. சார்பில் அருணாசலம், பா.ஜ.க.சார்பில் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முதலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 50 மாதிரி வாக்குகள் செலுத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதன்பிறகு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். கோடை வெயில் காரணமாக பெரும்பாலான வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தினர்.

    வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெருந்துறையில் 264, பவானியில் 289, அந்தியூரில் 262 கோபிசெட்டிபாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 16 லட்சத்து 8ஆயிரத்து 521 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 13 வகையான அடையாள ஆவணங்களை காண்பித்து வாக்காளர்கள் வாக்களித்தனர்.

    வாக்குப்பதிவுக்காக 2081 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2081 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 30 சதவீதம் கூடுதலாக 2555 விவி.பேட் எந்திரங்கள் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டன. வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி தங்களது வாக்கினை பதிவு செய்து சென்றனர். அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடி அருகே செல்லாமல் இருக்க 100 மீட்டர் தொலைவில் கோடு வரையப்பட்டு இருந்தது. அதனை தாண்டி அவர்கள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    பெருந்துறை தொகுதியில் 10 வாக்குச்சாவடிகள், பவானி தொகுதியில் 23, அந்தியூர் தொகுதியில் 38, கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 45, திருப்பூர் வடக்கு தொகுதியில் 98, திருப்பூர் தெற்கு தொகுதியில் 79 என திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

    வாக்குச்சாவடியின் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்து சேமித்து வைக்கப்பட்டன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளின் நிகழ்வுகளை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர், கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும், சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிகளில் நடக்கும் நிகழ்வுகளை தேர்தல் பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் தகவல் கொடுக்கும் வகையில் நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலெக்டர் கிறிஸ்துராஜ் செயல்பட்டார்.

    ஒரு சட்டசபைக்கு ஒருவர் வீதம் 6 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், 6 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பணியாற்றினர்.

    வாக்குச்சாவடியில் ஒரு தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் 3 பேர் மற்றும் கூடுதல் அலுவலர்கள் இருப்பு என மொத்தம் 8 ஆயிரத்து 700 பேர், நுண்பார்வையாளர்கள், மண்டல அலுவலர்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு சதவீதம் குறித்து 2 மணி நேரத்துக்கு ஒருமுறை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்கு தெரிவிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. அதன் மூலம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்கு சதவீதம் தெரிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடக்கிறது. அதன்பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்ட வாகனத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் பலத்த போலீசார் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட உள்ளது. பின்னர் அங்குள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை.
    • வாக்காளர்கள் யாரும் வராததால் வாக்கு சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டன.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட அக்ரஹார ஊராட்சியில் உள்ள கடவரஅள்ளி கிராமத்தில் இன்று காலை வாக்கு பதிவுக்கான பணிகள் நடைபெற்று தயார் நிலையில் இருந்தன.

    ஆனால், கடவரஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட காலை 10 மணி நிலவரப்படி வாக்களிக்க வரவில்லை.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது:

    கடவரஅள்ளி கிராமமானது வனபகுதியையொட்டி உள்ளது. இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    மேலும், இந்த பகுதியில் 450 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் இன்று நடைபெறுகிற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக ஒருவர் கூட நாங்கள் வாக்களிக்கவில்லை என்றனர்.

    இதேபோல் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை.

    மேலும், அந்த பகுதியில் 1050 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் சாலையை கடக்கும் விதமாக எந்தவித மேம்பாலமும் அமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் 4 வழிச்சாலை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் இன்று தேர்தலை புறக்கணித்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.

    இதேபோன்று தேன்கனிக்கோட்டை அருகே காரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கச்சுவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் ஒருவர் கூட காலை 7 மணி முதல் 10 மணி வரை வாக்களிக்க வரவில்லை. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, கச்சுவாடி பகுதியில் சாலை வசதி கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்றனர்.

    இந்த பகுதியில் 961 பேர் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாக்காளர்கள் யாரும் வராததால் வாக்கு சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டன.

    • கடந்த இரு மாதமாக முறையாக குடிநீரும் வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
    • கால்நடைகளிடம் மனு அளித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே பொகலூர் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்கள்.

    கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராமங்களுக்கு சொந்தமாக 3½ ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. இந்த குட்டைக்கு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ் தண்ணீர் கொண்டு வர கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் பணிகள் ஆரம்பிக்கப்படாமலேயே திடீரென நின்று விட்டது. இதுகுறித்து பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. கடந்த இரு மாதமாக முறையாக குடிநீரும் வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

    இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராம மக்கள் அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தங்கள் ஊரின் பஸ் நிறுத்தம் பகுதியில் தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகைகள் வைத்தனர்.

    இன்று பாராளுமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோபி ராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு அத்திக்கடவு-அவினாசி திட்டம் கொண்டு வரப்படாததை கண்டித்து தேர்தலை புறக்கணித்தனர்.

    மேலும் கால்நடைகளிடம் மனு அளித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனிடையே கிராம மக்கள் யாரும் வாக்களிக்க செல்லாததால் கிராமத்திற்கு உட்பட்ட பொகலூர் 58-வது வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் யாரும் இன்றி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காத்து வாங்கிக் கொண்டு உள்ளனர்.

    • நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 16 லட்சத்து 54 ஆயிரத்து 503 வாக்காளர்கள் உள்ளனர்.
    • பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனையொட்டி மாவட்டம்தோறும் அதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் நேற்றே செய்து முடிக்கப்பட்டன.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 16 லட்சத்து 54 ஆயிரத்து 503 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 1,810 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இதற்காக அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து நேற்று மதியத்திற்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு வாக்குச்சாவடிகளுக்கு அரசியல் கட்சியினரின் பூத் ஏஜெண்டுகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மாதிரி ஓட்டு போட்டு காண்பித்தனர். தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்.

    கிராமங்கள் தொடங்கி நகர்புறங்கள் வரையிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். ஒருசில பூத்களில் வாக்குப்பதிவு சற்று தாமதமாக தொடங்கியது.

    நெல்லை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான கார்த்திகேயன் பாளை தூய யோவான் பள்ளியில் ஓட்டு போட்டார். தொடர்ந்து அவர் வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் வந்து வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் நாற்காலியில் அழைத்துச்செல்லப்பட்டு ஓட்டுப்போட்டு சென்றனர். ஒரு சில மையங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காக காத்திருப்பு மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மேலும் முதல் முறையாக ஓட்டுப்போட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியுடன் வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஓட்டுப்போட்டுவிட்டு வெளியே வந்தபின்னர் மை வைத்த விரலை நீட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,743 வாக்குச்சாவடிகளிலும் இன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்துவிட்டு சென்றனர். தென்காசி(தனி) தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ள நிலையில் காலை முதலே பெரும்பாலானோர் ஓட்டுப்பதிவு செய்தனர்.

    இதனையொட்டி தென்காசி பாராளுமன்ற தொகுதி முழுவதும் பதற்றமான 106 வாக்குச்சாவடிகள், மிக பதற்றமான 14 வாக்குச்சாவடிகளில் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளை கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முன்னதாக கலெக்டர் கமல் கிஷோர் தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார். ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் எந்திரங்கள் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு சற்று தாமதமானது. எனினும் உடனடியாக எந்திரங்கள் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

    அதேநேரத்தில் காலையில் இருந்து வெயிலின் தாக்கமும் சற்று அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து நீண்ட வரிசையில் ஓட்டுப்போட காத்திருந்த வாக்காளர்களின் வசதிக்காக சாமியானா பந்தல், ஓலை பந்தல் உள்ளிட்டவைகளும் போடப்பட்டிருந்தது. இதேபோல் வாக்குச்சாவடிகள் முன்பு குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 58 ஆயிரத்து 430 பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக தொகுதி முழுவதும் மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டதோடு, துணை ராணுவத்தினரும் பணியில் இருந்தனர்.

    இன்று காலை 6 மணிக்கு பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அதைத்தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் அதிக அளவில் வந்து வாக்களித்து சென்றனர். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்லும்போது செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது.

    தொகுதி முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அரசியல் கட்சியினர் மேசைகள் போட்டு அமர அனுமதிக்கப்பட்டிருந்தனர். முன்னதாக அனைத்து வாக்குச்சாவடிகளின் நுழைவு வாயில் பகுதிகளிலும் சுத்தப்படுத்தப்பட்டு பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டது.

    • பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
    • வாக்கு சாவடியில் அவரது மகள் சமியுத்தா, சங்கமித்ரா, சஞ்சித்ரா ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    திண்டிவனம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக தொடங்கி காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவரது குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். இதே வாக்கு சாவடியில் அவரது மகள் சமியுத்தா, சங்கமித்ரா, சஞ்சித்ரா ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருச்செந்தூர்:

    பத்திரிகை, ஆன்மீகம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 11-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், பொருளாளர் ராமநாதன், முன்னாள் பேரூராட்சி தலைவர் செந்தமிழ் சேகர், நிர்வாகிகள் பில்லா ஜெகன், மாமன்னன், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் சுடலை உள்பட பலர் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

    வேப்பங்காடு சி.பா. சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி செயலாளரும், லெட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.ஆதிலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் - தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி

    வேப்பங்காடு சி.பா. சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி செயலாளரும், லெட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.ஆதிலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் - தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி


    ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் அதன் மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜி ஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் தனலட்சுமி (பொறுப்பு), டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய சீசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குழு செல்வி, சிவந்தி அகடாமி ஒருங்கிணைப்பாளர் ரெஜூலா பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பில் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், தங்கேச ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ஹெக்டேவர் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன், அவரது மகன் ரகுராமன் மற்றும் பேரன் சிதம்பர ஈஸ்வர் ஆகியோருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் காமராசு நாடார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் செல்வின், துணைத்தலைவர்கள் அழகேசன், முருகன், துணைச்செயலாளர்கள் சத்தியசீலன், பார்த்திபன், நிர்வாகிகள் வெங்கடேசன், ராமகிருஷ்ணன், கோடீஸ்வரன், ரமேஷ், ஆறுமுக நயினார், பட்டு, மதன், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல்.
    • எல்லா இடங்களிலும் சீக்கிரம் ஓட்டுப்போட வேண்டும் என்ற உணர்வோடு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மயிலாப்பூர், ஆர்.கே.சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    வாக்களித்த பிறகு நிருபர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது:-

    இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். அரசியல் சாசனத்தை சட்டத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல் என்ற அந்த தெளிவோடு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்த உணர்வோடு இந்த புரிதலோடு நாம் வாக்களிக்க வேண்டும்.

    கேள்வி:- முதலமைச்சர் சொன்னது போல் 40-க்கு 40 வெற்றிக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது? பிரகாசமாக இருக்கிறதா?

    பதில்:- நிச்சயமாக தமிழ்நாட்டில் 39 இடங்களிலும், புதுவையிலும் நிச்சயமாக இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

    கேள்வி:- மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு எப்படி உள்ளது?

    பதில்:- எல்லா இடங்களிலும் சீக்கிரம் ஓட்டுப்போட வேண்டும் என்ற உணர்வோடு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நான் தூத்துக்குடி செல்கிறேன். அங்குள்ள நிலவரத்தை பிறகு சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரைமணி நேரத்திற்கு பிறகு எந்திரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
    • பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈச்சனாரி 181-வது வாக்குச்சாவடியில் எந்திரம் பழுதானது.

    கோவை:

    கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்கை செலுத்தி சென்றனர்.

    ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு தாமதாகவும் தொடங்கி நடந்தது.

    கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் 184-வது வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு எந்திரத்தில் இன்று காலை திடீரென கோளாறு ஏற்பட்டது.

    இங்கு காலையிலேயே வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் எந்திரம் பழுது காரணமாக அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    அரைமணி நேரத்திற்கு பிறகு எந்திரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு வாக்காளர்கள் வாக்களித்து சென்றனர்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈச்சனாரி 181-வது வாக்குச்சாவடியிலும் எந்திரம் பழுதானது.

    இதனால் அங்கு ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு தற்போது வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    இதேபோல் போத்தனூர் 59-வது வாக்குச்சாவடியில் எந்திரம் பழுது காரணமாக அரைமணி நேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. இதுமட்டுமின்றி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டன. அதனை ஊழியர்கள் உடனுக்குடன் சரி செய்து, வாக்குப்பதிவை நடத்தினர்.

    ×