என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பொருத்தினர்.
- சுமார் 45 நிமிட நேரம் தாமதத்திற்கு பிறகு காலை 7.45 மணியளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஏரியூர்:
ஏரியூர் அருகே வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக 45 நிமிடம் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கியது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டடமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் அருகே உள்ள ராமகொண்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, புதூர் சோளப்பாடியில், வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனை தொடர்ந்து மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பொருத்தினர்.
சுமார் 45 நிமிட நேரம் தாமதத்திற்கு பிறகு காலை 7.45 மணியளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதன் காரணமாக வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பின்னர் வாக்களித்தனர்.
- அண்ணாமலை தனது சொந்த ஊரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி சென்றார்.
- வாக்களிப்பதற்காக நின்று கொண்டிருந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
பல்லடம்:
கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் இன்று 417 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது சொந்த ஊரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி சென்றார்.
அப்போது கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் பகுதியில் உள்ள அவினாசிபாளையம், மாதப்பூர், பனப்பாளையம், கொசவம்பாளையம், காரணம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பூத்களில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வாக்களிப்பதற்காக நின்று கொண்டிருந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். வாக்குச்சாவடிகளில் எத்தனை வாக்காளர்கள் உள்ளார்கள்? வாக்குப்பதிவு மையங்கள் முறையாக இயங்குகிறதா என வாக்குச்சாவடி முகவர்களிடம் கேட்டறிந்தார்.
- குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 20.09 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
- வெயில் அதிகமாக இருப்பதால் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பந்தல், நாற்காலி போட்டுள்ளோம். வீல்சேர் கைவசம் உள்ளது.
சென்னை:
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் காலை 9 மணி வரை 12.55 சதவீத வாக்குப்பதிவும், 11 மணி வரை 24.37 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 20.09 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
சென்னை அண்ணாநகர் உள்பட சில பூத்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதை அறிந்ததும் என்ஜினீயர்கள் விரைந்து சென்று அதை சரி செய்தனர்.
சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் வெயில் காரணமாக உயிரிழந்தனர் என்ற தகவல் வந்தது. அதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விவரம் கேட்டுள்ளோம்.
வெயில் அதிகமாக இருப்பதால் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பந்தல், நாற்காலி போட்டுள்ளோம். வீல்சேர் கைவசம் உள்ளது. எனவே வாக்காளர்கள் முழுமையாக வந்து ஓட்டு போடலாம். ஒரு சில பிரச்சனைக்காக சில இடங்களில் வாக்களிக்காமல் புறக்கணிப்பதாக தகவல் வந்தது. அவர்களிடம் மாவட்ட அதிகாரி பேசி வருகிறார். ஓட்டு போடுமாறு அவர்களை கேட்டுக்கொண்டு உள்ளோம். இதுவரை தமிழ்நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
- அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக கூறினார்.
சென்னை:
பாராளுமன்ற மக்களவை தேர்தலானது ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அதே போல் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சர்கார் பட பாணியை தழுவும் சம்பவம் சென்னை சூளைமேட்டில் நடைபெற்றுள்ளது.
சென்னையை சேர்ந்த பால்ராஜ் (67) என்பவர் பணி நிமித்தமாக லண்டனில் உள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக லண்டனில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்து சென்னை வந்துள்ளார்.
இதையடுத்து இன்று வாக்களிக்க சென்ற போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக கூறினார்.
- ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல்.
- நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
செந்துறை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த பொது தேர்தல் 2 கட்சிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டி அல்ல. ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல்.
சங்பரிவாருக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கிற ஒரு தர்மயுத்தம் இந்த பொது தேர்தல். இதில் நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்களின் பக்கம் இந்தியா கூட்டணி இருக்கிறோம்.
இந்தியா கூட்டணிக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வாக்களியுங்கள் என்று நாட்டு மக்களுக்கு அழைப்புகள் விடுத்துள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஜனநாயக விளிம்பியங்களை சிதைக்க துடிக்கிற சங்க பரிவார் கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.
ஜனநாயகத்தையும் அரசியலப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் கவலையோடு இந்தியா கூட்டணி களத்தில் நிற்கிறது. நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
கூட்டணி பலம், இன்னொரு புறம் திமுக அரசின் மூன்றாண்டு கால நலத்திட்டங்கள், மூன்றாவதாக இந்தியா கூட்டணி முன்வைக்கக்கூடிய நாட்டு பாதுகாப்பு ஜனநாயக பாதுகாப்பு என்கிற கருத்தியல் பலம் ஆக இந்த 3 பலங்களுடன் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
எனவே பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இந்த தேசத்தை காப்பதற்கான தீர்ப்பை தமிழகத்திலிருந்து எழுத தொடங்குகிறோம் என்பதை அறிவிப்பதற்கான நாள்தான் இன்றைய வாக்குப்பதிவு நாள்.
தமிழக மக்கள் தி.மு.க. கூட்டணியின் பக்கம் இருக்கிறார்கள். எனவே ஜனநாயகம் பாதுகாக்கப்படும். அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். டெல்லியில் பாசிச பா.ஜ.க. அரசு தூக்கி எறியப்படும். இந்திய கூட்டணியின் ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை உள்ளது.
தேர்தல் ஆணையம் நேர்மையோடு செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியான பாஜக அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக அனைத்து தரப்பு மக்களாலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த ஆட்சியே தொடரும் என்ற எண்ணத்தில் அவர்கள் அவ்வாறு செயல்படலாம்.
அது தவறு. தேர்தல் ஆணையம் இந்த நாளிலிருந்து நடுநிலைமையோடு ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். ஒரு சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 20 பேர் களத்தில் உள்ளனர். அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலையில் 11 மணி வரை கிட்டதட்ட 18 சதவீதம் வாக்குப்பதிவு ஆகி உள்ளது.
- உங்களுக்கு யார் சரியான ஆட்சியாளர்கள் வர வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம் காட்டுங்கள்.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனைவி கிருத்திகாவுடன் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரிக்கு சென்று வாக்களித்தார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னுடைய ஜனநாயக கடமையை வாக்களித்து நிறைவேற்றி இருக்கிறேன். முதலமைச்சர் சொன்னது மாதிரி, எல்லோரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள். காலையில் 11 மணி வரை கிட்டதட்ட 18 சதவீதம் வாக்குப்பதிவு ஆகி உள்ளது. இன்னும் மாலை 6 மணி வரை நேரம் உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் யார் யாருக்கு வாக்குரிமை இருக்கிறதோ முக்கியமாக இளைஞர்கள் வந்து உங்களுடைய கடமையை செய்யுங்கள். உங்களுக்கு யார் சரியான ஆட்சியாளர்கள் வர வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம் காட்டுங்கள்.
கேள்வி:- தமிழ்நாடு முழுவதும் நிலவரம் எப்படி உள்ளது?
பதில்:- தமிழ்நாடு முழுவதும் பயணித்தேன். எனக்கு தெரிந்தவரை நல்ல வெற்றி கிடைக்கும் ஜூன் 4-ந்தேதி பேசிக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு ஓட்டு போட பழனிசாமி தனது மனைவியுடன் வந்தார்.
- கை விரலில் மை வைத்த நிலையில் ஓட்டு எந்திரத்தின் அருகில் சென்றபோது திடீரென சின்னபொண்ணு மயங்கி விழுந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், தர்மபுரி ஆகிய 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). இவர் இன்று காலை பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு ஓட்டு போட மனைவியுடன் வந்தார். அப்போது பழனிசாமி ஓட்டு போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். திடீரென மயங்கி விழுந்த அவரை உடனடியாக மனைவி மற்றும் அங்கு நின்றவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் பழனிசாமி அங்கேயே இறந்துவிட்டார் . இதனைப் பார்த்த மனைவி மற்றும் உறவினர்கள் கதறினர்.
இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியபோது பழனிசாமி இருதய நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதையத்து முதியவர் பழனிசாமி உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மற்றொரு சம்பவம்...
சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 250-ல் கொண்டையம்பள்ளி ரோடு பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மனைவி சின்ன பொண்ணு (77) என்ற மூதாட்டி தனது மகன் கோவிந்தராஜ் என்பவருடன் வாக்களிக்க வந்தார். கை விரலில் மை வைத்த நிலையில் ஓட்டு எந்திரத்தின் அருகில் சென்றபோது திடீரென சின்னபொண்ணு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அந்த பகுதியினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.
- நடிகர் அஜித், ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களிப்பு.
மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி, நடிகர் அஜித், ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வருகை தந்தார்.
விஜய் வருகையால், வாக்குச்சாவடியில் கூட்டம் அலைமோதியது.
பின்னர், பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்ட விஜய் வாக்குச் சாவடிக்குள் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழக கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ள நிலையில் 10.92 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
- முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
சென்னை:
தமிழகம், புதுவை உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கிய காலை முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 26. 58 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 20.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ள நிலையில் 10.92 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
முதல் முறை வாக்களிக்கும் கல்லூரி மாணவிகள் கூறுகையில், வாக்களிப்பதை சரியாக செய்ய வேண்டும் என்ற ஆவலும், பதற்றமும் உள்ளது. கொஞ்சம் பயமாகவும் இருக்கும். வாக்களிக்கும் முறை சொல்லி இருக்காங்க. முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் வாக்களிப்பதை ஸ்கிப் செய்யக்கூடாது. சில சமயங்களில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களால் கூட முடிவு மாறலாம். இது நம்மளோட உரிமை என்றனர்.
இதனிடையே முதல்முறை வாக்களிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து வந்த மாணவி, வாக்களிப்பது கடமை, கட்டாயம். முதல் முறையாக வாக்களித்து புது அனுபவமாக இருந்தது. முதலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு அங்கு இருந்தவர்கள் வழிகாட்டினார்கள் என்றார்.
- வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
- ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு, முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
கோவை:
இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு இன்று முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
- பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்ட இந்த மையங்கள் சென்னை மாநகர் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன.
- கர்ப்பிணிகள், மூதாட்டிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் ஓட்டு போட தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
சென்னையில் 3,726 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 48.69 லட்சம் பேர் ஓட்டு போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 39 சதவீதம் அளவிலான மையங்களில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பெண்கள் மட்டுமே பணிபுரியும் வகையில் 16 இடங்களில் 1,461 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த சாவடிகளில் போலீஸ் உள்பட அனைத்து தேர்தல் அலுவலர்களும் பெண்களாகவே பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்த மையங்கள் இளஞ்சிவப்பு (பிங்க்) கலரில் வடிவமைக்கப்பட்டிருந்தது. பெண்களுக்கான அங்கீகாரம் மற்றும் மரியாதையை உயர்த்தும் வகையில் முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்ட இந்த மையங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்ட இந்த மையங்கள் சென்னை மாநகர் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. அதன்படி ஆர்.கே.நகர் பகுதியில் 30 பேர், பெரம்பூர் பகுதியில் 66 பேர், கொளத்தூர் பகுதியில் 49 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
வில்லிவாக்கம் பகுதியில் 38 பேர், திரு.வி.க.நகரில் 21 பேர், எழும்பூரில் 48 பேர், ராயபுரத்தில் 40 பேர், துறைமுகத்தில் 18 பேர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் 62 பேர், ஆயிரம்விளக்கில் 145 பேர், அண்ணாநகரில் 140 பேர், விருகம்பாக்கத்தில் 183 பேர், சைதாப்பேட்டையில் 158 பேர், தி.நகரில் 163 பேர், மயிலாப்பூரில் 187 பேர், வேளச்சேரியில் 113 பேர் என சட்டமன்ற தொகுதி வாரியாக பெண் பணியாளர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்று பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கியூ ஆர் குறியீடு கொண்ட போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அதை ஸ்கேன் செய்து தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தால் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஸ்கேன் செய்து கேள்விகளுக்கும் விடை அளித்தனர்.
இந்த மையங்களில் கர்ப்பிணிகள், மூதாட்டிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் ஓட்டு போட தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதை தவிர இங்கு பிரத்யேக வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. முதியோர் ஓய்வு அறை மற்றும் உதவி மையம், குழந்தைகள் விளையாடும் இடம் சாய் தளங்கள் ஆகியவை இந்த மையங்களில் முறையாக ஏற்படுத்தப்பட்டிருந்தது.
- தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவு.
- வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இந்நிலையில், வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 23.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், கள்ளக்குறிச்சியில் 29.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
காஞ்சிபுரத்தில் 24.89 சதவீதம், திருச்சியில் 22.77 சதவீதம், விழுப்புரத்தில் 24.53 சதவீதம், மதுரையில் 22.35 சதவீதம், கடலூரில் 24.72 சதவீதமும், சேலத்தில் 28.57 சதவீதமும், திண்டுக்கல்லில் 25.85 சதவீதமும், நீலகிரியில் 21.69 சதவீதமும், தென்காசியில் 25.45 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
விருதுநகரில் 23.11 சதவீதம், தேனியில் 25.75 சதவீதம், மயிலாடுதுறையில் 23.01 சதவீதம், வேலூரில் 23.46 சதவீதம், ஈரோடில் 28.29 சதவீதம், ராமநாதபுரத்தில் 25.92 சதவீதமும், தஞ்சையில் 25.19 சதவீதமும், கிருஷ்ணகிரியில் 23.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.






