என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம், திடீர் மழை என்று பருவநிலை மாறி மாறி வருகிறது. இதனால் கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தற்போது பள்ளிகளும் திறந்துள்ளதால் குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.

    இது தொடர்பாக குழந்தைகள் நல முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் வில்வநாதன் கூறியதாவது:-

    பருவ காலங்கள் மாறும்போது இன்ப்ளூ யன்ஸா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவலாக காணப்படும். அந்த வகையில் தற்போது குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பலருக்கு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.

    கடந்த வாரம் வரை இத்தகைய நிலை இல்லை. ஓரிரு நாட்களாக தான் சூழல் மாறி இருக்கிறது. காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று (17-ந்தேதி) மருத்துவ மனைகளை நாடியவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 3 மடங்கு உயர்ந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    இது சீசன் காய்ச்சல்தான். பருவநிலை மாறும்போது இந்த மாதிரி தொற்று வியாதிகள் ஏற்படுவது வழக்கமானதுதான். கடந்த ஆண்டுகளை விட அதிகமாக பரவுவதாக வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை. எனவே மக்கள் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம்.

    பொதுவாகவே பருவ நிலைகள் மாறும்போது முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சிய நீரை குடிப்பது, சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அது மட்டுமல்ல, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை களுக்கு சென்று மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்திக்கவும் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
    • ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கடந்த வாரம் தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காலஅவகாசம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் 547 ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

    தமிழக பதிவெண்ணாக மாற்றினால் மட்டுமே 547 பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெவிக்கப்பட்டுள்ளதால் கால அவகாசம் வழங்க ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்திக்கவும் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதனிடையே, ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக பதிவெண்ணாக மாற்றாமல் இயக்கினால் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • தரையில் உடைந்து கிடந்த ராஜீவ்காந்தி சிலையை மீட்டு துணியால் சுற்றி பாதுகாத்தனர்.
    • தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    ஆரல்வாய்மொழி:

    கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே லாயம் விலக்கு பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டு இருந்தது. 1992-ம் ஆண்டு, காங்கிரஸ் தலைவர்களில் ஓருவரான ஜி.கே.மூப்பனார் இந்த சிலையை திறந்து வைத்தார். ராஜீவ்காந்தியின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று இந்த சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

    ராஜீவ்காந்தி சிலை அருகே டீக்கடையும் செயல்பட்டு வந்தது. இதனால் காலை முதல் இரவு வரை அங்கு மக்கள் கூட்டம் இருக்கும். இன்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் டீ கடைக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு ராஜீவ்காந்தி சிலை உடைந்து கீழே கிடந்துள்ளது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிலை அருகே உள்ள கடையும் சேதமாகி காணப்பட்டது.

    ராஜீவ்காந்தி சிலையை யாரோ உடைத்து சேதப்படுத்தியதாக தகவல் பரவ, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். காங்கிரஸ் கட்சியினரும் அங்கு வந்தனர். இதனால் காலையிலேயே பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    தரையில் உடைந்து கிடந்த ராஜீவ்காந்தி சிலையை மீட்டு துணியால் சுற்றி பாதுகாத்தனர். விசாரணையில் வாகனம் மோதியதில் ராஜீவ்காந்தி சிலை சேதம் அடைந்து இருக்கலாம் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் நாகர்கோவில்-நெல்லை சாலையில் பாரம் ஏற்றப்படாத டாரஸ் லாரி வேகமாக வருவதும் அந்த லாரி, ராஜீவ்காந்தி சிலை மற்றும் டீக்கடையில் மோதிவிட்டு நிற்காமல் செல்வதும் தெரியவந்தது.

    ராஜீவ்காந்தி சிலை உடைந்தது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி பிரிவு மாவட்ட தலைவர் செல்லமணி, ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலையை உடைத்து சேதப்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற டாரஸ் லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு டாரஸ் லாரியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    டாரஸ் லாரி மோதி, ராஜீவ்காந்தி சிலை உடைந்த சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது என ஆர்.டி.ஓ-க்கள் முடிவு செய்யலாம்.
    • பொதுமக்கள் ஜூலை 14ம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் சேவை இயக்கப்பட்டு வந்தாலும் குறுகிய தெருக்கள், ஊர்களுக்குள் பேருந்துகள் சேவை இல்லாத நிலை நீடித்தது. இதன் காரணமாக மக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மினி பஸ்களுக்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும். அனைத்து மினி பஸ்களிலும் GPS வசதி பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும். அதே நேரத்தில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது என ஆர்.டி.ஓ-க்கள் முடிவு செய்யலாம். இது தொடர்பாக பொதுமக்கள் ஜூலை 14ம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • திருநெல்வேலி-எழும்பூர் இடையே வந்தே பாரத் ரெயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
    • உணவு இல்லாமல் வசூலிக்கப்படும் இந்த கட்டணம் விமான கட்டணத்தை விட மிகவும் குறைவாகும்.

    சென்னை:

    சென்னையில் இருந்து தென் மாவட்டப் பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களும் அங்கிருந்து சென்னைக்கு வரும் ரெயில்களும் எப்போதும் நிரம்பி காணப்படுகின்றன.

    4 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தாலும் இடம் கிடைப்பது இல்லை. பண்டிகை காலங்களில் வழக்கமான நாட்களை விட கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. எத்தனை சிறப்பு ரெயில்கள் விட்டாலும் இடங்கள் நிரம்பி விடுகின்றன.

    ரெயிலில் பயணம் செய்யவே மக்கள் விரும்புவதால் பயண நேரத்தையும் கூட்ட நெரிசலையும் குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவேக ரெயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன.

    வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் திருநெல்வேலி-எழும்பூர் இடையே வந்தே பாரத் ரெயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து தற்போது வாரத்தில் வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் தென் மாவட்ட மக்களின் தேவையை அறிந்து ரெயில்வே வாரியம் எழும்பூர்-நாகர்கோவில் இடையே தினசரி ரெயிலாக இயக்க முடிவு செய்து அறிவித்தது.

    வருகிற 20-ந்தேதி புதிய வந்தே பாரத் ரெயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக இருந்தது. அதற்கான பணிகளில் தெற்கு ரெயில்வே தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென பிரதமர் நிகழ்ச்சியை ஒத்தி வைத்தார். எந்த தேதியில் ரெயில் சேவை தொடங்கப்படும் என்று குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் சேவை தினமும் இயக்கப்படும் வகையில் அட்டவணை தயாராகிறது. புதிய கால அட்டவணைப்படி ஓடத் தொடங்கும். ஆனால் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் இல்லை. தற்போது சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்சிகி யூடிவ் வகுப்பு கட்டணம் ரூ.3025-ம், சேர்கார் கட்டணம் ரூ.1,605-ம் வசூலிக்கப்படுகிறது.

    உணவு இல்லாமல் வசூலிக்கப்படும் இந்த கட்டணம் விமான கட்டணத்தை விட மிகவும் குறைவாகும்.

    அதிகாலையில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு சென்றடைந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்குள் சென்னை வந்து சேரும் வகையில் நேரம் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய 7 நிலையங்களில் நின்று செல்லும். ஒரு நிமிடம் நின்று அதன் பிறகு புறப்பட்டு செல்லும்.

    புதிய வந்தே பாரத் ரெயில் சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு தினசரி இயக்கப்பட உள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்களை சார்ந்த பிரதிநிதிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். மதியம் புறப்பட்டு இரவுக்குள் சென்னை வந்து சேர முடியும்.

    • பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு இருந்ததால் விடுதிகளுக்கு வாங்கப்பட்ட பால் நிறுத்தப்பட்டது.
    • கடந்த 2 மாதத்தில் பால் விற்பனை 20 சதவீதம் குறைந்ததோடு மட்டுமின்றி தற்போது மழை பெய்து வருவதால் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. தனியார் பால் விலையைவிட ஆவின் பால் விலை எப்போதும் குறைவாக இருப்பதால் பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளது.

    இந்த நிலையில் கோடை விடுமுறையில் பால் விற்பனை குறைந்துள்ளது. சொந்த ஊர்களுக்கு குடும்பத்தோடு சென்றதால் தமிழகத்தில் பால் விற்பனை குறைந்தது.

    மேலும் வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் மழையும் பரவலாக பெய்து வருவதால் தயிர், மோர் விற்பனை சரிந்தது. இதனால் பால் தேக்கம் அடைந்தது.

    ஓட்டல்கள், நிறுவனங்கள், டீக்கடைகளுக்கு தனியார் பால் அதிகளவில் வினியோகிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு இருந்ததால் விடுதிகளுக்கு வாங்கப்பட்ட பால் நிறுத்தப்பட்டது.

    கடந்த 2 மாதத்தில் பால் விற்பனை 20 சதவீதம் குறைந்ததோடு மட்டுமின்றி தற்போது மழை பெய்து வருவதால் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக பால் கொள்முதல் அதிகரித்தது. ஆனால் அதற்கேற்ற அளவில் பால், தயிர், மோர் போன்றவை விற்பனை ஆகவில்லை. இதனால் ஹட்சன் நிறுவனம், ஆரோக்கியா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தது.

    புல்கிரீம் பால் லிட்டர் ரூ.68-ல் இருந்து ரூ.66-ஆகவும் அரை லிட்டர் பால் ரூ.37-ல் இருந்து ரூ.36 ஆகவும் குறைந்துள்ளது.

    அதே போல தயிர் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    ஒரு லிட்டர் தயிர் ரூ.71-ல் இருந்து ரூ.67 ஆகவும் 500 மில்லி தயிர் ரூ.32-ல் இருந்து ரூ.30-ஆகவும் குறைந்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    தனியார் நிறுவனம் பால் விலையை உயர்த்தும் போது அனைத்து வகை பாலுக்கும் உயர்த்தியது. குறைக்கும் போது நிறை கொழுப்பு பாலுக்கான விலையை மட்டும் குறைப்பது ஏற்புடையதல்ல. மற்ற பால் பாக்கெட் விலையையும் குறைக்க வேண்டும்.

    மேலும் இந்த விலை குறைப்பு மிகவும் குறைவாகும். தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை 10 ரூபாய் குறைத்துவிட்டு விற்பனை விலையை ரூ.2 மட்டுமே குறைத்துள்ளது. ஹட்சன் நிறுவனத்தை தொடர்ந்து மற்ற தனியார் பால் நிறுவனங்களும் விலையை குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள்.
    • சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ், அதைப்பற்றி மோடியிடம் தான் பேச வேண்டும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் காணை அடுத்த கொசப்பாளையத்தில் நடந்தது. தேர்தல் பணிக்குழு தலைவரும் அமைச்சருமான பொன்முடி தலைமை தாங்கி வேட்பாளர் அன்னியூர் சிவாவை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

    இந்த இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள். காரணம் மகளிர் உரிமைத் தொகை, புதுமை பெண், இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்களில் பயனடைந்துள்ளனர்.

    இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது. அவர்களை பற்றி நமக்கு கவலையில்லை. அ.திமு.க.வினர் ஓட்டுகள் அனைத்தும் நிச்சயமாக இம்முறை தி.மு.க.,விற்கு தான் வரும்.

    சமூக நீதி பற்றி பேசும் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ், இத்தேர்தலில் பா.ஜ.க, வுடன் கூட்டணி வைத்துள்ளார். ஜாதி வாரி கணக்கு எடுப்பு பற்றி பேசும் ராமதாஸ், அதை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்பது தெரிந்தும், தெரியாத மாதிரி நடிக்கிறார்.

    சமூக நீதி பற்றி பேச தி.மு.க.,விற்கு தான் தகுதி உண்டு, காரணம் ஜாதி, மதம் பார்த்து தி.மு.க., எதையும் செய்வதில்லை. சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ், அதைப்பற்றி மோடியிடம் தான் பேச வேண்டும்.

    தி.மு.க., மாதிரி தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுகிற கட்சிகள் ஏதுவும் கிடையாது. சமூக நீதிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதால் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராக வாய்ப்பளித்தார்.

    இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

    • சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவர்கள் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்களுக்கு ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சி அளித்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. 4 வழிச்சாலையாக உள்ள இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும்.

    இந்நிலையில், நேற்று காலை சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, சாலையோரம் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டாலும் அவ்வழியாக கனரக வாகனங்கள், பஸ்கள் என அடுத்தடுத்து வாகனங்கள் சென்றன. வாகன போக்குவரத்து இல்லாத இடத்தை தேர்வு செய்து இதுபோன்ற ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்காமல் சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்களுக்கு ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சி அளித்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    இதனிடையே, ஆபத்தை உணராமல் சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவர்கள் செல்லும் வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளர் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீனவர்களை படகுகளுடன் சிறை பிடித்த இலங்கை கடற்படை, இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.
    • கைதான மீனவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்கள் ஆவர்.

    ராமநாதபுரம்:

    கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்பை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. மீன் பிடிதடைக்காலம் முடிந்து நேற்று முன் தினத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களை படகுகளுடன் சிறை பிடித்த இலங்கை கடற்படை, இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    கைதான மீனவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்கள் ஆவர். இதனால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். அதில், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக கௌதம்சிகாமணி நியமிக்கப்பட்டார். மேலும், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அமைச்சர் செஞ்சி மஞ்தானுக்கு புதிய பொறுப்பு வழங்கி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    • 15 விமானங்கள் தாமதமானதல் பயணிகள் அவதி அடைந்தனர்.
    • வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நள்ளிரவில் மழை பெய்தது.

    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் நேற்று முதல் வருகிற 23-ந்தேதி முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. ராயப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், மேற்கு மாம்பலம், பெசன்ட் நகர், அடையாறு, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    இதே போல் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நள்ளிரவில் மழை பெய்தது.

    பகல் முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், நள்ளிரவில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதனிடையே சென்னையில் நள்ளிரவில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. 15 விமானங்கள் தாமதமானதல் பயணிகள் அவதி அடைந்தனர்.

    • வந்தே மெட்ரோ ரெயில்கள் நாட்டில் உள்ள 125 முக்கிய நகரங்களை இணைக்க உள்ளன.
    • கபுர்தலாவில் உள்ள ரெயில் பெட்டித் தொழிற்சாலையிலும் முன்மாதிரி பெட்டிகள் உருவாக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை, பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்.), நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் தயாரிக்கப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது, சிறிய நகரங்களுக்கு இடையே குறுகிய வழித்தடங்களில் இயக்குவதற்காக 12 ஏ.சி. பெட்டிகள் கொண்ட வந்தே மெட்ரோ ரெயில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    வந்தே மெட்ரோ ரெயில் என்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் குறுகிய தொலைவு வடிவமாகும். நகர்ப்புற பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 250 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. பயணிகளின் வசதியை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வந்தே மெட்ரோ ரெயில்கள் 100 முதல் 250 கிலோ மீட்டர் தொலைவு வரையில் இயக்கப்படுகிறது.

    வந்தே மெட்ரோ ரெயில்கள் நாட்டில் உள்ள 125 முக்கிய நகரங்களை இணைக்க உள்ளன. வந்தே மெட்ரோ ரெயில்கள் தொடக்கத்தில், சென்னை- திருப்பதி, புவனேஸ்வர்- பாலாசோர், லக்னோ- கான்பூர் ஆகிய தடங்களில் இயக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வழித்தடங்களை விரிவுபடுத்துவது குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. சென்னை- அரக்கோணம் வழித்தடம் பற்றிய இறுதி முடிவு நிலுவையில் உள்ளது.

    வந்தே மெட்ரோ ரெயில் வழக்கமான ரெயில் போன்று இல்லாமல், வந்தே மெட்ரோ ரெயிலின் உள்புறம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இருக்கைகள் புறநகர் ரெயில்களில் உள்ளதைப் போல் இல்லாமல், மேம்படுத்தப்பட்ட வகையில் அழகிய வடிவமைப்புடன் பல்வேறு சொகுசு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கைப்பிடிகள் மற்றும் ஒரு பெட்டியில் 2 கழிப்பறைகளுடன் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு பெட்டியிலும் 104 இருக்கைகள் மற்றும் 185 பயணிகள் நின்று பயணிக்கும் வசதியை கொண்டது. அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் ரெயில் பெட்டி வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் பெட்டிகள் 20.32 டன் எடையைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

    வந்தே பாரத் ரெயில்களைப் போலல்லாமல், அதிக எண்ணிக்கையில் பயணிகள் வந்தே மெட்ரோவில் பயணிக்க முடியும். அதிக திறன் கொண்ட ரெயில் என்பதால் இதற்கு கூடுதல் சோதனை தேவைப்படுகிறது.

    முறையான ஒப்புதல் கிடைக்கப்பெற்ற உடன் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரெயிலையும் வருகிற ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்தில் சோதனைக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகிறது.

     

    வந்தே மெட்ரோ ரெயிலின் உட்புற தோற்றம்

    வந்தே மெட்ரோ ரெயிலின் உட்புற தோற்றம்

    விரைவாக இந்த வகை ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதிக பயணிகள் பயணம் செய்வார்கள் என்பதால் முன்மாதிரி ரெயில் ஒன்றை தயாரித்து அதனை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் சோதனை செய்த பின்னர் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் ரெயில்வே நிர்வாகம் உறுதியாக இருந்தது.

    கபுர்தலாவில் உள்ள ரெயில் பெட்டித் தொழிற்சாலையிலும் முன்மாதிரி பெட்டிகள் உருவாக்கப்படுகிறது. புதிய அமைச்சகத்திடம் இருந்து சாத்தியமான வேக வரம்பு உட்பட விவரக்குறிப்புகளில் சில மாற்றங்களை ரெயில் பெட்டி தொழிற்சாலை நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்று ரெயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

    ×