என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அரசு பள்ளிகளில் என்சிசி, சொற்பொழிவு உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியாட்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அரசு பள்ளி ஆசிரியர்களே மாணவர்களை ஊக்கப்படுத்தலாம், இனி வெளி ஆட்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்த தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் என்ஜிஓக்கள், தனியார் நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது. துறையின் அனுமதி இல்லாமல் யாருக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சுற்றறிக்கைகளை கூட சரியாக தயாரிக்க தெரியாத சிஇஓக்கள் இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் என்சிசி, சொற்பொழிவு உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியாட்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களே மாணவர்களை ஊக்கப்படுத்தலாம். இனி வெளி ஆட்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்த தடை விதித்துள்ளது.
- அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி.
- என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகாவிஷ்ணுவை சும்மாக விடமாட்டேன் என்றார்.
சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பாகப் பேசியதாக கூறப்படுகிறது. மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று பேசியுள்ளார்.
அரசு பள்ளிக்கூடங்களில் ஆன்மிகத்திற்கு இடமில்லை என்று கேள்வி எழுப்பிய ஆசிரியருக்கு ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு ஆன்மிகம், மறுபறவி, பாவ-புண்ணியம்" ஆகியவை பற்றி பேசினார்.
அதேபோல் அரசு பள்ளிக்கூடங்களில் ஆன்மீகம் பேசக்கூடாது என்று எந்த சட்டம் கூறுகிறது என்றும் கேள்வி எழுப்பினார். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை விட ஆசிரியர்கள் பெரியவர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மூடநம்பிக்கைகள் குறித்து பேசியவரை, அதே மேடையில் வைத்து கேள்வி கேட்ட ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும், "என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து, என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகாவிஷ்ணுவை சும்மாக விடமாட்டேன்" என்றும் கூறினார்.
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பள்ளி வளாகம் என்பது ஆசிரியர்களுக்கானது. நமது மாணவச் செல்வங்களுக்கானது. நமது பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களிடம் உரையாடுபவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டிய கடமை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உண்டு.
"எந்தவொரு கருத்தையும் அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து சிந்திக்க வேண்டும்" என்பதை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
கல்வியால் உலகை வெல்வோம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்.
"கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய மிகப்பெரிய ஆயுதம்" - மு.க.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 'மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம்' என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
- எது "நன்நெறி" என்பதைத் தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலில் காட்ட வேண்டிய நேரமிது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை, அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார். இந்த பேச்சால் கோபமான அந்த பள்ளியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் மகாவிஷ்ணுவின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தார். அதற்கு மகாவிஷ்ணு அந்த ஆசியரிடம் மோசமாக நடந்து கொண்ட வீடியோவும் வெளியாகி கண்டனங்களைக் குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பாஜக ஆளும் மாநிலம் ஒன்றில் ஓராண்டுக்கு முன் நாடாளுமன்ற கல்வி நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டோம். அங்கன்வாடி ஊழியர்கள் கிராமத்தில் உள்ள கோயில்களைத் தூய்மைப்படுத்தும் பணியும், அங்கு குழந்தைகளுக்குப் போதிப்பதைப் பற்றியும் நாங்கள் கேள்வி எழுப்பினோம். அப்போது அந்த மாநிலத் தலைமைக் கல்வி அதிகாரி "கோயிலில் பாவ புண்ணியத்தைப் பற்றிப் போதிக்காமல் ஒருவனுக்கு வாழ்வியலை எப்படி போதிக்க முடியும்?" என்று கேட்டார்.
இன்று அதே கேள்வியைத் தமிழ்நாட்டு அரசுப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்து ஒருவர் கேட்கிறார். மறுப்பு தெரிவிக்கும் ஆசிரியரைப் பார்த்து, "உங்கள் பெயரென்ன?" என்று கேட்கிறார். அந்த ஆசிரியரின் பெயர் ஜான்சன் ஆகவோ, ஜாஹீர் உசேனாகவோ இருந்திருந்தால் இன்று முதல் பள்ளிக் கல்வி பற்றிய பிரச்சனை ஆர். என். இரவியிடமிருந்து ஹெச்.ராஜாவுக்கு மாற்றப்பட்டிருக்கும். அவர்கள் தெரிந்தே செய்கிறார்கள். எது "நன்நெறி" என்பதைத் தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலில் காட்ட வேண்டிய நேரமிது என்று தெரிவித்துள்ளார்.
- மாநில பாடத்திட்டமும், மத்திய பாடத்திட்டத்திற்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
- மத்திய, மாநில பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டதால் நீட் தேர்வில் பல மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலை உருவாகியுள்ளது.
நெல்லை:
நெல்லையில் இன்று ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் பள்ளியில் நடத்தப்பட்ட ஆன்மீக வகுப்பு தவறானது. பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி நடத்த யாரால் அனுமதிக்கப்பட்டது, எதனால் நடந்தது என்ற விசாரணையை பள்ளிக்கல்வித்துறை நடத்த வேண்டும். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு சனாதன கருத்துக்களை அனுமதித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதலமைச்ச ரின் அமெரிக்க பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வந்து லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொண்டு வரும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் அதிகம் படித்த இளைஞர்கள் தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவு பெரிய தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
நாங்குநேரி உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்து வருவதற்கான புகார்கள் தொடர்ந்து வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை நேரில் சந்தித்து தற்போது தமிழகத்தில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தபடும். பி.எம். ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது.
தேசிய கல்விக் கொள்கை சார்ந்தது தான் பி.எம். ஸ்ரீ திட்டமும். பா.ஜ.க.வை தவிர்த்த அனைத்து அரசியல் இயக்கங்களும் தேசிய கல்விக் கொள்கை தேவையில்லை என்ற நிலையோடு இருந்து வருகிறது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் மூலம் கல்வி வளர்ச்சி பெறுவதை வரவேற்கிறோம். பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் மூலம் தேசிய கல்விக் கொள்கையை ஊக்குவிப்பதை ஏற்க முடியாது. அதில் பல முரண்பாடுகள் உள்ளது.
3 மொழி கற்றுக் கொள்வதில் என்ன தவறு என மத்திய அரசு கேட்பதை நாங்கள் ஆமோதிக்கிறோம். மூன்றாவது மொழி ஏன் ஹிந்தியாக, சமஸ்கிருதமாக இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.
தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியருக்கு மேல் சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.249 கோடி வரவேண்டிய நிதி வரவில்லை. இந்த ஆண்டுக்கான நிதி ரூ.500 கோடிக்கு மேல் வரவில்லை. தமிழகத்தில் ஏற்கனவே நிதி நெருக்கடி உள்ளது. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.
மாநில பாடத்திட்டமும், மத்திய பாடத்திட்டத்திற்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டதால் நீட் தேர்வில் பல மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலை உருவாகியுள்ளது.
ம.தி.மு.க. என்பது தனி இயக்கம். எங்களது சித்தாந்தத்தின் படியே எங்களது தகவல்களை சொல்கிறோம். எங்களது கூட்டணி நிலைத்து நிற்கும். எங்களது கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ம.தி.மு.க. நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் நிஜாம், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி உள்பட பலர் உடன் இருந்தனர்.
- சிறந்த போக்குவரத்து அமைப்பு, வேலைவாய்ப்பு பரிமாற்ற செயல்பாடுகள் இவற்றை மையப்படுத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
- தொழில் முனைவோரின் கருத்துக்களின் அடிப்படையில் தரவரிசை தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
எளிதாக தொழில் தொடங்கும் தரவரிசையில் கேரளா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
தொழில் துறைக்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ள மாநிலத்தை தர வரிசைப்படுத்தும் பட்டியலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வணிகத்தை மையமாக கொண்ட 2 வகை சீர்திருத்தங்கள் மற்றும் ஏழு வகை குடிமக்களை மையப்படுத்திய சீர்திருத்தங்களில் இந்தியாவிலேயே கேரளா முன்னணியில் உள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவில்லை.
பரந்த அளவிலான தொழில்கள் செழிக்க ஏதுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் வாயிலாக வியாபாரத்தை எளிதாக்குவதில் கேரளா பெரும் முன்னேற்றமும் கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தொழில்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான விருதை மத்திய மந்திரி பியூஸ்கோயலிடம் இருந்து கேரள தொழில் துறை மந்திரி ராஜீவ் பெற்றுள்ளார்.
இந்த விருதில் ஆந்திரா 2-வது இடத்தையும், குஜராத் 3-வது இடம், ராஜஸ்தான் 4-வது இடம், 5-வது இடத்தில் திரிபுரா, 6-வது இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது.
தொழில் துறை மற்றும் குடிமக்கள் சேவை சீர்திருத்தங்கள், பயன்பாட்டு அனுமதி வழங்குதல், வரி செலுத்தும் சீர்திருத்தங்கள், ஆன்லைன் ஒற்றை சாரள முறை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் சான்றிதழ் வினியோகம் செயல்முறையை எளிமைப்படுத்துதல், வருவாய்த் துறை வாரியாக வழங்கப்படும் சான்றிதழ்கள், சிறந்த பொது வினியோக அமைப்பு, உணவு வழங்கல் துறையின் செயல்பாடு, சிறந்த போக்குவரத்து அமைப்பு, வேலைவாய்ப்பு பரிமாற்ற செயல்பாடுகள் இவற்றை மையப்படுத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
தொழில் முனைவோரின் கருத்துக்களின் அடிப்படையில் தரவரிசை தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகியுள்ளது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கோட் படம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி கேட்டக்கப்பட்டது. அவர் கூறிய பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படம் குறித்து ஓபிஎஸ் கூறியதாவது, புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திய பிறகு நானும் திரைப்படத்தை பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என கூறினார்.
- நெல்லை- திருச்செந்தூர் வழித்தடங்களில் மற்ற நேரங்களில் இயக்கப்படும் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும்.
- ரெயில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவில் திருச்செந்தூருக்கு சென்று, அங்கிருந்து திருச்செந்தூர் எக்ஸ்பிரசாக சென்னைக்கு புறப்படும்.
நெல்லை:
நெல்லை சந்திப்பில் இருந்து தினமும் திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர சென்னைக்கு இயக்கப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், கேரள மாநிலம் பாலக்காடுக்கு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவையும் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் யார்டு சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது. எனவே அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் விதமாக நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்தை ரத்து செய்ய மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வழக்கமாக காலை 8.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு நெல்லை சந்திப்புக்கு வரும் பயணிகள் ரெயில், பணிகள் நடக்க உள்ள அந்த யார்டு பகுதியில் நிறுத்தப்படும். அதேபோல் அந்த ரெயில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவில் திருச்செந்தூருக்கு சென்று, அங்கிருந்து திருச்செந்தூர் எக்ஸ்பிரசாக சென்னைக்கு புறப்படும்.
இந்நிலையில் யார்டு பணிகள் காரணமாக காலை 8.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரெயிலும், மாலை 4.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரெயிலும் வருகிற 9-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை 25 நாட்களுக்கு இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் நெல்லை-திருச்செந்தூர் வழித்தடங்களில் மற்ற நேரங்களில் இயக்கப்படும் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் யூக்லிட்டில் அமைந்துள்ளது.
- விஸ்டியன் நிறுவனமானது போர்டு மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில், லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம் வெல்டிங் பொருட்கள், ஆர்க் வெல்டிங் உபகரணங்கள், வெல்டிங் பாகங்கள், பிளாஸ்மா மற்றும் ஆக்ஸி-எரிபொருள் வெட்டும் உபகரணங்கள், ரோபோடிக் வெல்டிங் பொருட்களின் உலகளாவிய உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பார்ச்சூன் 1000 நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் யூக்லிட்டில் அமைந்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
விஷய் பிரிஷிஷன் நிறுவனமானது செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களின் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் இஸ்ரேல், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டு உள்ளது, அங்கு ரெக்டி பையர்கள், டையோட்கள், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், மின்தடையங்கள், மின் தேக்கிகள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்க நாட்டின், பென்சில்வேனியாவின் மால்வெர்னில் அமைந்து உள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், விஷய் பிரிஷிஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 100 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டி யூசர்ஸ்உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இச்சந்திப்பின்போது, விஷய் பிரிஷிணன் நிறுவனத்தின் ஷிர்வர் ஸ்டீபன், சென்னையில் அமைந்துள்ள தங்கள் தயாரிப்பு நிறுவனத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும், இதன்மூலம் அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், தங்கள் நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
விஸ்டியன் நிறுவனமானது போர்டு மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். அமெரிக்க நாட்டின் மிச்சிகனில் உள்ள வான் ப்யூரன் டவுன் ஷிப்பைத் தலைமையிடமாகக் கொண்டு, 17 நாடுகளில் இயங்கி வருகிறது.
இது வாகனங்களின் காக்பிட் அனுபவத்தை மேம்படுத்தும் மின்னணு தயாரிப்புகளை வடிவமைத்தல் மற்றும் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது.
இந்நிறுவனம் மெக்சிகோ, பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சுகல், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்லோ வாக்கியா, ருமேனியா, பல்கேரியா, ஹங்கேரி, துனிசியா, இந்தியா, சீனா, தாய்லாந்து, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உற்பத்தி மற்றும் பொறியியல் மையங்களை கொண்டுள்ளது. போர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ், பி.எம்.டபிள்யூ. போன்ற உலகின் பெரும் வாகன உற்பத்தியாளர்களுக்கு வாகன மின்னனுவியல் பாகங்களை தயாரித்து அளித்து வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், விஸ்டியன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 250 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
- இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியை கண்டித்து, சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
- விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக முதலமைச்சர் பங்கேற்க வேண்டும்.
- பழனியில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை.
திருப்பூர்:
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. 3 அடி, 5 அடி, 10 அடி உயரங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது.
தனிப்பட்ட முறையில் வீடுகளில் 15 லட்சம் மக்கள் சிறிய விநாயகர் சிலைகள் வைக்கிறார்கள். திருப்பூரில் 4-வது நாளும், கோவையில் 5-வது நாளும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கப்படுகிறது. திருப்பூர், கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியபோது எடுத்த படம்.
விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக முதலமைச்சர் பங்கேற்க வேண்டும். அவர் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று இந்து முன்னணி கடிதம் அனுப்பியுள்ளது. இந்துக்களின் மக்கள் தொகைற்போது வரை 9 சதவீதம் குறைந்துள்ளது. இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விநாயகர் சிலை வைக்க அரசு தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை தெரிவித்து தடை போடுகிறார்கள். தடை போட போட இந்து மக்கள் எழுச்சி பெற்று வருகிறார்கள். இந்த அரசு மீது இந்து மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். திருப்பூரில் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. இந்த ஆண்டும் எழுச்சியோடு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.
பழனியில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை. அதனால் நான் பங்கேற்கவில்லை. வெளிநாட்டில் உள்ள இந்துக்களையும் மாநாட்டுக்கு அழைத்துள்ளதை பார்க்கும்போது இந்துக்களின் எழுச்சியை இந்த அரசு புரிந்துள்ளதை காட்டுகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்று இருக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை வசூலிப்பதில் பிரச்சனை செய்வதாக இந்து முன்னணி மீது தவறான தகவலை பரப்புகிறார்கள். எங்களுக்கு கெட்ட பெயர் உருவாக்குவதற்காக சிலர் செயல்படுகிறார்கள். நன்கொடை வசூல் பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். விநாயகர் சதுர்த்திக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்.
- இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம்.
சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மூடநம்பிக்கைகள் குறித்த பேசியவரை, அதே மேடையில் வைத்து கேள்வி கேட்ட ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து, என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகாவிஷ்ணுவை சும்மாக விடமாட்டேன். தினமும் நூற்றுக்கணக்கான விசிட்டர்கள் என்னை பார்க்கின்றனர். அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அதற்காக நான் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளேன் என்பது தவறான செய்தி."
"எவ்விதத்திலும் கொள்கையில் சமரசம் இல்லை. புதிய கல்விக் கொள்கையை கூட நாங்கள் இதற்காக ஏற்கவில்லை. தன்னம்பிக்கை பேச்சாளரை மாணவர்களிடம் பேச வைக்கும் ஆசிரியர்களின் முயற்சியில் தவறு இல்லை. ஆனால், அவர்களின் பின்னணியை சோதிக்காமல், என்ன மாதிரி பேசப்போகிறார் என்பதை தெரிந்தே அழைத்து வந்திருக்க வேண்டும்."
"தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. நல்ல மதிப்பெண் பெறுவது புத்திசாலித்தனம் இல்லை, பகுத்தறிந்து செயல்படுவதே புத்திசாலித்தனம். பிற்போக்கு சிந்தனை உடைய கருத்துக்களை யாராவது கூறினால் அதை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும். பகுத்தறிவை விதைக்கும் இடம் பள்ளி," என்று கூறினார்.
- விநாயகரைத் துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.
- அருகம்புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து, விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நற்காரியங்களைத் தொடங்கும் போது, தங்குதடையின்றி சிறப்புடன் நடைபெற விநாயகப் பெருமானை முதலில் போற்றி வணங்குவர். விநாயகரைத் துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.
வினை தீர்க்கும் தெய்வமான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளாம் விநாயகர் சதுர்த்தியன்று, களி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அவல், பொரி, பழங்கள் போன்ற பொருட்களைப் படைத்து; அருகம்புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து, விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.
வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் வேழ முகத்தோனை, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டு, அவர் தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று, நோய் நொடி இல்லாப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், உளமார்ந்த 'விநாயகர் சதுர்த்தி' வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






