என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்ற சமீபத்திய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பிரதமர் மோடி எடுத்து சென்றுள்ளார்.

    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தி திணிப்பு தொடர்பாக நடைமுறையில் இல்லாத விஷயங்களை கூறுகிறார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உருவாக்கிய முதல் தேசிய கல்விக் கொள்கையில், அனைத்து இந்தியர்களுக்கும் இந்தி கட்டாயம் என கூறப்பட்டது. 2-வதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உருவாக்கி தேசியக் கல்விக் கொள்கையில் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான மொழியாக இந்தியை உருவாக்கும் வகையில், அதை கற்கவும், பயன்படுத்தவும் ஊக்க அளிக்கப்பட்டது.

    ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ல், தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து மக்கள் மீதும் இந்தியை திணித்தது யார்? பிரதமர் மோடியா அல்லது காங்கிரஸ் கட்சியா?.

    பிரதமர் மோடி தாய் மொழிக்கு என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பலாம். என்னுடைய தாய் மொழி தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி பல்வேறு பெருமைகளை சேர்த்துள்ளார். ஐ.நா. சபையில் முதல் முறையாக தமிழ் மொழியில் பேசிய பிரதமர் என்ற பெயரை பெற்றவர் மோடி. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என ஐ.நா சபையில் உரையாற்றினார். மேலும், பாரதியாரின் நினைவாக அவரது பிறந்த நாள், டிசம்பர் 11-ந்தேதியை தேசிய மொழிகள் தினமாக அறிவித்தார்.

    காசி தமிழ் சங்கம் மற்றும் சவுராஷ்டிர தமிழ் சங்கம் ஆகிய இரண்டு கலாச்சாரங்களின் சங்கமத்தை உருவாக்கினார். திருக்குறளை குறைந்தது 100 மொழிகளில் வெளியிட வேண்டும் என்ற லட்சியத்தின் ஒரு பகுதியாக 13 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார். செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவினார். முன்பு எப்போதும் இல்லாத வகையில், தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பிரதமர் மோடி எடுத்து சென்றுள்ளார்.

    தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்தை மேம்படுத்துவதற்காக, ரூ.24 கோடி செலவில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் (CICT) புதிய வளாகத்தை நமது பிரதமர் திறந்து வைத்தார். வட இலங்கையில் தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பாதுகாக்க, நமது பிரதமர் அவர்கள் ரூ.120 கோடியில் யாழ்ப்பாணக் கலாச்சார மையத்தை நிர்மாணிக்க அனுமதித்தார்.

    நமது பிரதமர் 2023ம் ஆண்டு ஜூலை மாதம் தனது சுற்றுப்பயணத்தின்போது பிரான்சின் செர்ஜி நகரில் புனித திருவள்ளுவருக்கு ஒரு சிலையை அறிவித்தார், அது டிசம்பர் 2023 இல் நிறுவப்பட்டது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்ற சமீபத்திய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி பிராந்திய மொழிகளை வளர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகளில் 10 சதவீதம் கூட காங்கிரஸ் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொது இடங்களில் 'நோ பார்க்கிங்' பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் அமைக்கக் கூடாது.
    • கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    சென்னை:

    சென்னையில் மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் 'நோ பார்க்கிங்' பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் அமைக்கக் கூடாது என தனியார் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சென்னையில் வீடுகளின் முன் அனுமதியின்றி 'நோ பார்க்கிங் ' போர்டுகள், தடுப்புகளை வைத்திருப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விதிமுறைகளை பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதளம் வழியே வெளியிடவும் காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னையில் பல வீடுகளின் முன் அனுமதியின்றி வைத்துள்ள நோ பார்க்கிங் போர்டுகள், பூந்தொட்டிகளையும் அகற்ற கோரி நந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
    • அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    • பெண்ணுக்கு தான் தாய், தந்தை எங்கு இருந்தாலும், எங்கு போனாலும் பாசம்.
    • நாமும் பாசமாக இருந்தால் குடும்பம் மட்டுமல்ல, நாடும் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி முப்பெரும் விழா நடந்தது.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    போன ஜென்மத்தில் நிறைய பாவம் செய்திருந்தால் மகன்களாகவே பிறப்பார்கள், யாராவது புண்ணியம் செய்து இருந்தால் பெண் குழந்தைகள் பிறக்கும்.

    பெண்ணுக்கு தான் தாய், தந்தை எங்கு இருந்தாலும், எங்கு போனாலும் பாசம்.

    இதை பொதுவாக கூறுகிறேன், தப்பாக கூறவில்லை, இது இயல்பு.

    இதை நாம், நானும் மாற்றிக்கொள்ள வேண்டும் . நாமும் பாசமாக இருந்தால் குடும்பம் மட்டுமல்ல, நாடும் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

    அரசு பள்ளியில் கடந்த கால ஜென்மம் குறித்து பேசிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்காந்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற விழாவில் பேசிய பேச்சு மீண்டும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேர்களையும் விழுதுகளையும் போற்றி மேருமலையென உயர்ந்து நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
    • மு.க.ஸ்டாலின் விருது தஞ்சை எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் வழங்கப்படுகிறது.

    திமுக முப்பெரும் விருது வழங்கும் விழாவில் நடப்பாண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் புதிய விருது வழங்க உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

    திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேர்களையும் விழுதுகளையும் போற்றி மேருமலையென உயர்ந்து நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். உயர்விலும் தாழ்விலும் தோளோடு தோள் நின்று கழகம் காத்த தீரர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி நன்றியின் அடையாளத்தைக் காட்டும் செயலை தலைவர் கலைஞர் அவர்கள் 1985-ம் ஆண்டு முதல் துவக்கி வைத்தார்கள்.

    பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் பெயரிலான விருதுகள் கழகக் காப்பாளர்களுக்கு 1985 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2008-ம் ஆண்டு முதல் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் விருதும், 2018-ம் ஆண்டு முதல் இனமானப் பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

    திராவிட முன்னேற்றக் கழகம் தனது 75-வது ஆண்டு பவளவிழாவைக் கொண்டாடும் சிறப்புமிகு காலத்தில் கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சியில் அமரவைத்து இந்தியாவே போற்றிவரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை இந்த ஆண்டு முதல் வழங்குவதில் தலைமைக் கழகம் பெருமை அடைகிறது.

    இந்த ஆண்டுக்கான "மு.க.ஸ்டாலின் விருது" தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • மகாவிஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

    கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

    இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இரு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவமதித்தல், வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

    செப்டம்பர் 20 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் மகாவிஷ்ணுவை ஐந்து நாட்கள் விசாரிக்க அனுமதி அளிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முன்னதாக இந்த விவகாரம் குறித்து விசாாரணை நடத்தி வரும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அசோக் நகர் அரசு பள்ளியில் ஆசிரியர்களிடம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். இதோடு, அந்த பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசியிடம் கண்ணப்பன் தொலைபேசியில் விசாரணை நடத்தினார்.

    அப்போது, "மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார்? அனுமதி வழங்கியது யார்?" என்ற இரண்டு கேள்விகளுக்கும் நாளைக்குள் எழுத்துப்பூர்வமான பதில் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

    • ஒருவர் இறந்துவிட்டால், அவர்களது உறவினர்கள் அளிக்கும் படிவம் 7ன் அடிப்படையில் பெயர் நீக்கப்படும்.
    • முகவரி மாற்றம் என்பது, வாக்குச்சாவடி அலுவர்களின் கள ஆய்வின்போது கண்டறியப்படுகிறது.

    வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை தன்னிச்சையாக நீக்க முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் புகாருக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

    வாக்களார் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கான பெயர்களை தேர்தல் துறையால் தன்னிச்சையாக நீக்கப்பட்டதாக ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார்.

    இதற்கு, விளக்கம் அளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறுகையில், "சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் விளக்கம் கேட்ட பிறகுதான் பெயர்கள் நீக்கப்படுகிறது. முகவரி மாற்றம், மரணம் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே பெயர்கள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு சுமார் 2 வார காலம் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகே, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுகிறது.

    ஒருவர் இறந்துவிட்டால், அவர்களது உறவினர்கள் அளிக்கும் படிவம் 7ன் அடிப்படையில் பெயர் நீக்கப்படும். வீடுகளில் வாக்காளர்கள் இல்லாமல் இருப்பது, ஒவ்வொரு முறையும் வாக்குச்சாவடி அலுவலர்களால் உறுதி செய்யப்படுகிறது.

    முகவரி மாற்றம் என்பது, வாக்குச்சாவடி அலுவர்களின் கள ஆய்வின்போது கண்டறியப்படுகிறது" என்றார்.

    • அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது.
    • மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது.

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நாள்காட்டி 2018 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு (2024-25) அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு வருகிற 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன.

    பிளஸ் 1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு வருகிற 19 ஆம் தேதி துவங்கி, 27 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளன. 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்தார்.
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் இன்று, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்றி பிரச்சார பயணம் மேற்கொண்டார்.

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உண்ணாமலைக்கடை, கொல்லஞ்சி, நட்டாலம், நல்லூர், விளாத்துறை ஆகிய பகுதிகளில் இன்று வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்தார்.

    இதேபோல், தோவாளை செக்கர்கிரி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் நெடுவிளை அருள்மிகு சிவ சுடலை மாடசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பக்தர்களுடன் இன்று விஜய் வசந்த் எம்.பி கலந்து கொண்டார்.

    தொடர்நது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள் விஜய் வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • முதல் மாநில மாநாடு அதன் மாநில தலைவர் கே.வி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் கருத்து.

    கல்பாக்கம் அடுத்த முகையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கனகபுரீஸ்வரர் கோயில் அருகில் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு அதன் மாநில தலைவர் கே.வி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது. 

    இதில் முக்கிய கோரிக்கையாக, கள் இறக்க அனுமதி, அதை பதப்படுத்தி வைக்க குளிரூட்டும் மையம், அரசு சார்பில் ம.பொ.சிக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், ம.பொ.சி பெயரில் அரசு விருது கொடுக்க வேண்டும், கள்ளுக்கடை திறக்க வேண்டும், பதநீர் இறக்கும் பனைமர தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களை போலீசார் கைது செய்யக்கூடாது, பனை, தெண்ணை மரங்களில் இருந்து தொழிலாளி விழுந்து இறந்தால் அரசு 10லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், பதநீர் மதிப்புகூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழில் கூடங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை முன்வைத்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

    இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறுகையில், " காமராஜரும்- ம.பொ.சி யும் நாணயத்தின் இரு பக்கங்கள். விரைவில் ம.பொ.சிக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்டை மாநிலங்களில் கள் இறக்க அரசு உரிமம் வழங்கியது போல் தமிழக அரசும் கள் இறக்கும் தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்க வேண்டும்" என்றார்.

    தமிழ்நாடு நிலதரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை வி.என்.கண்ணன், முகையூர் கண்ணன், உதயகுமார், சிவகண்ணன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர் என 1000க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

    • பெரும்பாக்கம் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுகிறது.
    • 180 போலீசார் பணியில் உள்ளனர் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

    சென்னை பெரும்பாக்கம் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பான வழக்கில், "தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கபடவில்லை" என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    பெரும்பாக்கம் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுகிறது என மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அப்போது, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 180 போலீசார் பணியில் உள்ளனர் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கக்கூடிய சூழலில் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    காவல்துறையினரின் அறிக்கை திருப்திகரமாக இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா வரும் செப்டம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
    • இந்த விவகாரம் சர்ச்சையானதால் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியலில் இருந்து ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் தமுக்கம் மைதானத்தில் வைத்து தமிழக அரசு சார்பில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா வரும் செப்டம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. புத்தகக் கண்காட்சியில் பார்வையாளர்களை ஈர்க்க பிரபலங்களும் மேடைப் பேச்சாளர்களும் அழைக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் மதுரையில் தற்போது நடக்கும் புத்தகத் திருவிழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், மதுரை எம்பி சு. வெங்கடேசன், பேச்சாளர்கள் ஞானசம்பந்தன், ஐ லியோனி, பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் ராமர் அழைக்கப்பட்டிருந்தார்.

    ராமர் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். நகைச்சுவை என்ற தனித்திறமையால் அவரை அழைத்தோம், அவருக்கென்று தனி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை, பர்வீன் சுல்தானா பேசிய பிறகு சிறிது நேரம் அவர் பேசுவார் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் வாசகர்களுக்கான புத்தகக் கண்காட்சியில் புத்தகம் சார்ந்த எழுத்து சார்ந்த நபர்களை அழைக்காமல் தொலைக்காட்சி பிரபலங்களை அழைப்பதற்குப் பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது.

    இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையானதால் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியலில் இருந்து ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் புகைப்படம் இடம்பெற்ற விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் காகிதம் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிகழ்ச்சியில் ராமர் பங்கேற்கவில்லை மாட்டார் என்று கூறப்படுகிறது. 

    ×