என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • குடிக்கிறவர்களின் எண்ணிகையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி ஒரு வரலாறு படைத்ததுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை.
    • அ.தி.மு.க. என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்.

    மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்திருப்பது பற்றி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருப்பதாவது:-

    மது என்பது சமுதாயத்துக்கு மிகப்பெரிய கேடு. குறிப்பாக தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் பூரண மது விலக்கு கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கையில் பதாகையுடன் பூரண மது விலக்கு வேண்டும் என்று வீட்டு முன்பு கோஷமிட்டு போராடினார். இதை அனைவரும் அறிவார்கள்.

    அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாபாரம் ஆகாத 500 மதுக்கடையை மூடிவிட்டு அதற்கு பதிலாக எப்.எல்.2 லைசென்சு,1,500 கடைகளுக்கும், 3 ஆயிரம் மனமகிழ் மன்றங்களுக்கும் லைசென்சு கொடுத்து விட்டு அதற்கு பிறகு ரூ.35 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.42 ஆயிரம் கோடியாக மதுக்கடை வருமானத்தை உயர்த்தி விட்டு, குடிக்கிறவர்களின் எண்ணிகையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி ஒரு வரலாறு படைத்ததுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை.

    அது தோழமையில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு இப்போது பிடிக்கவில்லை. அதன் அடிப்படையில்தான் முதலில் திருமாவளவன் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்.

    குரல் கொடுத்தது மட்டுமின்றி ஒரு நல்ல விசயத்துக்காக அவர் மாநாடு நடத்துகிறார். இந்த மாநாடு நல்ல நோக்கத்துக்காக நடைபெறும் மாநாடு என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.

    அ.தி.மு.க. என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் பேராதரவு பெற்றுள்ள இயக்கம் அ.தி.மு.க. என்பதால் அந்த அடிப்படையில் இன்று அழைப்பு கொடுத்துள்ளார்.

    இதில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்.

    இவ்வாறு ஜெயக்குமார் கூறி உள்ளார்.

    • 2 பேரும் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
    • பொதுமக்கள் அளித்த புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சி பாரதி அண்ணாநகர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக இருப்பவர் வனிதா. உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் சேதுமுருகன். இவர்கள் 2 பேரும் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.

    வாரத்தில் 1 நாள் கூட தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வருவதில்லை என்றும், மாணவர்களின் கோரிக்கை குறித்து ஆசிரியர்களோ, பெற்றோர்களோ புகார் அளிக்கச் சென்றால் அங்கு யாரும் இருப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    தலைமை ஆசிரியைக்கு உடந்தையாக உதவி தலைமை ஆசிரியரும் செயல்பட்டதால் அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த மாதம் 20-ந் தேதி மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தபோது பொதுமக்கள் அளித்த புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டது.

    இந்நிலையில் கொடைக்கானலில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகாருக்கு உள்ளான வில்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இதனையடுத்து தலைமை ஆசிரியை வனிதாவையும், உதவி தலைமை ஆசிரியர் சேதுமுருகனையும் பணி இடமாற்றம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி தலைமை ஆசிரியை வனிதா அடுக்கம் ஊராட்சி சாமக்காட்டு பள்ளம் பகுதியில் உள்ள பள்ளிக்கும், உதவி தலைமை ஆசிரியர் சேதுமுருகன் பூண்டி பகுதியில் உள்ள பள்ளிக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    • கூட்டத்தில் மாவட்ட வாரியாக சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றி விவாதிக்கப்படுகிறது.
    • உறுப்பினர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை போக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை கடந்த 2-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாட்டிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது.

    ஒரு பூத்துக்கு 150 முதல் 200 பேர் வீதம் ஒரு கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் அந்த இலக்கை அடையும் அளவுக்கு உறுப்பினர் சேர்க்கையில் விறுவிறுப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கடந்த 6-ந்தேதி காணொலி வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்துக்கும் குறைவானவர்களே உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு அமைப்பு செயலாளர் பி.எல். சந்தோஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் 50 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்த்து இருக்க வேண்டும். அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் வாரத்தில் குறித்த இலக்கை அடைய வேண்டும் என்றும் அப்போது உத்தரவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக்குவது தொடர்பாக ஆலோசிக்க கட்சியின் மையக்குழு கூட்டம் வருகிற 13-ந்தேதி நடக்கிறது.

    மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், கார்த்தியாயினி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றி விவாதிக்கப்படுகிறது. மேலும் உறுப்பினர்கள் குறைவாக சேர்ந்திருப்பதால் அதற்கான காரணம் பற்றியும் கேட்கிறார்கள்.

    அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதிக்குள் 75 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தாக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. உறுப்பினர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை போக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    • சாராய விற்பனையில் அரசு ஒரு தாராளமான நிலைப்பாட்டை எடுக்கிறது.
    • இதனால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று பத்திரிகையாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அக்டோபர் 2-ந்தேதி மகாத்மா காந்தி பிறந்தநாள் அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். 2006-ல் இருந்து 2024 வரை 1589 பேர் பலியாகியுள்ளனர்.

    2016 தேர்தல் அறிக்கையில் திமுக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று உறுதியளித்தது. திமுக-வுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு. அதிமுக-வுக்கும் உடன்பாடு உண்டு. இடது சாரி கட்சிகளுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் உடன்பாடு உண்டு.

    எல்லா கட்சிகளுக்கும் மதுவிலக்கை வலியுறுத்தும் நிலையில், மதுக்கடைகளை மூடுவதில் தயக்கம் ஏன்? என்பதுதான் எல்லோருடைய கேள்வி.

    நல்லச்சாராயத்தால் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல. சாராயம் என்றாலே அது கேடுதான். நல்லச்சாராயம் என்று ஏதும் இல்லை.

    உள்ளத்திற்கும், உடலுக்கும் தீங்கானது. சமூகத்திற்கும், தேசத்திற்கும் கேடானது. ஆகவே முழுமையான மதுவிலக்குதான் தீர்வாக இருக்க முடியும்.

    அரசாங்கமே மதுவை விற்பனை செய்தால் கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்த முடியும் என்பதை கற்பனையான வாதம். எல்லா மாநிலங்களிலும் கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருக்கிறது. ஒன்றிரண்டு மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் அரசுகள் மதுபான கடைகளை திறந்திருக்கிறது.

    பீகார், குஜராத் மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்தினாலும் கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருக்கதான் செய்கிறது. அதற்கு காரணம் அண்டை மாநிலங்களில் மதுபானங்கள் இருப்பதால். அதனால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சாராய விற்பனையில் அரசு ஒரு தாராளமான நிலைப்பாட்டை எடுக்கும்போது, கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை.

    இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

    மேலும் தயக்கம் ஏன்? என்பது யாரை குறித்து கேட்கிறீர்கள் என்ற கேள்விக்கு மதுவிலக்கை வலியுறுத்தும் எல்லோருக்கும்தான். அதிமுகவும் சொல்கிறது. ஆனால் அமல்படுத்தவில்லை. அவர்களும் எங்களுடன் சேரட்டும். இந்த மாநாட்டிற்கு வர விரும்பினால் வரட்டும். அதிமுக கூட வரலாம். எந்த கட்சிகளும் வரலாம் என்றார். மது ஒழிப்பை வலியுறுத்தும் அனைவரும் ஒரே மேடையில் நிற்கும் தேவை உள்ளது.

    • எனக்கு எந்த சம்மனும் வரவில்லை.
    • எனது வக்கீல்கள் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான் உண்மையை மட்டுமே பேசுவேன்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று நெல்லை மாவட்டத்தில் பாளை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது.

    இதனை சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் எனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நான் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் அது தொடர்பாக எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. எனது தனி பாதுகாவலரிடம் சம்மன் சென்றதாகவும், அதை அவர் வாங்காமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லை. எனினும் எனது வக்கீல்கள் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான் உண்மையை மட்டுமே பேசுவேன்.

    அ.தி.மு.க. வக்கீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற 13-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று விட்டதால், வேளாண்மைக்கு புத்துயிரூட்டுவது சாத்தியமற்றதாகி வருகிறது.
    • ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டமாகவும், வேலை வாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டமாகவும் திகழும் தருமபுரி மாவட்டத்தை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தருமபுரி மாவட்ட மக்கள்நலன் காக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.

    தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 4.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், அதில் 1.96 லட்சம் ஹெக்டேர், அதாவது 43.52 சதவீதம் நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெற்றவை. மீதமுள்ள 56.48 சதவீதம் நிலங்களில் மழையை நம்பி தான் விவசாயம் நடைபெறுகிறது. அதனால், தருமபுரி மாவட்ட வேளாண் குடும்பங்கள் நிலம் இருந்தும் பாசன ஆதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதனால், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு, 3 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் வேலை தேடிச் சென்றுள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று விட்டதால், வேளாண்மைக்கு புத்துயிரூட்டுவது சாத்தியமற்றதாகி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை, கேசரகுழிபள்ளம் அணை, சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, தொப்பையாறு அணை, நாகாவதி அணை, பஞ்சப்பள்ளி அணை, வரட்டாறு அணை, வள்ளிமதுரை அணை, வாணியாறு அணை ஆகிய 10 அணைகளும் வறண்டு கிடக்கும் நிலையில், அந்த அணைகளில் மட்டுமின்றி, 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகளிலும் நிரப்பி ஆண்டு முழுவதும் உழவு செய்வதை உறுதிப்படுத்துவதற்கான உன்னத திட்டம் தான் தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டம் ஆகும்.

    இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை செல்லும் பாதையிலேயே இந்தத் திட்டத்திற்காக குழாய்களை அமைத்து தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு இடையே நீர் செல்லும் பாதை மன்னர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்டிருப்பதால் சில ஏரிகளில் நிரப்புவதன் மூலம் அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்ல முடியும்.

    ஒட்டுமொத்த மாவட்டமும் பயன் பெறும் தருமபுரி-காவிரி உபரி நீர்த் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.650 கோடியை செலவழிக்க அரசு மறுக்கிறது.

    தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டமாகவே தொடர்வதை அனுமதிக்க முடியாது. தருமபுரி மாவட்டத்தின் உழவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளையும் ஏற்று, தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்டோபர் 4-ந் தேதி வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பா.ம.க. அழைப்பு விடுத்திருக்கிறது. தருமபுரி மாவட்டத்தின் வளமான எதிர்காலத்திற்காக நடத்தப்படும் இந்த அறவழிப் போராட்டத்திற்கு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழு ஆதரவு கொடுத்து, தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனக் கோருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
    • தமிழக முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் மக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் மத்திய மந்திரி எல்.முருகன் முகாம் அலுவலகம் உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த அலுவலகத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.

    இந்த சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

     

    இதேபோல மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தையும் மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கிவைத்தார். இதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் எல்.முருகன் பேசியதாவது:-

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தினமும் 6 கொலைகள் நடக்கும் அளவுக்கு மிக மோசமான நிலை தமிழகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் வீதி வீதியாக டாஸ்மாக் கடை திறந்து மக்களை தி.மு.க. அரசு மதுவுக்கு அடிமையாக்கி வருகிறது.

    ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது எதற்காக நடந்தது என்று தமிழக அரசுக்கே தெரியாது. ஆன்மீகம் என்றாலே தி.மு.க. அரசு கைது நடவடிக்கை மேற்கொள்கிறது.

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் வைக்க தி.மு.க. அரசு கடும் நெருக்கடி கொடுத்தது. அதனையும் தாண்டி இன்று மக்கள் எழுச்சியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. தமிழகம் ஒரு ஆன்மீக பூமி அதனை தி.கவும், தி.மு.க.வும் அழிக்க நினைத்தால் அது முடியாது. இன்றைக்கு தமிழக அரசு இந்துக்களுக்கு விரோத அரசாக உள்ளது.

    தமிழக முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் மக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை. இதனை கடுமையாக கண்டிக்கிறேன். இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வது இல்லை. மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறார். நடிகர் விஜய் புதியதாக அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இவரும் இந்துக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை.

    ஒரே நாடு, ஒரே சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு பின் அயோத்தியில் ராமர் கோவிலை பா.ஜ.க. அரசு கட்டி முடித்துள்ளது. 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி மலரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் ராஜ்குமார், மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளி தாளாளர் சோமசுந்தரம், பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவன தலைவர் என்.எஸ்.வி.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம்.
    • ஆசிரியர்களின் கோரிக்கைக்கு காதை பொத்திக்கொண்டு போகும் அரசு அல்ல திமுக அரசு.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 2 நாள் ஆய்வுக்காக பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இன்று கொடைக்கானலில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    * தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம்.

    * டிட்டோ ஜாக் அமைப்பில் உள்ள ஆசிரியர்களை அழைத்து கோரிக்கைகளை குறித்து பேசி தீர்ப்போம்.

    * ஆசிரியர்களின் கோரிக்கைக்கு காதை பொத்திக்கொண்டு போகும் அரசு அல்ல திமுக அரசு என்று கூறினார்.

    • எதிர்காலத் தலைமுறையினரை அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்குவது ஆசிரியர்கள் தான்.
    • தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பத்தாண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவற்றில் ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத தமிழக அரசு, கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் நாள் 243 என்ற எண் கொண்ட அரசாணையை பிறப்பித்து, அவர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை பறித்திருக்கிறது.

    ஆனால், சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் அமைப்புகள் பல கட்ட போராட்டங்களை நடத்தின. அதைத் தொடந்து அக்கோரிக்கையை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழு கடந்த ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. அக்குழுவினர் ஆசிரியர் அமைப்புகளுடன் மூன்று கட்ட பேச்சு நடத்தினர்.

    அதில் சிறிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக எந்த பேச்சும் நடத்தப்படவில்லை. மூவர் குழுவில் இடம் பெற்றிருந்த மூவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இப்போது அக்கோரிக்கை குறித்து மீண்டும் கருத்துக் கேட்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 20 மாதங்களாக எந்தத் தீர்வும் காணாமல், இனி கருத்துக் கேட்டு சிக்கலைத் தீர்க்கப் போவதாக அரசு கூறுவது ஏமாற்று வேலை ஆகும்.

    எளிதில் நிறைவேற்றக்கூடிய பல கோரிக்கைகளையும் நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி நிறைவேற்ற மறுக்கிறது தமிழக அரசு. தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் அந்த வழக்குகளை உயர்நீதிமன்ற ஒப்புதலுடன் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். ஆனால், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு தமிழக அரசுக்கு மனமில்லாதது தான் அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்.

    எதிர்காலத் தலைமுறையினரை அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்குவது ஆசிரியர்கள் தான். அதிலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இதில் சிறப்புப் பங்கு உண்டு. இத்தகைய பெருமை கொண்ட ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இறங்கி போராடுவதையே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருத வேண்டும்.

    எனவே, தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் அவர்களின் அடுத்தக்கட்ட கோட்டை முற்றுகைப் போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தேவேந்திரர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தீண்டாமையை எதிர்த்தவர்.
    • நீண்ட பயணத்திற்குப் பிறகு இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சி.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில்,

    நாளை செப்டம்பர் 11...

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் நினைவு நாள்!

    அதை நினைக்கும்போது எனது மனதில் பழைய நினைவுகள் நிழலாடுகின்றன.

    தியாகி இமானுவேல் சேகரனார் போற்றுதலுக்கு உரியவர்.

    ஆங்கிலம், இந்தி, ரஷிய மொழி உள்ளிட்ட 7 மொழிகளை கற்றறிந்தவர்.

    தேவேந்திரர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தீண்டாமையை எதிர்த்தவர். இவ்வளவு சிறப்பு மிக்க இவரது நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய நிகழ்வுகள் எதுவும் இல்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

    அந்த நிலையை மாற்றி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைத்து அங்கு முதன்முறையாக மரியாதை செலுத்தியது இந்த இராமதாசு தான். அதன்பிறகு தான் அங்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் செல்லத் தொடங்கினார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய சில மாதங்களில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காக மதுரை அனுப்பானடியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற என்னிடம் சிலர் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று வரலாம் என்று கூறினார்கள். ஆனால், அங்கு செல்வது சரியானதல்ல என்று வேறு சிலர் கூறினார்கள். ஆனால், இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று வருவது என்று தீர்மானித்து விட்டேன். கூட்டம் முடிந்ததும் கட்சி நிர்வாகிகளுடன் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு பயணித்தேன்.

    நானும், பா.ம.க. நிர்வாகிகளும் பரமக்குடி சென்றடைவதற்கு முன்பாகவே அங்குள்ள 5 முனை சாலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர். மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலருக்கு இது குறித்து தகவல் தெரியும் என்பதால் அவர்கள் தங்களின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து ஆட்களைக் கூட்டி விட்டனர். பரமக்குடியில் கூடி நின்றவர்களில் ஒரு பிரிவினர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அங்கிருந்தவர்களில் பலர் என் மகிழுந்தின் கார் மீது ஏறிக் கொண்டனர். எங்கள் மகிழுந்துகளைத் தொடர்ந்து ஏராளமான தானிகளிலும் பலர் அணிவகுத்து வந்தனர். அதனால் எங்களின் பயணம் அறிவிக்கப்படாத ஊர்வலமாகவே மாறி விட்டது.

    நீண்ட பயணத்திற்குப் பிறகு இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சி. ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அந்த மாவீரனின் நினைவிடம் பராமரிப்பின்றி கிடந்தது. அந்த இடத்தை நெருங்க முடியாதவாறு ஒரே துர்நாற்றம் வீசியது. கழிவு நீர் தேங்கிக் கிடந்தது. அந்த இடத்தில் பன்றிகளின் கழிவுகள் தான் நிரம்பிக் கிடந்தன. இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த எனது கண்களில் நினைவிடத்தின் அவலநிலையைக் கண்டு கண்ணீர் கசிந்தது.

    அந்த இடத்திலேயே இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக எனது சொந்தப் பணம் ரூ. 15 லட்சத்தை மதுரையைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி ஒருவரிடம் கொடுத்து நினைவிடத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். அந்த நிர்வாகியை பின்னாளில் வட தமிழகத்தில் உள்ள வந்தவாசி சட்டப்பேரவைத் தேர்தலில் நிறுத்தி, தேர்தலுக்கான செலவை முழுவதும் கட்சி சார்பில் செய்து அவரை சட்டப்பேரவை உறுப்பினராக்கி அழகு பார்த்தேன்.

    எனது சொந்தப் பணத்தில் இமானுவேல் சேகரனாரின் நினைவிடம் தூய்மைப்படுத்தப்பட்டு, கிரானைட் கற்கள் பொருத்தப்பட்டு அழகூட்டப்பட்டது. அதன்பின்னர் அடுத்து வந்த அவரது நினைவிடத்திற்கு சென்று நான் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்தினேன். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்று ஆணையிட்டேன். அதன்பிறகு தான் அவரது நினைவிடத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள். இமானுவேல் சேகரனார் 1957-ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். அதன்பின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் அஞ்சலி செலுத்தியதில்லை. அவரது நினைவிடத்தை நான் சீரமைத்து, மரியாதை செலுத்திய பிறகு தான் அங்கு மற்ற தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள்.

    இதற்கெல்லாம் முன்பாகவே 29.02.1988-ஆம் நாள் புதுச்சேரியில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் மத்தியக் குழுக் கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தை இமானுவேல் தேவேந்திரர் மாவட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி 17&ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலில் வன்னியர் சங்கம் சார்பிலும், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் நடத்தப்பட்ட அனைத்துக் கடிதத் தொடர்புகளிலும் இராமநாதபுரம் மாவட்டம் இமானுவேல் தேவேந்திரர் மாவட்டம் மாவட்டம் என்றே குறிப்பிடப்பட்டு வந்தது நினைவுகூரத் தக்கதாகும்.

    இந்த நினைவுகளுடன் தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் நினைவு நாளில் அவருக்கு நான் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர் கண்ட கனவுப்படியே தேவேந்திரகுல வேளாளர்களின் முழுமையான விடுதலைக்காக போராட அனைவரும் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • குற்றாலத்தை அடுத்த ஐந்தருவி பகுதியில் தண்ணீர் மெல்ல மெல்ல அதிகரித்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குண்டாறு மற்றும் அடவிநயினார் அணை பகுதிகளில் கனமழை பெய்தது.

    தென்காசி:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைப்பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. சேர்வலாறு அணை பகுதியில் 1 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் நகர் பகுதிகளை பொறுத்தவரை செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சில இடங்களில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு குளிர்ந்த காற்று வீசியது. ஒரு சில இடங்களில் இரவில் லேசான சாரல் அடித்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் சீசன் முடிவுற்ற நிலையிலும் அவ்வப்போது பெய்யும் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. சில நாட்களாக மழை இல்லாததால் நீர் வரத்து படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் நேற்று இரவில் திடீரென மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக குற்றாலத்தை அடுத்த ஐந்தருவி பகுதியில் தண்ணீர் மெல்ல மெல்ல அதிகரித்தது. திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் நீர்வரத்து அதிகமாக இருந்த நிலையில் வெள்ளம் ஏற்பட்டு, மண் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டதால் இரவு முழுவதும் மட்டுமின்றி இன்று காலை வரை தடை நீட்டிக்கப்பட்டது.

    அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலையிலும் குற்றாலம் பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மற்ற அருவிகளில் குளிப்பதற்கு எவ்வித தடையும் இல்லாததால் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சீராகும் பட்சத்தில் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குண்டாறு மற்றும் அடவிநயினார் அணை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. குண்டாறில் 6.2 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கரஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ×