என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • குறிப்பாக 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று டைரியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • ஆசிரியர்களின் பயிற்சிக்கு 10 நாட்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) ஆண்டு டைரியில் 220 தினங்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. குறிப்பாக 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று டைரியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து, பணிச்சுமையை குறைக்கும் வகையில், வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு வேண்டுகோள்களை வைத்தன. அவர்களின் கோரிக்கைகள், வேண்டுகோளை ஏற்று கற்றல், கற்பித்தல், தேர்வுகள் உள்பட பணிகளுக்கு 210 வேலைநாட்கள் தற்போது நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆசிரியர்களின் பயிற்சிக்கு 10 நாட்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

    இந்த திருத்தப்பட்ட டைரியை பின்பற்றி செயல்பட அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • சில அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கிய பணியில் மெத்தனமாக நடந்துகொண்டது தெரியவந்தது.
    • 2 விடுதி காப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளின் பணி ஆய்வுக்கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.

    இளைஞர்நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அரசின் சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

    அப்போது சில அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கிய பணியில் மெத்தனமாக நடந்துகொண்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் மதுரை தெற்கு வட்ட தாசில்தார் சரவணன், திருப்பரங்குன்றம் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    அதேபோல செல்லம்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

    இதுதவிர ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒரு சமையலர் ஆகியோரை உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் தாசில்தார் உள்ளிட்ட 4 பேர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் 2 விடுதி காப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த அதிரடி நடவடிக்கையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்துள்ளார்.

    • நீர்நிலைகளை தூர்வாரி, மழைநீரை சேகரித்து நீர் மேலாண்மை செய்வதற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
    • திட்டத்தின் மூலம் ஊரகப்பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும்.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை முடிவுபெறும் தருவாயில் இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிக பலன் தரக்கூடிய வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.

    இந்த மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விவசாயத்துக்கு பயன் தரக்கூடிய ஏரி, குளங்களை தூர்வாரி தயார் நிலைப்படுத்துவதுடன், நீர்நிலைகளை பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    அதன்படி முதல்கட்டமாக 5 ஆயிரம் சிறுபாசன ஏரி, குளங்கள் தூர்வாரப்படுகின்றன. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ.500 கோடியை அனுமதித்து இருக்கிறது.

    இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீர்நிலைகளை (ஏரி, குளங்கள்) தூர்வாரி, மழைநீரை சேகரித்து நீர் மேலாண்மை செய்வதற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 22 ஆயிரத்து 51 சிறுபாசன ஏரிகளில், முதல்கட்டமாக நடப்பு ஆண்டில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரம் சிறுபாசன ஏரிகளை புனரமைப்பதற்காக கடந்த 5-ந் தேதியன்று அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன்படி, சிறுபாசன ஏரிகளை எந்திரங்களை பயன்படுத்தி தூர்வாருதல், ஆழப்படுத்துதல், உபரி நீர்போக்கி (கலிங்கு), மதகு போன்ற அனைத்து கட்டமைப்புகளையும் பழுதுபார்த்தல், புனரமைத்தல், இணைப்பு வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல் ஆகியவற்றை பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    இந்த நீர்நிலைகளை புனரமைப்பதால், நீர்நிலைகளின் கொள்திறன் அதிகரிக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். இத்திட்டம், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாரம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் மூலமாகவும் மற்றும் மீதமுள்ள சிறுபாசன ஏரிகளுக்கு அரசு நிதி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் நிதியின் மூலமாகவும் பணிகள் நிறைவேற்றப்படும்.

    ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்புகளுடன் சேர்ந்து சிறுபாசன ஏரிகளின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்பு இல்லாத பட்சத்தில், புதியதாக பயன்பாட்டாளர்கள் குழுக்கள் அமைத்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இத்திட்டத்தின் மூலம் ஊரகப்பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வி.சி.க. சார்பில் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
    • இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வரலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் பங்குபெற அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தார்.

    திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை காலடிப்பேட்டையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அன்ன தானம் வழங்கும் விழாவில் பங்கேற்றார். அதன்பின், செய்தியாளர்களிடம் தமிழிசை பேசியதாவது:

    மத்திய நிதி மந்திரி, ஜனாதிபதி என பெண்களுக்கு பல இடங்களில் பா.ஜ.க. முன்னுரிமை அளித்து வருகிறது. இங்குள்ள பெண்கள் சமையலறையில் இருக்கிறார்கள் என ராகுல் காந்தி பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ராகுல் காந்தி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    திருமாவளவன் மதுவைப் பற்றி பேசும்போது ஏன் மதத்தைப் பற்றி பேசவேண்டும். திமுக கூட்டணியில் இருந்தால் 2026-ம் ஆண்டு வெற்றி கிடைக்காது என்பதை திருமாவளவன் புரிந்துகொண்டு விட்டார்.

    திருமாவளவன் நடத்தப் போகும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா? அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா? என்பது புரியவில்லை. தி.மு.க.வில் இருக்கும் கூட்டணி கட்சிகள் தி.மு.க.வின் மீது உள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.

    தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என கூறியது தவறு. தேசிய கல்விக் கொள்கையில் அப்பட்டமான அரசியலை ஸ்டாலின் அரசு செய்து வருகிறது என தெரிவித்தார்.

    • நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் விநாயகர் சதுரத்தி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது
    • இந்து முன்னணியினர் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் ஆக்கிரோஷமாக தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் விநாயகர் சதுரத்தி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்து முன்னணியினர் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் ஆக்கிரோஷமாக தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலத்தில் யாருடைய விநாயகர் சிலை முதலில் செல்ல வேண்டும் என்பது தொடர்பான தகராறு மோதலாக வெடித்துள்ளது. இந்நிலையில் மோதலை கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    • மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு எம்.பி. விஜய் வசந்த் தலைமை ஏற்று நடத்தினார்.
    • இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு தலைமை ஏற்று, மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாகர்கோவில் மாநகர மேயர் மற்றும் துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டம் தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் எம்.பி. விஜய் வசந்த் பகிர்ந்துள்ளார். 

    • மாணவர்கள் 5 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர் மட்டுமே பள்ளியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அரியலூர் மாவட்டம் குணமங்கலம் பகுதியில் அரசு தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களும் 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவரும் கள்ளிப்பால் கள்ளிச் செடியை உடைத்து, அதில் இருந்து வெளியேறிய பாலை சுவைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளிப்பால் குடித்ததை குறித்து மாணவர்கள் கூறியதை அடுத்து 5 பேருக்கும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர் மட்டுமே பள்ளியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
    • உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்

    நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    • சென்னையில் இருந்து மன்னார்குடி, தஞ்சாவூருக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • மன்னார்குடிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்குவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகா்கோவில், கோவை, மைசூரு, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களை இணைக்கும் வகையில் கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, தஞ்சாவூா் வழியாக மன்னார்குடிக்கு ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    'சென்னையில் இருந்து மன்னார்குடி, தஞ்சாவூருக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் வேளாங்கண்ணி, திருவாரூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக நகரங்களும், கடலூர் போன்ற வர்த்தக நகரங்களும் உள்ளன.

    சென்னை அல்லது பெங்களூரில் இருந்து டெல்டா மாவட்டம் வழியாக மன்னார்குடி அல்லது புதுச்சேரிக்கு புதிய வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது' என ரெயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து, சென்னை எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக மன்னார்குடிக்கு புதிய வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க ஆய்வு மேற்கொண்டு வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். சாத்தியக்கூறு தொடா்பான பல்வேறு அம்சங்களை ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து ரெயில்வே வாரியத்துக்கு அறிக்கை அளிப்பார்கள்.

    அதன் அடிப்படையில் மன்னார்குடிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்குவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • பேரறிஞர் அண்ணா உருவச்சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
    • நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    அ.தி,மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளான 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச்சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

    நிகழ்ச்சியில், மாவட்டக்கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் அரசு திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
    • ஆய்வுக்கூட்டத்தின் அறிக்கைகள் தயார் செய்யப்பட்ட பிறகு முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    சிவகங்கை:

    சிவகங்கையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் அரசு திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஆய்வுக்கூட்டத்தின் அறிக்கைகள் தயார் செய்யப்பட்ட பிறகு முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்து அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடிக்கிறவர்களின் எண்ணிகையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி ஒரு வரலாறு படைத்ததுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை.
    • அ.தி.மு.க. என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்.

    மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்திருப்பது பற்றி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருப்பதாவது:-

    மது என்பது சமுதாயத்துக்கு மிகப்பெரிய கேடு. குறிப்பாக தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் பூரண மது விலக்கு கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கையில் பதாகையுடன் பூரண மது விலக்கு வேண்டும் என்று வீட்டு முன்பு கோஷமிட்டு போராடினார். இதை அனைவரும் அறிவார்கள்.

    அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாபாரம் ஆகாத 500 மதுக்கடையை மூடிவிட்டு அதற்கு பதிலாக எப்.எல்.2 லைசென்சு,1,500 கடைகளுக்கும், 3 ஆயிரம் மனமகிழ் மன்றங்களுக்கும் லைசென்சு கொடுத்து விட்டு அதற்கு பிறகு ரூ.35 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.42 ஆயிரம் கோடியாக மதுக்கடை வருமானத்தை உயர்த்தி விட்டு, குடிக்கிறவர்களின் எண்ணிகையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி ஒரு வரலாறு படைத்ததுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை.

    அது தோழமையில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு இப்போது பிடிக்கவில்லை. அதன் அடிப்படையில்தான் முதலில் திருமாவளவன் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்.

    குரல் கொடுத்தது மட்டுமின்றி ஒரு நல்ல விசயத்துக்காக அவர் மாநாடு நடத்துகிறார். இந்த மாநாடு நல்ல நோக்கத்துக்காக நடைபெறும் மாநாடு என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.

    அ.தி.மு.க. என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் பேராதரவு பெற்றுள்ள இயக்கம் அ.தி.மு.க. என்பதால் அந்த அடிப்படையில் இன்று அழைப்பு கொடுத்துள்ளார்.

    இதில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்.

    இவ்வாறு ஜெயக்குமார் கூறி உள்ளார்.

    ×