என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

5 ஆயிரம் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும்... தமிழக அரசு ரூ.500 கோடி ஒதுக்கியது
- நீர்நிலைகளை தூர்வாரி, மழைநீரை சேகரித்து நீர் மேலாண்மை செய்வதற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
- திட்டத்தின் மூலம் ஊரகப்பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும்.
சென்னை:
தென்மேற்கு பருவமழை முடிவுபெறும் தருவாயில் இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிக பலன் தரக்கூடிய வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.
இந்த மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விவசாயத்துக்கு பயன் தரக்கூடிய ஏரி, குளங்களை தூர்வாரி தயார் நிலைப்படுத்துவதுடன், நீர்நிலைகளை பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன்படி முதல்கட்டமாக 5 ஆயிரம் சிறுபாசன ஏரி, குளங்கள் தூர்வாரப்படுகின்றன. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ.500 கோடியை அனுமதித்து இருக்கிறது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீர்நிலைகளை (ஏரி, குளங்கள்) தூர்வாரி, மழைநீரை சேகரித்து நீர் மேலாண்மை செய்வதற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 22 ஆயிரத்து 51 சிறுபாசன ஏரிகளில், முதல்கட்டமாக நடப்பு ஆண்டில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரம் சிறுபாசன ஏரிகளை புனரமைப்பதற்காக கடந்த 5-ந் தேதியன்று அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, சிறுபாசன ஏரிகளை எந்திரங்களை பயன்படுத்தி தூர்வாருதல், ஆழப்படுத்துதல், உபரி நீர்போக்கி (கலிங்கு), மதகு போன்ற அனைத்து கட்டமைப்புகளையும் பழுதுபார்த்தல், புனரமைத்தல், இணைப்பு வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல் ஆகியவற்றை பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நீர்நிலைகளை புனரமைப்பதால், நீர்நிலைகளின் கொள்திறன் அதிகரிக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். இத்திட்டம், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாரம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் மூலமாகவும் மற்றும் மீதமுள்ள சிறுபாசன ஏரிகளுக்கு அரசு நிதி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் நிதியின் மூலமாகவும் பணிகள் நிறைவேற்றப்படும்.
ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்புகளுடன் சேர்ந்து சிறுபாசன ஏரிகளின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்பு இல்லாத பட்சத்தில், புதியதாக பயன்பாட்டாளர்கள் குழுக்கள் அமைத்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ஊரகப்பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






