என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பியது.
    • டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையும் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி நிரம்பியது.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையின் காரணமாக மீண்டும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 619 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 11 ஆயிரத்து 631 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. மேலும் அணையின் நீர்மட்டம் 112.39 அடியாக இருந்தது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 23 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.

    நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டாலும், அதை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது அணையில் 81.85 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • ஒரு சில காவல் துறையினர் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக வரும் செய்திகள் வெட்கக் கேடானதாகும்.
    • விடியா திமுக ஆட்சியில் தமிழகம் போதைப் பொருள் கேந்திரமாக மாறியுள்ளது.

    சென்னை:

    அ.திமு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அமெரிக்காவில் மோட்டார் பொருத்திய சைக்கிளை மிதிப்பது போல் நடிக்கும் பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நடவடிக்கை விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது. கடந்த 40 மாதங்களாக தமிழகத்தில் நாள்தோறும் சமூக விரோதச் செயல்களும், குற்றச் செயல்களும் அரங்கேறி வருகின்றன.

    திமுக ஆட்சியில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும் சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக குற்றம் புரிவது வாடிக்கையாக இருக்கிறது. 6 வயது சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை, யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை விடியா திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை, குறிப்பாக பாலியல் குற்றச் செயல்கள் பற்றி, நான் பலமுறை சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் விடியா திமுக அரசின் கவனத்தை ஈர்த்தும், அதைத் தடுக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை நாளிதழ்களும், ஊடகங்களும் தினசரி நிகழ்வுகளாகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

    காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தமிழக காவல்துறைக்கு முழு சுதந்திரத்தை இன்றுவரை வழங்கவில்லை. மேலும், விடியா திமுக அரசின் முதலமைச்சருடைய செயலற்றத் தன்மையால் ஒருசில காவல் துறையினர் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக வரும் செய்திகள் வெட்கக் கேடானதாகும்.

    விடியா திமுக ஆட்சியில் தமிழகம் போதைப் பொருள் கேந்திரமாக மாறியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா, போதை மாத்திரைகள், மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் பயன்பாட்டால், குற்றவாளிகள் தங்கள் நிலையை மறந்து திருட்டு, பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் சர்வசாதாரணமாக ஈடுபடுகின்றனர்.

    11.9.2024 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையின்போது, "தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும், இதனை கட்டுப்படுத்த முடியவில்லையெனில் சிறப்புக் குழு போடுவோம்" என்று விடியா திமுக அரசை எச்சரித்துள்ளது. இதுபோன்ற நிலைமை இதுவரை தமிழகத்திற்கு ஏற்பட்டதில்லை. ஊடகங்களில் நாள்தோறும் வரும் செய்திகளில் பெண்களும், சிறுமிகளும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். தங்களுடைய உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மக்கள் அன்றாடம் அல்லல்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. அந்த வகையில், ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் வெளிவந்த பாலியல் குற்றச்சாட்டுகளில் ஒருசிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

    * கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தேசிய மாணவர் படை பயிற்சியாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று புகார்.

    * கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு (12 வயதுக்குட்பட்ட 9 மாணவிகளுக்கு) பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் நடராஜன்,

    * சிவகங்கை, மாவட்டம் காரைக்குடி அருகே 3 ஆம் வகுப்பு மாணவிக்கு, முத்து என்ற 72 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மேலும் பல சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    * கோவை மாவட்டம், வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக பேராசிரியர்கள் சதீஸ்குமார், ராஜபாண்டி, முரளிராஜ் மற்றும் லேப் டெக்னீஷியன் அன்பரசு ஆகிய 4 நபர்கள் மீது மாணவிகள் புகார்.

    * திருச்சி, மேலப்புதூர் பகுதியில், டிஇஎல்சி நிர்வாகத்திற்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளவர் கிரேஸ் சகாயராணி. இவரது மகன் சாம்சன் டேனியல் (வயது 31) லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். பள்ளி ஹாஸ்டலில் தங்கியுள்ள விடுதி மாணவிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுபோல 6 மாதங்களாகவே, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    * தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் மீது புகார்.

    * 17 வயது கல்லூரி மாணவி திருச்சி சூப்பிரண்டு அலுவலகத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், லால்குடி அருகே சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் அமைச்சர் ஒருவரின் ஓட்டுநர் எனக் கூறி அவரது 5 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாகப் புகார்.

    * சென்னை அண்ணாநகரில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இதன்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியின் பெற்றோரைத் தாக்கியதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்ததையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.

    ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். சமீப காலங்களில் ஊடகம் மற்றும் நாளிதழ்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினசரி செய்திகளாக வெளிவருவதைப் பார்த்து தமிழக மக்களுடன் நானும் மிகுந்த வருத்தமும், மன வேதனையும் அடைந்துள்ளேன். சமூக விரோத சக்திகளைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்த விடியா திமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த 40 மாதகால திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய; சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக்

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், 24.9.2024 செவ்வாய் கிழமை காலை 9.30 மணியளவில், சென்னை - மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி அவர்கள் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

    விடியா திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், இளம் பெண்கள் பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகளும், மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • அனைத்து தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்.
    • புதிய வாக்காளர்களை நாம் சேர்க்க வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. கட்சியினர் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தி.மு.க. கொடி ஏற்ற வேண்டும். வருகிற 15, 16, 17 ஆகிய 3 தேதிகளில் அனைவரும் கருப்பு, சிவப்பு அணிந்த துண்டை அணிந்து செல்ல வேண்டும்.

    தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அனைவரும் கடைசி வரை இருக்க வேண்டும். ஒரு ஓட்டு என்பது கூட முக்கியமானது. காட்பாடி தொகுதியை பொறுத்தவரை உழைத்தோம். ஆனால் அதிகமான நேரத்தில் ஓய்வு எடுத்து விட்டோம். இப்பொழுது உள்ள முறைகள் சரியில்லை. வருகிற 20-ந் தேதிக்கு பிறகு அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் நான் நேரில் வந்து மக்களுடைய குறைகளை கேட்டு அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.

    வாக்குச்சாவடிகளில் பழைய முகவர்கள் சரியில்லை என்றால், அவர்களை நீக்கி விட்டு புதியவர்களை சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் காட்பாடி தொகுதி பழைய முறைப்படி தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலைமை மீண்டும் ஏற்படும்.

    கடந்த முறை என்ன நடந்தது? தோற்றுவிடுவோம் என்ற நிலை இருந்தது. அதை நான் சவாலாக எடுத்துக் கொண்டேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். ஏன் அனைத்து தொகுதிகளிலும் சொல்லவில்லை என்றால் எதிர்க்கட்சி 34 தொகுதியிலாவது வரட்டுமே என்ற எண்ணம் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதியாக இருந்து வெற்றி பெற்று விடுவார்.

    இப்பொழுது புதிய வாக்காளர்களை நாம் சேர்க்க வேண்டும். அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் வந்த பிறகு கட்சியில் பல மாறுதல்கள் செய்ய வேண்டும்.

    அனைத்து தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். ஒளிமயமான எதிர்காலம் வந்துள்ளது. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.54,600-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.54,600-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.6,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ரூ. 95-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • வில்லூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    விருதுநகர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்துள்ள வில்லூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்த பின் நிர்வாகிகளுக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. சிலர் கூட்டம் நடந்த இடத்தில் சாப்பிட்டனர். பலர் வீட்டிற்கு கொண்டு சென்று குடும்பத்துடன் சாப்பிட்டனர்.


    பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    17 பெண்கள், குழந்தைகள் உள்பட 39 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பாதிக்கப்பட்ட 39 பேரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    தி.மு.க. பொதுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிட்ட கட்சியினரும், அவர்களது குடும்பத்தினரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பொதுக்கூட்டத்தில் விநியோகம் செய்யப்பட்ட பிரியாணி தரம் குறைந்து இருந்ததால் கெட்டுபோன இறைச்சி சேர்க்கப்பட்டதா? என தெரியவில்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க.வினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கடவுளாக இருந்தால்கூட “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று வாதாடிய மண் இந்த மண்.
    • இந்த மண்ணின் உயிர்நாடியே “அதிகாரத்தை கேள்வி கேட்பதுதான்”.

    கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    இதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயல்பாட்டாளர் சுந்தரராஜன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "இது தமிழ்நாட்டின் மாண்பை குறைக்கும் செயல்மட்டுமல்ல, தமிழ் தொழில்முனைவோரின் மாண்பை அழிக்கும் செயல்".

    கடவுளாக இருந்தால்கூட "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதாடிய மண் இந்த மண்.

    இந்த மண்ணின் உயிர்நாடியே "அதிகாரத்தை கேள்வி கேட்பதுதான்".

    இதுதான் தமிழ்நாட்டின் உயிர்துடிப்பு. கொங்கு பெருமை பேசுவோர் இப்படி மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டதற்கு என்ன எதிர்வினை?

    நீங்கள் மன்னிப்பு கேட்டு இருக்கக்கூடாது "அன்னப்பூர்னா சீனிவாசன்".

    நீங்கள் சொல்லிய அல்லது கேட்ட எதுவும் தவறு கிடையாது.

    மன்னிப்பு கேட்டதுதான் தவறு என்று கூறியுள்ளார்.

    • தமிழக முதலமைச்சரை தலைவராக கொண்ட நிறுவனத்தின் துணைத்தலைவராக சுதா சேஷையன் 3 ஆண்டுகள் செயல்படுவார்.
    • சுதா சேஷையன் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக டாக்டர். சுதா சேஷையனை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராக கொண்ட நிறுவனத்தின் துணைத்தலைவராக சுதா சேஷையன் 3 ஆண்டுகள் செயல்படுவார்.

    சுதா சேஷையன் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயணிகள் நிழற்குடை மேற்கூரையின்றி காட்சி அளிக்கிறது.
    • நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொட்டாம்பட்டி:

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே திண்டுக்கல்-காரைக்குடி சாலை உள்ளது. இந்த சாலையில் காரியேந்தல்பட்டி விலக்கு பஸ் நிறுத்தத்தில் நெடுஞ்சாலைத்துறையால் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு சிமெண்டால் ஆன பயணிகள் இருக்கையும், தகர செட்டால் ஆன மேற்கூரையும் அமைக்கப்பட்டு இருந்தன.

    இந்த பஸ் நிறுத்தத்தை சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பயணிகள் நிழற்குடையின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த தகர செட்டை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இதனால் பயணிகள் நிழற்குடை மேற்கூரையின்றி காட்சி அளிக்கிறது. பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டது.
    • சென்னையின் முக்கிய சேவையான மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறையிலும், 400/23 கிலோவாட் மின்சார பாதையிலும் திடீர் பழுது ஏற்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் உயர் அழுத்த மின் வழித்தடத்தில் ஏற்பட்ட லேசான உராய்வும், அதனைத்தொடர்ந்து வெடித்த தீப்பொறிகளுமே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

    இந்த பழுதின் எதிரொலியாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டது.

    சென்னை எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, சென்டிரல், மந்தைவெளி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை, நந்தனம், பெருங்குடி, தியாகராயநகர், சூளைமேடு, வில்லிவாக்கம், அயப்பாக்கம், திருமுல்லைவாயல், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட நகரின் பல இடங்கள் இருளில் மூழ்கின.

    ராயபுரம், துறைமுகம், ஆர்.கே.நகர், தண்டையார்ப்பேட்டை, வியாசர்பாடி, திருவொற்றியூர், பெரம்பூர், கொடுங்கையூர், ஓட்டேரி என வடசென்னை பகுதிகள் முழுவதுமே மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு தூக்கத்தை தொலைத்து மக்கள் திண்டாடி போனார்கள். மக்கள் அனைவருமே மின் நிலையங்களையும், மின்னக கட்டுப்பாட்டு அறை எண்ணையும் தொடர்புகொண்டு புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர். முக்கிய சாலைகளும் இருளில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணித்தனர்.

    சென்னையின் முக்கிய சேவையான மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை - மயிலாப்பூர் இடையிலான பறக்கும் ரெயில் நிலையங்கள் அனைத்துமே மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருளில் மூழ்கின. இருள் சூழ்ந்திருந்ததின் காரணமாக ரெயில்களும் மெதுவான வேகத்திலேயே இயக்கப்பட்டன. பயணிகள் செல்போன் வெளிச்சத்திலேயே ரெயில்களில் பயணித்தனர்.

    பின்னர் சில மணி நேரத்தில் மின்வெட்டு சரி செய்யப்பட்டது. மின்வெட்டால் நேற்று இரவு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின்தடைக்கான காரணம் குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,

    அலமாதி மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்தால் மின் ஆதாரங்கள் செயலிழந்ததால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.

    சென்னையில் ஏற்பட்ட மின்தடை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 சதவீதம் சரி செய்யப்ட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து மருத்துவமனை அத்தியாவசிய சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    • நள்ளிரவில் திடீரென கொட்டகையில் தீப்பிடித்து மளமளவென எரிந்தது.
    • யானையின் தும்பிக்கை, முகம், தலை, வயிறு, பின்பகுதி, வால் உள்ளிட்ட இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் பிரசித்தி பெற்ற குன்றக்குடி சண்முகநாதர் மலைக்கோவில் அமைந்துள்ளது. மலை மீது அமையப் பெற்ற இந்த கோவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மதுரை மண்டலம் சிவகங்கை வனக்கோட்டம் திருப்பத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்டதாகும்.

    இதன் அடிவாரத்தில் கோவில் யானை தங்குவதற்காக தகரத்தினாலான கொட்டகை போடப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதில் கூரையும் வேயப்பட்டு இருந்தது.

    இந்த கோவிலில் வளர்ப்பு யானை சுப்பு என்ற சுப்புலட்சுமி பெண் (வயது 54) கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் யானை தங்க வைக்கப்பட்டிருந்த கொட்டகையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டு மேற்கூரை தீப்பற்றி எரிந்தது.

    இதில் யானையின் மீது எரிந்த கூரை விழுந்து தீக்காயங்கள் ஏற்பட்டது. வலியால் துடித்த அந்த யானை பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு கொட்டகையில் இருந்து வெளியேறியது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள் உடனடியாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் குன்றக்குடி உதவி கால்நடை மருத்துவர் சிரஞ்சீவி மற்றும் மதுரை, தேனி, நாமக்கல், ஒரத்தநாடு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவக்கு ழுவினர் நேரில் சென்று தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

    30 சதவீத தீக்காயம் ஏற்பட்ட நிலையில் யானை சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தது. யானை சுப்புலட்சுமி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குன்றக்குடி சண்முகநாதன் கோவிலுக்கு பக்தர் ஒருவரால் கடந்த 1971 ஆம் ஆண்டு இந்த யானை வழங்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் மிகுந்த அன்பைப் பெற்றதாக திகழ்ந்தது.

     

    தீ விபத்தில் உயிரிழந்த யானை சுப்புலட்சுமிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அஞ்சலி செலுத்தியபோது எடுத்தபடம்.

    தீ விபத்தில் உயிரிழந்த யானை சுப்புலட்சுமிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அஞ்சலி செலுத்தியபோது எடுத்தபடம்.

    உயிரிழந்த யானைக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, மாவட்ட வன அலுவலர் பிரபா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் யானையின் உடலுக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் கண்ணீருடன் வழிபட்டனர்.

    யானை மறைவையொட்டி குன்றக்குடி கோவிலில் இன்று மணி அடிக்காமல் பூஜை நடத்தப்பட்டது. மேலும் குன்றக்குடி வர்த்தக சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. யானையின் உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

    • கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
    • ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்யும் வகையில் அமெரிக்காவின் RGBSI நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 19 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த ஆக.27-ந்தேதி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார்.

    இப்பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை அவர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான கேட்டர்பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள், ஆப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு எந்திரங்கள், தொழில்துறை எரிவாயு விசையாழிகள் மற்றும் டீசல்-எலக்ட்ரிக் என்ஜின்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் கட்டுமானத் தொழில்கள், வளத் தொழில்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து, நிதி தயாரிப்பு பொருட்கள் ஆகிய 4 வணிகப் பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    கேட்டர்பில்லர் நிறுவனம் டிராக்டர்கள் முதல் ஹைட்ராலிக் அகழ்வாராய்ச்சிகள், பேக்ஹோ ஏற்றிகள், மோட்டார் கிரேடர்கள், ஆப்-ஹைவே டிரக்குகள், வீல் லோடர்கள், விவசாய டிராக்டர்கள் மற்றும் என்ஜின்கள் ஆகியவற்றின் எந்திரங்களை தயாரித்து வருகின்றன. எந்திரங்கள் கட்டுமானம், சாலை அமைத்தல், சுரங்கம், வனவியல், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் பொருட்களை கையாளும் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன.

    கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த 11-ந் தேதியன்று சிகாகோவில் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

     

    இதையடுத்து ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்யும் வகையில் அமெரிக்காவின் RGBSI நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள RGBSI நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் நிறுவனம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் மூலமாக 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்காக ஒப்பந்தம் கையெழுத்து கையெழுத்தாகி உள்ளது.

    இந்நிலையில் அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சிகாகோ விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

    • முதலமைச்சர் முன்னிலையில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
    • அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள RGBSI நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை அவர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான கேட்டர்பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள், ஆப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு எந்திரங்கள், தொழில்துறை எரிவாயு விசையாழிகள் மற்றும் டீசல்-எலக்ட்ரிக் என்ஜின்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் கட்டுமானத் தொழில்கள், வளத் தொழில்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து, நிதி தயாரிப்பு பொருட்கள் ஆகிய 4 வணிகப் பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    கேட்டர்பில்லர் நிறுவனம் டிராக்டர்கள் முதல் ஹைட்ராலிக் அகழ்வாராய்ச்சிகள், பேக்ஹோ ஏற்றிகள், மோட்டார் கிரேடர்கள், ஆப்-ஹைவே டிரக்குகள், வீல் லோடர்கள், விவசாய டிராக்டர்கள் மற்றும் என்ஜின்கள் ஆகியவற்றின் எந்திரங்களை தயாரித்து வருகின்றன. எந்திரங்கள் கட்டுமானம், சாலை அமைத்தல், சுரங்கம், வனவியல், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் பொருட்களை கையாளும் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன.

    கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த 11-ந் தேதியன்று சிகாகோவில் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்யும் வகையில் அமெரிக்காவின் RGBSI நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள RGBSI நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் நிறுவனம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் மூலமாக 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்காக ஒப்பந்தம் கையெழுத்து கையெழுத்தாகி உள்ளது.

    ×