என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல் ஆனது.
    • அன்னபூர்ணா உணவக உரிமையாளருக்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

    ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் கருணாஸ் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாஸ், "நான் நாட்டிற்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்துகிறேன். நான் உட்பட பொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரி நாட்டு மக்களின் நலன்களுக்கு செலவிடப்படுவதில்லை. மக்களிடம் இருந்து பெறக்கூடிய ஜிஎஸ்டி வரியில் இருந்து அம்பானி, அதானி போன்றவர்களை வளர்த்துவிடுவதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும்.

    அன்னபூர்ணா முதலாளி சராசரி குடும்பத்தில் பிறந்து உழைத்து இந்த முன்னேறியுள்ளார்.நிதியமைச்சரிடம் அவர் பன்னுக்கு வரி இல்லை அதில் தடவுகிற ஜாமுக்கு 18% வரி போடுகிறீர்கள். இனிப்புக்கு ஒரு வரி காரத்துக்கு ஒரு வரி என குழப்பங்கள் இருப்பதாக கேட்கிறார். அவரை அடுத்த நாள் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்து தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வியாபாரிகளையே அவமானப்படுத்தியுள்ளார் நிதியமைச்சர். இதைவிட ஒரு சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

    • குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.
    • கேள்வித்தாளில் 96வதாக இடம்பெற்ற ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப்-2 தேர்வு நடைபெற்றது. குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    கேள்வித்தாளில் 96வதாக இடம்பெற்ற ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    அதாவது, ஆளுநர் அரசின் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி என 2 வித பணிகளை செய்கிறார் என கூற்றாகவும், காரணமாக ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அரசு, ஆளுநர் இடையே தொடரும் மோதல் போக்கிற்கு மத்தியில், குரூப் 2 தேர்வில் சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    சனாதானம் குறித்து பேசியவர்கள் தற்போது அமைதியாகிவிட்டார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதியை இன்று மறைமுகமாக சீண்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி.
    • தமிழ் கூறும் நல்லுலகமே உங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது, போற்றுகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி, வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்காக உள்ளூர் முதலீடுகளை திரட்டுகிற அதேநேரத்தில், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்னையில் அந்நிய முதலீட்டாளர்கள் மாநாட்டையும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி அமெரிக்க பயணத்தை மேற்கொண்டு சான்பிரான்ஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் நடத்தப்பட்ட சந்திப்புகளின் பலனாக ரூபாய் 7616 கோடி முதலீடுகளை ஈர்த்து 11,516 நபர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுகிற வகையில் முதலமைச்சரின் முயற்சிகள் வெற்றி பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவிலேயே தமிழகத்தை தொழில் வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னணி மாநிலமாக உயர்த்துகிற முயற்சியில் அமெரிக்க பயணத்தின் மூலம் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களை போட்டு இன்று தமிழகம் திரும்பும் அவரை 'முதலீடுகளை ஈர்த்த முதல்வரே வருக வருக" என தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு வரவேற்க கடமைப்பட்டுள்ளார்கள்.

    அமெரிக்க பயணத்தின் ஒவ்வொரு நாளையும் கடமை உணர்ச்சியோடு தமிழகத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற மிகுந்த ஈடுபாட்டுடன் தனது பணிகளை மனநிறைவோடு செய்து சென்னை திரும்பி இருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், அவருக்கு பெரும் துணையாக இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்ட தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பயணத்தின் வெற்றி தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி. தமிழ் கூறும் நல்லுலகமே உங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது, போற்றுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      சென்னை:

      கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கட்சியின் 20-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது.

      இதில் தே.மு.திக. பொதுச் செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விஜயகாந்த் சிலை மற்றும் கேப்டன் கோவில் பெயர் பலகை ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

      தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். பின்னர் பிரேமலதா அளித்த பேட்டி வருமாறு:-

      முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்விலேயே முடிந்துள்ளது. அவர் மருத்துவ சிகிச்சைக்காகத்தான் சென்று வந்துள்ளார். முதலீடுகளை ஈர்த்தது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். விஜயகாந்த் இல்லாமல் நடைபெறும் ஆண்டு விழாவில் கொடியேற்றி இருப்பது வருத்தமாக உள்ளது.

      அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் யதார்த்தமாக பேசியதும் மன்னிப்பு கேட்டதும் பெரிதாக்கப்பட்டுள்ளது. இதனை தி.மு.க.வும், காங்கிரசும் சாதமாக்கியுள்ளன.

      இவ்வாறு அவர் கூறினார்.

      தே.மு.தி.க. தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

      இந்த நாளில் நாம் எடுத்துக்கொண்ட கேப்டனின் கனவு மற்றும் லட்சியத்தை நிச்சயமாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வென்றெடுப்போம் என்று சபதம் ஏற்று. இந்த நாளில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே, தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற தலைவரின் தாரக மந்திரம் படி எட்டுத்திக்கும் நமது முரசு வெற்றி முரசாக கொட்ட அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம், வெற்றி பெறுவோம் என இந்த நன்னாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.

      • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியாக உள்ளது.
      • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

      ஆண்டிபட்டி:

      தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

      அதனை ஏற்று பெரியாறு பகுதியில் உள்ள ஒரு போக பாசன பரப்பான 85563 ஏக்கர் விளை நிலங்கள், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் ஒருபோக பாசன பரப்பாகிய 19439 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வினாடிக்கு 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் என மொத்தம் 120 நாட்களுக்கு 8461 மி.கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

      அதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 61.29 அடியாக உள்ளது. அணைக்கு 500 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3854 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

      முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியாக உள்ளது. 811 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 900 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

      மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.50 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

      • காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் திராவிடம் அல்ல. தமிழ் மீது கொண்ட பற்று தான் காரணம்.
      • டெல்லியிலிருந்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் கடிதம் வருகிறது. ஏன் தமிழில் கடிதம் அனுப்ப மாட்டீர்களா?

      திருமங்கலம்:

      மதுரை திருமங்கலத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

      பிரதமர் மோடி வெளிநாடு சென்றால் உலகின் மூத்த மொழி தமிழ் என்று பேசி வருகிறார். முதல்-அமைச்சர் அமெரிக்கா சென்று அங்குள்ள தமிழர்களிடம் தமிழின் பெருமை பற்றி பேசுகிறார். ஆனால் தமிழகத்தில் என்றாவது பேசியதுண்டா. தன் தாய் மொழியை மீட்க தமிழ் பிள்ளைகள் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது தெருக்கள், சாலைகள், காலனிகள் எல்லாம் ஆங்கிலத்தில் அழைக்கும் நிலை உருவாகியுள்ளது.

      காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் திராவிடம் அல்ல. தமிழ் மீது கொண்ட பற்று தான் காரணம். உலகில் எல்லா மொழிகளும் மனிதனால் பேசப்பட்டது. தமிழ் ஒன்று தான் இறைவனால் பாடப்பட்டது. கீழடியில் 2 ஏக்கர் மட்டுமே தோண்டப்பட்டு உள்ளது. அங்குள்ள 100 ஏக்கர் நிலங்களையும் தோண்டி ஆய்வு நடத்த வேண்டும் அப்போதுதான் தமிழனின் முழுமையான வரலாறு தெரியும்.

      தமிழகத்தில் எல்லோருக்கும் சிலை உள்ளது. ஆனால் வேலுநாச்சியாருக்கு சிலை இல்லை. நான்காம் தமிழ் சங்கம் வளர்த்த பாண்டித்துரை தேவருக்கு மரப்பாச்சி பொம்மை அளவில் தான் மதுரையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சீனர், ஜப்பானியர்கள் என அனைவரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள். ஆனால் நம்மிடத்தில் தமிழ் இல்லை.

      டெல்லியிலிருந்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் கடிதம் வருகிறது. ஏன் தமிழில் கடிதம் அனுப்ப மாட்டீர்களா? என கேட்க யாரும் முன்வரவில்லை. தாய் மொழி தமிழ் நம் கண் முன்னே அழிந்து போவதை வேடிக்கை பார்ப்பதா?

      மலை, மணல் திருடினால் பரவாயில்லை-எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கும் நிலைதான் இங்கு உள்ளது. சீமான் வந்த பிறகு அனைத்தையும் தமிழில் தான் பேசுவார்கள். இந்தி படித்தால் எல்லா இடங்களிலும் வேலை கிடைத்து விட்டதா? இந்தி படித்தவன் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் நுழைந்து விட்டான்.

      அமெரிக்கா சென்ற முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்துக்கொண்டு மூட்டைகளை தூக்கிக்கொண்டு வந்து விடுவார். அதை நான் தான் சென்று இறக்க வேண்டும்.

      திருமாவளவனுக்கு வந்த தைரியத்தை பாராட்டுகிறேன். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் கருத்தை ஆதரிக்கிறேன்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      • சில மணிநேரங்களில் வீடியோ எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
      • வீடியோ குறித்து தனக்கு எதுவும் தெரியாது.

      மதுரை:

      விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் எக்ஸ் வலைதளத்தில் இன்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் திருமாவளவன் ஆட்சியில் அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென பேசி இருந்தார். இந்த வீடியோ மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

      இதனிடையே சில மணிநேரங்களில் அந்த வீடியோ எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

      இதற்கிடையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் மதுரை வந்த வி.சி.க. தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் ஆட்சி அதிகாரம் குறித்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர்.

      அப்போது அவர் வீடியோ குறித்து தனக்கு எதுவும் தெரியாது. என்னுடைய எக்ஸ் தளத்தில் தவறுதலாக பதிவு செய்திருக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எங்களின் நிலைபாடு நீண்ட காலமாக உள்ளது என்றார்.

      • ஹெலிகாப்டர் சேவையை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனமும் தீவிரம் காட்டி வருகின்றன.
      • ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

      சென்னை:

      பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் சேவையை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனமும் தீவிரம் காட்டி வருகின்றன.

      ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்படுவதால், கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுலா எந்த அளவுக்கு வளர்ச்சியடையுமோ, அதைவிட அதிக சுற்றுலா வளர்ச்சியை, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிப்பதன் மூலம் எட்ட முடியும். இதைக்கருத்தில் கொண்டு கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சுற்றுச்சூழலையும், பறவைகளையும் பாதுகாப்பதற்காக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பசுமைத் தாயகம் மற்றும் பிற சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.

      இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      • உண்மை நிலையை வானதி சீனிவாசன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
      • எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது நியாயமில்லை.

      சென்னை:

      த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உள்ளூர் தொழில் அமைப்பினருடன் ஜி.எஸ்.டி சம்பந்தமாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய தமிழ் நாடு ஒட்டல்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசனிடம், உண்மை நிலையை வானதி சீனிவாசன் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இது சம்பந்தமாக சமூக ஊடகத்தின் மூலமாக செய்தி வெளியிட்டிருக்கிறார்.

      உண்மை நிலை இப்படி இருக்கும் போது தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக எதிர்க்கட்சிகள் உண்மை சம்பவத்தை மறைத்து தவறான அறிக்கைகள் கொடுப்பதும், சமூக ஊடகங்களில் இந்த சம்பவத்தை தவறாக சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல. இதன் மூலம் தமிழக எதிர்க்கட்சிகள் மத்திய நிதியமைச்சகத்துக்கும், தொழில் அமைப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்த முயற்சிப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான்.

      எனவே ஜி.எஸ்.டி சம்பந்தமாக உள்ள நியாயமான கோரிக்கைகள் நிறைவேற அடித்தளமாக அமைந்த இந்த கூட்டத்தை அரசியல் கண்ணோட்டத்திற்காகப் புரிந்தும், புரியாமலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது நியாயமில்லை.

      இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      • அத்தப்பூக்கோலம், அறுசுவை சத்ய விருந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழும் நாளாகத் திருவோணம் அமைந்துள்ளது.
      • கேரள மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இந்த ஓண நன்னாள் அமையும் என்று நம்புகிறேன்.

      கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். ஓணம் பண்டிகை நாளை (செப்.15) கொண்டாடப்படுகிறது.

      இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓணம் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

      கேரள மக்களின் பண்பாட்டுப் பெருவிழாவான ஓணம் திருநாள் உலகெங்கிலும் வாழும் மலையாளிகளால் எழுச்சியுடன் நாளை (15-9-2024) கொண்டாடப்படுகிறது. அத்தப்பூக்கோலம், அறுசுவை சத்ய விருந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழும் நாளாகத் திருவோணம் அமைந்துள்ளது.

      நல்லாட்சி புரிந்த மன்னனை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தினாலும், அவனை மக்கள் மனங்களில் இருந்து அகற்ற முடியாது என்பதை உணர்த்தும் கொண்டாட்டமாகவே ஓணத்தைக் காணவேண்டும்.

      திராவிட உடன்பிறப்புகளான கேரள மக்களுக்கு ஓர் இடர் என்றால் உடனடியாக உதவிக்கரம் நீட்டத் தமிழ்நாடு என்றுமே சகோதர உணர்வோடு முன்னிற்கும். அந்த வகையில்தான், அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது தமிழ்நாடு அரசின் சார்பில்

      5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததோடு, மீட்பு, மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்தோம். பெருமழை விளைவித்த பாதிப்புகளில் இருந்து மலையாளிகளுக்கே உரிய போராட்டக் குணத்துடன் மீண்டு வரும் கேரள மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இந்த ஓண நன்னாள் அமையும் என்று நம்புகிறேன்.

      சமத்துவம், சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணத் திருநாளைக் கொண்டாடும் எனது அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

      • வீடியோ வைரலான நிலையில், அன்னபூர்ணா சீனிவாசன் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

      கோவை:

      கோவை கொடிசியாவில் கடந்த 11-ந்தேதி தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்திற்கு 12 சதவீதம் இருக்கிறது.

      அதேபோல பன்னுக்கு ஜி.எஸ்.டி. இல்லை. பன் உள்ளே வைக்கும் கிரீமுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வசூலிப்பது ஏன்? என வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள்.

      இதனால் கடை நடத்த முடியவில்லை மேடம். இந்த முரண்பாடுகளை களைந்து ஒரே மாதிரியான ஜி.எஸ்.டியை வையுங்கள் என நகைச்சுவை தொனிக்க கூறினார்.

      இந்த வீடியோ வைரலான நிலையில், அன்னபூர்ணா சீனிவாசன் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

      இவ்வாறு அவர் தனியாக சந்தித்து பேசிய வீடியோவும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

      இந்த நிலையில் ஓட்டல் உரிமையாளரை வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்து இருப்பதாக கூறி, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கனிமொழி எம்.பி., நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

      தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.கவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

      இதற்கிடையே ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசிய வீடியோவை பா.ஜ.கவினர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோருவதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

      இந்த நிலையில் ஜி.எஸ்.டி. முரண்பாடு குறித்து உணவக உரிமையாளர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பூங்கா ரவுண்டானாவில் பிற்பகல் 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

      இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்.

      இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் பங்கேற்க உள்ளனர்.

      • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
      • மீட்பு பணி சவாலாக இருந்த நிலையிலும், படகுகள் மூலம் சுமார் 448 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

      சென்னை:

      பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 129 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

      இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

      தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை மற்றும் விரல்ரேகைப் பிரிவு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

      இந்த ஆண்டு, காவல் துறையில் தலைமைக்காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல்படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும் மற்றும் விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் அண்ணா பதக்கங்கள் வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

      மேலும், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் பணிபரிந்து வரும் எஸ்.மந்திரமூர்த்தி, முன்னணி தீ அணைப்போர் 7807 மற்றும் ராமச்சந்திரன், தீ அணைப்போர் 8229 ஆகிய இருவரும் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி இரவு தாமிரபரணி ஆற்றின் கரையில் வெள்ளம் புகுந்த கிராமங்களில் இருந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும், மற்றும் மீட்பு பணி சவாலாக இருந்த நிலையிலும், படகுகள் மூலம் சுமார் 448 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இருவருக்கும் "தமிழக முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்" வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

      ×