என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • போலீசாரின் சோதனையில் பிடிபட்ட கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம எனத் தகவல்.
    • கேரளா ஏ.டி.ஏம். மையங்களில் இருந்து கொள்கை அடிக்கப்பட்ட பணமாக இருக்கலாம் என சந்தேகம்.

    நாமக்கல் மாவட்டம் வெப்படையில் 4 பைக், ஒரு காரை இடித்துத்தள்ளிய கண்டெய்னர் லாரி அதிவேகமாக நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வெப்படை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குமாரபாளையம் மற்றும் வெப்படி காவல் நிலைய போலீசார் கண்டெய்னரை பின்தொரட்ந்தனர். சேலம் மாவட்டம் சன்னியாசிபட்டி அருகே கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்தனர்.

    அப்போது லாரியின் முன்பக்கத்தில் இருந்து நான்கு வட இந்தியர்களை பொதுமக்கள் கீழே இழுத்து தர்ம அடி கொடுத்தனர். டிஎஸ்பி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டனர். 500-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    கண்டெய்னர் லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கண்டெய்னரில் பணம் இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் கண்டெய்னருக்குள் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இதனால் கண்டெய்னரை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த கண்டெய்னரை போலீசார் காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று அதிரடி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரளாவில் உள்ள மூன்று ஏ.டி.எம். மையங்களில் 65 லட்சம் ரூபாய் கொள்கை அடிக்கப்பட்டது. இந்த பணம் கண்டெய்னரில் இருக்குமா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.

    • செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அரசு எந்திரமே செயல்படுகிறது.
    • மின்மாற்றி கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் நியாயம் கிடைக்காது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின் வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில் வாரியத்திற்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு கையூட்டுத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கம் புகார் அளித்து ஓராண்டுக்கும் மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு நிர்வாகத்தை சீரழிக்கும் ஊழல் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.

    மின்மாற்றி கொள்முதலில் நடந்த முறைகேடுகளில் முதல் எதிரியாக விசாரிக்கப்பட வேண்டியவர் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. ஊழல் வழக்கில் சிறை சென்று 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான அவரை பெருந்தியாகம் செய்தவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகிறார்; செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அரசு எந்திரமே செயல்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது, மின்மாற்றி கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் நியாயம் கிடைக்காது. எனவே, மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • பல்வேறு திட்டங்களின் கீழ் வீடுகளை கட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை தொழில்நுட்ப உதவியாளர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரு ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றி வந்த தொழில்நுட்ப உதவியாளர்களை தமிழக அரசு திடீரென பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    அவர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்படி வீடு கட்டும் பணிகள் முடிவுக்கு வந்து விட்டாலும், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் வீடுகளை கட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலும் பொறியியல் சார்ந்த பணிகளும், அளவீடு செய்யும் பணிகளும் உள்ளன. அந்தப் பணிகளை செய்யும் வகையில் பணி நீக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை தொழில்நுட்ப உதவியாளர்கள் அனைவரையும் மீண்டும் பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    • சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சென்னை:

    'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    சிலை முன்பு அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

     

    சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

     

    தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம்கதிர், பாரோஸ் ஓட்டல், மாலைமுரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.

    சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சி.பா.ஆதித்தனார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    அவர்களுடன் எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகரராஜா, வேளச்சேரி எம்.எல்.ஏ. அசன் மவுலானா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர் எஸ்.வி.சேகர், தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன், ஓய்வு பெற்ற போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் மோகன்ராஜ்,

    தி.மு.க. வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் தமிழ்மணி, அன்பு, பாபு, சத்தியா, புருஷோத், பரத், உமரி சங்கர், சதீஷ்,

    அ.தி.மு.க. சார்பில் சிம்லா முத்து சோழன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நிர்வாகிகள் கண்ணன், தங்கமுத்து, பாஸ்கர், வில்லியம்ஸ், சுபாஷ், ராஜலிங்கம், சீனிவாசன், சாமுவேல், சுடலைமணி, ராஜன், ராஜேஷ், சங்கர பாண்டியன், தாஸ், சண்முகசுந்தரம், ராபர்ட், சுப்பிரமணி, ராஜ்குமார், சதீஷ், பாக்யராஜ், பாலமுருகன், நடராஜன்.

    ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் வந்திய தேவன், மாவட்ட செயலா ளர்கள் ஜீவன், கழக குமார், ராஜேந்திரன், சுப்பிரமணி, மகேந்திரன், நிர்வாகிகள் தென்றல் நிசார், நாசர், பாஸ்கர், இளவழகன், துரை குணசேகர், கவிஞர் மணி வேந்தன், கோவில்பட்டி ராமச்சந்திரன், அண்ணா துரை, சேகரன், ஜானகிராமன், தனசேகர், தியாகராஜன், சகாயஅரசி,

    காங்கிரஸ் நிர்வாகி அகமது அலி உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    • டெல்லியில் இருந்து சென்னை திரும்பியதும் சந்திக்க இருக்கிறார்.
    • தி.மு.க. பவள விழா கூட்டத்திலும் செந்தில் பாலாஜி கலந்து கொள்வார்.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியதன் அடிப்படையில் புழல் சிறையில் இருந்து நேற்றிரவு அவர் வெளியே வந்தார்.

    அவரை தி.மு.க. அமைப்புச் செயலாளர் மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. அம்பத்தூர் ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வரவேற்றனர்.

    மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி நேராக சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

    அதன்பிறகு மந்தைவெளியில் உள்ள வீட்டிற்கு சென்று தங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்றுள்ளதால் நேற்றிரவு செந்தில் பாலாஜி அவரை சந்திக்க இயலவில்லை.

    எனவே இன்றிரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியதும் செந்தில் பாலாஜி அவரை சந்திக்க இருக்கிறார்.

    அவர் சென்னை வந்ததும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தில் உள்ள பண்ணை தோட்டத்திற்கு சென்று தங்குகிறார்.

    எனவே அங்கு சென்று செந்தில் பாலாஜி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இல்லையென்றால் நாளை காலை ராணிப் பேட்டை நிகழ்ச்சிக்கு செல்லும் போது ராணிப் பேட்டையில் வைத்து செந்தில் பாலாஜி சந்திப்பார் என தெரிகிறது.

    நாளை மாலை காஞ்சிபுரத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா மாநாட்டு பொதுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்திலும் செந்தில் பாலாஜி கலந்து கொள்வார் என தெரிகிறது.

    • ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே விடுமுறை விடப்பட்டுள்ளன.
    • ஆம்னி பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்றுடன் முடிகிறது. நாளையில் இருந்து அக்டோபர் 6-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அக்டோபர் 7-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே விடுமுறை விடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை விடப்பட்டதால் 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதன் காரணமாக வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது.

    வார இறுதி நாள் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. சென்னையில் இருந்து செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நிரம்பிவிட்டன.

    வந்தே பாரத், தேஜாஸ் அதிவிரைவு ரெயில் மற்றும் ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி உள்ளன. அரசு பஸ்களில் முன்பதிவு செய்து காத்து இருக்கின்றனர். தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்களில் இடமில்லை. இதனால் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு, பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை (சனிக்கிழமை) 415 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணத்தை தொடரலாம் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டப் பகுதிகள் மட்டுமின்றி கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களும் நிரம்பி விட்டன.

    சென்னையில் இருந்து கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்கு செல்லக்கூடிய விமானங்களும் நேற்றிரவு நிரம்பி விட்டன.

    இதனால் ஆம்னி பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து சொந் ஊர் செல்லக்கூடியவர்கள் இன்று மாலையில் இருந்து பயணத்தை தொடங்குகின்றனர்.

    இதனால் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இடங்களை பிடிக்க பயணிகள் முண்டியடித்த னர்.

    3 மணி நேரத்திற்கு முன்னதாக வந்து வரிசையில் நின்றனர். பகல் நேர ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    • பசுமைக் குடில்களில் வளர்க்கப்படும் பயிர்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு நம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டுகின்றன.
    • அ.தி.மு.க.வினர் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கத்தரிக்காய், அவரைக்காய், முட்டை கோஸ், காலிபிளவர் போன்ற தோட்டப் பயிர்களும், சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி போன்ற மலர் வகைகளும், கொத்தமல்லி, புதினா போன்ற கீரை வகைகளும் மற்றும் பாலிஹவுஸ் எனப்படும் பசுமைக் குடில்களில் கேப்சிகம் மற்றும் உயர்வகை ரோஜா, ஜெர்பரா போன்ற மலர் வகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன.

    இப்பகுதியில் விளையும் காய்கறிகள், மலர்கள் மற்றும் கீரை வகைகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பசுமைக் குடில்களில் வளர்க்கப்படும் பயிர்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு நம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டுகின்றன.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசு, இப்பகுதி விவசாயத்திற்கு சீரான மும்முனை மின்சாரத்தை வழங்காத காரணத்தால், சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், கீரைகள் மற்றும் மலர் வகைகளுக்கு போதிய தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் கருகும் சூழ்நிலை உருவாகி, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள தோட்டப் பயிர்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் மலர் வகைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, மும்முனை மின்சாரத்தை வழங்காத மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசைக் கண்டித்தும்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு உடனடியாக சீரான மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தியும், அ.தி.மு.க. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியின் சார்பில், வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், 'சூளகிரி ரவுண்டானா அருகில்' மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தலைமையிலும்; கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மு.அசோக்குமார், ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்கள் நலனை முன்வைத்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.
    • பல்வேறு பொதுப் பிரச்சனைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.

    சென்னை:

    பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்று இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

    அப்போது பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்முகத்துடன் வரவேற்றார். பிரத மருக்கு சால்வை அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.

    அப்போது தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் "தடம் பெட்டகத்தை" பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசளித்தார். அதன் பிறகு பிரதமருடன் அமர்ந்து பேசினார்.

    தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினார். அப்போது பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான ஒன்றிய அரசின் நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு ஆகிய மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் தலா 50 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்ட ஒரு கூட்டு முயற்சி நிறுவனமாகும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செயலாளர் இதன் தலைவர் ஆவார். 54.1 கி.மீ மொத்த நீளத்துடன் இரண்டு வழித்தடங்களுடன் கூடிய சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் I-ஐ ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன் செயல்படுத்தியுள்ளது.

    பொதுப் போக்குவரத் தினை உயர்த்திட வேண்டிய தேவையைக் கண்டறிந்து, தமிழ்நாடு அரசு சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II ற்கு ஒப்புதல் அளித்து, 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன் ஒப்புதல் வழங்கவும், இருத ரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பெறுவதற்கும், ஒன்றிய அரசிற்கு பரிந்துரை செய்திருந்தது. ஒன்றிய அரசின் பங்களிப்பு வரப்பெறாத காரணத்தி னால் பணிகளில் கடந்த ஆண்டு முதல் ஏற்பட்ட வேகக் குறைவு, நடப்பு நிதி யாண்டிலும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் இந்த ஆண்டின் மொத்த திட்டச் செலவினம் ரூ.8000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, பல்வேறு நிலைகளில் பணி நிறை வடையும் தேதிகள் ஒரு ஆண்டளவிற்கு தாமத மாகி, இறுதியாக கட்டி முடிக்கும் தேதியை டிசம்பர் 2027-லிருந்து டிசம்பர் 2028 ஆக தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இது, மிகுதியான காலம் மற்றும் செலவின அதிகரிப்பை ஏற்படுத்தி விடும்,

    இந்தியாவிலுள்ள பெரும்பாலான மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு சமவீத மூலதனப் பங்களிப்பு அடிப்படையில் நிதி வழங்கியுள்ளதை இங்கு குறிப்பிடுவது முக்கியமாகக் கருதப்படுகிறது.

    ஆகையால் இந்தப் பொருள் குறித்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II ற்கு ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன், கட்டம்-I ற்கு வழங்கப்பட்டது போன்றும், பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளவாறும் விரைவில் ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் சமக்ரசிக்க்ஷா திட்டமானது 2018-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது பள்ளி முன்பருவக்கல்வி முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இத்திட்டம் பள்ளிக்கல்வித்துறையில் விரிவான முன்னெடுப்புகளை மேற்கொள்ளத்தக்க வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடானது, ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசின் திட்ட ஏற்பளிப்புக்குழுவால் ஏற்பளிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்பளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடானது ஒன்றிய மற்றும் மாநில அரசால் 60:40 என்ற விகிதத்திலான பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சமக்ரசிக்க்ஷா திட்டம் மூலம் தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் 43,94,906 மாணவர்கள், 2,21,817 ஆசிரியர்கள் மற்றும் 32,701 அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படவில்லையெனில் ஒன்றிய அரசானது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வரும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிற்கு வழங்கிடும் முக்கியத்துவத்தை குறைப்பதாகவே அமைந்திடும்.

    எனவே, தமிழ்நாட்டின் நியாயமான இக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து தேசிய கல்விக் கொள்கை 2020-ல் வரையறுக்கப்பட்டுள்ள மும்மொழிக் கோட்பாட்டினை வலியுறுத்துவதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் மும்மொழிக் கோட்பாடு சார்ந்து ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள அரசமைப்பு ரீதியான பாதுகாப்பினை கருத்திற்கொண்டு, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உட்பிரிவில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்படின், தமிழ்நாடு மாநிலமும் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள ஏதுவாக அமையும்.

    எனவே, தமிழ்நாட்டில் கல்வி பயிலும் 43,94,906 மாணவர்களின் எதிர்கால நலன்கருதி அவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது சார்ந்த இறுதி முடிவுகள் எட்டப்படும் வரை காத்திராமல், ஏற்கனவே சமக்ரசிக்க்ஷா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் திட்ட பணிகளுக்கான நிதியினை உடன் விடுவித்திடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழ்நாடு 1076 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரையையும், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிப்பை தொழிலாக கொண்டுள்ள மிகப்பெரும் கடலோர சமுதாயத்தையும் கொண்டு உள்ளது. சமீபகாலமாக அடுத்தடுத்து இந்திய மீனவர்கள் மீன்பிடி கலன்களுடன் இலங்கை அரசால் கைது செய்யப்படுகின்றனர். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தப் பிரச்சனையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏழை மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    2018-ஆம் ஆண்டுக்கு பிறகு சிறைபிடிக்கப்பட்ட 191 மீன்பிடி படகுகளின் தற்போதைய நிலை இதுவரை அறியப்படாமல் உள்ளதால் அலுவலர்கள் மற்றும் மீனவர்கள் அடங்கிய குழு படகுகளை ஆய்வு செய்ய அனுமதியினை பெற்றுத் தருமாறும் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அண்மைகாலத்தில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை நாட்டுடமையாக்கப்படும் கொள்கையால், லட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஏழை மீனவர்கள் மீது இலங்கை நீதிமன்றங்கள் மிக மிக அதிகப்படியான அபராதத் தொகையினை விதித்து அரசாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இந்திய இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளதாக அறியப்படுகிறது. எனவே, 2016-ம் ஆண்டுக்கு பிறகு இரு நாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில், இக்கூட்டத்தினையும் உடனடியாக கூட்டிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த முக்கிய பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள 145 மீனவர்களையும், அவர்க ளது படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் நட வடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, மேற்படி கோரிக்கைகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

    இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிரதமர் அலுவலக செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதன் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மறைந்த மூத்த மார்க்்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத் தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை 5.35 மணியளவில் விமானத்தில் புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு சென்னை திரும்புகிறார். அதன் பிறகு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்று தங்குகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
    • விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான கே.ஆர். ஸ்ரீராமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து, இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார். தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.ஆர். ஸ்ரீராமின் முழுபெயர் கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம். மும்பை பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் சட்டம் பயின்ற கே.ஆர். ஸ்ரீராம், 1986ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வணிக சட்டம், சேவை வரி உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது
    • சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    "தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனார் ஏடு நடத்துவோர்க்கும், எழுத்தாளர்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது

    சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது.

     

    சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி, எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மேயர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.

    • தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று.
    • பத்திரிகை உலகில் புதிய புரட்சிக்கு அடித்தளமிட்டவர்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பத்திரிகை உலகில் புதிய புரட்சிக்கு அடித்தளமிட்டவரும், தினத்தந்தி நாளிதழை தொடங்கியவருமான தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று.

    உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என முழங்கியதோடு, அவற்றையே வாழ்க்கையின் நோக்கமாக கொண்டு தமிழுக்கும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த சி.பா.ஆதித்தனாரின் அரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98.03 அடியாக இருந்தது.
    • தற்போது அணையில் 62.31 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98.03 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 3 ஆயிரத்து 355 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2 ஆயிரத்து 694 கனஅடியாக குறைந்தது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 62.31 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    ×