என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கால்வாய்கள் துரிதப்படுத்தி தூர்வார்கின்ற பணியை மேற்கொள்வதற்கும் துறை சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கின்றது.
    • போர்க்கால அடிப்படையில் பெருமழை வெள்ளம் ஏற்பட்டால் சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர் பாபு கோயம்பேடு வணிக வளாகத்தை இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பெருமழை வெள்ளத்தின் போது ஏற்படுகின்ற தண்ணீர் தேக்கத்திற்கு நிரந்தர தீர்வாக முதல் கட்டமாக 15 கோடி ரூபாய் செலவில் மழை நீர் கால்வாய் அமைப்பதற்கு உண்டான ஒப்பந்தங்கள் நிறைவுற்று பருவமழையை பொறுத்து அந்த பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

    அதேபோல் ஏற்கனவே இருக்கின்ற புதிதாக கட்டப்பட இருக்கின்ற கால்வாய்களை தவிர்த்து 850 மீட்டர் அளவிற்கு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி தொடங்குகிற போது கட்டப்பட்ட அந்த கால்வாயை மறுசீரமைக்க வேண்டும் என்று சட்டமன்ற பேரவை உறுப்பினர் கோரிக்கை வைத்திருக்கின்றார். அந்த பணிகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.

    தற்பொழுது மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுவதால் இந்த பகுதியில் பெய்கின்ற அவ்வப்போது மழைக்கு தண்ணீர் தேங்குகின்ற நிலை இருக்கின்றது முழுவதுமாக சி.எம்.ஆர்.எல். பணி நிறைவுறுவதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட இருக்கின்ற 770 மீட்டர் அளவு குண்டான கால்வாய் பணிகளும் இந்த பருவமழைக்கு பிறகு தான் அவை முழுமையாக கட்டுமான பணி நிறைவு பெறுகின்ற சூழ்நிலை இருப்பதால் அந்த இடத்தில் இந்த மழைக்கு தேங்குகின்ற தண்ணீரை வெளியேற்றுவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 60 ஹெச்பி அளவிற்கு புதிதாக மோட்டார்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கின்றன. அவைகளை உடனடியாக அந்தப் பகுதியில் நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மழை தொடரும் என்று ஆரஞ்சு அலெர்ட் தந்திருக்கின்ற அந்த 14, 15, 16 போன்ற தேதிகளுக்கு கூடுதலாக உடல் உழைப்பு பணியாளர்களை நியமித்து அந்த கால்வாய்கள் துரிதப்படுத்தி தூர்வார்கின்ற பணியை மேற்கொள்வதற்கும் துறை சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கின்றது.

    ஆகவே இந்த பெரு மழையை சமாளிப்பதற்கு தமிழக முதலமைச்சருடைய உத்தரவின் பேரில் நம்முடைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3 முறை கலந்தாய்வு கூட்டங்களை நடத்தியிருக்கின்றார். அந்த வகையில் போர்க்கால அடிப்படையில் பெருமழை வெள்ளம் ஏற்பட்டால் சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று மாலை 4 மணிக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெறுகிறது.
    • மணி என்பவருக்கு சொந்தமான இடத்தை 5 ஆண்டுகளுக்கு தவெக குத்தகைக்கு எடுத்துள்ளது.

    த.வெ.க முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இன்று மாலை 4 மணிக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெறுகிறது.

    மணி என்பவருக்கு சொந்தமான இடத்தை 5 ஆண்டுகளுக்கு தவெக குத்தகைக்கு எடுத்துள்ளது.

    முதல் மாநாடு நினைவாக, 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் நட திட்டமிடப்பட்டுள்ளது. புயல், மழையை தாங்கும் வகையில் விண்ட் வெலாசிட்டிக்கு ஏற்ப கொடிக்கம்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    8 அடி ஆழத்தில் கொடிக்கம்பத்தின் அஸ்திவாரம் அமைக்கப்படுகிறது. கொடியின் பீடம் 120 சதுர அடி அளவில் அமைக்கப்படுகிறது.

    தொடர்ந்து, வரும் 27ம் தேதி மாநாடு தொடங்கும் முன், திடலின் எதிரே 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுகிறார்.

    • இன்று விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்.
    • ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இக்கோவிலுக்கு கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து சாமி கும்பிட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று ஆயுத பூஜை மற்றும் இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

    அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சாமி சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள். அதன்படி திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் எதிரே உள்ள அவுசதகிரி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையொட்டி ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, கருப்பு பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர்.

    பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்திருந்த அந்த நெல்லில் ஏடு படிக்கும் நிகழ்ச்சியான தமிழில் " அ..ஆ" என எழுதி தங்கள் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை ஆர்வத்துடன் தொடங்கினர். மேலும் மாணவர்களும் ஆர்வத்துடன் ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலிலும் மற்றும் மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீமையின் மீது நன்மையின் வெற்றியைப் பிரதிபலிக்கும் விஜயதசமி நன்னான் இன்று.
    • குழந்தைகள் கல்வியையும், பெரியவர்கள் புதிய தொழில்களையும் துவங்கும் புண்ணிய தினம் விஜயதசமி.

    சென்னை:

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தீமையின் மீது நன்மையின் வெற்றியைப் பிரதிபலிக்கும் விஜயதசமி நன்னாளான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    குழந்தைகள் கல்வியையும், பெரியவர்கள் புதிய தொழில்களையும் துவங்கும் புண்ணிய தினமான விஜயதசமி நன்னாளில், அனைவரின் கனவுகள் மற்றும் இலக்குகள் நிறைவேற, அம்பிகைத் தாயின் அருள் கிடைக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. அரசின் அவலங்களையும், மக்கள் விரோதப் போக்கையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது பொறுப்புள்ள அரசியல் கட்சிகளின் கடமை.
    • முதல்கட்டமாக 3 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசின் அவலங்களையும், மக்கள் விரோதப் போக்கையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது பொறுப்புள்ள அரசியல் கட்சிகளின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்களை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானித்து உள்ளது. அதன்படி முதல்கட்டமாக 3 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    * 17.10.2024 (வியாழக்கிழமை) மாலை- சிதம்பரம்/விருத்தாசலம் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    * 20.10.2024 (ஞாயிற்றுக்கிழமை) மாலை-திண்டிவனம்.

    * 26.10.2024 (சனிக்கிழமை) மாலை- சேலம் ஆகிய இடங்களில பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

    பொதுக்கூட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான நானும், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் உரையாற்றுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கோவில்பட்டியில் வேட்டையன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இயக்குனரிடம் தெரிவித்து அந்த காட்சியை விரைவில் நீக்குவதாக அவர் தெரிவித்துள்ளனர்.

    கோவில்பட்டி:

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந்தேதி வெளியானது. இந்த படத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி குறித்து சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    அதில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்கள் பள்ளியின் ஆசிரியர் ஒருவரை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்பு கிளம்பி உள்ளது.

    இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் வேட்டையன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இதுகுறித்து புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேட்டையன் படத்தில் கோவில்பட்டி காந்திநகர் அரசு பள்ளி குறித்து தவறாக சித்திரிக்கப்பட்டு இருப்பதாக மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் என்னிடம் தெரிவித்தனர். அந்தப் பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்தது. நான் அமைச்சராக இருந்த போது அதனை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியிருந்தேன். மேலும் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளும் அந்த பள்ளிக்கு செய்து கொடுத்திருக்கிறேன்.

    இது சிறப்பான பள்ளி. பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வரும் பள்ளி. இந்த நிலையில் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி அங்கு பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்களின் மனதை வேதனைப்படுத்தும் வகையில் உள்ளது.

    இதுகுறித்து வேட்டையன் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், லைக்கா நிறுவனத்தின் நிர்வாகியுமான தமிழ்குமரனை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளேன். இதுகுறித்து இயக்குனரிடம் தெரிவித்து அந்த காட்சியை விரைவில் நீக்குவதாக அவர் தெரிவித்துள்ளனர். அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க நான் முயற்சி எடுத்து வருகிறேன். இன்றைக்குள் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் பொது மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செயலியில் மழை பாதிப்புகள் தொடர்பாகவும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
    • சாலை பிரச்சனை, வெள்ள பாதிப்பு பிரச்சனைகள் உள்ளிட்டவை பற்றியும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பதிவிடலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'டிஎன்.அலர்ட்' என்ற செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி வைத்தார்.

    பருவ மழைக்கான முன் எச்சரிக்கை தகவல்கள், வானிலை மைய தகவல்கள், அணைகளில் நீர் இருப்பு விவரங்கள் உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.



    இதனை பொதுமக்கள் தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் பருவமழை எச்சரிக்கை பற்றிய தகவல்களை முன் கூட்டியே தெரிந்து கொள்ளலாம். உங்களது செல்போனில் டிஎன்.அலர்ட் செயலி இல்லையென்றால் உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

    இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, இந்த செயலியில் மழை பாதிப்புகள் தொடர்பாகவும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் சாலை பிரச்சனை, வெள்ள பாதிப்பு பிரச்சனைகள் உள்ளிட்டவை பற்றியும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பதிவிடலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

    • இன்று அதிகாலை பக்தர்கள் அனைவரும் குலசேகரபட்டினத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
    • ஓலை குடிசையில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு, காயம் ஆகியவை யாருக்கும் ஏற்படவில்லை.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்தும், பல்வேறு வேடங்கள் அணிந்தும் கோவிலுக்கு செல்வார்கள். அதன்படி நெல்லை மாவட்டத்தில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் இந்த ஆண்டும் வேடங்கள் அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.

    அதன்படி வண்ணார்பேட்டையை சேர்ந்த தாமோதரன் என்பவர் பாளை அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் தனது உறவினர்களுடன் தசராவையொட்டி மாலை அணிந்து விரதம் இருந்தனர். இதன் காரணமாக அந்த தசரா பக்தர்கள் குழுவினர் அண்ணா நகர் பகுதியில் ஒரு ஓலை குடிசை அமைத்து அதில் தங்கியிருந்தனர். நேற்று இரவு தங்களது மோட்டார் சைக்கிள்களை அந்த ஓலை குடிசையில் நிறுத்திவிட்டு, அவர்களும் அந்த ஓலை குடிசையில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை பக்தர்கள் அனைவரும் குலசேகரபட்டினத்திற்கு புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கு உணவு சமைத்த குழுவினர் மட்டுமே அந்த ஓலை குடிசையில் இருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் ஓலை குடிசையில் வைக்கப்பட்டிருந்த விளக்கு ஒன்று கவிழ்ந்து விழுந்துள்ளது. இதனால் தீப்பிடித்துள்ளது.

    பின்னர் சிறிது நேரத்திலேயே தீ பரவி எதிர்பாராத விதமாக ஓலை குடிசை முழுவதும் தீ பரவியது. இதனை பார்த்து சமையல் குழுவினர் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர். உடனடியாக பாளை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனால் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து ஐகிரவுண்டு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் தீயணைப்பு மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து தண்ணீரை விரைவாக பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓலை குடிசையில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு, காயம் ஆகியவை யாருக்கும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் குடிசையில் நிறுத்தப்பட்டிருந்த பக்தர்களின் 9 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகி முற்றிலும் நாசமானது. இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • 365 படகுகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளது.
    • 21 படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    இந்தியா-இலங்கை இடையே, நாகப்பட்டிணம் முதல் ராமேசுவரம் வரை உள்ள கடற்பகுதி 25 முதல் 40 கி.மீ., வரை மட்டுமே அகலம் உள்ள கடல் பகுதியாகும். மீன்வளம் மிக்க இப்பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் தங்களது பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அகலம் குறைந்த பகுதி என்பதாலும், பாரம்பரியமாக மீன்பிடி தொழில் நடக்கும் பகுதி என்பதாலும் அவ்வப்போது, இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் சம்பவங்களும், அவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு.

    எனினும் சமீப காலமாக, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் சம்பவங்களும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு இலங்கை அரசு வெளிநாட்டு மீன்படி சட்டதிருத்தம் கொண்டுவந்ததது.

    இதில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு 6 மாதம் முதல் 2½ ஆண்டுகள் வரை சிறைதண்டனை, படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடைமை ஆக்குதல் போன்ற கடுமையான ஷரத்துகள் இடம்பெற்றிருந்தன. இந்த சட்ட திருத்தம் கொண்டுவந்த பின் தமிழக மீனவர்கள் கைது சம்பவங்களும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடைமை ஆக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில், தமிழக மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் படகுகள் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, 2014-ல் 787 பேரும், 2015-ல் 454 பேரும், 2016-ல் 290 பேரும், 2017-ல் 453 பேரும், 2018-ல் 148 பேரும், 2019-ல் 203 பேரும், 2020-ல் 59 பேரும், 2021-ல் 159 பேரும், 2022-ல் 237 பேரும், 2023-ல் 230 பேரும், 2024 ஜூலை வரை 268 பேர் என இதுவரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

    இதே போல், 2014-ல் 164 படகுகளும், 2015-ல் 71 படகுகளும், 2016-ல் 51 படகுகளும், 2017-ல் 82 படகுகளும், 2018-ல் 14 படகுகளும், 2019-ல் 41 படகுகளும், 2020-ல் 9 படகுகளும், 2021-ல் 19 படகுகளும், 2022-ல் 34 படகுகளும், 2023-ல் 34 படகுகளும், 2027-ல் ஜூலை வரை 39 படகுகள் என 558 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 365 படகுகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளது. 21 படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சரஸ்வதி தாயார் இங்கு கன்னியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வழங்கி வருகிறார்.
    • நோட்டு, பேனா, புத்தகம், சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கூத்தனூரில் கல்வி தெய்வம் சரஸ்வதி தேவிக்கு தனி கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு என்று இங்கு தான் தனி கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சரஸ்வதி தாயார் இங்கு கன்னியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வழங்கி வருகிறார். கருவறையில் வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் வீற்றிருந்து, வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும், இடது கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கியிருந்து ஜடா முடியுடன், ஞானச்சஸ் என்கிற மூன்றாவது கண்ணும் கொண்டு, கிழக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

    இவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா விமர்சையாக நடைபெறும்.

     

    சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெண்ணாடை உடுத்தி பாத தரிசனம் விழா நடைபெற்றபோது எடுத்தப்படம்.

    சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெண்ணாடை உடுத்தி பாத தரிசனம் விழா நடைபெற்றபோது எடுத்தப்படம்.

    அந்த வகையில் இந்த வருட நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 3-ம் தேதி திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று சரஸ்வதி பூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மகா சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெண்ணாடை உடுத்தி பாத தரிசனம் விழா நடைபெற்றது.

    இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமியை முன்னிட்டு இன்று காலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். நோட்டு, பேனா, புத்தகம், சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர். பின்னர் ஒரு தாம்பாளத்தில் நெல்மணிகளை பரப்பி அதில் தங்களது குழந்தைகளை தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான 'அ' வை எழுத வைத்து வித்யாரம்பம் செய்தனர்.

    முன்னதாக குழந்தைகளின் நாக்கில் மூன்று முறை தேனை தொட்டு வைத்து பின்பு குழந்தைகள் காதுகளில் மந்திரங்களை சொல்லிய பிறகு நெல்மணிகளில் பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.

    இந்த விழாவுக்கு திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பழனி கோவிலில் இருந்து பராசக்தி வேல் கொண்டு வரப்படும்.
    • வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி யம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 3ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.

    இதற்காக பழனி கோவிலில் இருந்து பராசக்தி வேல் கொண்டு வரப்படும். எனவே பக்தர்கள் காலை 11 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து கோவிலில் மதியம் 12 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு உச்சிகால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்ஷை பூஜையும் நடக்கிறது. அதனை தொடர்ந்து மதியம் 3.15 மணிக்கு மலைக்கோவிலில் நடை அடைக்கப்படுகிறது.

    இதனை தொடர்ந்து பராசக்தி வேல் புறப்பாடாகி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும். அங்கிருந்து தங்ககுதிரை வாகனத்தில் முத்துக் குமாரசாமி புறப்பாடாகி கோதைமங்களம் ஜோதீஸ்வரர் கோவிலை வந்தடைவார். அங்கு வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.

    மேலும் சிவானந்த புலிப்பாணி பாத்திரசாமிகள் அம்பு போடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதனை தொடர்ந்து சுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலை வந்தடையும். பராசக்திவேல் முருகன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். அதன் பின்பு அங்கு அர்த்த சாம பூஜைகள் நடைபெறும்.

    நாளை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.
    • பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.

    தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.

    இந்நிலையில் தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 14-ந்தேதி (திங்கட்கிழமை) வெளியிடுகிறார்.

    ×