என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
    • பச்சை மற்றும் சிவப்பு நிற இளநீர்களுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய 3 தாலுகாக்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.

    இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் இளநீர் தினமும் மதுரை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், உத்திரபிரதேசம், அசாம், அரியானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    பொள்ளாச்சியில் இருந்து அனுப்பப்படும் பச்சை மற்றும் சிவப்பு நிற இளநீர்களுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது.

    இதன்காரணமாக கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் 4 லட்சம் இளநீர் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது சுமார் 3 லட்சம் இளநீர் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பொள்ளாச்சி இளநீர் விவசாயிகள் கூறியதாவது:-

    தென்னை விவசாயத்தில் தற்போது நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளநீர் காய்களின் மேற்பகுதி சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் அவற்றின் அளவோ, தரமோ குறைவதில்லை. இருந்தபோதிலும் இளநீர் காயின் தோற்றத்தை வைத்து வியாபாரிகள் விலை குறைவாக கொள்முதல் செய்கின்றனர்.

    மேலும் வேர்வாடல், வெள்ளை ஈ தாக்குதல், சிலந்தி பூச்சி தாக்குதல் உள்பட பல்வேறு காரணங்களால் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக வெளிச்சந்தையில் இளநீர் குறைந்த விலைக்கு விற்பனை ஆகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

    வட மாநிலங்களில் மிகவும் குளிர்ந்த காலநிலை நிலவுவதால் அங்கு தற்போது இளநீரின் தேவை குறைந்து உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் இளநீருக்கு தேவை இருப்பதால் அவற்றின் விலையில் மாற்றம் இல்லை. இதன்காரணமாக நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டுரக மரங்களின் இளநீர் விலை ரூ.22 ஆகவும், ஒரு டன் ரூ.8250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாகனங்களில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.
    • வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    களியக்காவிளை:

    தமிழக-கேரளா எல்லைப்பகுதியான குமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் சென்று வருகின்றன.

    கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காலியான சரக்கு வாகன டிரைவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த மாநிலத்தில் இருந்து புழுக்கள் நெளியும் மீன், கோழி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டி செல்லும் நிலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

    அதனை கட்டுப்படுத்த அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் களியக்காவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து ஒரு மினி டெம்போ மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கொண்டு செல்லும் (மனித கழிவு) வாகனம் வேகமாக வந்தது.

    அந்த வாகனங்களில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அதனை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாகனங்களை சோதனை செய்தபோது அதில் ஒரு வாகனத்தில் கோழி கழிவுகளும், மற்றொரு வாகனத்தில் செப்டிக் டேங்க் கழிவுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த வாகனங்களின் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மணிகண்ட தேவா மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வள்ளி முருகன் என்பது தெரியவந்தது. இந்த கோழி மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகளை கேரள மாநிலத்தில் இருந்து எடுத்து நெல்லை மாவட்டத்தில் கொட்ட கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இரு வாகனங்களின் டிரைவர்கள் 2 பேர் மீதும், வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கேரளாவில் இருந்து குமரிக்கு மறைமுகமாக வாகனங்களில் தொடர்ச்சியாக கழிவுகள் வந்த வண்ணம் இருப்பதால் குமரி மாவட்டம் குப்பை கூடமாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளாவில் இருந்து கோழி உள்ளிட்ட கழிவு பொருட்களை குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வந்து கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு டன் கணக்கில் கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. இதனை உடனடியாக கேரளா அதிகாரிகள் அகற்ற வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு கேரளா அதிகாரிகள் மருத்துவ கழிவுகளை கேரளாவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று கேரளா கழிவு பொருட்களை ஏற்றி கொண்டு குமரி மாவட்டத்தில் கொட்ட வந்த 2 வாகனங்கள் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • மீன் பிடிக்க பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றனர்.
    • மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்கள் லோகேஷ் (24). விக்கரம் (23). சூர்யா (23). இதில் விக்ரம், சூர்யா ஆகியோர் இரட்டையர்கள் ஆவார்கள். லோகேஷ், சூர்யா ஆகியோர் மரக்காணத்தில் உள்ள பூக்கடையிலும், விக்ரம் முட்டை கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் அண்ணன்-தம்பிகள் 3 பேர் மேலும் சிலருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொழுது போக்கிற்காக மீன் பிடிக்க மரக்காணம்-திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றனர்.

    அவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். மரக்காணம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லோகேஷ் கால்வாயில் தவறி விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் தத்தளித்த படி கூச்சல் போட்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பிகளான விக்ரம், சூர்யா ஆகியோர் லோகேசை காப்பாற்ற கால்வாயில் குதித்தனர். ஆனால் கால்வாயில் அதிகமாக தண்ணீர் சென்றதால் 3 பேரும் இழுத்து செல்லப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் கால்வாயில் மூழ்கிய அண்ணன், தம்பிகள் 3 பேரையும் தேடினார்கள்.

    மீனவர்களின் பைபர் படகுகளை வரவழைத்தும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது.

    அப்போது லோகேஷ் தண்ணீரில் மூழ்கி பலியாகி கிடந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூர்யா, விக்ரம் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கால்வாயில் மூழ்கி பலியான லோகேஷ் உடலை பார்த்து அவரது தந்தை கணேசன் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளில் படைப்புழுவை கட்டுப்படுத்த முடியவில்லை.
    • 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல் தரமற்ற விதைகளால் குறுகிய காலத்தில் கதிர் வந்து இழப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வேளாண் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் தரமற்ற விதைகளால் 10 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்களும் பாதிப்பு அடைந்துள்ளதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் டெல்டா பகுதிகளில் நெல், வாழை, கரும்புக்கு அடுத்து அதிகளவில் பயிரிடும் பயிராக மக்காச்சோளம் முக்கிய பயிராக உள்ளது.

    பெரும்பாலான விவசாயிகள் தனியார் விதை நிறுவனங்களிடம் மக்காச்சோளப் பயிருக்கான விதைகளையும் தனியார் விதை நிறுவனங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையுமே பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளில் படைப்புழுவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைகளை வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இயற்கை விவசாயிகள் ஒருபுறம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் அதிக மகசூல் கிடைக்கும் என ஆசை காட்டி அதிகளவில் மருந்து செலவு மகசூல் இழப்பு, படைப்புழுத்தாக்குதல், வேரழுகல் உள்ளிட்ட நோய்களும் மேலும் அதிகப்படியான வெப்பம் மழை இவற்றால் மரபணு மாற்றம் செய்து விற்பனை செய்யப்படும் விதைகளால் விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிப்பதும் உரிய இழப்பீடு கேட்டு போராடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையை போக்க விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 மூட்டைகளே பாரம்பரிய மக்காச்சோளப் பயிரில் விளைச்சல் வந்தாலும் எந்தவித ரசாயன மருந்துகளுமின்றி எரு மட்டும் பயன்படுத்தி மகசூல் இழப்பு வராமல் தடுக்க இயலும் என்கின்றனர் இயற்கை விவசாயிகள்.

    இதற்கு தமிழக வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்காச்சோளப் பயிர்சாகுபடி செய்துள்ள பரப்பில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்து உள்ள விவசாய நிலப்பரப்புகள் புள்ளிவிவரத்துடன் சன்னாவூரில் 750 எக்டேர் கோக்குடி, பூண்டி, மலத்தாங்குளம், ஆங்கியனூர், கொரத்தக்குடி, விளாகம், பளிங்காநத்தம், வெங்கனூர், கீழக்காவட்டாங்குறிச்சி, தட்டான்சாவடி, எரக்குடி, வேட்டைக்குடி, அயன்சுத்தமல்லி, கீழப்பழுவூர், வெற்றியூர், சாத்தமங்கலம், கள்ளூர் விரகாலூர் திருப்பெயர் வண்ணம் புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் 4 ஆயிரம் எக்டேர் வீதம் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பயிர்க்காப்பீட்டு மூலம் நிவாரணத்தொகையும் பயிர்க்காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ30 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் வங்கி மூலம் கடனாக ரூ23 ஆயிரம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்ததன் அடிப்படையில் மக்காச்சோளப் பயிருக்கு அரசு ஏக்கருக்கு ரூ.2500 வழங்கியது. காப்பீட்டு நிறுவனத்திற்கு 2021, 2022, 2023 காப்பீட்டுத்தொகை 350 செலுத்தியும் இழப்பீடு தொகைக்கான புள்ளிவிவரங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் கொடுக்காத காரணத்தால் பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகை வழங்க இயலவில்லை என காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

    இதுகுறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் கூறுகையில், தங்க சண்முக சுந்தரம் மரபணு மாற்றம் செய்து வழங்கப்படும் மக்காச்சோள விதைகளால் பயிர் சாகுபடியின்போது விவசாயிகள் தொடர்ந்து கடனாளிகாக ஆக்கப்படுகின்றனர்.

    எனவே தற்போதைய நிலையில் தரமற்ற விதைகளை வழங்கி மகசூல் இழப்புக்கு காரணமான நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவும் உடனடியாக மகசூல் இழப்பு ஏற்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்யவும் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் பாரம்பரிய விதைகளை வழங்கிட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் என்றார்.

    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • பஸ்களை சுங்கச்சாவடியில் நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

    கடலூர்:

    விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியில் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டணம் வசூல் செய்ய உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. மேலும் கட்டண விவரங்களையும் வெளியிட்டது.

    இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், சாலை பணி முழுமை பெறாமல் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது. மேலும் கட்டண விகிதம் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதற்கிடையில் இந்த போராட்டத்தை யொட்டி கடலூர்-சிதம்பரம் இடையே தனியார் பஸ்கள் ஓடாது என்று அறிவித்துள்ளனர்.

    இதுபற்றி கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் தேசிங்குராஜன் கூறுகையில், கொத்தட்டை சுங்கச்சாவடியில் 50 முறை சென்றால் ஒரு மாத கட்டணம் ரூ.14 ஆயிரத்து 90 அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் வட்டார போக்குவரத்து அதிகாரி நிர்ணயித்த கால நேர அட்டவணைப்படி ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை சட்டப்படி பஸ்கள் இயங்கி வருகிறது. இப்படி என்றால் 5 நாளில் ஒரு மாத கணக்கு தீர்ந்து விடும். ஆகவே இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இன்று கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு செல்லும் 50-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் ஓடாது.

    இந்த பஸ்களை சுங்கச்சாவடியில் நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவோம். இது தொடர்பாக சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தின் தீவிரம் குறித்து அறிவிப்போம் என்றார்.

    அதன்படி இன்று காலை கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் அனைத்து தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளானார்கள்.

    அவர்கள் அரசு சார்பில் இயக்கப்பட்ட பஸ்களில் சென்றனர். இதனால் பணிக்கு செல்ல வேண்டியவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல இயலாமல் தவித்தனர்.

    இந்த நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் அனைத்து பஸ்களையும் கொத்தட்டை சுங்கச்சாவடிக்கு கொண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்.

    அதேபோல் கொத்தட்டை சுங்கச்சாவடி சுற்று வட்டார கிராம மக்களும், அனைத்து கட்சியினர், சமூகநல அமைப்பினர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரும்பாலும் குறைந்தே விற்பனையானது. வார தொடக்கத்தில் ரூ.57,120-க்கு விற்பனையான சவரன் விலை வார இறுதியில் ரூ.56,800-க்கு விற்பனையானது. பெரிய அளவில் விலை உயர்வு இல்லாததால் தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.7,100-க்கும் சவரன் ரூ. 56,800-க்கும் விற்பனையாகிறது.



    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    21-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    20-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,320

    19-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,560

    18-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    21-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    20-12-2024- ஒரு கிராம் ரூ. 98

    19-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    18-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,500 கனஅடி வந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
    • பேருந்துகள் இயக்கப்படாததால் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.

    சிதம்பரம்:

    விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே கொத்தட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையத்திற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் தனியார் பேருந்துகளுக்கு 50 முறை சென்று வர ரூ.14,090 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைப் பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில், கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து, கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர். 

    • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 25, 26-ந்தேதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும்.
    • 26, 27-ந்தேதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வறண்ட காற்றின் ஊடுருவலால் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு இழந்து, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நாளை வந்தடைகிறது.

    இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 25, 26-ந்தேதிகளில் மிதமானது முதல் கனமழையும், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுதவிர, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்காலிலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் 25-ந்தேதி லேசான மழைக்கும், 26, 27-ந்தேதிகளில் மிதமானது முதல் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

    இந்நிலையில் 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 683.62 சதுர கி.மீ. வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது.
    • காடும், மரங்களும் சேர்ந்துதான் பசுமைப் போர்வையை கட்டமைக்கிறது.

    சென்னை:

    2023-ம் ஆண்டுக்கான இந்திய மாநில வன ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 683.62 சதுர கி.மீ. வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது.

    இந்த பட்டியலில் தமிழ்நாடு கடந்த 2021-ம் ஆண்டை காட்டிலும் 30 சதுர கி.மீ. வனப் பரப்பை அதிகமாக கொண்டிருப்பது பட்டியலில் தெரியவந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் ஒட்டுமொத்த பரப்பான 1,30,060 சதுர கி.மீட்டரில், 26,419 சதுர கி.மீ. வனம் மற்றும் மரங்கள் பரப்பை கொண்டிருந்தது.

    அதுவே 2023-ம் ஆண்டில் 1,30,060 சதுர கி.மீட்டரில், 26,450.22 சதுர கி.மீ. வனம் மற்றும் மரங்கள் பரப்பை கொண்டிருக்கிறது. அதில் 3,586.19 சதுர கி.மீ. அடர் வனப்பகுதி, 11,027.03 மிதமான வனப் பகுதி, 11,837 சதுர கி.மீ. திறந்த வனப்பகுதி வருகிறது. இவை அனைத்தும் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் இது 20.34 சதவீதம் ஆகும். கடந்த ஆய்வு அறிக்கையுடன் தற்போதைய ஆய்வை ஒப்பிட்டு பார்க்கையில், 30.99 சதுர கி.மீ. வனப்பரப்பு தமிழ்நாட்டில் அதிகரித்து இருப்பது தெரியவருகிறது.

    ஒட்டுமொத்த வனப்பரப்பு அதிகரித்து இருந்தாலும், பசுமைப் போர்வையை கணக்கிடும் போது தமிழ்நாட்டில் குறுகி வருவது ஆய்வில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காடும், மரங்களும் சேர்ந்துதான் பசுமைப் போர்வையை கட்டமைக்கிறது. அந்தவகையில் பசுமைப் போர்வை என்பது 13.97 சதுர கி.மீ. அளவுக்கு கடந்த 2021-ம் ஆண்டைய ஆய்வு அறிக்கை புள்ளி விவரங்களைவிட குறைந்து காணப்படுகிறது.

    • அரசு சார்பில் பொங்கல் திருவிழாவிற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம்.
    • பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

    உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் திருவிழாவிற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம்.

    அதன்படி கடந்த பொங்கல் (2024) பரிசு தொகுப்பாகத் தமிழக அரசு சார்பில், குடும்ப அட்டைத் தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கம் ஆகியவை இடம் பெற்றிருந்தது.

    இத்தகைய சூழலில் தான் இந்த பொங்கலுக்கும் (2025) தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் நாகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×