கேரளாவில் இருந்து கழிவு பொருட்கள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்- 2 டிரைவர்கள் கைது

வாகனங்களில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
கேரளாவில் இருந்து கழிவு பொருட்கள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்- 2 டிரைவர்கள் கைது
Published on

களியக்காவிளை:

தமிழக-கேரளா எல்லைப்பகுதியான குமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் சென்று வருகின்றன.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காலியான சரக்கு வாகன டிரைவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த மாநிலத்தில் இருந்து புழுக்கள் நெளியும் மீன், கோழி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டி செல்லும் நிலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

அதனை கட்டுப்படுத்த அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் களியக்காவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து ஒரு மினி டெம்போ மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கொண்டு செல்லும் (மனித கழிவு) வாகனம் வேகமாக வந்தது.

அந்த வாகனங்களில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அதனை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாகனங்களை சோதனை செய்தபோது அதில் ஒரு வாகனத்தில் கோழி கழிவுகளும், மற்றொரு வாகனத்தில் செப்டிக் டேங்க் கழிவுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வாகனங்களின் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மணிகண்ட தேவா மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வள்ளி முருகன் என்பது தெரியவந்தது. இந்த கோழி மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகளை கேரள மாநிலத்தில் இருந்து எடுத்து நெல்லை மாவட்டத்தில் கொட்ட கொண்டு சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இரு வாகனங்களின் டிரைவர்கள் 2 பேர் மீதும், வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கேரளாவில் இருந்து குமரிக்கு மறைமுகமாக வாகனங்களில் தொடர்ச்சியாக கழிவுகள் வந்த வண்ணம் இருப்பதால் குமரி மாவட்டம் குப்பை கூடமாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளாவில் இருந்து கோழி உள்ளிட்ட கழிவு பொருட்களை குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வந்து கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு டன் கணக்கில் கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. இதனை உடனடியாக கேரளா அதிகாரிகள் அகற்ற வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு கேரளா அதிகாரிகள் மருத்துவ கழிவுகளை கேரளாவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று கேரளா கழிவு பொருட்களை ஏற்றி கொண்டு குமரி மாவட்டத்தில் கொட்ட வந்த 2 வாகனங்கள் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com