என் மலர்
புதுச்சேரி
- நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார்.
- நடிகர் விஜய் பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, நடிகர் விஜய்யின் 68வது படமான GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இன்று நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார். விஜய் வந்ததை அறிந்து அங்கு ரசிகர்கள் குவிந்தனர்.
நடிகர் விஜய் பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். பிறகு ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
- புதுச்சேரி ஒயிட் டவுண் பகுதி முழுவதும், கடற்கரை சாலை ஒரு பகுதியும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
- தடுப்பு ஒத்திகையின்போது தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்ஸ், மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்படிருந்தன.
புதுச்சேரி:
புதுச்சேரி சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு கடற்கரையையொட்டி கவர்னர் மாளிகை, சட்டசபை, தலைமை செயலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
ஒயிட்டவுண் என்று அழைக்கப்படும் பிரெஞ்சு காலனி பகுதியில் நேற்று இரவு திடீரென பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை நடந்தது. மத்திய பாதுகாப்பு படை மற்றும் புதுச்சேரியில் போலீசார் இணைந்து இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இதற்காக புதுச்சேரி ஒயிட் டவுண் பகுதி முழுவதும், கடற்கரை சாலை ஒரு பகுதியும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதேபோல் மின்சாரமும் தடை செய்யப்பட்டது.
அப்பகுதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
புதுவை கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்தில் நடந்த பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகையின்போது துப்பாக்கி சுடும் சத்தமும், வெடிகுண்டு சத்தமும் அவ்வப்போது கேட்டது. விடிய விடிய இந்த சத்தம் ஒலித்தது. இதனால் அங்கிருந்த குடியிருப்புவாசிகள், சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.
இந்த தடுப்பு ஒத்திகையின்போது தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்ஸ், மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்படிருந்தன. அதேபோல் அப்பகுதியில் டிரோன்கள் மூலமாக பயங்கரவாத கண்காணிப்பு பணி நடந்தது.
பின்னர் பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை என்று தெரிந்த பின்னரே அப்பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதியடைந்தனர்.
இதேபோல் கடற்கரைக்கு ஒயிட் டவுண் வழியாக சென்ற சுற்றுலா பயணிகளையும் போலீசார் திருப்பி அனுப்பினர்.
இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த ஒத்திகை அதிகாலை வரை நீடித்தது. விடிய விடிய நடந்த இந்த ஒத்திகையால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- 5 மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
- மாயமான இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியின் கடற்கரை பகுதியான காரைக்கால் கடலில் குளித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி மாயமாகினர்.
மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார். 2 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மாயமான இருவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் கடற்கரைக்கு சுற்றுலா வந்த நிலையில் இந்த சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
- அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பல்வேறு கேள்விகள் கேட்டு தலைமை செயலாளர் திருப்பி அனுப்புவதாக குற்றசாட்டு.
- அருணாச்சலப்பிரதேசத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தலைமை செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என புகார்கள் எழுந்து வந்தன. மேலும் அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பல்வேறு கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசிடம் புகார் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் நிதித்துறை செயலாளரும், தலைமை தேர்தல் அதிகாரியுமான ஜவகரை தேர்தல் துறை தவிர மற்ற அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜீவ் வர்மா விடுவித்தார்.
இதுதொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் இந்த உத்தரவை பிறப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவும் தன்னை இடமாற்றம் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக இருந்த வல்லவன் கோவா-விற்கும், துணைநிலை ஆளுநரின் செயலாளராக இருந்த சவுத்ரி அபிஜித் விஜய் சண்டிகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாளை புதுச்சேரி வருகிறார்.
- துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி, புதுச்சேரியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாளை புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி பல்கலைகழகம் செல்லும் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின் கடற்கரை சாலையில் உள்ள அரசு விடுதியில் தங்குகிறார். மறுநாள் காலை அரவிந்தர் ஆசிரமம் மற்றும் மணக்குல விநாயகர் கோவிலில் சாமிதரிசனம் செய்கிறார். அதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் நடராஜன் கோவிலுக்கு சென்று நடராஜனை தரிசனம் செய்கிறார்.
இந்நிலையில், துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி, புதுச்சேரியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் செல்லும் சாலை, மற்றும் தங்கும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
- ராமரை வணங்கிய கரங்கள், பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது.
- பகவான் ராமரின் பாத சுவடில், நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 22-ந் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக வரலாற்று நிகழ்வில், மில்லியன் கணக்கான இந்தியர்களின் இதயங்கள் மகிழ்ச்சியாலும், பக்தியாலும் நிறைந்திருந்ததை உணர முடிந்தது.
ராமரை வணங்கிய கரங்கள், பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது. பகவான் ராமரை போலவே, பிரதமரின் மனிதநேயம், தார்மீக ஒருமைப்பாட்டிற்கான சேவை ஈடு இணையற்றது.
பகவான் ராமர் அனைத்து சவால்களுக்கும் எதிராக உறுதியாக நின்று தனது வாழ்க்கையை நிலத்திற்கும், உயிர்களுக்கும் சேவை செய்து அர்ப்பணித்தார்.
பகவான் ராமரின் பாத சுவடில், நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள். தேசம் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும். பிரதமருக்கு புதுவை மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை காலை 8.45 மணிக்கு நடைபெறும் குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றுகிறார்.
- கவர்னர் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி அனைத்து மாநில தலைநகரங்களிலும் நடைபெறும் விழாக்களில் கவர்னர்கள் தேசிய கொடியேற்றுகின்றனர். தெலுங்கானா மாநில கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தின் பொறுப்பு கவர்னராகவும் உள்ளார்.
இதனால் கவர்னர் தமிழிசை 2 மாநிலங்களிலும் நடைபெறும் விழாக்களில் பங்கேற்று கொடியேற்றுகிறார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை காலை 8.45 மணிக்கு நடைபெறும் குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றுகிறார்.
விழா முடிந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வருகிறார். தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று தேசிய கொடியேற்றுகிறார்.
மதியம் 1 மணி அளவில் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கிறார். விருந்து நிகழ்ச்சி முடிந்த பின் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் ஐதராபாத் செல்கிறார்.
அங்கு கவர்னர் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். கடந்த ஆண்டும் குடியரசு தினவிழாவில் கவர்னர் தமிழிசை 2 மாநிலங்களில் கொடியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தி.மு.க.வினர் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர்.
- முழுமையடையாத சட்டசபையை திறந்தவர்கள், இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்த கோவிலை பற்றி கூறுகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் உத்தரபிரதேச மாநில உதயநாள் கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தில் அதிகாரிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு கூறி போராட்டம் நடத்தியுள்ளார். இது முழுமையாக அரசு நிகழ்ச்சி. இதில் அரசு அதிகாரிகள் பங்கேற்காமல் யார் பங்கேற்பது?
தமிழகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் கலந்து கொள்ளும்போது நாம் என்ன சொல்கிறோம்? வளர்ச்சியடைந்த பாரத் திட்டம் அரசின் திட்டம் மட்டுமல்ல, யாருக்கெல்லாம் மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லையோ அவர்களும் பயன்பெறும் வகையில் பதிவு செய்யும் நிகழ்ச்சி.
அது விளம்பர நிகழ்ச்சி அல்ல. மக்களுக்கு திட்டங்கள் கிடைக்கக்கூடாது என நினைக்கிறார்களா? தமிழகத்தில் நான் முதலமைச்சர் நிகழ்ச்சி திட்டமே, விக்சித் பாரத் திட்டம்தான்.
மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அதில் அதிகாரிகளை பயன்படுத்த கூடாதா?
தி.மு.க.வினர் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர். நான் என்ன கட்சி நடவடிக்கையில் ஈடுபடுகிறேன்.? மக்களுக்கான நலனில்தான் ஈடுபடுகிறேன். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்த திட்டங்கள் குறித்து பட்டியல் கொடுத்துள்ளார். மத்திய அரசின் திட்டம் குறித்து நான் பட்டியல் கொடுத்துள்ளேன். புதுச்சேரியில் எந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என எதிர்க்கட்சியினர் பட்டியல் தரட்டும்.
கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலை திறந்தார்கள் என அயோத்தி கோவில் பற்றி பல விமர்சனங்கள் வருகிறது.
தமிழகத்தில் முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, புதிய சட்டசபை கட்டிடத்தை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அப்போது அதற்கு மேற்கூரையே போடவில்லை. தற்காலிக செட் அமைத்து திறந்தனர்.
முழுமையடையாத சட்டசபையை திறந்தவர்கள், இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்த கோவிலை பற்றி கூறுகின்றனர். ராமர் கோவில் திறப்பையும் அரசியலாக்கி கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியினர் தயவு செய்து குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்படும் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம். கவர்னர் விருந்தாக பார்க்க வேண்டும், அரசியல் விருந்தாக பார்க்க வேண்டாம்.
ராமர் கோவில் 500 ஆண்டுகள் எதிர்பார்த்த நிகழ்வு. மத்திய அரசு நேரடியாக ஒளிபரப்பியதை எல்லோரும் பார்த்து பரவசம் அடைய வேண்டும் என்பதற்காக விடுமுறை அளிக்கப்பட்டது. அரசியல்வாதிகளைத்தான் பிரித்தீர்கள். ராமன், முருகன், பிள்ளையாரை பிரித்து விடாதீர்கள்.
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி, நான் உட்பட எல்லா சாமியும் ஒன்றாக இருக்கிறோம். விடுமுறையை வைத்து பக்தியை எடை போடாதீர்கள். எல்லோரும் சேர்ந்து பக்தியோடு கொண்டாடுவோம்.
வட சென்னை எம்.பி. தொகுதியில் போட்டியிடப் போவது குறித்து நான் முடிவு செய்யவில்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நானே உங்களை அழைத்து தகவல் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.
- புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம்.
புதுச்சேரி:
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை 2008-ம் ஆண்டு எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று தெலுங்கானா மாநில கவர்னரும் புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,
பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்.
பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.
புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
- புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார்.
- புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.
புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார். தொடர்ந்து மாலையில் ராஜ் நிவாசில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு, கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளிக்கிறார்.
இதற்கான அழைப்பிதழ் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் கவர்னர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேநீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேநீர் விருந்துகளில் நானும் எங்கள் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்று உள்ளோம்.
ஆனால் சமீப காலமாக புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.
இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்.
ஆகவே, கவர்னர் தமிழிசை விடுத்துள்ள குடியரசு தின விழா தேநீர் விருந்து அழைப்பை தி.மு.க. புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆபத்தை உணராமல் சிலர் திடீரென கடலில் இறங்கி குளிக்கும்போது ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
- புதுச்சேரியில் ஏற்கனவே கடலில் இறங்கி குளிக்க தடை உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கனகசெட்டிகுளம் மூலம் புதுக்குப்பம் வரை 31 கி.மீ. கடற்கரை உள்ளது.
ப்ரோமனேட் கடற்கரை, பாண்டிமெரினா, சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, ரூபி கடற்கரை, நோணாங்குப்பம் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ளது. சுனாமிக்கு பிறகு கடற்கரையில் கருங்கற்கள் கொட்டப்பட்டது.
இதனால் கடலில் இறங்கி விளையாட முடியவில்லை. புதிய தொழில்நுட்பத்தில் ரூ.25 கோடியில் தலைமை செயலகம் எதிரே கூம்பு வடிவ அமைப்பு கடலில் இறக்கப்பட்டதால் செயற்கை மணல் பரப்பு உருவானதால் கடல் மணலில் இறங்கி சுற்றுலா பயணிகள், விளையாடி மகிழ்கின்றனர்.
ஆபத்தை உணராமல் சிலர் திடீரென கடலில் இறங்கி குளிக்கும்போது ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். கடந்த 5 ஆண்டில் 4 கடற்கரைகளில் மட்டும் 67 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு தொடங்கியது முதல் 7 பேர் இறந்துள்ளனர். கடலில் மூழ்கி சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் உயிரிழப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். இதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். புதுச்சேரியில் ஏற்கனவே கடலில் இறங்கி குளிக்க தடை உள்ளது.
வெறும் உத்தரவு மட்டும் உயிரிழப்பை தடுக்க முடியாது என்பதால் மாவட்ட நிர்வாகம் தடையை மீறி கடலில் இறங்கி குளித்தால் அபராதம், தண்டனை விதிக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான பரிந்துரை சுற்றுலா துறை மூலம் வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்தது.
- வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குப்பட்ட உப்பனாரு வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்ட 3 அடுக்குமாடி வீடு சரிந்து துண்டாக விழுந்து விபத்துக்குள்ளானது.
உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு சரிந்து விழுந்துள்ளது.
இந்த வீடு புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் சரிந்து விழுந்தது. வரும் பிப்ரவரி 1ம் தேதி வீட்டின் கிரக பிரவேசம் நடைபெற இருந்தது.
வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






