search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாராளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியா?
    X

    பாராளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியா?

    • தி.மு.க.வினர் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர்.
    • முழுமையடையாத சட்டசபையை திறந்தவர்கள், இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்த கோவிலை பற்றி கூறுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் உத்தரபிரதேச மாநில உதயநாள் கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தில் அதிகாரிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு கூறி போராட்டம் நடத்தியுள்ளார். இது முழுமையாக அரசு நிகழ்ச்சி. இதில் அரசு அதிகாரிகள் பங்கேற்காமல் யார் பங்கேற்பது?

    தமிழகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் கலந்து கொள்ளும்போது நாம் என்ன சொல்கிறோம்? வளர்ச்சியடைந்த பாரத் திட்டம் அரசின் திட்டம் மட்டுமல்ல, யாருக்கெல்லாம் மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லையோ அவர்களும் பயன்பெறும் வகையில் பதிவு செய்யும் நிகழ்ச்சி.

    அது விளம்பர நிகழ்ச்சி அல்ல. மக்களுக்கு திட்டங்கள் கிடைக்கக்கூடாது என நினைக்கிறார்களா? தமிழகத்தில் நான் முதலமைச்சர் நிகழ்ச்சி திட்டமே, விக்சித் பாரத் திட்டம்தான்.

    மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அதில் அதிகாரிகளை பயன்படுத்த கூடாதா?

    தி.மு.க.வினர் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர். நான் என்ன கட்சி நடவடிக்கையில் ஈடுபடுகிறேன்.? மக்களுக்கான நலனில்தான் ஈடுபடுகிறேன். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்த திட்டங்கள் குறித்து பட்டியல் கொடுத்துள்ளார். மத்திய அரசின் திட்டம் குறித்து நான் பட்டியல் கொடுத்துள்ளேன். புதுச்சேரியில் எந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என எதிர்க்கட்சியினர் பட்டியல் தரட்டும்.

    கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலை திறந்தார்கள் என அயோத்தி கோவில் பற்றி பல விமர்சனங்கள் வருகிறது.

    தமிழகத்தில் முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, புதிய சட்டசபை கட்டிடத்தை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அப்போது அதற்கு மேற்கூரையே போடவில்லை. தற்காலிக செட் அமைத்து திறந்தனர்.

    முழுமையடையாத சட்டசபையை திறந்தவர்கள், இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்த கோவிலை பற்றி கூறுகின்றனர். ராமர் கோவில் திறப்பையும் அரசியலாக்கி கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியினர் தயவு செய்து குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்படும் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம். கவர்னர் விருந்தாக பார்க்க வேண்டும், அரசியல் விருந்தாக பார்க்க வேண்டாம்.

    ராமர் கோவில் 500 ஆண்டுகள் எதிர்பார்த்த நிகழ்வு. மத்திய அரசு நேரடியாக ஒளிபரப்பியதை எல்லோரும் பார்த்து பரவசம் அடைய வேண்டும் என்பதற்காக விடுமுறை அளிக்கப்பட்டது. அரசியல்வாதிகளைத்தான் பிரித்தீர்கள். ராமன், முருகன், பிள்ளையாரை பிரித்து விடாதீர்கள்.

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி, நான் உட்பட எல்லா சாமியும் ஒன்றாக இருக்கிறோம். விடுமுறையை வைத்து பக்தியை எடை போடாதீர்கள். எல்லோரும் சேர்ந்து பக்தியோடு கொண்டாடுவோம்.

    வட சென்னை எம்.பி. தொகுதியில் போட்டியிடப் போவது குறித்து நான் முடிவு செய்யவில்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நானே உங்களை அழைத்து தகவல் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×