என் மலர்
புதுச்சேரி
- அட்சதை கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
- திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
திருக்கனூர்:
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட அட்சதை கலசம் திருக்கனூர் கடைவீதியில் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஊர்வலத்திற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, கலசத்தை கையில் ஏந்தியவாறு திருக்கனூர் கடை வீதியில் இருந்து கே.ஆர்.பாளையம் செங்கேணி அம்மன் கோவில் வரை நடந்து சென்றார்.
அவருடன் ராமர், லட்சுமணன், சீதை வேடம் அணிந்த பக்தர்களும் பஜனை பாடல்களை பாடியவாறு மேளதாளத்துடன் சென்றனர்.
பின்னர் கோவிலில் வைத்து அட்சதை கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- சனிப்பெயர்ச்சி விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
- மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
காரைக்கால்:
புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிழக்கு நோக்கிய முகமாக தனி சன்னதி கொண்டு சனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.
2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா இந்தாண்டு நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட் ரூ.1,000, ரூ.600 மற்றும் ரூ.300 என விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500, சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300, சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு ரூ.300 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் திருநள்ளாறுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காரைக்கால் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் காரைக்கால் ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், சந்தைதிடல், பஜன்கோ வேளாண் கல்லூரி, செல்லூர் வி.ஐ.பி. நகர், அத்திப்படுகை ஆகிய முக்கிய இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. அத்துடன் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இ-ஆட்டோ சேவைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநள்ளாறுக்கு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு புதுவை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து செல்லும் வகையிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 1,400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மேலும் பக்தர்கள் புனித நீராடும் நளன் குளத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு கோவில் வளாகம் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன.
சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நாளை மறுநாள் (புதன்கிழமை) முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகத்துக்கான கோப்பு கவர்னர் தமிழிசை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
- மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமான பதில் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் கடற்கரை சாலையை ஒட்டியுள்ள 200 ஆண்டுகால பழமையான பிரெஞ்சு கட்டிடத்தில் சட்டசபை இயங்கி வருகிறது.
கடற்கரை சாலையில் தலைமை செயலகம் உள்ளது. பழமையான கட்டிடம் என்பதாலும், இடநெருக்கடியாலும் சட்டசபையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு கடந்த 30 ஆண்டுக்கு முன்பே முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த 2000-ம் ஆண்டில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜானகிராமன், புதிய சட்டசபை வளாகத்தை பழைய துறைமுக வளாகத்தில் கட்ட பூமி பூஜை போட்டார். அதன்பிறகும் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைந்துள்ள பகுதியில் சட்டசபை வளாகம் கட்ட 2 முறை பூமி பூஜை போடப்பட்டது.
இங்கு நிலம் கையகப்படுத்துவதில் கூட பிரச்சினைகள் எழுந்தது. ஆனாலும் இதுவரை சட்டசபை வளாகம் கட்ட பூர்வாங்க பணிகள் கூட நடக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசு புதிதாக அமைந்தது முதல் புதிய சட்டசபை வளாகம் கட்ட பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இதில் சபாநாயகர் செல்வம், அதிக முனைப்பு காட்டி வருகிறார்.
6 மாடியில் சட்டசபை வளாகமும், 5 மாடியில் தலைமை செயலகமும், ஆயிரம் பேர் அமரும் வகையில் கருத்தரங்கு கூடமும், ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் இறங்கு தளத்துடன் சட்டசபை வளாகம் அமைக்க வரைபடம் தயாரிக்கப்பட்டது.
இந்த வரைபடத்தில் முதலமைச்சர் ரங்கசாமி சில திருத்தங்களையும் செய்தார். ஆரம்பத்தில் ரூ.300 கோடியில் ஒருங்கிணைந்த சட்டசபை வளாகம் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் கூடுதலாக பல இணைப்புகள் சேர்த்ததால் ரூ.615 கோடிக்கு திட்ட மதிப்பீடு உயர்ந்துள்ளது.
ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகத்துக்கான கோப்பு கவர்னர் தமிழிசை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவர் சில விளக்கங்களை கேட்டு 2 முறை கோப்பை திருப்பி அனுப்பினார். இதனால் இந்த கோப்பு மத்திய அரசுக்கு செல்லவில்லை.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் புதுவை எம்.பி. வைத்திலிங்கம் பாராளுமன்றத்தில், புதுவை யூனியன் பிரதேசத்தில் புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மத்திய நிதி உதவி எவ்வளவு? அந்தத் திட்டத்திற்காக மாநில அரசின் நிதி பங்களிப்பு எவ்வளவு? இதுவரை அந்தத் திட்டத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதி எவ்வளவு? சட்டமன்ற கட்டிடம் கட்டும் பணி எப்போது தொடங்கும்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமான பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், புதுவை அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்கான திட்டமானது பூர்வாங்க, கருத்துரு அளவில்தான் உள்ளது.
புதுவை அரசால் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்கான எந்த ஒரு விரிவான திட்ட அறிக்கையும் மத்திய நிதி உதவி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் இதுநாள் வரை பெறப்படவில்லை என கூறியுள்ளார்.
இதனால் புதுவையில் புதிய சட்டசபை வளாகம் கட்டுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. 30 ஆண்டுக்கும் மேலாக பல்வேறு அரசுகள் எடுத்து வரும் முயற்சி கைகூடுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
- வருகிற 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடை பெற உள்ளது.
- சனிப்பெயர்ச்சிக்கு 10 நாட்களே உள்ள நிலையில் தினந்தோறும் பக்தர்கள் சனீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
வருகிற 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடை பெற உள்ளது. அதேசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில், சனிப்பெயர்ச்சிக்கு 10 நாட்களே உள்ள நிலையில் தினந்தோறும் பக்தர்கள் சனீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும், இன்று சனிக்கிழமை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகாலை முதல் திருநள்ளாறு நலன் குளத்தில் புனித நீராடி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரி சனம் செய்தனர். பக்தர்களுக்கான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்த சாமி தம்பிராயன் சுவாமிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், போலீசார் செய்து வருகின்றனர்.
- சனி பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர்.
- பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரமாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.
திருநள்ளாறு:
திருநள்ளாறில் உலகபுகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சி விழா வருகிற 20-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் சனீஸ்வரர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
சனி பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதையொட்டி சனிப்பெயர்ச்சி விழா அழைப்பிதழை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.
பின்னர் கலெக்டர் குலோத்துங்கன் கூறுகையில், சனி பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக காரைக்கால் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து கோவிலுக்கு 25 பஸ்கள் இலவசமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரமாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சி தரிசனத்துக்காக ஆன்லைன் டிக்கெட்டுகள் 15-ந்தேதி முதல் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது என்றார்.
- 2 பேர் அமீரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- அமீர் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சேதராப்பட்டு:
புதுவை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டகுப்பத்தைச் சேர்ந்தவர் சையது அமீர். இவர் சம்பவத்தன்று சின்ன கோட்டை குப்பம் கறிக்கடை சந்தில் நடந்து சென்றார்.
அப்போது எதிரே வந்த 2 பேர் அமீரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அமீரிடமிருந்த பணத்தை பறித்துச்சென்ற அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து அமீர் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்கு பதிவு செய்து அமீரிடம் பணம் பறித்தவர்களை அடையாளம் காண அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டார்.
அதில் அமீரிடம் பணம் பறித்தவர்கள் சின்னக்கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த விஜி என்கிற பிக்க்ஷா (வயது 22), ஆறுமுகம் (26) என்பது தெரிய வந்தது. ரவுடிகளான விஜி என்கிற பிக்க்ஷா மீது சின்னக்கோட்டகுப்பம் பகுதியில் 2021-ம் ஆண்டு நடந்த செல்வகுமார் கொலை வழக்கு, ஆறுமுகம் மீது அவரது அண்ணனையே கொலை செய்த வழக்கும் உள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.
- இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார்.
- வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது காரைக்கால் மாவட்டம். காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்தசாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற 20.12.23 அன்று மாலை 05.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர். சனிப்பெயர்ச்சி விழா நெருங்குவதால், வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், டெல்டா மாவங்களில் கனமழையின் காரணமாக, இன்று அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும், குறைவான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி தங்கள் தோஷங்களை போக்கி, சனீஸ்வரரை மிக எளிமையாக அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
- மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
- வானிலை எச்சரிக்கை அறிவிப்பினை மீறி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அது புயலாக மாறி 4-ந்தேதி வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை புயல் நெருங்கும் என வானிலை ஆய்வு மையத்தின் மூலம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளை மறுநாள் 3-ந்தேதி வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
4-ந் தேதி வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மற்றும் அதனையெட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு 30-ந்தேதியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அந்தந்த கிராம மீன் வளத்துறை அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது.
இதுமட்டுமில்லாமல், மீன்வளத்துறையிலிருந்து புதுவை பகுதியைச் சேர்ந்த அனைத்து மீனவர்களின் செல்போன் எண்ணிற்கும் இந்த வானிலை எச்சரிக்கை தனித்தனியாகவும் குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீண்டும் ஒரு முறை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வானிலை எச்சரிக்கை அறிவிப்பினை மீறி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
எனவே புதுவை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கம்ப்யூட்டர், சி.பி.யூ. கேமரா ஆன்லைன் வழியாக வீடியோ அனுப்பும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார், விடுதி மேலாளர் இருதயராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி 100 அடி ரோட்டில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு காதல் ஜோடி அறை எடுத்து தங்கினர்.
அப்போது அந்த விடுதி படுக்கை அறையில் எலெக்ட்ரிக்கல் சுவிட்ச் பாக்சில் இன்டர்காம் பிளக் பாயின்டில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு காதல் ஜோடியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காதல் ஜோடியினர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் விடுதி அறையில் சோதனை செய்தபோது பல காதல் ஜோடிகள் தனிமையாக இருந்ததை வீடியோ எடுத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கம்ப்யூட்டர், சி.பி.யூ. கேமரா ஆன்லைன் வழியாக வீடியோ அனுப்பும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார் மற்றும் விடுதி மேலாளர் இருதய ராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விடுதி அறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்தது விடுதி ஊழியர்களான தேங்காய் திட்டு வசந்தம் நகரை சேர்ந்த ஆனந்து (25), அரியாங்குப்பம் ஓடைவெளி பகுதியை சேர்ந்த ஆபிரகாம் (21), என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
இதையடுத்து விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார், விடுதி மேலாளர் இருதயராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான ஆனந்து, ஆபிரகாம் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் கோவாவில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களை புதுவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.
- சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்து விட்டது.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சராக சந்திர பிரியங்கா இருந்து வந்தார். அவரை கடந்த அக்டோபர் 8-ந் தேதி டிஸ்மிஸ் செய்ய கவர்னர் தமிழிசையிடம் முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் அளித்தார்.
இதை அறிந்த சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சந்திரபிரியங்கா நீக்கத்துக்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்காததால் இந்த விவகாரம் புதுவை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 13 நாட்களுக்கு பிறகு சந்திரபிரியங்கா நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
இதனிடையே காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது.
ஆனால் அமைச்சர் நீக்கத்துக்கு காலதாமதம், சர்ச்சை எழுந்ததால் புதிய அமைச்சர் உடனடியாக நியமிக்கப்படவில்லை.
தற்போது சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. ஆனால் இதுவரை புதிய அமைச்சர் நியமனத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லை.
புதுவை அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா சார்பில் தலா ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.
தற்போது சந்திர பிரியங்கா நீக்கப்பட்டு விட்டதால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அமைச்சர் இல்லை. தாழ்த்தப்பட்டோர், காரைக்கால் பிராந்தியம், பெண் என்ற 3 அம்சங்களும் பொருந்தும் வகையில்தான் சந்திரபிரியங்காவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அவர் பதவி நீக்கத்தால் சட்டசபையில் இடம் பெற்றிருந்த ஒரே பெண், காரைக்காலுக்கான முக்கியத்துவம் இழந்துள்ளது. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு 6 மாதமே உள்ளதால் புதிய அமைச்சரை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை அமைச்சராக நியமித்தால் காரைக்கால் பிராந்தியத்துக்கு முக்கியத்துவம் கிடைக்காது. காரைக்காலுக்கு முக்கியத்துவம் அளித்தால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் பிரதிநிதித்துவம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
இதனை பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் பிரசார யுக்தியாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கலாம் என என்.ஆர்.காங்கிரசார் முதலமைச்சர் ரங்கசாமியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனாலேயே புதிய அமைச்சர் நியமனத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே 2011-ம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரம் பதவியை ராஜினாமா செய்தார். அப்போதும் முதலமைச்சர் ரங்கசாமி புதிய அமைச்சரை உடனடியாக நியமிக்கவில்லை. அமைச்சர் பதவிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு சட்டமன்ற தேர்தலுக்கு நெருக்கத்தில்தான் புதிய அமைச்சரை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் பீச் ரிசார்ட் ஓட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் செய்யும் திருவிழா நடந்தது.
40 கிலோ அளவில் முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் பல்வேறு உலர் பழங்கள், ஒயின் வகைகள் மற்றும் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்களை கொண்டு கலவையாக கேக் தயாரிக்க ஊற வைக்கப்பட்டது.
இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். ரிசார்ட் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
ஊறவைத்த கலவை 40 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.
அந்த கேக் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு வரை பரிமாறப்பட உள்ளது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வீழிவரதராஜப்பெருமாள் கோவில் தெருவைச்சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் மனைவி வஹிதா ரகுமான்(வயது58). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, செய்யது இப்றாஹிம் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இதனால், வஹிதா ரகுமானுடன், தங்கை ரஹமத் நிஷா(49) மற்றும் தாய், தந்தை சகோதரனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபகாலமாக, தங்கை ரஹமத் நிஷாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். தொடர்ந்து, வஹிதா ரகுமான் நேற்று முன்தினம் மாலை, தங்கை ரஹமத் நிஷாவை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திருக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ரஹமத் நிஷா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து, திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






