search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்
    X

    புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்தபோது எடுத்தபடம்.

    புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்

    • ஆசிரமத்தில் காலை கூட்டு தியான நிகழ்ச்சி நடக்கிறது.
    • அன்னை, அரவிந்தர் அறை பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே அமைந்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தையொட்டி பாரத் நிவாஸ் கலையரங்கத்தில் நடைபெறும் கட்டுரைப் போட்டி விருது வழங்கும் விழா மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

    இதில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று புதுவை வந்தார். பின்னர் அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்றார்.

    4 வருடத்திற்கு ஒருமுறை வரும் லீப் ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதியான இன்று அன்னையின் கோல்டன் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    பொன்னொளி பூமிக்கு வந்த நாள் கடைபிடிக்கப்படுவதால் அரவிந்தர் மற்றும் அன்னையின் நினைவிடம் தங்க வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி ஆசிரமத்தில் காலை கூட்டு தியான நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அன்னை, அரவிந்தர் அறை பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது.

    இதற்காக ஏராளமான பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்தனர். இந்த நிலையில் அரவிந்தர் நினைவிடத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு தரிசனம் செய்தார்.

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வருகையொட்டி ஆசிரமத்திற்கு வருகை தந்த பல்வேறு மாநிலத்தைச் சார்ந்த பக்தர்களுக்கும், வெளிநாட்டவர், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    அதிகளவில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை போலீசார் அப்புறப்படுத்தினர்.

    மேலும் தமிழக கவர்னர் வருகையையொட்டி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    தமிழக கவர்னர் ரவி திடீர் வருகையால் அரவிந்தர் ஆசிரம வளாகமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    சுமார் அரைமணி நேரம் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்த கவர்னர் ரவி புறப்பட்டு சென்ற பிறகே பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×