search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிய சட்டசபை கட்டுவதற்கான திட்டப்பணிகளை முடக்கவில்லை
    X

    புதிய சட்டசபை கட்டுவதற்கான திட்டப்பணிகளை முடக்கவில்லை

    • 2011-ல் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து ரங்கசாமி மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
    • எந்த கோப்பையும் நான் முடக்கவில்லை. நிர்வாக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உள்ள சட்டசபை கட்டிடம் 1820-ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

    சட்டசபை, தலைமை செயலகம் தனித்தனியே இருப்பதால் நிர்வாக சிக்கல் ஏற்படுகிறது. இதனால் 2008-ல் காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி முதலமைச்சராக இருந்தபோது தட்டாஞ்சாவடியில் தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை கட்ட முடிவு செய்யப்பட்டது.

    அப்போது தனது தொகுதிக்கே அனைத்து திட்டங்களையும் கொண்டு செல்கிறார் என ரங்கசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.

    2011-ல் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து ரங்கசாமி மீண்டும் முதலமைச்சர் ஆனார். அப்போதும் சட்டசபை கட்ட நடவடிக்கை எடுத்தார். ஆனால் நிதி பற்றாக்குறையால் கட்ட முடியவில்லை. தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசு திட்டத்தை கைவிட்டது. மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா 2021-ல் ஆட்சி பொறுப்பேற்றதும் சட்டசபை கட்ட தீவிரம் காட்டியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ரூ.612 கோடியில் திட்டம் தயாரித்து கொள்கை அளவில் ஒப்புதல் பெற்றார். இருப்பினும் பணிகள் தொடங்கவில்லை.

    இந்த நிலையில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறுகையில், பிரதமர், மத்திய அரசு சட்டசபை கட்ட ஒப்புதல் தெரிவித்துவிட்டனர். ஆனால் 5 மாதமாக கவர்னரிடம் கோப்பு உள்ளது. சில விளக்கங்களை அவர் கேட்டுள்ளார். இதனால்தான் பணிகள் முடக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் கொடுத்தவுடன் புதிய சட்டசபை கட்டப்படும் என தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்து கவர்னர் தமிழிசை கூறுகையில்:-

    புதிய சட்டசபை கட்டும் கோப்பை நான் முடக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்து மீண்டும் அனுப்பினோம். தற்போது மீண்டும் சில கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

    எந்த கோப்பையும் நான் முடக்கவில்லை. நிர்வாக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளது. அந்த வழிமுறையில்தான் கோப்பு செல்கிறது என தெரிவித்தார்.

    புதிய சட்டசபை கட்டும் விவகாரத்தில் சபாநாயகர், கவர்னர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×