என் மலர்
கேரளா
- ஓமசேரியை சேர்ந்த குழந்தை, அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது.
- அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 2 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் அரிய வகை நோயான அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் வாழக்கூடிய அமீபாக்கள், அதில் குளிக்கக்கூடியவர்களின் மூக்கு துவாரத்தின் வழியாக உடலுக்குள் சென்று மூளையை தாக்குவதன் மூலம் இந்த காய்ச்சல் பாதிப்பு வருகிறது.
கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி முதன் முதலாக கடந்த மாதம் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அந்த தொற்று பாதிப்பு சிறுமியின் சகோதரனான 7 வயது சிறுவன் உள்பட 8 பேருக்கு கண்டறியப்பட்டது.
அவர்களுக்கு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் 3 மாத குழந்தையும் அடங்கும். ஓமசேரியை சேர்ந்த அந்த குழந்தை, அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது. அந்த குழந்தை கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்து ஆஸ்பத்திரியில் ஒரு மாத மாக சிகிச்சை பெற்று வந்த 52 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று இறந்தார். கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி வாந்தி-காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்த அந்த பெண், கடந்த மாதம் 4-ந்தேதி கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், உடல்நலம் தேறியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால் கடந்த மாதம் 26-ந்தேதி மீண்டும் காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டார். இதனால் மீண்டும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆஸ்பத்திரியில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 3 மாத குழந்தை இன்று அதிகாலை இறந்தது. அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 2 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இறந்திருப்பது, கேரளா மாநில மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் இருவரையும் சேர்த்து அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் யானை விழுந்தது.
- அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம், கோட்டப்பாடியில் இரவு நேரத்தில் ஒரு காட்டு யானை வீட்டுக் கிணற்றில் விழுந்தது.
மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் யானை விழுந்ததால் அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை மீட்க போராடி வருகின்றனர்.
- கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.
- நேற்று கோழிக்கோடு - திருவனந்தபுரம் அணிகள் மோதின.
ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.
அவ்வகையில் கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று கோழிக்கோடு - திருவனந்தபுரம் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் ஆடிய கோழிக்கோடு அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய சல்மான் நசீர் 26 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார்.
குறிப்பாக சல்மான் நசீர் ஒரே ஓவரில் 40 ரன்களை விளாசி அசத்தினார். அபிஜீத் பிரவீன் வீசிய கடைசி ஓவரில் சல்மான் நசீர் 6 சிக்சர் விளாசினார். மேலும் Wide பால், நோ பாலுடன் சேர்த்து கடைசி ஓவரில் மட்டும் 40 ரன்கள் கிடைத்தது
- மாணவர்கள் தயாரித்துள்ள மந்திரக்கோலில் இருந்து வெளியாகக்கூடிய சத்தம் மனிதர்களுக்கு கேட்காது.
- அதனை பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது.
திருவனந்தபுரம்:
கேரளா, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் தெருவில் நடந்துசெல்லும் பாதசாரிகள் மற்றும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் யாரும் வெளியில் அச்சமின்றி சென்றுவர முடியாத நிலை தற்போது உள்ளது.
தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் தெருநாய் கடிக்கு உள்ளாகி ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் அதிகமாக இருப்பதால், தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மற்ற மாநிலங்களை காட்டிலும் அங்கு மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்தநிலையில் தெரு நாய்களை விரட்டும் மந்திரக்கோல் ஒன்றை கேரள அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அதற்கு தேசிய அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது அரிக்கோடு. இங்குள்ள வடசேரி என்ற இடத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அபிஷேக், நிஹால், சதீன் முகம்மது சுபைர்.
இந்த மாணவர்கள் தான் தெருநாய்களை விரட்டக்கூடிய எலக்ட்ரானிக் சர்க்கியூட் பொருத்தப்பட்ட மந்திரக்கோலை தயாரித்துள்ளனர். இதில் உள்ள சுவிட்சை அழுத்தினால், அதிலிருந்து விலங்குகளுக்கு விரும்பமில்லாத மீயொலி ஒலி மற்றும் ஒருவித வாசனை வெளியாகும்.
மேலும் லேசான அதிர்வலைகளையும் வெளியிடும். இதனால் தெருநாய்கள் அந்த மந்திரக்கோல் வைத்திருக்கும் நபரின் அருகில் செல்லாமல் அங்கிருந்து ஓடிவிடும். மாணவர்கள் தயாரித்துள்ள மந்திரக்கோலில் இருந்து வெளியாகக்கூடிய சத்தம் மனிதர்களுக்கு கேட்காது.
மேலும் அதிலிருந்து வெளியாகும் வாசனையும் மனிதர்களால் உணர முடியாது. இதனால் அதனை பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது. மேலும் பாதிக்கவும் செய்யாது.
தெருநாய்களை விரட்டும் மந்திரக்கோலை அரசு பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் பிரகித் என்பவரின் மேற்பார்வையில் செய்துள்ளனர். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்புக்கு டெல்லியில் நடைபெற்ற புதுமை மாரத்தான் என்ற நிகழ்வில் பரிசு கிடைத்துள்ளது.
இதன் மூலம் அவர்களின் தயாரிப்பு தேசியஅளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும் அதனை வணிக ரீதியாக கொண்டுவரும் வகையில் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்பட்டு இருக்கிறது.
தங்களின் கண்டு பிடிப்புக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதால், அதற்கு காப்புரிமை பெற்று தொழில் தொடங்கும் முயற்சியில் அதனை கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஈடுபட்டு வருகின்றனர்.
- இனிமேல் மாட்டிறைச்சி பரிமாறப்படக்கூடாது என்று உணவக ஊழியர்களிடம் மேனேஜர் தெரிவித்தார்.
- போராட்டத்திற்கு மாநில அரசியல் தலைவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி மேனேஜர் இனி வங்கி அலுவலகத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டக்கூடாது என்று உத்தரவு போட்டதும், வங்கி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாட்டுக்கறி திருவிழாவே நடத்தி தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
சமீபத்தில் பொறுப்பேற்ற பீகாரைச் சேர்ந்த மேனேஜர், ஊழியர்களை மனரீதியாக துன்புறுத்தல் மற்றும் அதிகாரிகளை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும் தடை விதித்தது குறித்து தெரியவந்ததை அடுத்து ஊழியர்கள் இதனை பிரதானமாக கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், மாட்டுக்கறி திருவிழாவே நடத்தி தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் குறித்து இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI) தலைவர் கூறுகையில், இங்கே ஒரு சிறிய உணவகம் இயங்குகிறது, குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது. இனிமேல் மாட்டிறைச்சி பரிமாறப்படக்கூடாது என்று உணவக ஊழியர்களிடம் மேனேஜர் தெரிவித்தார். இந்த வங்கி அரசியலமைப்பின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறது. உணவு என்பது ஒரு தனிப்பட்ட விருப்பம். இந்தியாவில், ஒவ்வொருவருக்கும் தங்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. நாங்கள் யாரையும் மாட்டிறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தவில்லை. இது எங்கள் போராட்ட வடிவம் மட்டுமே என்றார்.
இந்தப் போராட்டத்திற்கு மாநில அரசியல் தலைவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு இறைச்சிக்காக கால்நடை விற்பனையை கட்டுப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக, இதேபோன்ற பல மாட்டிறைச்சி போராட்டங்களை மாநிலம் கண்டது குறிப்பிடத்தக்கது.
- 2021 முதல் 2023 முறை ஒன்றாக இருந்தோம்.
- அந்த காலக்கட்டத்தில் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொடர்பில் இருந்ததாக பெண் டாக்டர் குற்றச்சாட்டு.
கேரளாவின் பிரபல ராப் பாடகர் வேடன். வேடன் என்று அறியப்படும் ஹிரன்தாஸ் முரளி மீது பெண் டாக்டர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொடர்பில் இருந்துவிட்டு பின்னர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வேடன் கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது.
வேடன் 2021 முதல் 2023 வரை தாங்கள் ஒன்றாக இருந்தோம். பின்னர் பிரிந்துவிட்டோம். ஒன்றாக இருந்தபோது பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெண் டாக்டர் புகார் அளித்திருந்தார்.
இருவரும் ஒன்றாக இருந்து பல சந்தர்ப்பங்களில் உடல் ரீதியான உறவுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், மனுதாரருக்கு முன்ஜாமீன் மறுப்பது கடுமையான பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனக் கூறிய நீதிமன்றம், முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும், சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு இடையேயான உறவில் முறிவு ஏற்பட்டு, அது குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் கைதுக்கும் வழிவகுத்தால், ஒரு தனிநபரின் எதிர்காலத்தை அழிக்கும் போக்கிற்கு வழிவகுக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- கோயில் குளத்தில் ஜாஸ்மின் என்ற பெண் காலைக் கழுவுவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
- தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோயில் குளத்தில் யூடியூப் பிரபலம் ஜாஸ்மின் ஜாஃபர் என்ற பெண் காலைக் கழுவுவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்துக்கள் அல்லாதவர்கள் குருவாயூர் கோவில் குளத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் கோவில் குளத்தில் புஸ்கிப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று கூறி தேவசம் போர்டு ஜாஸ்மின் மீது புகார் அளித்தது.
இந்நிலையில், குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு, அதன் புனிதத் தன்மையை மீட்க பரிகாரம் நடத்தப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இத்தனிடையே,ரீல்ஸ் எடுத்த ஜாஸ்மின் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டு, மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜாஸ்மின் ஜாஃபர், மலையாள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சஞ்சு சாம்சனை கொச்சி ப்ளூ டைகர்ஸ் 26.8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
- கேரள கிரிக்கெட் லீக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.
அவ்வகையில் கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று கொல்லம் - கொச்சி அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்லம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 94 ரன்களும் சச்சின் பேபி 91 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து 237 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொச்சி அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் 121 ரன்கள் குவித்து அவுட்டனார். சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு 26-ந்தேதி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் இருக்கும்.
திருவனந்தபுரம்:
வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் தாக்கத்தால் கேரளாவில் 26 மற்றும் 27-ந் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு 26-ந் தேதி மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரைகளில் 26, 27-ந் தேதிகளில் வானிலை மோசமாக இருக்கும் என்பதால், காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் இருக்கும்.
எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கேரளாவில் ஒன்று அல்லது 2 இடங்களில்7 முதல் 11 சென்டி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- நக்சல்களை ஒழிக்க அமைக்கப்பட்ட சல்வா ஜுடும் அமைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியவர் சுதர்ஷன் ரெட்டி.
- அப்படியொரு தீர்ப்பு வழங்காமல் இருந்திருந்தால் 2020-ம் ஆண்டிலேயே நக்சலிசம் ஒழிக்கப்பட்டிருக்கும்.
திருவனந்தபுரம்:
உள்துறை மந்திரி அமித்ஷா கேரளாவின் கொச்சிக்கு சென்றிருந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:
இடதுசாரிகளின் அழுத்தம் காரணமாகவே முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை, துணை ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது.
சுதர்ஷன் ரெட்டி யார் தெரியுமா? அவர் நீதிபதியாக இருந்தபோது சத்தீஸ்கரில் நக்சல்களை ஒழிக்க அமைக்கப்பட்ட சல்வா ஜுடும் அமைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியவர். அவர் மட்டும் அப்படியொரு தீர்ப்பு வழங்காமல் இருந்திருந்தால் 2020-ம் ஆண்டிலேயே நக்சல் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் ஒழிக்கப் பட்டிருக்கும்.
அவற்றை ஆதரிக்க உச்ச நீதிமன்றம் போன்ற உயர்வான அமைப்பை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டவர்தான் சுதர்ஷன் ரெட்டி. அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரசுக்கு, இடதுசாரிகள் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தனர் என்பதை கேரள மக்கள் போகப்போக தெரிந்து கொள்வர் என தெரிவித்தார்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சிறப்பு போலீஸ் அதிகாரிகள் என ஆயுதம் ஏந்திப் போராடிய பழங்குடியின இளைஞர்கள் சல்வா ஜுடும் உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்பட்டனர்.
கடந்த 2011-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த சுதர்ஷன் ரெட்டி சல்வா ஜுடும் அமைப்பு சட்ட விரோதமானது என அறிவித்ததுடன், உடனடியாக அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
- இடுக்கி மாவட்டம் பீர்மேடு தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வாலூர் சோமன்.
- மேடையிலேயே திடீரென வாலூர் சோமன் மயங்கி கீழே விழுந்தார்.
மூணாறு:
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் பீர்மேடு தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வாலூர் சோமன். இவர் நேற்று மாலை பீர்மேடு பகுதியில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மேடையிலேயே திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி எம்.எல்.ஏ. வாலூர் சோமன் இறந்தார்.
- ஓட்டலுக்கு அழைத்ததா நடிகை பரபரப்பு புகார்.
- கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ய மேலிடம் வலியுறுத்தியதால், இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்தவர் ராகுல் மம்கூத்தத்தில். இவர் எம்.எல்.ஏ. ஆகவும் உள்ளார். இவர் மீது நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். தன்னை ஓட்டலுக்கு அழைத்ததாகவும், பலகட்டங்களில் மோசமான தகவல்கள் அனுப்பியதாகவும் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.
இதனால் கட்சியின் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு, சுயேட்சை எம்.எல்.ஏ. போன்று செயல்படலாம் என கட்சி வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில் இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா? என்பது தெரியவில்லை.
ராகுலுக்குப் பதிலாக அபின் வர்கீஸ் மற்றும் கே.எம். அபிஜித் ஆகியோரில் ஒருவர் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படலாம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகை பெயரை வெளியிட மறுத்துவிட்ட நிலையில், பா.ஜ.க ராகுல் மம்கூத்தத்திலுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.






