என் மலர்
கேரளா
- ஐயப்ப பக்தர்கள் இரவு நேர பயணத்தை எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும்.
- பம்பை திரிவேணியிலும் குளிக்க தடை விதிக்கப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்துவருவதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன் காரணமாக மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள், நெரிசலில் சிக்கி அவதிக் குள்ளாகாமல் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிகிறது. விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் சன்னிதானம் அருகே உள்ள வலிய நடைப் பந்தலில் பெரும்பாலான நேரங்களில் பக்தர்கள் நீண்டநேரம் காத்து நிற்பதை காண முடிவதில்லை.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கேரள மாநி லத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சபரிமலையிலும் அவ்வப் போது மழை பெய்தது. இருந்தபோதிலும் மழையை பொருட்படுத்தாமல் யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள்.
இந்தநிலையில் சபரி மலையில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் மூடுபனியை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்கு இன்றும் மழை பெய்தது. பக்தர்கள் மழையை பொருட்படுத்தா மல் மலையேறி சென்றபடி இருந்தனர்.

ஏராளமான பக்தர்கள் மழை கோர்ட்டு அணிந்தபடி வந்து சாமி தரிசனம் செய்தார்கள். மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் சபரிமலை வரக்கூடிய பக்தர்கள் கவனமுடன் யாத்திரையை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
ஐயப்ப பக்தர்கள் இரவு நேர பயணத்தை எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும் என்று பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பம்பை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் திரிவேணி பகுதியை தவிர மற்ற இடங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பம்பை ஆற்றில் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் பம்பை திரிவேணியிலும் குளிக்க தடை விதிக்கப்படும்.
மழை தொடர வாய்ப்பு இருப்பதால் பத்தினம்திட்டா மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி வரை அனைத்து குவாரிகள் மற்றும் மலை உச்சியில் இருந்து மண் வெட்டுதல், ஆழமாக தோண்டுதல், மண் அள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
- வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பிரபல நடிகர் திலீப்பும் ஒருவர் ஆவார்.
- 84 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், நடிகர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகை கடந்த 2017-ம் ஆண்டு சினிமா சூட்டிங் முடித்து விட்டு கொச்சியில் இருந்து தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியது.
மேலும் அந்த காட்சிகளை அந்த கும்பல் வீடியோவும் எடுத்திருக்கிறது. கேரளாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பிரபல நடிகர் திலீப்பும் ஒருவர் ஆவார்.
நடிகை மீதான பாலியல் தாக்குதல் வழக்கின் முதல் குற்றவாளியாக சுனில்குமார் என்கிற பல்சர் சுனி சேர்க்கப்பட்டிருக்கிறார். வழக்கின் 8-வது குற்றவாளியாக நடிகர் திலீப் சேர்க்கப்பட்டார். அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டது. 84 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், நடிகர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
நடிகை பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கின் இறுதிக்கக்கட்ட விசாரணை தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியும், நடிகர் திலீப்புக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தவருமான பிரபல இயக்குனர் பால சந்திரகுமார் திடீரென மரணம் அடைந்தார்.
சிறுநீரகம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், செங்கனூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் தான் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணம் அடைந்திருக்கிறார்.

நடிகர் திலீப்பும், இயக்குனர் பால சந்திரகுமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். அப்படி இருந்த நிலையில் தான் நடிகை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிரான கருத்துக்களை இயக்குனர் பாலசந்திரகுமார் தெரிவித்தார்.
நடிகை பாலியல் தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியை நடிகர் திலீப் வீட்டில் பார்த்ததாகவும், நடிகை தாக்குதலுக்கு உள்ளான வீடியோ காட்சி திலீப்பிடம் இருப்பதாகவும், விசாரணை அதிகாரிகளுக்கு அவர் ஆபத்து ஏற்படுத்த முயன்றதாகவும் பாலசந்திரகுமார் வாக்குமூலம் அளித்தார்.
அவரது இந்த வாக்கு மூலம் நடிகை பாலியல் தாக்குதல் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகர் திலீப் மீது கொலைக்கு சதி செய்ததாகவும், சாட்சியங்களை அழித்ததாகவும் வழக்கு பதியப்பட்டது.
இயக்குனர் பாலசந்திர குமாரின் உடல் செங்கனூர் மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
- நாராயணகுருவை போல் புகழப்பட வேண்டியவர் பெரியார்.
- சமூக சீர்திருத்த போராட்டத்தில் பெரியாரும் அவரது மனைவியும் இணைந்து செயல்பட்டார்கள்.
கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
* நாராயணகுருவை போல் புகழப்பட வேண்டியவர் பெரியார்.
* சமூக சீர்திருத்த போராட்டத்தில் பெரியாரும் அவரது மனைவியும் இணைந்து செயல்பட்டார்கள்.
* பெண்கள் உரிமைக்காக அரும்பணியாற்றியவர் பெரியார்.
* சமூகநீதியை உயர்த்தி பிடித்தவர் பெரியார் என்று புகழாரம் சூட்டினார்.
- எதிர்ப்பு தெரிவித்த மண்ணிலேயே பெரியாருக்கு பாராட்டு விழா நடப்பது தான் திராவிடத்திற்கு கிடைத்த வெற்றி.
- வைக்கம் போராட்டத்தை போன்றே நினைவகமும் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நடைபெறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சரித்திரத்தில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய நாள் என மலையாளத்தில் உரையை தொடங்கிய முதலமைச்சர் கூறியதாவது:
* வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவை காண கலைஞர் இல்லையே என வருந்துகிறோம்.
* வைக்கம் போராட்டம் எத்தனை கம்பீரமானதோ அதைப்போலவே நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளது, அனைவருக்கும் பாராட்டுகள்.
* எதிர்ப்பு தெரிவித்த மண்ணிலேயே பெரியாருக்கு பாராட்டு விழா நடப்பது தான் திராவிடத்திற்கு கிடைத்த வெற்றி.
* கல்வியில் சிறந்து விளங்கும் இயற்கை எழில் கொஞ்சும் சிறப்பு மிக்க சுற்றுலாத்தலமான கேரளாவில் நினைவகம் உள்ளது பெருமை.
* கேரளாவிற்கு வரும் அனைவரும் நினைவகம் சென்று பார்த்து வைக்கம் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
* வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன்.
* வைக்கம் போராட்டத்தில் இருமுறை கைது செய்யப்பட்ட பெரியார் சிறையில் துன்பங்களை அனுபவித்தார்.
* எதற்கும் அஞ்சாமல் பணியாற்றி சமூகத்தை விழிப்புடன் வெற்றி பெற வைத்தவர் பெரியார் என அண்ணா கூறி உள்ளார்.
* சமூகத்தை விழிப்புடன் வெற்றி பெற வைத்தவர் தந்தை பெரியார். தமிழ் தென்றல் திருவிக 'வைக்கம் வீரர்' என பெரியாரை பாராட்டினார்.
* அண்ணா கூறியதைப்போல் வைக்கம் வெற்றியின் சின்னம்; சமூக புரட்சியின் அடையாளமாக வைக்கம் திகழ்கிறது.
* பெரியாரை எதிர்த்த மண்ணில் அவருக்கு விழா எடுப்பது தான் சமூகநீதியின் வெற்றி. இனி அடைய போகும் வெற்றிகளுக்கான சின்னம் வைக்கம் நினைவகம்.
* வைக்கம் போராட்டத்தை போன்றே நினைவகமும் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.
* இந்தியாவில் தொடங்கிய பல சமூக நீதி போராட்டங்களுக்கான தொடக்கம் வைக்கம் போராட்டம். சமூக நீதி வரலாற்றில் இந்த நாள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்.
* வைக்கத்தில் 5 மாதம் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டார் பெரியார்.
* பெரியாருக்கு எதிராக யாகம் நடத்திய ஊரில் அவருக்கு புகழ்மாலை என்பது பெருமையாக உள்ளது.
* இந்திய அளவில் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் பினராயி விஜயன்.
* இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது.
* எல்லாவற்றையும் சட்டம் போட்டு தடுத்து விட முடியாது. மன மாற்றம் முக்கியம்.
* சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்களை நாம் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
- திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்கினார்.
- சமூக நீதி வரலாற்றின் முதல் வெற்றி விழா நகரமான வைக்கம் நகரில் தமிழகம், கேரள அரசு இணைந்து கொண்டாடுவது சிறப்பு என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களிலும், கோவிலுக்கு எதிரே உள்ள தெருவிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் முதலான சமுதாயத்தினர் நடந்து செல்லவே கூடாது என்னும் கொடிய தடை இருந்தது. அந்தத் தடையை நீக்கக்கோரி 1924-ம் ஆண்டு வைக்கம் போராட்டம் நடைபெற்றது.
வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதால் தந்தை பெரியார் "வைக்கம் வீரர்" எனப் போற்றப்பட்டார்.
கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோவில் நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளது. தந்தை பெரியார் சமூகநீதி காக்க போராடிப் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில், தந்தை பெரியா ருக்கு வைக்கத்தில் நினைவுச் சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டு 1994-ம் ஆண்டு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ரூ.8 கோடியே 14 லட்சம் ரூபாயில் புனரமைக்கப்பட்டு உள்ளது. அங்கு புதுப்பொலிவாக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா இன்று காலையில் நடைபெற்றது.

திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நினைவகத்தை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து 2024-ம் ஆண்டுக்கான வைக்கம் விருதினை மைசூர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான தேவநூர மஹாதேவாவுக்கு, விருதுடன் ரூ.5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றினார்.
முதலில் மலையாளத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு தமிழில் உரையாற்றினார்.
தந்தை பெரியாருக்கு எதிராக யாகம் எடுத்த ஊரில் இன்றைக்கு புகழ் மாலை சூட்டி இருக்கக் கூடிய நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இது தான் பெரியாரின் வெற்றி. பெரியார் இயக்கத்தின் வெற்றி. திராவிட இயக்கத்தின் வெற்றி.
அந்த வகையில் சமூக நீதியின் வரலாற்றையும் இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். பெரியார் தொடங்கிய திராவிட இயக்கத் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க. தலைவரான நான், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்போடு, இந்த நினைவகத்தை திறந்து வைப்பது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரலாற்று பெருமையாக அமைந்துள்ளது.
இந்த நேரத்தில் என் நெஞ்சின் அடி ஆழத்தில் ஒரு சின்ன வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், இந்த காட்சியை காண முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் நம்மிடையே இல்லையே என்ற எண்ணம் தான்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6-ம் நாள் 'தோள் சீலை' போராட்டத்தின் 200-வது ஆண்டு விழா நாகர்கோவிலில் நடந்தது. நானும் பினராயி விஜயனும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். வைக்கம் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நான் குறிப்பிட்டு பேசினேன்.
2023 ஏப்ரல் 1 அன்று கேரள அரசின் சார்பில் மிகச் சிறப்பான விழாவாக ஏற்பாடு செய்து, என்னையும் முதலமைச்சர் பினராயி விஜயன் அழைத்திருந்தார்.
இப்போது எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கிறார் பினராயி விஜயன்.
இந்திய அளவில் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கக் கூடியவர் பினராயி விஜயன். பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் கட்டுவதற்கான அனுமதியை தந்தது முதல், எல்லா முன்னெடுப்புகளுக்கும் அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
அவருக்கும் கேரள அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் என்னுடைய அன்பையும், மரியாதையையும், நன்றியையும் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
வைக்கம் போராட்டம் எப்படி கம்பீரமானதோ, அதைப்போலவே இந்த நினைவகத்தையும் கம்பீரமாக அழகியலோடு, அறிவுக் கருவூலமாக உருவாக்கி இருக்கக்கூடிய அமைச்சர் எ.வ.வேலுவை மனதார பாராட்டுகிறேன். இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்ட செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமி நாதனுக்கும் என்னுடைய பாராட்டுகள்.
கேரளம் இயற்கை எழில் கொஞ்சக் கூடிய தளம். இது சிறப்புக்குரிய ஒரு சுற்றுலாத் தலம். கல்வியிலும், அரசியல் விழிப்புணர்ச்சியிலும் முன்னேறி இருக்கக்கூடிய மாநிலம் கேரளம். அப்படிப்பட்ட மண்ணில் சமூக அரசியல் போராட்ட வெற்றியின் சின்னமாக இந்த வைக்கம் நினைவகம் உருவாகி இருக்கிறது.
கேரளாவுக்கு வருகிற எல்லோரும் கட்டாயம் இந்த வைக்கம் நினைவகத்தை பார்த்து, ஒடுக்கப்பட்ட மக்கள் அடிமை விலங்கை உடைத்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம். அதனுடைய ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் மொழி, உணர்வுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடி, சாதனைப் படைத்த தேவநூர மஹா தேவாவுக்கு முதலாவது வைக்கம் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
வைக்கம் போராட்ட நினைவகங்களையும் மிக விரைவில் வெளியிட இருக்கிறோம். பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரை பற்றி, அவரது சிறப்பு பற்றி சொல்லும்போது, குறிப்பிட்டதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஒருவர் புறப்பட்டு ஓயாமல் உழைத்து, உள்ளத்தை திறந்து பேசி எதுக்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும் எழுச்சியும் கொள்ள செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கே இல்லாமல் எங்கும் இருந்ததில்லை என்று சொன்னார்.
இப்போது நவீன வளர்ச்சிகளால் பாகுபாடுகளை களைய முடிவதில்லை. வெற்றியின் சின்னமாக வைக்கம் நினைவகம் அமைந்துள்ளது. விரைவில் அஞ்சல் தலையும் வெளியிட உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர்கள் துரை முருகன், எ.வ.வேலு, மு.பெ. சாமிநாதன், கேரள மந்திரிகள் வி.என். வாசவன், சஜிசெரியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பிரான்சிஸ் ஜார்ஜ் எம்.பி, சி.கே. ஆஷா எம்.எல்.ஏ, கோட்டயம் கலெக்டர் ஜான்வி, சாமுவேல், வைக்கம் நகர்மன்ற தலைவர் பிரீத்தா ராஜேஷ், நகர்மன்ற கவுன்சிலர் ராஜசேகர் பங்கேற்றனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். கேரள மாநில தலைமை செயலாளர் சாரதா முரளிதரன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புகிறார்.
- வைக்கத்தில் கோவில் நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளது.
- அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரளா புறப்பட்டு சென்றார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா நாளை காலை நடைபெறுகிறது.
திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நினைவகத்தை திறந்து வைக்கிறார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோவில் நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளது.
தந்தை பெரியார் சமூகநீதி காக்க போராடிப் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில், தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் நினைவுச்சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டு 1994-ம் ஆண்டு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நினைவிடத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியில் பெரியார் அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டதன் நினைவாக தமிழ்நாடு அரசு சார்பில் 70 சென்ட் பரப்பில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்து உள்ளது.

மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் ஏற்பட்ட கரையான் அரிப்பு போன்றவற்றால் நினைவிடம் பழமையானதால் தமிழக அரசு சார்பில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
இதை திறந்து வைக்க இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா சென்று உள்ளார். விழா முடிந்ததும் நாளை மாலை அவர் சென்னை திரும்புகிறார்.
- புதிய கார் உள்ளிட்ட சில கார்களை பயன்படுத்தி “ரீல்ஸ்” எடுத்தனர்.
- வேகமாக வரும் கார்களை ஆல்வின் ரோட்டோரம் நின்று தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி இருந்தார்.
திருவனந்தபுரம்:
செல்போனகளின் பயன்பாடு அதிகமாக உள்ள தற்போதைய காலக்கட்டத்தில், அதனை பயன்படுத்தி வித்தியாசமான வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பதிவிடுகிறார்கள்.
அவ்வாறு பதிவிடுபவர்களில் பலர், வித்தியாசமான வீடியோக்களை எடுக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான விஷயங்களிலும் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு ஈடுபடும்போது சிலர் விபத்தில் சிக்கி பலியாகும் பரிதாப சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
அதுபோன்ற ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடந்திருக்கிறது. கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு என்பவரின் மகன் ஆல்வின் (வயது20). ஐக்கிய அரபு எமிரேடசில் பணிபுரிந்து வந்த ஆல்வின் கடந்த வாரம் ஊருக்கு வந்திருந்தார்.
ஊரில் இருந்து வந்த நாள் முதல் தினமும் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து வந்தார். நேற்றும் நண்பர்களுடன் சுற்றினார். அப்போது அவர்கள் செல்போனில் "ரீல்ஸ்" எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவர்கள் கோழிக்கோடு கடற்கரைக்கு சென்றனர்.
புதிய கார் உள்ளிட்ட சில கார்களை பயன்படுத்தி "ரீல்ஸ்" எடுத்தனர். வேகமாக வரும் கார்களை ஆல்வின் ரோட்டோரம் நின்று தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி இருந்தார். அப்போது அவரது நண்பர் ஓட்டிவந்த ஒரு கார், ஆல்வினின் மீது எதிர்பாராத விதமாக வேகமாக மோதியது.
இதில் அவர் படுகாயமடைந்தார். யாரும் எதிர்பாராத வகையில் நடந்த இந்த சம்பவத்தால் ஆல்வினின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு அவரை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆல்வினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து நடந்தது குறித்து ஆல்வினின் நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு வாரத்தில் ஆல்வின் இறந்தது அவரது குடும்பத்தினரிடையே கடும் சோகத்தில் ஆழ்த்தியது. "ரீல்ஸ்" வீடியோ எடுத்த போது நண்பனின் கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் கோழிக்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சுரேஷ் கோபியின் குடும்ப வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
- திருட்டு போன பொருட்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி. இவர் கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதன் மூலம் கேரளாவின் முதல் பா.ஜ.க. எம்.பி. ஆனார். இதையடுத்து அவருக்கு மத்திய மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அவர் மத்திய பெட்ரோலிய-இயற்கை எரிவாயு துறை மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்து வருகிறார்.
இந்தநிலையில் கொல் லத்தில் உள்ள மத்திய மந்திரி சுரேஷ் கோபியின் குடும்ப வீட்டில் திருட்டு நடந்துள்ளது. அவரது வீட்டில் இருந்து பொருட்களை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கொல்லம் இரவிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்திய மந்திரி சுரேஷ் கோபி வீட்டில் திருட்டு போன பொருட்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
- 12 வயதில் இருந்து புலி வேஷம் உள்ளிட்ட பல வேஷங்களை அணிந்து மக்களை கவர்ந்து வருகிறார்.
- அவ்வப்போது பிரபலமாகும் வேடங்களை அணிவதும் வாடிக்கை.
படங்களில் பிரபலமாகும் பாடல்கள், காட்சிகளைப் போல நடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்துள்ள புஷ்பா-2 படத்தில், கங்கம்மா தல்லி காட்சி இடம்பெற்றிருக்கும். ஆந்திரா கோவிலில் ஆண்கள் பெண் வேடமணிந்து வழிபாடு செய்யும் திருவிழா சம்பந்தமானது அந்த காட்சி.
கேரளாவில் படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர், அந்த புஷ்பா பட காட்சி போல வேடமணிந்து, உற்சாகமாக நடனமாடி மற்ற ரசிகர்களை கவர்ந்தார். அவர் முகத்தில் சிவப்பு வண்ணமும், உடம்பில் நீல வண்ணமும் பூசி, படத்தில் அல்லு அர்ஜூன் தோன்றும் தோற்றத்தில் இருந்தார். வயிற்றில் அல்லு அர்ஜூன் உருவத்தையும் வரைந்து இருந்தார். அவரது பெயர் தாசன் என்றும், கலை ஆர்வம் கொண்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
12 வயதில் இருந்து புலி வேஷம் உள்ளிட்ட பல வேஷங்களை அணிந்து மக்களை கவர்ந்து வருகிறார். அவ்வப்போது பிரபலமாகும் வேடங்களை அணிவதும் வாடிக்கை. அவர் கங்கம்மா தல்லி வேடம் அணிந்து, பெருத்த வயிற்றில் வரையப்பட்ட ஓவியத்தை அசைத்துக் காட்டும் காட்சி வலைத்தளங்களில் வைரலானது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும், பல லட்சம் பேரின் பார்வைகளையும் பெற்றுள்ளது அந்த வீடியோ.
- உடனடி தரிசன முன்பதிவு மூலம் அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
- இனி வரும் நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் பிரசாதமாக வழங்கப்படும் அப்பம், அரவணை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வார நாட்களை விட விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இதனால் இந்த நாட்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.
வழக்கத்தை விட நடப்பு சீசனில் பெண்கள், குழந்தைகளின் வருகை 30 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதையொட்டி 18-ம் படியில் கால தாமதத்தை குறைக்க தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சபரிமலையில் நடப்பு சீசனையொட்டி நேற்று வரை 19 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். இது கடந்த ஆண்டு இதே நாளில் சாமி தரிசனம் செய்தவர்களை விட 3.5 லட்சம் அதிகம் ஆகும்.
மண்டல பூஜை வரை ஆன்லைன் முன்பதிவு முடிந்த நிலையில் உடனடி தரிசன முன்பதிவு மூலம் அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இனி வரும் நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் பிரசாதமாக வழங்கப்படும் அப்பம், அரவணை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தேவையான அளவு அரவணை டின் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 3 லட்சம் அரவணை மற்றும் அப்பம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
- கடந்த 22 நாட்களில் காய்ச்சலுக்கு 67 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை தற்போது நடந்து வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு செல்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மழை மற்றும் குளிர் அதிகமாக இருக்கும். அதேபோன்று தான் இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே சபரிமலையில் மழை மற்றும் பனி அதிகமாக இருந்தது. அவற்றை பொருட்படுத்தாமல் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வந்து சென்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் சீதோஷ்ண நிலை வெவ்வேறாக இருக்கிறது. அதாவது பகல் நேரத்தில் கடும் வெயிலும், மாலைக்கு பிறகு மூடு பனியும் நிலவுகிறது. இதன் காரணமாக பக்தர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.
காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் ஏராளமான பக்தர்கள் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். கடந்த 22 நாட்களில் காய்ச்சலுக்கு 67 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சபரிமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று 78 ஆயிரத்து 36 பேர் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அவர்களில் 14 ஆயிரத்து 660 பேர் ஸ்பாட் புக்கிங் செய்து சபரிமலைக்கு வந்திருக்கின்றனர்.
இன்று பக்தர்கள் கூட்டம் ஓரளவுக்கு அதிகமாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு 4,200 முதல் 4,300 பக்தர்கள் வரை மலையேறினர். பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி சாமி தரிசனம் செய்தார்கள்.
- சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கஞ்சாவின் மதிப்பு ரூ.3 கோடியே 50 லட்சம் ஆகும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 4 விமான நிலையங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வரக்கூடிய விமானங்களில் பயணிகள் சிலர் சட்டவிரோத பொருட்களை கடத்திக் கொண்டு வருவது அதிகளவில் நடந்து வருகிறது.
அதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் உடமை களை தீவிரமாக சோதனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் பாங்காங்கில் இருந்து கொச்சி வந்த விமானத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் கொச்சி விமான நிலையத்திற்கு பாங்காங்கில் இருந்து வந்த விமானத்தில் பயணித்து வந்த விமானிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர்களது உடமைகளும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.
அப்போது மலப்புரத்தை சேர்ந்த உஸ்மான் என்பவர் தனது டிராலி பேக்கினுள் தின்பண்டங்களுக்கு மத்தியில் கலப்பின கஞ்சாவை மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
13 கிலோ எடையுள்ள அந்த கலப்பின கஞ்சா இரண்டு பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.3 கோடியே 50 லட்சம் ஆகும். அதனை அவர் தாய்லாந்தில் இருந்து கடத்தி கொண்டு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து உஸ்மானை சுங்கத் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






