என் மலர்
கேரளா
- ஜிம்மில் மயங்கி விழுந்த சல்மானை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
- சல்மான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள அம்பலவயல் பகுதியில் செயல்பட்டு வரும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 24 வயதான சல்மான் என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடற்பயிற்சியின் போது திடீரென இளைஞர் மயங்கிவிழுவதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மயங்கி விழுந்த சல்மானை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சல்மான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சல்மானின் இறப்புக்கான காரணங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.
- அதிவேகத்தின் காரணமாக வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்து.
- விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் நகார்கோவிலில் இருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழந்து விபத்துக்குள்ளானது.
மூணாறு எக்கோ பாயிண்ட் அருகே அதிவேகத்தின் காரணமாக வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தினமும் அதிகாலை 3 மணியளவில் கூவத் தொடங்கும்.
- அதிகாரிகள் புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லிகல் கிராமத்தில் ஒரு வித்தியாசமான தகராறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது பணம் அல்லது நிலம் பற்றியது அல்ல. மாறாக சேவல் காலையில் கூவுவது பற்றியது. ராதாகிருஷ்ண குருப் என்ற முதியவருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு இது.
ராதாகிருஷ்ண குருப் நீண்ட காலமாக இரவில் தூக்கமில்லாமல் இருந்து வந்தார். தனது பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமாரின் சேவல் தினமும் அதிகாலை 3 மணியளவில் கூவத்தொடங்கியதாகவும், இதனால் தனக்கு சரியான தூக்கம் வராமல் போனதாகவும் அவர் நொந்துகொண்டார். தூக்கமில்லாமல் ராதாகிருஷ்ண குருப்பின் உடல்நிலையும் மோசமடைந்தது.
இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ண குருப் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். சேவல் கூவுவது தனது அமைதியைக் குலைப்பதாகக் கூறி, இந்தப் பிரச்சினை தொடர்பாக அடூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் (RDO) ராதாகிருஷ்ண குருப் புகார் அளித்தார். அதிகாரிகள் புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர்.
புகாரை விசாரித்த பிறகு, வீட்டின் மேல் தளத்தில் சேவல் வைக்கப்பட்டிருந்ததையும், அதனால் தான் அது கூவும் சத்தம் அதிகமாகக் கேட்டுள்ளது என்றும் RDO கண்டறிந்தார்.
மேல் தளத்திலிருந்து கோழி கொட்டகையை அகற்றி வீட்டின் தெற்குப் பக்கத்திற்கு மாற்றுமாறு பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமாரிடம் கூறி அதிகாரிகள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர். இதற்காக, அதிகாரிகள் அனில் குமாருக்கு 14 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.
- சீனியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார்.
- அவரைக் காணவில்லை என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஏழு சீனியர்கள் முதலாம் ஆண்டு மாணவரை கொடூரமான முறையில் ரேகிங் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள கரியவட்டம் அரசு கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 11 அன்று கரியவட்டம் அரசுக் கல்லூரியில் சீனியர்களுக்கும் ஜூனியர்களுக்கும் இடையே ஒரு சண்டை நடந்தது. இதில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் காயமடைந்தார். அவர் சீனியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார்.
காவல்துறையிடம் புகார் செய்ததால், சீனியர்கள் மேலும் கோபமடைந்தனர். புகார் அளித்த முதலாமாண்டு மாணவரின் விடுதிக்குள் நுழைந்து அவரை தேடினர். அவரைக் காணவில்லை என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.
ஒரு அறையில் வைத்து அந்த ஜூனியர் மாணவரை மண்டியிட்டு உட்கார வைத்து சுமார் ஒரு மணி நேரம் அடித்ததுள்ளனர். குடிக்க தண்ணீர் கேட்டபோது, அதில் எச்சில் துப்பிய பிறகு தண்ணீர் கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்தார். அவர் இந்த தண்ணீரைக் குடிக்க மறுத்தபோது, மேலும் தாக்கப்பட்டார்.
கல்லூரியின் ராகிங் தடுப்புப் பிரிவு ஜூனியர் மாணவரின் புகாரை விசாரித்தது. கல்லூரி மற்றும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் ஆராய்ந்ததில் நடந்தது உண்மைதான் என்பதை கண்டறிந்து கல்லூரியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில் 7 சீனியர் மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் போலீசார் ராகிங் தடுப்புச் சட்டத்தின கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- குடிபோதையில் டெப்போ ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்டார்.
- அரசு பஸ்சை கடத்த முயன்றதாக அவரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில் அரசு போக்குவரத்து கழக டெப்போ இருக்கிறது. இந்த டெப்போவில் வெளியூர்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் தினமும் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.
அதேபோல் சம்பவத்தன்று இரவும் ஏராளமான பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது இரவு 10 மணியளவில் ஒரு வாலிபர் டெப்போவுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு சாவியுடன் நின்றுகொண்டிருந்த ஒரு பஸ்சில் ஏறினார். பின்பு அதனை அங்கிருந்து ஓட்டிச் செல்ல முயன்றார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டெப்போ ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். குடிபோதையில் இருந்த வாலிபர், அதற்கு மறுப்பு தெரிவித்து டெப்போ ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்டார்.
தனது ஊருக்கு இரவு 8 மணிக்கு செல்லக் கூடிய பஸ்சை தவறவிட்டு விட்டதாகவும், ஆகவே இந்த பஸ்சை எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு செல்ல இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் பஸ்சை அங்கிருந்து ஓட்டிச்செல்வதில் குறியாக இருந்தார். இதனால் அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அரசு பஸ்சை எடுத்துச் செல்ல முயன்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் மல்லப் பள்ளி பகுதியை சேர்ந்த ஜெபின்(வயது34) என்பது தெரியவந்தது. குடிபோதை யில் டெப்போவுக்குள் புகுந்து அரசு பஸ்சை எடுத்துச்செல்ல முயன்று ரகளையில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர். அரசு பஸ்சை கடத்த முயன்றதாக அவரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
வாலிபர் ஜெபின் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போது, அவர்களது நண்பர்கள் சிலரும் அவருடன் இருந்துள்ளனர். போலீசார் வந்ததும் அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயன்படுத்துவதற்கு முன்பு பழங்களை நன்கு கழுவவும்.
- நேரடியாக தொடும் நிலை ஏற்பட்டால் உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவது ஒரு தொற்று நோய் பரவியபடி இருக்கிறது. பருவமழை காலத்தில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில் தற்போது அங்கு நிபா வைரஸ் பரவுவதற்கு சாதகமான பருவம் தொடங்கியிருப்பதாவும், ஆகவே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
* பறவைகள்-விலங்குகளால் பகுதியளவு உண்ணப்பட்ட அல்லது தரையில் விழுந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
* பயன்படுத்துவதற்கு முன்பு பழங்களை நன்கு கழுவவும்.
* திறந்த கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்ட கள் அல்லது அது போன்ற பானங்களை உட்கொள்ள வேண்டாம்.
* கீழே விழுந்த பழங்கள், பாக்கு அல்லது அதுபோன்ற பொருட்களை கையாளும் போது எப்போதும் கையுறைகளை அணியுங்கள்.
* வவ்வால்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பழங்கள் அல்லது பழங்களின் மேற்பரப்புகளை தொடும்போது கையுறைகளை பயன்படுத்தவும். நேரடியாக தொடும் நிலை ஏற்பட்டால் உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும்.
* வவ்வால்களின் வாழ்விடங்களை தொந்தரவு செய்யவோ அல்லது அழிக்கவோ வேண்டாம், ஏனென்றால் இது அவற்றை கிளர்ச்சியடைய செய்து உடல் திரவங்களின் சுரப்பை அதிகரிக்க வழிவகுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் பட்டாசுகள் வெடித்துள்ளனர்.
- பட்டாசுகள் வெடித்து, மைதானத்திற்குள் போட்டியைப் பார்க்க மக்கள் அமர்ந்திருந்த பகுதியில் சிதறி வெடித்தது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று முன்தினம் பட்டாசுகள் வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மலப்புரத்தில் உள்ள அரிக்கோடு அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் யுனைடெட் எப்சி நெல்லிக்குத் மற்றும் கேஎம்ஜி மாவூர் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடந்துள்ளது.
கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் பட்டாசுகள் வெடித்துள்ளனர். பட்டாசுகள் வெடித்து பார்வையாளர்கள் இருந்த பகுதியில் சிதறின. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்,
கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு பட்டாசுகள் வெடித்ததால் இந்த சம்பவம் நடந்தது.
பட்டாசுகள் வெடித்து, மைதானத்திற்குள் போட்டியைப் பார்க்க மக்கள் அமர்ந்திருந்த பகுதியில் சிதறி வெடித்தது. இதில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
- 6 ஆண்டு காலக்கட்டத்தில் கேரளாவில் 52,694 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
- 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் தான் கேரளாவில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது
கோவிட்-19, எச்1என்1 தொற்று, பறவை காய்ச்சல் ஜிகா வைரஸ் போன்ற நோய்கள் தோன்றுவதுடன், பிளேக், ஸ்க்ரப் டைபஸ், லெப்டோஸ்பிரோசிஸ் போன்ற தொற்றுகள் மீண்டும் தோன்றுவதும் நாட்டில் தொடர்ச்சியான தொற்று நோய் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன.
இதுபோன்ற எல்லா நிகழ்வுகளிலும் தொற்று நோயியல் விசாரணையை மேற்கொள்வதிலும், தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதிலும் தேசிய தொற்று நோய்களுக்கான மையம் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. அது பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த பல நோய்களை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் செய்திருக்கிறது.
இந்த மையம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரளா திகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் ஆராய்ச்சி பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறியிருப்பதாவது:-
தேசிய தொற்று நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கையின் படி 2019 முதல் 2024 வரையிலான கடந்த 6 ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இந்த 6 ஆண்டுகளில் 11,04,198 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,516 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 6 ஆண்டு காலக்கட்டத்தில் கேரளாவில் 52,694 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களின் 301 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் டெங்கு காய்ச்சலில் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
2023 மற்றும் 2024 ஆண்டுகளில் தான் கேரளாவில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது. 2023-ம் ஆண்டில் 17,426 பேருக்கும், 2024-ம் ஆண்டில் 18,534 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 2023-ல் 153 பேரும், 2024-ல் 71 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சல் உயிரிழப்பில் கேரளாவுக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு கடந்த 6 ஆண்டுகளில் 189 பேர் டெங்குவுக்கு இறந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் 171 பேர் இறந்திருக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 147 பேரும், உத்தரபிரதேசத்தில் 132 பேரும் டெங்குவுக்கு இறந்துள்ளனர்.
அதே நேரத்தில் இந்த காலக்கட்டத்தில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், லட்சத்தீவு, மேகாலயா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் இறப்பு எதுவும் பதிவாகவில்லை. மேலும் 2024-ம் ஆண்டில் 21 மாநிலங்களில் டெங்கு இறப்புகள் பதிவாகவில்லை. இந்த ஆண்டில் கூட கடந்த ஒன்றரை மாதத்தில் அங்கு 4 டெங்கு இறப்புகள் நடந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டெங்கு காய்ச்சல் பரவலுக்கு மூல காரணம் ஏடிஸ் வகை கொசுக்கள் ஆகும். அவற்றை அழிக்கவும், அதன் உற்பத்தியை கட்டுப்படுத்தவும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் கேரளாவில் டெங்கு காய்ச்சல் அனைத்து காலக்கட்டங்களிலும் பரவியபடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- மலாபுரத்தில் முகமது ஆஷிர் என்ற சிறுவனை 7 தெருநாய்கள் தாக்க முயன்றது.
- இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே 7 வயது சிறுவனை கடிக்க தெரு நாய்கள் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெரு நாய்களின் தாக்குதலில் இருந்து சித்திக் என்பவரின் மகன் முகமது ஆஷிர் என்பவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்
முகமது ஆஷிர் தனது பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, 7 தெருநாய்கள் சிறுவனை தாக்க முயன்றது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
- வயநாடு சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு 529.90 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.
- கொடுத்த கடன் தொகை முழுவதையும் மார்ச் 31-ந்தேதிக்குள் பயன்படுத்த கண்டிசன் விதித்துள்ளது.
வயநாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதம் திடீரென பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர். நிலச்சரிவால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவை தேசிய பேரிடர் என அறிவித்து சீரமைப்பு பணிக்காக நிதி வழங்க வேண்டும் கேரள அரசு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் தேசிய பேரிடர் என அறிவிக்க முடியாது என மத்திய அறிவித்ததுடன் நிதி ஒதுக்கவில்லை.
இந்த நிலையில் சீரமைப்பிற்காக 529.90 கோடி ரூபாய் கேரள மாநில அரசுக்கு மத்திய அரசு கடன் வழங்கியது. ஆனால் மத்திய அரசு விதித்துள்ள கண்டிசன் பயங்கரமானது, கொடூரமான நகைச்சுவையானது என கேரள மாநில வருவாய் அமைச்சர் கே. ராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கே. ராஜன் கூறுகையில் "கடனின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்டுள்ள கண்டிசன் பயங்கரமானவை. அடுத்த 45 நாட்களுக்குள் மொத்த பணத்தையுடம் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது மார்ச் 31-ந்தேதிக்குள் பயன்படுத்த வேண்டும். இது கொடூரமான நகைச்சுவை.
பிரதமர் மோடி வயநாடு வருகை தந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அப்போது மறுசீரமைப்பு பணிக்காக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடி கூறியபோது, எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால் கடன் மட்டுமே மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் நடத்துவதைவிட எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.
நிதியமைச்சர் கே.என. பாலகோபால் "மார்ச் 31-ந்தேதிக்குள் அனைத்து பணத்தையும் பயன்படுத்துவது என்பது மிகப்பெரிய செயல்முறை சிக்கலாகும்" என்றார்.
- நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மோனலிசா மலையாளத்தில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் சில விமர்சனத்தையும், சில வரவேற்பையும் பெறும். அப்படி வரவேற்பை பெற்ற இளம்பெண்ணின் வீடியோ அவரது வாழ்க்கையை மாற்றியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் ருத்ராட்ச மாலைகளை விற்க வந்த மோனலிசா என்ற பெண் காந்த கண்ணால் ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் வைரலானார். இதையடுத்து மோனலிசாவை சினிமாவில் நடிக்க வைப்பதாக இயக்குநர் ஒருவர் பொதுவெளியில் அறிவித்தார்.
இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோனலிசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நகைக்கடையை திறந்து வைத்துள்ளார்.
தொழிலதிபர் பாபி செம்மனூர் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையை மோனலிசா திறந்து வைப்பதாக வெளியான தகவலை அடுத்து நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகைக்கடை திறப்பு விழாவில் மோனலிசாவுக்கு விலை உயர்ந்த நெக்லஸை அணிவித்து அழகு பார்த்த நிகழ்வு தற்போது பேசு பொருளாகி உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் மோனலிசா மலையாளத்தில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ராகிங் செய்த மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- விடுதியில் தங்கியிருந்த மாணவன் கடந்த 3 மாதங்களாக சித்ரவதைகளை அனுபவித்தபடி இருந்திருக்கிறான்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயத்தில் அரசு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் முதலாமாண்டு மாணவரை, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 5 பேர் கொடூரமாக சித்ரவதை செய்து ராகிங் செய்தனர்.
அதாவது அந்த மாணவரை கட்டிலில் கட்டி வைத்தும், ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியும், அந்தரங்க உறுப்பின் மேல் எடை தூக்கும் கருவியை வைத்தும், கூர்மையான திசைகாட்டியால் உடலில் பல இடங்களில் குத்தி காயப்படுத்தியும் சித்ரவதை செய்தார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலாமாண்டு மாணவரை கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கி ராகிங் செய்த மாணவர்கள் சாமுவேல் ஜான்சன், ராகுல்ராஜ், ஜீவ், ரிஜில் ஜித், விவேக் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது ராகிங் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மாணவர்கள் 5 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டும் செய்தது. இந்தநிலையில் முதலாமாண்டு மாணவனை, பிற மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கி ராகிங் செய்த வீடியோ காட்சி வெளியானது. மாணவன் கதறும் நிலையில், இவ்வளவு கொடூரமாக சித்ரவதை செய்ய முடியுமா? என்ற கேள்வி எழும்பும் வகையில் அந்த வீடியோ மிகவும் பயங்கரமாக இருந்தது.
விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவன் கடந்த 3 மாதங்களாக சித்ரவதைகளை அனுபவித்தபடி இருந்திருக்கிறான். அரசு நர்சிங் கல்லூரியில் நடந்திருக்கும் இந்த ராகிங் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்வி இயக்குனர் நேரடியாக விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் மாணவன் சித்ரவதைக்குள்ளான நர்சிங் கல்லூரியின் முதல்வர் சுலேகா, விடுதியின் உதவி வார்டனாக இருந்த உதவி பேராசிரியர் அஜீஷ் மணி ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
மருத்துவக்கல்வி இயக்குனர் விசாரணையை தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலர் ராஜன் கோப்ரகடே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.






