என் மலர்tooltip icon

    டெல்லி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்
    • இந்தியாவின் 80 சதவீத மக்கள் நேற்று பாராளுமன்றத்தில் அவமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் நேற்று நடந்த பட்ஜெட் விவாத கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த காரசாரமான விவாதம் நடைபெற்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வலியுறுத்தி வரும் நிலையில் பாஜக அதற்கு எதிரான மனநிலையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அனுராக் தாகூருக்கும், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று மக்களவையில் அனுராக் தாக்கூர் பேசுகையில், சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

     

    அனுராக் தாகூர் வெளிப்படையாக ராகுல் காந்தியை சாதிய கன்னூட்டத்தில் இழிவுபடுத்தி பேசியது எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதேவேளையில் ராகுல் காந்தி "நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம். ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தில் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம் என்றார்.

    இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் நேற்று அனுராக் தாக்கூர் பேசியதை அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று கூறியுள்ளதும் காங்கிரசார் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜக எம்.பி அனுராக் தாகூரின் ஜாதி குறித்த பேச்சினால், இந்தியாவின் 80 சதவீத மக்கள் நேற்று பாராளுமன்றத்தில் அவமதிக்கப்பட்டுள்ளனர். இது மோடியின் கட்டளையின்படியே நடந்ததா என்று அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா,பாஜகவின் உண்மையான முகம் நேற்றைய கருத்து மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இன்னும் வருங்காலங்களில் பாஜகவின் முகத்திரை கிழியும்.

    நாட்டுக்காக உயிர்த் தியாகங்களை செய்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை [ராகுல் காந்தியை] இழிவுபடுத்தும் பின்புத்தி பாஜக உடையதாக மட்டுமே இருக்கும். ராகுல் காந்தியின் தந்தையும் தாயும் உயிர்த்தியாகிகள், எனவே அவரது  சாதி தியாகமே ஆகும். ஆர்எஸ்எஸ் அமைப்போ, பாஜகவோ, அனுராக் தாக்கூரோ இதை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். 

    • நாங்கள் விரைவில் நேரில் வந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.
    • வயநாட்டில் உள்ள சூழ்நிலையை தொடர்ந்து கவனித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.

    புதுடெல்லி:

    கேரளாவின் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் இறந்துள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று வயநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார்.

    அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் செல்ல இருந்தார். இதற்கிடையே ராகுல் காந்தியின் வயநாடு பயணம் நேற்று இரவு திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில், 'வயநாட்டுக்கு சகோதரி பிரியங்காவுடன் நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூற திட்டமிட்டு இருந்தேன். ஆனால், கனமழை, மோசமான வானிலை காரணமாக நாங்கள் அங்கு செல்ல இயலாது என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். நாங்கள் விரைவில் நேரில் வந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். வயநாட்டில் உள்ள சூழ்நிலையை தொடர்ந்து கவனித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்தியா கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்தும் வகையில் உண்மைகள் மற்றும் நகைச்சுவையின் சரியான கலவை.
    • என்னுடைய இளம் மற்றும் ஆற்றல்மிகுந்த சக எம்.பி. அனுராக் தாகூரின் இந்த பேச்சை கண்டிப்பாக கேட்க வேண்டும்.

    மக்களவையில் இன்று சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கும், பாஜக எம்.பி.யுமான அனுராக் தாகூருக்கும் இடையில் கடும் விவாதம் நடைபெற்றது.

    அரசியல் ரீதியாக அனுராக் தாகூர் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் அனுராக் தாகூரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "என்னுடைய இளம் மற்றும் ஆற்றல்மிகுந்த சக எம்.பி. அனுராக் தாகூரின் இந்த பேச்சை கண்டிப்பாக கேட்க வேண்டும். இந்தியா கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்தும் வகையில் உண்மைகள் மற்றும் நகைச்சுவையின் சரியான கலவை." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அனுராக் தாகூர் கூறிய கருத்து மக்களவையில் கடும் அமளியை ஏற்படுத்தியது. அதேபோல் நேற்று சக்கரவியூகம் தொடர்பாக ராகுல் காந்தி பேசியதற்கும் அனுராக் தாகூர் பதில் அளித்திருந்தார்.

    முன்னதாக, அனுராக் தாகூர் சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள். முன்னாள் பிரதம மந்திரி ராஜிவ் காந்தி மக்களவையில் ஓபிசி இடஒதுக்கீட்டை எதிர்த்தார் என்பதை சபாநாயகருக்கு நினைவூட்ட விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

    அதற்கு ராகுல் காந்தி "நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம். ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தில் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம்" என்றார்.

    • சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்.
    • முன்னாள் பிரதம மந்திரி ராஜிவ் காந்தி மக்களவையில் ஓபிசி இடஒதுக்கீட்டை எதிர்த்தார்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக உள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறி வருகிறது.

    மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் இதை குறிப்பிட்டிருந்தது. ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவோம் என்பதில் உறுதியாக உள்ளது.

    இந்தநிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அனுராக் தாகூருக்கும், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது திடீரென அனுராக் தாகூர் சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள். முன்னாள் பிரதம மந்திரி ராஜிவ் காந்தி மக்களவையில் ஓபிசி இடஒதுக்கீட்டை எதிர்த்தார் என்பதை சபாநாயகருக்கு நினைவூட்ட விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

    அனுராக் தாகூர் வெளிப்படையாக ராகுல் காந்தியை சாதி குறித்து இழிவுப்படுத்தி பேசியது எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளையில் ராகுல் காந்தி "நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம். ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தில் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம். என்றார்.

    • சொந்த வீட்டிற்கு வர முடியாமல் தவிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல் கேட்கவில்லையா?.
    • 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதிக்குக்கு பிறகு மத்திய மந்திரிகள் மணிப்பூர் வராதது ஏன்?.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மணிப்பூர் (Outer Manipur) காங்கிரஸ் எம்.பி., மணிப்பூர் வன்முறை தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து உணர்ச்சிப்பூர்வமான பேச்சை பதிவு செய்தார்.

    இன்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆல்ஃப்ரட் ஆர்தர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலமான மணிப்பூருக்கு வர வேண்டும். சொந்த வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் சொந்த வீட்டிற்கு வர முடியாமல் தவிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல் கேட்கவில்லையா?.

    மத்திய மந்திரிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒவ்வொரு வாரமும் 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதிக்குக்கு முன் வந்த நிலையில், அதன்பின் மணிப்பூர் வராதது ஏன்?.

    பிரதமர் மோடி மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரேன் சிங்கை ஏன் மாற்றவில்லை. ஒருவரை மாற்றினால் அமைதியை கொண்டு வர முடியும் என்ற நிலையில், அவரை மாற்ற ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது.

    இந்த வன்முறைக்கு ஒரு நபர்தான் காரணம் என ஒரு சமூகத்தினர் கூறுகிறார்கள். முதல்வரை விட நீங்கள் 49 உறுப்பினர்களை அதிகமாக பெற்றுள்ளீர்கள். பிரதமர் மோடி அவரை மாற்ற வேண்டும். அமைதி கொண்டு வருவதற்காக ஒருவரை மாற்றுவது கடினமா? உங்களால் சிறிய மாநிலத்தில் அமைதியை கொண்டு வர முடியவில்லை என்றால், எப்படி மிகப்பெரிய நாட்டில் அமைதியை நிலைநாட்டுவீர்கள்?

    மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை நான் பார்வையிட்டேன். இந்த நேரத்தில், மணிப்பூர் மிகக் குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட மாநிலமாகவும், அதிக பணவீக்கத்தைக் கொண்ட மாநிலமாகவும் உள்ளது என்பதை அவர் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்று நினைக்கிறேன். எது மக்கள் நட்பு மற்றும் ஒரு நாட்டின் நலனுக்கு எதிரானது என்பதனை புரிந்துகொள்ள உங்களுக்கு ராக்கெட் அறிவியல் தேவையில்லை.

    இவ்வாறு ஆல்ஃபர்ட் ஆர்தர் தெரிவித்துள்ளார்.

    • பட்ஜெட் அல்வா நிகழ்ச்சியில் ஒரு ஆதிவாசி கூட இல்லை என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியிருந்தார்
    • காங்கிரஸ் கட்சி விவசாயிகளைப் பற்றி முதலை கண்ணீர் வடித்து வருகிறது.

    இன்று மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

    பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது,

    காங்கிரசின் ஆட்சிக்காலத்தில் 2013-2014ல் விவசாயத்திற்கு ரூ.21,934 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது

    ஆனால், 2024-2025ல் விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.23 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

    பி.எம். கிசான் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 11 கோடி விவசாயிகளுக்கு ரூ. 3.2 லட்சம் கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

    2006ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (எம்எஸ்பி) தேசிய ஆணையத்தின் பரிந்துரைகளை அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்கவில்லை.

    காங்கிரஸ் கட்சி விவசாயிகளைப் பற்றி முதலைக் கண்ணீர் வடித்து வருகிறது.

    பட்ஜெட்டுக்கு முன்பு அல்வா தயாரிக்கும் விழா நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இது எப்போது புகைப்பட நிகழ்வாக மாறியது? காங்கிரஸ் கூட்டணி அரசின் 2013-14 பட்ஜெட்டுக்கு முன்பும் அல்வா தயாரிக்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்வில் எத்தனை எஸ்.சி, எஸ்.டிகள் இருந்தார்கள் என்று யாராவது அவர்களிடம் கேட்டீர்களா? ராகுல் காந்தியின் கருத்து எனக்கு வேதனை அளித்தது.

    எஸ்,சி, எஸ்,டி, பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது என்று நான் கூறுவேன்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 அன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024-25 இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    பட்ஜெட் அல்வா நிகழ்ச்சியில் ஒரு ஆதிவாசி அதிகாரி கூட இல்லை என்று ராகுல்காந்தி நேற்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த ஆண்டை விட எதிலும் இந்த பட்ஜெட்டில் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
    • யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பட்ஜெட்டில் ₹17,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

    பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது,

    2047 ல் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் வளரும் இந்தியாவை நோக்கி இந்த ஆண்டு முதலாவதாக புதிய பட்ஜெட் கொண்டு வரப்பட்டுள்ளது

    கடந்த ஆண்டை விட எதிலும் இந்த பட்ஜெட்டில் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    விவசாயிகள், வணிகர்கள் என ஒட்டுமொத்த மக்களின் பங்களிப்பில் தான் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்காக இந்திய மக்களுக்கு நான் கூறி கொள்கிறேன்.

    கடந்த சில ஆண்டுகளாக சுயதொழில் என்ற அர்த்தத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

    2004-2005 பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர்கள் சொல்லப்படவில்லை. அந்த நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு அந்த 17 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லையா?


    பட்ஜெட் உரையில் ஒரு மாநிலத்தின் பெயர் குறிப்பிடப்படாவிட்டால், அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று அர்த்தம் இல்லை. எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்கின்றன

    ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை எங்களின் அமைச்சர்கள் சென்று விளக்குவார்கள்.

    யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பட்ஜெட்டில் ₹17,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் செலவுக்கு ₹12,000 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

    2025-26க்குள் நிதிப்பற்றாக்குறையை 4.5% க்கும் கீழே கொண்டு வருவோம்

    என்று அவர் தெரிவித்தார்.

    • வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
    • பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார்.

    புதுடெல்லி:

    கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

    வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

    நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனை அளிப்பதாக அத்தொகுதியின் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    வயநாடு நிலச்சரிவு தொடர்பாக பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று பேசுகையில், இழப்பீட்டு தொகையை உயர்த்தி, உயிரிழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா ஆகியோர் நாளை வயநாட்டுக்கு செல்கின்றனர் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    • என் பெயரை “ஜெயா பச்சன் என குறிப்பிட்டாலே போதுமானதாக இருக்கும்.
    • கணவரின் பெயரை குறிப்பிட்டு பெண்களை அழைக்கும் நடைமுறை புதியதாக உள்ளது.

    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    மாநிலங்களவையில் எம்.பி. ஜெயா பச்சனை பேச அழைக்கும்போது 'ஜெயா அமிதாப் பச்சன்' என அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறிப்பிட்டார்.

    இதனை கேட்டதும் கடுப்பான ஜெயா பச்சன், என் பெயரை "ஜெயா பச்சன் என குறிப்பிட்டாலே போதுமானதாக இருக்கும். கணவரின் பெயரை குறிப்பிட்டு பெண்களை அழைக்கும் நடைமுறை புதியதாக உள்ளது. கணவனின் பெயரை தவிர பெண்களுக்கு எந்தவொரு சுயமான சாதனையும் இல்லாதது போல பார்க்கின்றனர்" என அதிருப்தி தெரிவித்தார்.

    இதனையடுத்து உங்களது ஆவணங்களில் அதிகாரப்பூர்வமாக உள்ள பெயரையே குறிப்பிட்டதாக ஹரிவன்ஷ் விளக்கம் அளித்தார்.

    பின்னர் மாநிலங்களவையில் பேசிய ஜெயா பச்சன், டெல்லியில் உள்ள பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனையான சம்பவம், இந்த விஷயத்தில் நாம் அரசியலை கொண்டு வரக்கூடாது என்று தெரிவித்தார். 

    • கேரளாவின் வயநாட்டில் அரங்கேறும் இயற்கை பேரழிவு வேதனை அளிக்கிறது.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்புகளை மீட்டெடுக்க வேண்டும்.

    கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனையளிப்பதாக அத்தொகுதியின் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    வயநாடு நிலச்சரிவு தொடர்பாக பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று பேசியுள்ளார்.

    "கேரளாவின் வயநாட்டில் அரங்கேறும் இயற்கை பேரழிவு வேதனை அளிக்கிறது. இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி, உயிரிழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை வழங்குமாறு பாராளுமன்றத்தில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

    நிலச்சரிவு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பேரிடர் பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளுக்கென விரிவான ஒருங்கிணைந்த செயல் திட்டம் வகுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்புகளை மீட்டெடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை (ஜூலை-31) செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • சி.பி.ஐ. பதிவுசெய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிக்கப்பட்டது.
    • டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

    அதேவேளை, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குகளில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி கெஜ்ரிவால் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து வருகிறார்.

    அமலாக்கத்துறை பதிவுசெய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20-ம் தேதி டெல்லி கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த உத்தரவுக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஜூலை 12-ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. ஆனால், சி.பி.ஐ. பதிவுசெய்துள்ள ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சி.பி.ஐ. பதிவுசெய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட் உத்தரவிட்டது.

    சிறையில் உள்ள கெஜ்ரிவாலின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் திகார் சிறை நிர்வாகம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி அமைச்சருமான கோபாப் ராய், சரத்சந்திர தேசியவாத கட்சியின் தலைவரான சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.


    • துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
    • மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    இதற்கிடையே, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரிய ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2வது பதக்கம் இதுவாகும்.


    இந்நிலையில், வெண்கலம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு வாழ்த்துகள். ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் மனு பாக்கர். அவர் எங்களை மிகவும் பெருமைப்படுத்தினாள். அவருக்கும் சரப்ஜோத் சிங்குக்கும் எதிர்காலத்தில் மேலும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×