என் மலர்
டெல்லி
- விமானப்படை தினத்தில், இந்திய விமானப்படையின் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் எனது மனமார்ந்த மரியாதை.
- உங்களது தன்னலமற்ற சேவைக்கும் தியாகத்திற்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.
புதுடெல்லி:
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்ற தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விமானப்படை தினத்தில், இந்திய விமானப்படையின் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் எனது மனமார்ந்த மரியாதை.
உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எங்கள் வானத்தைப் பாதுகாப்பாகவும், எங்கள் உற்சாகத்தையும் உயர்வாகவும் வைத்திருக்கிறது. உங்களது தன்னலமற்ற சேவைக்கும் தியாகத்திற்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.
ஜெய்ஹிந்த்.
இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
On Air Force Day, my heartfelt respect to the brave men and women of the Indian Air Force.
— Rahul Gandhi (@RahulGandhi) October 8, 2024
Your unwavering dedication keeps our skies safe and our spirits high. We are forever indebted to your selfless service and sacrifices.
Jai Hind ?? pic.twitter.com/CuXN2zHTOE
- 801 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 96 நக்சல் பாதித்த மாவட்டங்களில் இருந்து, இப்போது எண்ணிக்கை 42 ஆக குறைந்துள்ளது
புதுடெல்லி:
உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் நக்சல் பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்-மந்திரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, சத்தீஸ்கர் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நக்சல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளின் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, மராட்டியம், ஜார்கண்ட், பீகார், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மாவோயிஸ்டுகளால், பாதிக்கப்பட்டுள்ளன. மோடி அரசின் உத்தியால், நக்சல் பயங்கரவாதம் 72 சதவீதம் குறைந்துள்ளது, 2010ம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் இறப்பு எண்ணிக்கை 86 சதவீதம் குறைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில், 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சல் பயங்கரவாத அச்சுறுத்தலை முற்றிலும் வேரறுக்க, மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 194 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். 801 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 742 பேர் சரணடைந்துள்ளனர்.
ஆரம்பத்தில் 96 நக்சல் பாதித்த மாவட்டங்களில் இருந்து, இப்போது எண்ணிக்கை 42 ஆக குறைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாநிலங்களின் தொலைதூரப் பகுதிகளுக்கு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு செல்வது, சாலை மற்றும் மொபைல் இணைப்புக்கு உத்வேகம் அளிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
நக்சல் அமைப்புடன் தொடர்பிலுள்ள இளைஞர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு பொதுவாழ்க்கையில் இணைய வேண்டும். வடகிழக்கு மற்றும் ஜம்மு - காஷ்மீரில் 13 ஆயிரம் பேர் ஆயுதங்களைக் கைவிட்டு நக்சல் அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளனர். நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்காக 2004 - 2014 வரை ரூ.1,180 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2014 - 2024 வரை ரூ.3006 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டுக்கு முன்பு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் எண்ணிக்கை 2 ஆக இருந்தது. ஆனால் தற்போது 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஹெலிகாப்டர்கள் எல்லைப் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுகிறது" என்று அவர் கூறினார்.
- சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் தேவையை விட அதிகமாகவே கிடைக்கிறது.
- கச்சா எண்ணெய் இறக்குமதியில், நாம் ரஷ்யாவிடமிருந்து 44 சதவீதம் பெறுகிறோம்.
புதுடெல்லி:
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் விலை மேலும் உயரும்; கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்றெல்லாம் சர்வதேச அளவில் யூகங்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது:-
நாம் கச்சா எண்ணெயை 39 நிறுவனங்கள் மூலம் பெறுகிறோம். இதற்கு முன்னர் 27 நிறுவனங்கள் மூலம் தான் பெற்று வந்தோம். சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் தேவையை விட அதிகமாகவே கிடைக்கிறது.
உலக சந்தையில், புதிய நிறுவனங்கள் உள்ளே நுழைந்துள்ளன. சர்வதேச அளவில் , எங்குமே பற்றாக்குறையே இல்லை. நடப்பு 2024 ஜூலை கணக்கின்படி, கச்சா எண்ணெய் இறக்குமதியில், நாம் ரஷ்யாவிடமிருந்து 44 சதவீதம் பெறுகிறோம்.
இவ்வாறு ஹர்தீப் சிங் புரி கூறினார்.
- மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை.
- பிரதமர் மோடியும்-முகமது முய்சுவும் பேச்சுவார்த்தை.
புதுடெல்லி:
இந்தியாவுடனான தூதரக உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
மனைவி சஜிதாவுடன் தனி விமானம் மூலம் டெல்லி வந்த அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார்.
அதனை தொடர்ந்து மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.

மாலத்தீவு அதிபரும், அவரது மனைவியும் இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். அவர்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவேற்றார்.
முகமது முய்சுக்கும், அவரதுமனைவி சஜிதாவுக்கும் ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரி வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.
பின்னர் மாலத்தீவு அதிபர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவு இடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் வெளியுறவுத் துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங்கும் உடன் சென்றார்.

இதன் பிறகு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு டெல்லியில் உள்ள ஐதரா பாத் இல்லத்துக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
அவரை கை குலுக்கி வர வேற்று பிரதமர் மோடி அழைத்து சென்றார். பின்னர் மோடியும்-முகமது முய்சுவும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரு நாடுகள் இடையேயான பரஸ்பர நலன், மேம்பாடு, உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஜூன் மாதம் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் கலந்து கொண்டாலும் இதுவே அவரது முதல் அரசு பயணமாகும்.
- இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியேற வேண்டும் எனக் கூறியவர்.
- மாலத்தீவு அதிபர் ஆனதும் இருநாட்டு உறவில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டது.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இந்தியா-மாலத்தீவு சிறப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வது! பிரதமர் மோடி மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை அன்புடன் வரவேற்றார். இந்த சந்திப்பு ஐதராபாத் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இந்தியா-மாலத்தீவு இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற உள்ளன என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்வீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்பு மாலத்தீவு அதிபர் முய்சுவை வரவேற்றார். அப்போது பிரதமர் மோடி உடனிருந்தார்.
முகமது முய்வு மாலத்தீவு அதிபராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றதும் இந்தியா- மாலத்தீவு இடையிலான உறவு கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகின. மாலத்தீவு தேர்தலை இந்தியா அவுட் என்ற பிரசார வியூகத்துடன் தொடங்கினார்.
இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியேற வேண்டும் என்றார். அதன்படி இந்தியா ராணுவம் கடந்த மே மாதம் மாலத்தீவில் இருந்து வெளியேறியது.
பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு மந்திரி விமர்சித்ததில் இருந்து இருநாட்டு உறவு மிகவும் பாதித்தது. குறிப்பாக மாலத்தீவு சுற்றுலா மிகக்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. தற்போது இந்தியா விரோத நிலைப்பாட்டை குறைத்துள்ள முய்சு, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு அழைத்து விடுத்துள்ளார்.
பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் மாலத்தீவிற்கு இந்தியா 50 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.
- முஸ்லிம்களுக்கு எனது எச்சரிக்கை, காங்கிரசின் வாக்கு வங்கியாக மாறாதீர்கள்.
- காங்கிரஸ் கட்சியின் பிரித்து ஆட்சி செய்யும் கொள்கைளால் பாதிக்கப்படாதீர்கள்.
புதுடெல்லி:
பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி கிரண்ரிஜிஜூ தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
முஸ்லிம்களுக்கு எனது எச்சரிக்கை, காங்கிரசின் வாக்கு வங்கியாக மாறாதீர்கள். அதேபோல் இந்துக்களுக்கும் மற்றவர்களுக்கும் எனது எச்சரிக்கை, காங்கிரஸ் கட்சியின் பிரித்து ஆட்சி செய்யும் கொள்கைளால் பாதிக்கப்படாதீர்கள்.
முஸ்லிம்கள் எப்போதும் தனக்கு வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் நம்புகிறது. இவ்வாறான சிந்தனை செயல்பாட்டிற்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு அபிவிருத்தி அடையும்.
இந்துக்களை பிளவுப்படுத்தும் அதே வேளையில் முஸ்லிம்களை தனது வாக்கு வங்கியாக வைத்திருப்பதே காங்கிரஸ் திட்டமிடலின் குறிப்பிடத்தக்க பகுதியாகும்.

எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ராகுல்காந்திக்கு ஏ.பி.சி.டி. கூட தெரியாது. ஆனாலும் அவர் எப்போதும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மக்களை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்.
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பாடத்தில் பேசுவதன் மூலம் அவர் அப்படி பேச கற்றுக்கொண்டார்.
கடந்த 60 வருடங்களில் உங்களை ஏழைகளாக்கியது யார் என்று எங்கள் முஸ்லிம்களிடம் கேட்க விரும்புகிறேன். இன்று பிரதமர் மோடி உங்களுக்காக வங்கி கணக்குகளை திறந்து உங்களுக்காக வீடுகளை கட்டி கொடுக்கிறார்.
தண்ணீர், மின்சாரம் மற்றும் கடன்களை வழங்குகிறார். அவர் அனைத்து இந்தியர்களையும் சமமாக நடத்துகிறார். பலன் எல்லோருக்கும் செல்கிறது. அப்படி இருக்க முஸ்லிம் வாக்குகள் அனைத்தும் காங்கிரசுக்கு ஏன் போக வேண்டும்.
ஒரு சமூகத்தை தவறாக பயன்படுத்துவது தவறான விஷயம். முஸ்லிம்களை வாக்கு வங்கியாக ஆக்காதீர்கள் என்று காங்கிரசை எச்சரிக்கிறேன்.
இந்த முறை சிறுபான்மை வாக்குகள் காங்கிரசுக்கு போகாமல் பார்த்துக் கொள்வோம். நாங்கள் தெளிவான பார்வையுடன் மக்களிடம் செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
- அதிபர் முகமது முய்சு ஜனாதிபதி, பிரதமரை சந்தித்துப் பேச உள்ளார்.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சமீபத்தில் அரசுமுறை பயணமாக மாலத்தீவு சென்றிருந்தார். இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கடல்சார் கூட்டணி நாடாக மாலத்தீவு விளங்கி வருகிறது.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இன்று முதல் 10-ம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அதிபர் முகமது முய்சு, அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோரை மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் நேரில் சென்று வரவேற்றார்.
இந்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரைச் சந்தித்தார். மேலும், அதிபர் முகமது முய்சு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேச உள்ளார்.
மேலும், பிரதமர் மோடியைச் சந்தித்து இந்தியா-மாலத்தீவு இடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மும்பை மற்றும் பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவு அதிபரின் இந்திய வருகை இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலத்தீவு அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.
- பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கருத்து கூறி வருபவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ்.
- இருவரில் யாரை சொன்னாலும் அது சங்கடத்தை ஏற்படுத்தும்
ஏவுகணை பரிசோதனை, ரஷியாவுடன் நெருக்கம் என்று மேற்கு நாடுகளால் பெரும் இடைஞ்சலாகப் பார்க்கப்படுபவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். அதானி நிறுவன ஊழல் உள்ளிட்ட சர்ச்சைகளை முன்வைத்து பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கருத்து கூறி வருபவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ்.
இந்த இருவரில் யாரவது ஒருவருடன் இரவு விருந்து சாப்பிட வேண்டும் என்றால் யாருடன் சாப்பிடுவீர்கள் என்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரிடம் ஒரு வில்லங்கமான கேள்வி கேட்கப்பட்டது.
இருவரில் யாரை சொன்னாலும் அது சங்கடத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சிய ஜெய்சங்கர் கூறிய பதில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, ''இது நவராத்திரி காலம், அதனால் நான் விரதம் இருக்கிறேன்'' என்று கூறி ஜெய்சங்கர் சாமர்த்தியமாக நழுவியுள்ளார்.
- இரட்டை இன்ஜின் மாடல் என்பது பாஜகவின் இரட்டை கொள்ளை மற்றும் இரட்டை ஊழல் என்பதையே குறிக்கிறது.
- டெல்லியில் ஆம் ஆத்மி அரசின்கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மிசாரம் வழங்கப்படுகிறது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்குள் தான் கூறுவதை மோடி செய்தால் பாஜகவுக்காகத் தான் பிரச்சாரம் செய்யவும் தயார் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடத்த ஜனதா கி அதாலத் நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் வெல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களைச் சுட்டிக்காட்டி, பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசுகள் செயலிழந்து வருவதாக விமர்சித்தார்.

இரட்டை இன்ஜின் மாடல் என்பது பாஜகவின் இரட்டை கொள்ளை மற்றும் இரட்டை ஊழல் என்பதையே குறிக்கிறது. பிரதமர் மோடிக்கு நான் சவால் விடுகிறேன். அடுத்த பிப்ரவரியில் வர உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக ஆளும் 22 மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
இதைமட்டும் மோடி செய்துவிட்டால் நான் பாஜகவுக்காகப் பிரசாரம் செய்கிறேன் என்று சவால் விடுத்துள்ளார். மேலும் டெல்லியில் பேருந்துகளில் மக்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பஸ் மார்ஷல்களை நீக்கியது, டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்களை நீக்கயது, ஊர்க்காவல் படையினரின் ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, பாஜக ஏழை மக்களுக்கு எதிரான கட்சி என்று விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி அரசின்கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மிசாரம் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
- திறந்தவெளியில் ஆர்யன் சிறுநீர் கழிக்க முயற்சித்த போது அவரை ராம்பால் என்ற நபர் தடுத்துள்ளார்.
- ஆர்யன் தனது நண்பர்களுடன் திரும்பி வந்து ராம்பாலை தாக்கியுள்ளார்.
டெல்லியில் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த ராம்பால் என்ற நபரை கட்டையால் ஒருவர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அந்த வீடியோவில், இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வரும் நபர் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரின் போர்வையை விலக்கி கட்டையால் தாக்க தொடங்குகிறார். பின்னர் தனது நண்பர்களுடன் பைக்கில் அங்கிருந்து தப்பித்து செல்கிறார்.
இந்த சிசிடிவியை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார், ஆர்யன் என்பவரை கைது செய்தனர்.
ஆர்யன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்காரனாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள ஒரு பூங்காவிற்கு அருகிலுள்ள திறந்தவெளியில் ஆர்யன் சிறுநீர் கழிக்க முயற்சித்த போது, அருகில் இருந்த கடையில் வேலை பார்த்து வந்த ராம்பால் அதை தடுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பழி வாங்குவதற்காக ஆர்யன் தனது நண்பர்களுடன் திரும்பி வந்து ராம்பாலை தாக்கியுள்ளார் என்று போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது.
- ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் சுசில் கௌசிக் என்ற 45 வயது நபர் உயிரோட்டத்தோடு நடித்துக்கொண்டிருந்தார்.
- மேடையில் முட்டிபோட்டு அமர்ந்த அவர் கைகளை விரித்தவாறு இருந்தார்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு டெல்லியில் நடந்த ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் ராமர் வேடத்தில் நடித்தவர் மேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில் விஸ்வகர்மா நகரில் ஷாதரா [Shahdara] பகுதியில் நடந்த ராம்லீலா நாடக நிகழ்ச்சியில் சுசில் கௌசிக் என்ற 45 வயது நபர் உயிரோட்டத்தோடு நடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது மேடையில் முட்டிபோட்டு அமர்ந்த அவர் கைகளை விரித்தவாறு இருந்தார். பின்னர் எழுந்து மேடையில் இரண்டு அடி முன்னே நகர்ந்த அவர் திடீரென மார்பை கையால் பிடித்துக்கொண்டு மேடைக்கு பின்புறம் சென்ற நிலையில் சுயநினைவை இழந்தார் சரிந்து விழுந்தார்.
உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ராம்லீலா என்பது புராண கதையான ராமாயணத்தை மையப்படுத்தி அரங்கேற்றமாகும் மேடை நாடகமாகும்.
- 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- 5 மத்திய மந்திரிகளும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரர்களின் அதிரடி வேட்டையில் 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநில முதல்-மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (7-ந்தேதி) ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
ஆந்திரா, பீகார், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, ஒடிசா, மராட்டியம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
5 மத்திய மந்திரிகளும் இதில் கலந்து கொள்கிறார்கள். துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மத்திய மாநில அரசுகளின் ஆயுதபடை உயர் போலீஸ் அதிகாரிகளும் இதில் பங்கேற்கிறார்கள்.
கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி இந்த கூட்டம் நடைபெற்றது. நக்சலைட்டுகளின் பாதிப்பு 86 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக குறைந்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






