என் மலர்
டெல்லி
- தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு முகேஷ் அம்பானி இரங்கல் தெரிவித்துள்ளார்.
- அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் முகேஷ் அம்பானி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முகேஷ் அம்பானி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
ரத்தன் டாடாவின் மறைவு இந்தியா மற்றும் இந்திய தொழில்துறைக்கு மிகுந்த துக்கத்தை அளிக்கிறது. அவரது மறைவு டாடா குழுமத்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியருக்கும் பெரும் இழப்பு.
பர்சனல் அளவில் ரத்தன் டாடாவின் மறைவு மிகுந்த துக்கத்தை அளித்துள்ளது. ஒரு அன்பான நண்பரை இழந்துள்ளேன்.
அவருடனான பல சந்திப்புகள் தனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளது. அவரது உன்னதமான குணம் மற்றும் நல்ல மனிதாபிமானம் அவரின் மீதான மரியாதை அதிகரித்தது.
எதிர்காலத்தை கணித்து நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் ஒரு முக்கியமான தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் மிகப்பெரிய நன்கொடையாளர்.
எப்போதும் சமுதாயத்தின் மேன்மையில் அவர் அதிகப்படியான கவனம் செலுத்தினார்.
ரத்தன் டாடாவின் மறைவால் இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மற்றும் தாயுள்ளம் கொண்ட ஒருவரை இழந்துள்ளது.
அவர் இந்தியாவை உலகுக்கு அறிமுகப்படுத்தியதுடன், உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் என பதிவிட்டுள்ளார்.
- நடுத்தர மக்களின் வாகனக் கனவை நனவாக்க டாடா நானோ காரை அறிமுகம் செய்தவர் ரத்தன் டாடா.
- தொழில்துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக பத்மபூஷண், பத்ம விபூஷன் விருதுகளை ரத்தன் டாடா பெற்றுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் உள்ள பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (86). உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார்.
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு:
நவல் டாடா- சுனு தம்பதியின் மகனாக 1937, டிசம்பர் 28-ல் சூரத் நகரில் பிறந்தவர் ரத்தன் டாடா.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நிர்வாகப் படிப்பை முடித்த ரத்தன் டாடா ஐ.பி.எம்.இல் பணிக்கு சேர்ந்தார்.
தேசம் மீதான பற்றால் இந்தியா திரும்பிய டாடா தனது குடும்ப வணிகத்தில் முழு மூச்சாய் களம் இறங்கினார். டாடா நிறுவனத்தில் சிறு சிறு பொறுப்புகளை வகித்து தொழில் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தார்.
டாடா வியாபார குழுமத்தை இந்தியாவில் தொடங்கி உலகம் முழுவதற்கும் ரத்தன் டாடா எடுத்துச் சென்றார்.
டாடா குழுமத்தில் பணியாற்றிய ரத்தன் டாடா பல ஆண்டு அயராத உழைப்பிற்கு பிறகே உயர் பதவியை ஏற்றார். சுண்ணாம்புக்கல் எடுப்பது தொடங்கி சூளைகளைக் கையாளும் பணிகள் வரை செய்தவர் ரத்தன் டாடா.
1991-ல் டாடா குழும தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்ற பின் நிறுவனம் அசுர வளர்ச்சியை அடைந்தது.
ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் 50 மடங்கு லாபத்தை பெருக்கியது டாடா குழுமம்.
டாடா குழுமத்தின் தலைவராக 1991-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ரத்தன் டாடா பதவி வகித்தார்.
கடந்த 2012-ம் ஆண்டில் டாடா குழுமத் தலைவர் பதவியில் இருந்து ரத்தன் டாடா ஓய்வு பெற்றார்.
வாகனம், ஐ.டி, இரும்பு, தொழில்துறை என பலவற்றிலும் டாடா நிறுவனம் முத்திரை பதிக்க ரத்தன் டாடா பங்காற்றினார்.
நடுத்தர மக்களின் வாகனக் கனவை நனவாக்க டாடா நானோ காரை அறிமுகம் செய்தவர் ரத்தன் டாடா.
தொழில்துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக பத்மபூஷண், பத்ம விபூஷன் விருதுகளை ரத்தன் டாடா பெற்றுள்ளார்.
நாட்டின் முன்னணி தொழிலதிபரான ரத்தன் டாடா தன்னம்பிக்கையால் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர்.
தன்னம்பிக்கை, உழைப்பு, அறிவு, தொழில் திறன், அற சிந்தனைக்காக அறியப்பட்டவர் ரத்தன் டாடா.
கொரோனா நிவாரண பணிகளுக்காக ரத்தன் டாடா ரூ.1,500 கோடி வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
- ரத்தன் டாடா மறைவுக்கு பல்வேறு தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரத்தன் டாடாவின் மறைவால் கார்ப்பரேட் வளர்ச்சியின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பிய, நெறிமுறைகளுடன் சிறந்து விளங்கிய ஒரு ஆளுமையை இந்தியா இழந்துவிட்டது. பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்ற அவர், டாடாவின் பெருமையை உலகளாவிய அளவிற்கு கொண்டு சென்றார்.
அவர் அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது. அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும், அவர்மீது பெருமதிப்பு கொண்டவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
- ரத்தன் டாடாவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
ஸ்ரீ ரத்தன் டாடா ஜி ஒரு தொலைநோக்கு வணிகத் தலைவர். இரக்கமுள்ள ஆன்மா மற்றும் ஒரு அசாதாரண மனிதர்.
இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றிற்கு அவர் நிலையான தலைமையை வழங்கினார்.
ஸ்ரீ ரத்தன் டாடாஜியுடன் எண்ணற்ற தொடர்புகளால் என் மனம் நிறைந்திருக்கிறது.
நான் முதல் மந்திரியாக இருந்தபோது குஜராத்தில் அவரை அடிக்கடி சந்திப்பேன். பல்வேறு விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம். நான் டெல்லி வந்தபோதும் இந்த தொடர்புகள் தொடர்ந்தன.
அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பல்வேறு தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- மும்பை மருத்துவமனையில் ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி காலமானார்.
- ரத்தன் டாடா மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மும்பை:
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா.
கடந்த திங்கட்கிழமை அன்று ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதுதொடர்பாக, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாடா மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- முதலில் ஆடிய இந்தியா 221 ரன்கள் குவித்தது.
- நிதிஷ் ரெட்டி, ரிங்கு சிங் ஆகியோர் அரைசதம் கடந்தனர்.
புதுடெல்லி:
இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 34 பந்தில் 74 ரன்னும், ரிங்கு சிங் 29 பந்தில் 53 ரன்கள் குவித்தனர். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா, பராக் ஜோடி அதிரடி காட்டியது.
வங்கதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட், தஸ்கின் அகமது, தன்சிம் அகமது, முஸ்தபிசுர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. இந்திய அணியின் துல்லியமான பந்துவீசி அசத்தியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
மஹமதுல்லா மட்டும் தனி ஆளாகப் போராடி 41 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வங்கதேசம் அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இந்தியா சார்பில் நிதிஷ் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி 12-ம் தேதி நடைபெறுகிறது.
- முதலமைச்சர் இல்லத்தில் டெல்லி முதல்வர் அதிஷி குடியேறி 2 நாட்களே ஆன நிலையில் சீல்.
- முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது இதுவே முதல் முறை.
டெல்லி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் அதிஷியை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, அவரது உடமைகள் வெளியே வீசப்பட்டதாகவும் ஆம் ஆத்மி பரபரப்பாக புகார் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் இல்லத்தில் டெல்லி முதல்வர் அதிஷி குடியேறி 2 நாட்களே ஆன நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
துணை நிலை ஆளுநரின் உத்தரவின் பேரில் தனது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக முதலலமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் பாஜக அழுத்தத்திற்கு பணிந்து டெல்லி துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
முதலமைச்சராக உள்ள ஒருவர் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது இதுவே முதல் முறை என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- அரியானாவில் ஆட்சியை பிடித்து விடலாம் என காங்கிரஸ் நம்பிக்கையில் இருந்தது.
- தேர்தல் முடிவு தலைகீழாக மாறி பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
90 இடங்களை கொண்ட அரியானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5-ந்தேதி நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
முதலில் காங்கிரஸ் 50-க்கும் அதிகமான இடங்களில் முன்னணி பெற்றது. பின்னர் அப்படியே தலைகீழாக மாறியது. பா.ஜ.க. முன்னிலை பெற்று இறுதியாக 48 இடங்களை பிடித்து தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது மெதுவாக அப்டேட் செய்ததாக தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அத்துடன் தோல்வியை ஏற்கமாட்டோம் எனத் தெரிவித்தது.
இந்த நிலையில் அரியானா மாநில தோல்வி குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:-
அரியானாவின் எதிர்பாராத முடிவு குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஏராளமான சட்டமன்ற தொகுதியில் இருந்து வந்த புகார்கள் பற்றி தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிப்போம்" என்றார்.
"ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது, ஜனநாயக சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்க என்னுடைய இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில வெற்றி இந்தியாவின் வெற்றி. அரசியலமைப்பின் வெற்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்க பிந்தைய கருத்துக் கணிப்பில் அரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவில் கருத்து கணிப்பு பொய்யாக்கப்பட்டது.
- இந்தியா தனது கிழக்கு சார்ந்த கொள்கையின் 10-வது ஆண்டை இந்த ஆண்டு கொண்டாடுகிறது.
- கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் நம்பிக்கையின் சூழலைக் கட்டியெழுப்புவதற்கு கிழக்கு ஆசியா உச்சி மாநாடு பங்களிக்கும்.
புதுடெல்லி:
தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா இணைந்த ஆசியான்-இந்தியா அமைப்பின் தற்போதைய தலைவராக லாவோஸ் உள்ளது. ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது.
இதைப்போல கிழக்கு ஆசியா அமைப்பின் 19-வது உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது.
இந்த மாநாடுகளில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு பிரதமர் சோனக்சய் சிபன்டோன் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் மோடி இந்த மாநாடுகளில் பங்கேற்க உள்ளார்.
இதற்காக 2 நாள் பயணமாக நாளை (வியாழக்கிழமை) அவர் லாவோஸ் புறப்பட்டு செல்கிறார். அங்கு அவர் மேற்படி 2 மாநாடுகளிலும் பங்கேற்கிறார்.
அத்துடன் இந்த மாநாடுகளுக்கு இடையே உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரதமர் மோடியின் இந்த பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:-
இந்தியா தனது கிழக்கு சார்ந்த கொள்கையின் 10-வது ஆண்டை இந்த ஆண்டு கொண்டாடுகிறது. கிழக்கு சார்ந்த கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் மீதான நமது பார்வையின் மைய தூணாக ஆசியானுடனான உறவுகள் உள்ளது.
நமது விரிவான மூலோபாய ஒத்துழைப்பு மூலம் இந்தியா-ஆசியான் உறவுகளை ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மறுஆய்வு செய்வதுடன், எதிர்கால திசையையும் வகுக்கும்.
கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் நம்பிக்கையின் சூழலைக் கட்டியெழுப்புவதற்கு கிழக்கு ஆசியா உச்சி மாநாடு பங்களிக்கும். இந்தியா உள்பட கிழக்கு ஆசியா உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தலைமையிலான இந்த மன்றமானது பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
- வினேஷ் போகத் எங்கு சென்றாலும் அழிவு அவரைப் பின்தொடர்கிறது.
- நாட்டில் காங்கிரசின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
புதுடெல்லி:
கடந்த மாதம் காங்கிரஸில் இணைந்த ;மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஜூலானா சட்டப்பேரவைத் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் யோகேஷ் குமாரை தோற்கடித்து வெற்றியைப் பதிவு செய்தார். இதுகுறித்து உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் எம்பியும், முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் பேசுகையில், "என் பெயரைப் பயன்படுத்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
இதனால், நான் ஒரு பெரிய மனிதன் என்று அர்த்தம்..வினேஷ் போகத் எங்கு சென்றாலும் அழிவு அவரைப் பின்தொடர்கிறது. அது எதிர்காலத்திலும் நடக்கும். அவர் தானாக தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது. இந்த மல்யுத்த வீரர்கள் ஹரியாணாவிற்கு கதாநாயகர்கள் அல்ல.
ஆனால், அவர்கள் வில்லன்கள். நாட்டில் காங்கிரசின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ராகுல் காந்தியின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து வருகின்றன. நாட்டு மக்கள் தங்களை நிராகரித்துள்ளனர் என்பதை இப்போது காங்கிரஸ் ஏற்க வேண்டும்" என்றார்.
- அரியானாவில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வென்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
- ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 29 இடங்களில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
அரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. இதனால் பா.ஜ.க.வுக்கு பல்வேறு மாநில முதல் மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 29 இடங்களில் வெற்றி பெற்றது. அங்கு கணிசமாக வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பலத்த கரகோஷத்துடன் வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பா.ஜ.க. எங்கு ஆட்சி அமைத்தாலும் அங்குள்ள மக்கள் நீண்ட காலமாக பா.ஜ.க.வை ஆதரிக்கின்றனர்.
மறுபுறம், காங்கிரசின் நிலை என்ன? கடைசியாக எப்போது காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது?
சுமார் 13 ஆண்டுக்கு முன் 2011-ல் அசாமில் அவர்களின் அரசாங்கம் மீண்டும் அமைந்தது. அதன்பின் அவர்களின் அரசாங்கம் மீண்டும் அமைக்கப்படவில்லை.
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் காங்கிரசுக்கு நோ என்ட்ரி போர்டு வைத்துள்ளனர்.
இந்திய சமுதாயத்தை பலவீனப்படுத்தி, இந்தியாவில் அராஜகத்தைப் பரப்புவதன் மூலம் நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.
அதனால்தான் அவர்கள் பல்வேறு பிரிவினரைத் தூண்டிவிடுகிறார்கள். தொடர்ந்து தீ மூட்ட முயற்சித்து வருகின்றனர்.
விவசாயிகளைத் தூண்டி விடுவதற்கான முயற்சிகள் எப்படி நடந்தன என்பதை நாடு பார்த்தது.
ஆனால் அரியானா விவசாயிகள் நாட்டோடு இருக்கிறோம், பா.ஜ.க.வுடன் இருக்கிறோம் என்று தகுந்த பதிலை கொடுத்தனர்.
தலித்துகள் மற்றும் ஓபிசியினரை தூண்டிவிட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த சமூகமும் இந்த சதியை அங்கீகரித்து தாங்கள் நாட்டோடு இருக்கிறோம், பா.ஜ.க.வுடன் இருக்கிறோமென கூறியது என தெரிவித்தார்.
- அரியானாவில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வென்று தனிப் பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கிறது.
- காங்கிரஸ் அங்கு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
புதுடெல்லி:
அரியானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் பா.ஜ.க.வுக்கு பல்வேறு மாநில முதல் மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரியானாவில் பாஜக வெற்றிபெற வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை வழங்கிய அரியானா மக்களுக்கு எனது வணக்கம். இது அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி அரசியலுக்குக் கிடைத்த வெற்றி ஆகும். இங்குள்ள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






